TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நாளை தமிழீழத்தில்… – சோழ.கரிகாலன்

மண்ணிற்குள் விதைக்கப்பட்டிருக்கும் மாவீர மாணிக்கங்களைக் கண்ணில் நீரோடும் நெஞ்சில் உறுதியோடும் வணங்கி நினைந்து நிற்கும் காலமிது. தமிழீழ விடுதலையன்றையே சுவாசமாக்கி, கொண்ட இலட்சியத்திற்காய் உயிர்ப்பூக்களைச் சொரிந்து மரணத்தை வென்றுநிற்கும் மாவீரரை நோக்கி உறுதியெடுத்துக் கொள்ள வேண்டிய காலமிது.

மரணித்த மாவீரர்களின் புனிதக் கோவில்களைச் சிங்கள ஆக்கிரமிப்பாளன் உழுது பார்க்கின்றான். ஆனால் அந்தப் புனித விதைகுழிக்குள் நாம் விதைத்துச் சென்ற மாவீரவித்துக்கள் என்றோ வேறிடத்தில் விருட்சமாகி விட்டதை அறியாது எம் வீரமண்ணை உழுது பார்க்கின்றான் எதிரி. உழ உழத்தான் நிலம் விளையும். மாவீர மண்ணை உழ உழத்தான் தமிழீழ வீரம் திடமாக நாற்றெடுக்கும். வீரத்தின் வித்துக்கள் விழுந்த தேசம் என்றுமே விடுதலைகாணத் தவறியதில்லை. இது வரலாறு. வீர வித்துக்கள் விழும்போதெல்லாம் அந்த இனம் மென்மேலும் எழுச்சி கொண்டே போராடியது.

இது வரலாறெங்கும் நிறைந்திருக்கும் எமக்கான பாடங்கள். இனப்படுகொலைகளுக்கும், பல்தேச ஆக்கிரமிப்புக்களாலும், துரோகங்ககளாலும் போர்க்குற்றச் செயல்களாலும் பேரிழப்புகளுக்குள்ளான தேசங்களெல்லாம் இன்று நிமிர்ந்து சுதந்திர தேசமாக உதயமாகியுள்ளன. உலகெங்கும் அடிவாங்கி 60 இலட்சத்திற்கு மேலான மக்களை இழந்தும் தலைமுறை தலைமுறையாக விடுதலைத் தாகத்தை மட்டுமே சுமந்து, வலிகள் கடந்து, இன்று நிமிர்ந்து நிற்கின்றது இஸ்ரவேலர்களின் தேசம். இழப்புகளும் இடப்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் இந்த இனத்தின் விடுதலையைச் சற்றும் பாதிக்கவில்லை.

மேலும் மேலும் உறுதிபடவே வைத்தது. இதுவே அந்த இனவிடுதலைக்குச் சாத்திய
மாகியது. நு£று தலைமுறகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு நிலத்திற்காக இந்த இனம் பல்லாண்டுகள் போராடி அவர்கள் விடுதலை பெறுவது சாத்தியமென்றால், எந்தையும் தாயும் நானும் எனது பிள்ளைகளும் வாழ்ந்த, வாழுகின்ற எம் தேசந்தின் விடுதலை மட்டும் எப்படிப் பொய்த்துப் போகும்?மாவீரர் துயிலும் இல்லங்கள் மண்மேடுகளாக்கப்பட்டு விட்டன. எமது வாழ்விடங்கள் சிங்களத்தால் வன்பறிப்புச் செய்யப்பட்டு விட்டன. தமிழீழத்தில் சிங்கக் கொடிகளும் புத்தவிகாரைகளும் அடிக்கொன்றாய் முளைத்துவிட்டன.

எமது பாரம்பரிய நிலங்கள் பறித்தெடுக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாகின்றன. இருந்தும் எதிரியின் இராஜதந்திரம், சர்வதேசங்களை வாய் மூடவைத்துவிட்டது. ஒரு இனம் கண்முன் அழிக்கப்படுவது கண்டும் சர்வதேசம் தோள் கொடுக்கிறதே ஏன்? தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாகக் காட்டப்பட்டுக் கொன்றொழிக்கப்படும் போதும் சர்வதேசம் அள்ளி வழங்குகிறதே ஏன்? இது சிங்களதேசத்தின் பிரச்சாரப் பலம். எம்மைவிட வெகு சிறிய அளவில் புலம்பெயர்ந்திருக்கும் சிங்கள மக்களுடன் சிங்கள தேசம் சாதிப்பதை, எதனால் எம்மால் முடியவில்லை?

‘நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எம் எதிரிதான் தீர்மானிக்கின்றான்’ என்ற தத்துவத்திற்கிணங்க எமது ஆயுதங்களைத் தீர்மானிக்க வேண்டிய முக்கிய தருணம் இது. எதிரியானவன் இராஜதந்திரத்தைக் கையாண்டால் அது எம்மாலும் முடியும். எமது தாயக தேசம் ஒன்றே எமது விடுதலைக்கான களமும் அடிப்படை ஆதாரமும் ஆகும். அந்த அடிப்படை ஆதாரத்தை இல்லாதொழிக்க முனைகின்றான். அது மீட்கப்பட வேண்டும். எமது தாயக நிலப்பரப்பிலிருந்து அந்நிய ஆக்கிரமிப்பு விலகவேண்டும். இதனைச் செய்ய புலம்பெயர் தேசத்தில் எமக்கான தளங்கள் திறந்து விடப்பட்டுள்ளன. எமது பலம் இங்கு நிரூபிக்கப்படல் வேண்டும்.

