TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சந்தர்ப்பத்தை தவறவிடுவதே தோல்விக்கான முதற்படி

நவம்பர் மாதம் ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றில் மிகவும் முக்கிய மாதமாகும், தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடி தமது உயிர்களை தியாகம் செய்த பல ஆயிரம் விடுதலைப்புலிகளை தமிழ் மக்கள் போற்றி வணங்கும் மாதம் இது.

மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தும் இந்த நாளில் தான் தமிழ் மக்களின் அரசியல் செயல்திட்டங்களின் விவாதங்களும் இடம்பெறுவதுண்டு, விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை ஈழத்தமிழ் மக்களின் நிகழ்கால, எதிர்கால அரசியல் தொடர்பான பூரண விளக்கங்களை தமிழ் மக்களுக்கு தருவதுண்டு.

அவரின் சில உரைகளை பல வருடங்கள் கழித்தும் நாம் விவாதிப்பதுண்டு, எனனெனில் அவரின் உரை பலவருடங்களின் பின்னர் நடைபெறும் சம்பவங்களையும் தெளிவாக எமக்கு இனங்காட்டுவதுண்டு. 2010 ஆம் ஆண்டுகளில் எமது விடுதலைப்போரை யார் வழிநடத்தவேண்டும் என்பதை 2008 ஆம் ஆண்டே அவர் எதிர்வுகூறிச் சென்றிருந்தார்.

ஆனால் நாம் இன்று எமது விடுதலைப்போரின் சுழற்சிச் சக்கரத்தில் எந்த நகர்வையும் மேற்கொள்ளமுடியாதவர்களாகவே தேங்கிப்போய் நிற்கிறோம். அதற்கு பல காரணங்களை பலர் முன்வைக்க முனைந்தாலும், சிறீலங்கா – இந்திய அரசுகளின் அழுத்தங்கள் மற்றும் உள்நுளைவுகளே பிரதான காரணமாக இருக்கலாம்.

ஆனால் இன்று, எமது இந்த தேக்க நிலையை பயன்படுத்திக் கொண்டுள்ள சிறீலங்கா அரசு உறக்கமின்றி செயலாற்றி வருகின்றது. வடக்கு – கிழக்கு உள்ளடங்கிய தாயகப்பகுதியாக இருந்தாலும் சரி அல்லது அதற்கு வெளியிலாக இருந்தாலும் சரி அவர்களின் இராஜதந்திர நகர்வுகள் எம்மை மிஞ்சியதாகவே இருக்கின்றது.

அனைத்துலக சமூகத்தை புறம்தள்ளி வடக்கில் உள்ள மக்களை பலவந்தமாக பல மாதங்கள் தடுத்து வைத்திருந்தது சிறீலங்கா அரசு, அதன் பின்னரும் அவர்களை இராணுவ வலையத்திற்குள் தான் குடியமர்த்தியுள்ளது. வடக்கில் தொடர்ச்சியான சிங்கள குடியேற்றங்களை அது விரைவாக மேற்கொண்டும் வருகின்றது.

ஐ.நாவின் ஆலோசனைக்குழுவை நிராகரித்த சிறீலங்கா அரசு தான் மேற்கொண்ட படுகொலைகளை விசாரணை செய்ய தானே ஒரு குழுவை அமைத்துள்ளது. அதாவது படுகொலை செய்தவன் இங்கு வழங்கறிஞராகின்றான், படுகொலையை மேற்கொள்ள உத்தரவிட்டவன் நீதிபதியாகின்றான்.

அது மட்டுமல்லாது, எந்த இராணுவத்தினரை மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக மேற்குலகம் கூறியதோ அவர்களை மேற்குலக நாடுகளுக்கான சிறீலங்கா அரசின் இராஜதந்திரிகளாக அரசு நியமித்துள்ளது.

மேலும் போர்க்குற்றங்களை மேற்கொண்ட பிரதான குற்றவாளி என போரை வழிநடத்திய ஜெனரல் பொன்சேகா கையை காட்டிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சவீந்திர டீ சில்வாவை ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் பிரதி பிரதிநிதியாக நியமித்துள்ள சிறீலங்கா அரசு அவரை ஐ.நாவின் வளாகத்திற்குள் குடியமர்த்தியுள்ளது.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்களும், அனைத்துலக ஊடகங்களும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன. ஆனால் அவர்களின் குரல்களை பலப்படுத்தவேண்டியது தமிழ் மக்களின் கைகளில் தான் உள்ளது.

சிறீலங்கா அரச பிரதிநிதிகளின் நகர்வுகளுக்கு இணையாக அல்லது அவர்களின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு ஏதுவான நகர்வுகளை ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மீது நாம் ஒரு தொடர் அழுத்தத்தை மேற்கொள்ளவேண்டும்.