‘அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடுங்கள்’ என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனைக்கமைய, சிங்களத்தால் நாம் அடைந்த அவலங்கள் எம்முள் வலியைத் தர வேண்டாமா? அந்த வலி எமக்குள் ஒரு இலட்சிய உறுதியைத் தரவேண்டாமா? இனவழிப்புச் செய்து, பாரிய போர்க்குற்றங்களைச் செய்து இன்று நட்பு நாடுகளின் பலத்தில் தன் சிங்கள இராச்சியத்தின் அபிவிருத்தியை மேற்கொள்கிறது சிங்கள அரசு. தமிழன் அழிவிலே அவன் செழிப்பாகின்றான். இன்னமும், மலசலகூடம் மட்டும்தான் திறந்து வைத்து தங்கள் பெயர் வைக்கவில்லை மகிந்த சகோதரர்கள்.

எங்கும் தங்கள் பெயர்ப் பலகையுடனே வலம் வருகிறார்கள். இந்த ஆட்சி நீடித்து நிலைபெற அடிவருடித் தமிழ்க்கட்சிகள் வாழ்த்துத் தெரிவிப்பதும், தமிழ் அமைச்சர்கள் கோவில்களில் பூசைகள் செய்வதுமாய் ஒரு கூட்டம் பச்சோந்தித் தமிழர்களாய் ஆகின்றார்கள். தமிழர் நிதியெல்லாம், புலம்பெயர் தமிழர் பொருளாதார பலத்தையெல்லாம் சிங்களத்திடம் தாரைவார்த்துக் கொடுத்துத் தம் வயிறுவளர்க்க முனைகிறது இன்னொரு குள்ளநரிக் கூட்டம்.நாம் இன்னும் து£ங்கப் போகின்றோமா?

தமிழன் அழியும்போது பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் திரண்டெழுந்த நாம், இன்று அதைவிடப் பாரிய பணிகள் நம் தோள்மீது இருக்கும்போது ஏன் சோர்வடைகின்றோம்? பார்வையாளர்களாகவிருந்த நாம் இன்று போராடவேண்டியவர்களாக மாற வேண்டிய நேரமிது. ஒவ்வொரு தமிழனுக்கும் மிக அதிகமான மிக உறுதியான தேசியப்பணிகள் காத்திருக்கின்றன. எமக்கான நீதியை, எம்மை இனவழிப்புச் செய்தவனின் கொடூரத்தை உலகெங்கும் கொண்டு செல்லவேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

சர்வதேசச் சட்டங்களுக்கான அமெரிக்கக் குழுமம் (American society of lnternational Law(ASIL)) தனது அண்மைய அறிக்கையன்றில் ‘நேற்றைய தண்டிக்கப்படாத குற்றம், இன்றைய புதிய குற்றத்திற்கு வழிசமைக்கின்றது. தண்டிக்கப்படாத குற்றவாளிகளே மேலும் மேலும் புதிய குற்றங்கள் புரிகின்றனர். தண்டிக்கப்படாத குற்றங்கள் ஒரு வன்முறைச் சுழற்சியை ஏற்படுத்தவல்லது’ என்று குறிப்பிட்டுள்ளனர். மகிந்த சகோதர்களின் இனவழிப்புக் குற்றங்கள் இன்று தண்டிக்கப்படாவிட்டால் மேலும் தமிழினம் பேரழிவைச் சந்திக்கும்.

கொங்கோ சனநாயகக் குடியரசின் (DRC) பாரிய மனித உரிமை மீறல்கள், படுகாலைகள் தொடர்பாக நீண்ட அறிக்கையன்றினை ஐ.நா வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டங்கள் 2008 ஜுலையில் Luc cote என்ற கனடிய மனித உரிமைகளுக்கான சட்டவல்லுனரின் தலைமையில் தொடங்கப்பட்டு 1280 சாடசியங்கள் விசாரணை செய்யப்பட்டு, 1500 ஆதாரங்கள் பரிசீலிக்கப்பட்டது.ஜுன் 2009ல் ஐ.நாவின் மனித உரிமைகள் உயர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு 2010 ஓகஸ்டில் அது தன் அறிக்கையைத் தயார் செய்து 2010 ஒக்டோபரில் தனது அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆனால் இதைவிட மோசமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலையும் சிங்களத்தல் நடாத்தப்பட்டு 40 ஆயிரம் உயிர்கள் மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட்டுத் தமிழன் சின்னாபின்னமாக்கப்பட்டான். சிறீலங்கா அரசு என்றைக்குமே சர்வதேச விசாரணைக்கு ஒத்துக் கொள்ளப் போவதில்லை. அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்திடமும் ஐ.நாவின் உள்ளக பாதுகாப்புத் திட்டமான UNOSAT இடமும் அனைத்துப் போர்க்குற்ற இனப்படுகொலை ஆதாரங்களும் உள்ளன.

கொசோவோவிற்கு எதிரான இனப்படுகொலையை மிலேசெவிச் மேற்கொண்ட போது அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் Madeleine Albrightம் Louise arbourம் இணைந்து அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரின் ஆவணங்கள மூலம் போர்க் குற்றத்தை நிரூபித்தனர். இங்கு அமெரிக்காவிற்கு, செர்பிய இராணுவம் செய்த படுகொலைகள், அவர்களை வழி நடத்திய தளபதிகள், அரசியல்தலைவர்கள் யார் யாரென்ற முழு விபரமுமே தெரிந்திருந்தது. இவர்கள் அனைவரும் தண்டனைக்குள்ளாகுமாறு அமெரிக்கா பார்த்துக் கொண்டது.
எம்மிடம் எத்தனையோ ஆயிரம் சாட்சிகளுள்ளன.

இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி சிறீலங்கா அரசின் இனப்படுகொலையை நாம் நிரூபிக்கவேண்டும். இதன் மூலம் போர் முடிந்துவிட்டதெனக் கூறிக் கொண்டு மேலும் இராணுவ பலத்தை அதிகரித்துக் கொண்டிருக்கும் சிங்கள் அரசின் பொருளாதாரத்தில் நாம் பலத்த அடி விழவைக்கமுடியும். இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் தனித் தமிழீழத்திற்கான உரிமை எமை வந்து சேரும். சிறீலாங்காவின் போர்க்குற்றமிழைத்த தளபதிகள், துணை நின்ற அரசுகள் என எல்லா விபரங்களையும் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் வைத்துள்ளது.

இந்த விபரங்கள் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையத்திடம் கிடைக்க வேண்டிய தேவையை நாம் தான் உருவாக்கவேண்டும். இதில நாம் கடுமையாக உழைக்கவேண்டும். எமது ஒருங்கிணைந்த பலம் அவசியமானது. இன்று மந்திரி சபைகள் அமைத்து காகிதக் கிரீடம் சூட்டியுள்ளோர் நிச்சயம் இந்த முயற்சிகளுக்குக் கை கொடுக்கப் போவதில்லை. மக்கள் அனைவரும் இணைந்து மேற்கொள்ளப் போகும் முயற்சியே இனைச் சாத்தியமாக்கும்.
இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றிய ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி சவீந்திர சில்வா இன்று அமெரிக்காவில் ஐ.நாவிற்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதநிதியாக்கப்பட்டுள்ளார்.

இவரது படையணியே மக்கள் அவலத்திற்கும் இடப்பெயர்வுகளுக்கும் பேருயிரிழப்புக்களுக்கும் காரணமாக அமைந்தது. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த பொறுப்பாளர்களைச் சுட்டுக் கொன்ற குற்றத்திலும் இவர் பங்கு முக்கியமானது. ஆனால் சிறீலங்கா இவரை ஐ.நா பிரதிநிதியாக்கியதன் மூலம் இவரைக் குற்றமற்ற புனிதர்போல் காட்டியுள்ளது. இது அவர்களின் இன்றைய இராஜதந்திரப் பலம். ஆனால் இதே சவீந்திர சில்வலாவை அமெரிக்காவில் வைத்தே கைது செய்யவைத்து இவருக்கும் இவரை இயக்கிய பாதுகாப்புச் செயலருக்கும், முப்படைகளின் தளபதியான ஜனாதிபதிக்கும் மீண்டும் ஓர் Nuremberg முறைமையிலான விசாரணையைக் கொண்டு வருவதற்கான முழுமையான இராஜதந்திரச் செயற்பாடுகள் எம்முன்னே நிறைந்து கிடக்கின்றன.

எனவே போர்க்குற்ற இனவழிப்பு ஆதா£ரங்களைச் சேகரிப்போம். தயக்கமின்றி சாட்சியமளிப்போம். எம்மினத்தைக் கொன்றொழித்தவர்களைக் கூண்டிலேற்றி எம் மாவீரர் கனவுகளை நனவாக்குவோம். ஓர் தேசிய இனத்தின் விடுதலைக்காக ஒரு தலைமுறையே தன்னை ஈகம் செய்து நிற்கின்றது. மண்ணுறங்கும் அந்த சந்தனப் பேழைகள் எம்மிடம் கேட்கப்போகும் விடுதலையை, சுதந்திர தமிழீழத்தை நோக்கி எமது பாதங்கள் நடைபோடட்டும். செங்குருதி தெளித்து விடுதலைக்கான பாதைபோட்டிருக்கும் மாவீரர் தடங்களைப் பின் பற்றுவோம். தலைகள் நிமிர்த்தி, ‘நாளை தமிழீழத்தில்’ என்று உறுதியெடுப்போம்.

நன்றி: ஈழமுரசு (26/11/2010)

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*