சூடான் நாடு அதன் பிரதிநிதியாக அஹமட் ஹரோன் என்பவரை ஐ.நாவுக்கு அனுப்பினால், அதனை ஐ.நா ஏற்றுக்கொள்ளுமா? அல்லது சிலோலியோன் அதன் போர்க்குற்றவாளியாக கருதப்படும் கட்டகளைத் தளபதி ஒகஸ்ரீன் கபோ என்பவரை ஐ.நாவுக்கான பிரதிநிதியாக அனுப்பினால் அவரை ஐ.நா ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

பலஸ்த்தீனத்தின் காசா பகுதியில் படுகொலைகளில் ஈடுபட்ட இஸ்ரேலின் படை அதிகாரிகள் பிரித்தானியாவுக்குள் கால்பதிக்க முடியாத நிலையில் இருக்கும்போது, சிறீலங்கா படை அதிகாரிகள் எவ்வாறு பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் அதிகாரிகளாக நியமனம் பெறமுடியும்?

அவர்கள் அவ்வாறு வரமுடியுமானால், அது அவர்களின் தவறாக இருக்க முடியாது, எமது தவறாகவே இருக்கும். பலஸ்தீன மக்களினதும், அமைப்புக்களினதும் செயற்பாடுகளில் இருந்து நாம் பின்தங்கி உள்ளோம் என்பதே அதன் பொருள்.

இந்து சமுத்திரப் பிராந்தியம் நோக்கி நகர்ந்துள்ள பூகோள அரசியலில் ஈழத்தமிழ் இனம் தனது செல்வாக்கை செலுத்த வேண்டுமானால் தற்போது எமது பணிகளில் முதன்மையானது இராஜதந்திர அரசியலாகும்.

ஓபாமாவின் இந்தியப் பயணம் என்பது, இந்தியாவுக்கான ஒரு செய்தியாகவே அமைந்துள்ளது. அதாவது இந்துசமுத்திர பிரதந்தியத்தில் இந்தியாவை ஓரம்கட்டும் சீனாவின் முயற்சிகளை ஈடுகட்டவேண்டுமெனில் தனது அயல் நாடுகளில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா அதிக அக்கறை காண்பிக்க வேண்டும் என்பதே அது.

அவ்வாறான ஒரு நிலையில் தான் மேற்குலகத்தின் ஆதரவுகளை இந்தியா முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதே ஒபாமாவின் செய்தி. அது மட்டுமல்லாது, உலகில் மிகப்பெரும் ஜனநாயக நாடு என தன்னைத்தனோ பறைசாற்றிய இந்தியாவுக்கு ஒபாமாவின் கருத்து ஒரு அவமானம் என்பதே உண்மையானது.

ஜனநாயகத்தை மதியுங்கள், மனித உரிமைகளை பின்பற்றுங்கள் என்பதே ஒபாமா கூறிச்சென்ற செய்தி. இந்த தகவல்களுக்கு பின்னரும் இந்தியா மௌனம் காத்தால் அமெரிக்காவின் நேரிடையான தலையீடுகள் அதிகரிக்கும் என்பதும் அதன் நேரிடையற்ற பொருளாக இருக்கலாம்.

அமெரிக்காவை பொறுத்தவரையில், அது தனது குடிமக்களின் பாதுகாப்பை இந்து சமுத்திரத்தின் முடிவுப்புள்ளியில் இருந்து தீர்மானிக்கின்றது. சிறீலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சா அமெரிக்க மக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்பதை கூட அமெரிக்க ஊடகம் ஒன்று முன்வைத்திருந்தது.

இந்த இராஜதந்திரா சூழற்சியின் ஊடாக நாம் எமது விடுதலைப்போரை பல மைல் தூரம் நகர்த்த முடியும். ஆனால் அதனையும் நாம் தவறவிட்டால் தமிழ் இனம் வியட்னாம் மக்களின் வரலாற்றை முறியடித்தவர்களாகவே இருப்போம். ஏனெனில் தமது உரிமைகளுக்காக உலகில் நீண்டகாலம் (ஏறத்தாள ஒரு நூற்றாண்டுக்கு மேலாக) போராடிய இனமாக வியட்னாம் மக்களே உள்ளனர். நாம் ஏற்கனவே 60 வருடங்களை கடந்துள்ளோம்.

எனவே மாவீரர்களின் கனவுகளை நினைவாக்க நாம் ஒன்றிணைந்து எமது அரசியல், இராஜதந்திரப் பணிகளை முன்னெடுக்க வேண்டியது தற்போது அவசியமானது. சிறீலங்கா அரசை விட வேகமாக செயற்பட வேண்டிய நிலையில் நாம் தான் உள்ளோம். ஏனெனில் நாம் எமது உரிமைகளுக்காக போராடும் இனம்.

2008 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் ஈழவிடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழ் சமூகத்திடமும், இளைய தலைமுறையினரிடமும் ஒப்படைக்கப்படுவதாக தேசிய தலைவர் கூறிய பின்னரும், நாம் அதில் தேங்கிப்போய் நிற்பது என்பது நாம் தோல்வியை தழுவப்போகிறோம் என்பதை தான் கட்டியம் கூறி நிற்கின்றது.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நன்றி: ஈழமுரசு (26/11/2010)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*