TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ் மக்கள் நம்பும் அளவிற்கு இடதுசாரிகள் எந்த

தமிழ் மக்கள் நம்பும் அளவிற்கு இடதுசாரிகள் எந்த காலத்திலும் நடந்து கொள்ளவில்லை: இரா.துரைரத்தினம்.

கடந்த வாரம் தமிழ்வின் இணையத்தளத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகையில் தமிழர்களுக்காக குரல் கொடுப்போரை குறை கூறுவது ஏற்புடையதா? என்ற தலைப்பில் என்.யோகேந்திரலிங்கம் என்பவர் எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு.

எனது கட்டுரைகளுக்கு அநாமதேய இணையத்தளங்களில் புனைபெயர்களில் யாராவது பதிலளித்தால் நான் அதை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அநாமதேயங்கள் பற்றி யாரும் அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் வீரகேசரி பத்திரிகையில் யோகேந்திரலிங்கம் என்பவர் தனது சொந்த பெயரில் எழுதியிருப்பதால் அதற்கு பதில் கூற வேண்டியது எனது கடமையும் பொறுப்பும் ஆகும்.

அவர் எழுதிய விடயங்களில் மூன்று விடயங்களை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலாவது என்னை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என எண்ணியே இதை எழுதியிருக்கிறார். நான் இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியிலோ அல்லது அரசியல் அமைப்புக்களிலோ சாதாரண அங்கத்தவராக கூட இருந்ததில்லை. ஆரம்பம் தொடக்கம் இன்றுவரை முழுநேர ஊடகவியலாளராகவே இருந்து வருகிறேன். இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகிய ஊடக அமைப்புக்களில் முக்கிய பொறுப்புக்களில் இருந்திருக்கிறேனே தவிர அரசியல்வாதியாக இருந்ததில்லை. இப்பொழுதும் ஊடகம் ஒன்றின் செய்தி ஆசிரியராக இருக்கிறேன். நான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. எனவே என்னை அரசியல்வாதியாக சித்தரித்த கட்டுரையாளர் தனது தவறை திருத்திக்கொள்வார் என நினைக்கிறேன்.

இரண்டாவது இடதுசாரிகளை தமிழ் மக்கள் நம்பவில்லை என்பது. தமிழ் மக்கள் நம்புகின்ற அளவிற்கு எந்த காலத்தில் இடதுசாரிகள் நடந்து கொண்டார்கள். காலத்திற்கு காலம் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் உரிமைகளை தட்டிப்பறிப்பதில்தானே கங்கணம் கட்டி நின்றார்கள்.

1970ஆம் ஆண்டில் சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போதுதான் தமிழ் மக்கள் மிக மோசமாக அடக்கப்பட்டார்கள். அப்போதைய சிறிமாவோ ஆட்சியில் இடதுசாரிகள் என்று சொல்லப்படுகின்ற கொல்வின் ஆர்.டி சில்வா, பீற்றர் கெனமன், என்.எம்.பெரேரா ஆகியோரே முக்கிய பங்காளர்களாக இருந்தனர். சிறிமாவோ ஆட்சியில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மிகமோசமான கொடுமைகளுக்கு இவர்களும் உடந்தையாகத்தானே இருந்தார்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு இவர்கள் செய்த அநீதிகள் தான் வழி வகுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

பல்கலைக்கழக தரப்படுத்தல், பொதுநிர்வாக சேவைக்கு தரப்படுத்தல், என தமிழர்களுக்கு பாதகமான சட்டங்களை கொண்டுவந்த போதும் திட்டமிட்ட குடியேற்றங்களை செய்த போதும் ஆட்சியில் பங்குதாரர்களாக இருந்த இடதுசாரிகள் அதற்கு எதிராக எப்போதாவது வாய் திறந்தார்களா? மாறாக முழுக்க முழுக்க தமிழ் இனத்தின் உரிமைகளை பறித்து அவர்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கு தானே இடதுசாரிகள் கங்கணம் கட்டி நின்றார்கள். யாழ்ப்பாணத்தில் உலக தமிழராட்சி மாநாடு நடைபெற்ற போது அதை குழப்பி தமிழ் மக்களை சிறிமாவோ அரசு படுகொலை செய்த போதும் இந்த இடதுசாரிகள் ஒருவார்த்தை கூட தமிழர்களுக்காக பேசவில்லையே. இந்த இடதுசாரிகளா தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள்?

இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைப்பது போல சோல்பரி அரசியல் யாப்பை மாற்றி 1972ஆம் ஆண்டில் புதிய அரசியல் யாப்பை உருவாக்கியவர் இடதுசாரிகளில் ஒருவரான கொல்வின் ஆர்.டி.சில்வாதான்.

இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வா தமிழ் இனத்திற்கு செய்த கைங்கரியத்தை இலங்கையில் உள்ள இடதுசாரிகளுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரையாளர் யோகேந்திரலிங்கத்திற்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். சோல்பரி அரசியல்யாப்பில் சிறுபான்மை இனங்களுக்கு ஓரளவு பாதுகாப்பு அளித்த 13ஆவது சரத்தை நீக்கி பௌத்த மதத்தை ஆட்சி மதமாற்றியவர்தான் இந்த இடதுசாரியான கொல்வின் ஆர்.டி.சில்வா.

சோல்பரி அரசியல் யாப்பின் 13ஆவது சரத்தில் இலங்கையில் இருக்கின்ற இனங்கள் தமது சொந்த மொழியில் கருமங்களை ஆற்றலாம் என்றும் அந்தந்த இனங்கள் தங்கள் பிராந்தியங்களில் உள்ள தேசவழமை சட்டங்களையும் குடியியல் மரபுவழிச் சட்டங்களையும் பேணலாம் என இருந்தது. இந்த சரத்து 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு சட்டத்தில் முற்றாக நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக பௌத்த மதத்தையும் சிங்கள மொழியையும் மட்டும் அரியாசனத்தில் ஏற்றிவைத்தவர்கள் இந்த இடதுசாரிகள்தான்.

முதலாளித்தவ அரசுகள்தான் தமிழர்களின் உரிமைகளை பறித்தார்கள், சிங்கள அரசியல்வாதிகள் அல்ல என கட்டுரையாளர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. சிங்கள அரசுத்தலைமைகளை அவர் காப்பாற்ற முற்பட்டிருக்கிறார். சிங்கள அரசுத்தலைமைகளில் டி.எஸ்.செனநாயக்கா தொடக்கம் இன்றைய மகிந்த வரை அவர்களோடு காலத்திற்கு காலம் இணைந்திருந்த இடதுசாரிகளும் அடங்குகிறார்கள். இங்கே முதலாளி தொழிலாளி என்ற பிரச்சினை இல்லை. சிங்கள பேரினவாதிகள் தமிழ் இனத்தை அடக்கி ஆள நினைக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

மூன்றாவது விடயம். ஜே.வி.பி தமிழ் மக்களுக்காக இப்போது குரல் கொடுக்கிறது அவர்களை குறைகூறுவதா என கட்டுரையாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஜே.வி.பியினர் ஒரு இடதுசாரிகள் என்றும் கூறியிருக்கிறார்.

ஜே.வி.பி ஒரு இடதுசாரி என்பதை நான் முற்றாக மறுக்கிறேன். அவர்கள் இடதுசாரி கொள்கையின் கீழ் ஒருபோதும் செயற்பட்டதில்லை. வெறுமனே சிவப்பு சட்டையை மட்டும் போட்டார்களே தவிர இடதுசாரி கொள்கையின் கீழ் அவர்கள் ஒருபோதும் செயற்பட்டதில்லை.

அதுதவிர கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற சிங்கள பேரினவாதிகள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளை மிஞ்சும் அளவிற்கு ஜே.வி.பியினர் செய்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் ஜே.வி.பியினரை நம்ப வேண்டுமாக இருந்தால் முதலில் அவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

ஜே.வி.பியினர் இடதுசாரிகளாக இருந்தால் அவர்கள் முதலில் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை விடுத்து தமிழ் மக்கள் நொந்து விழுந்தபோது ஏறி மிதித்தவர்கள்தான் இந்த ஜே.வி.பியினர்.

இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை பிரிக்க வேண்டும் என இனவாத நோக்கத்தோடு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தமிழ் மக்களின் தாயகப் பிரதேசமான வடகிழக்கை பிரித்து மிகப்பெரிய துரோகத்தை தமிழ் மக்களுக்கு இழைத்தவர்கள் தான் இந்த ஜே.வி.பியினர்.

அதற்கு மேலாக சுனாமியால் வடக்கு கிழக்கு பிரதேசமே மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட அந்த பிரதேசங்களை மீளக்கட்டி எழுப்புவதற்காக சுனாமி செயலணியை உருவாக்குவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது அதை முளையிலேயே கிள்ளி எறிந்தவர்கள் இந்த ஜே.வி.பியினர்தான். சுனாமி அழிவுகளை சந்தித்த தமிழர்களுக்கு ஒரு துளி உதவியும் சென்றடையக்கூடாது என உயர்நீதிமன்றம் வரை சென்ற ஜே.வி.பியினரையா தமிழ் மக்கள் நம்பவேண்டும்?

சிங்கள படைகள் வடகிழக்கில் தமிழர் பிரதேசங்களில் குண்டுத்தாக்குதல்களை நடத்தி தமிழர்களை கொத்து கொத்தாக அழித்த போது கொல்லப்படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என பிரசாரம் செய்து கொண்டிருந்தனர் இந்த ஜே.வி.பியினர். செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் விமானப்படையினர் குண்டு வீசி அங்கிருந்த பெண்பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்ட போது மறுநாளே ஜே.வி.பி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பெண்புலிகள் என அறிவித்தார்கள். நாகர்கோவில் பாடசாலை மீது சிறிலங்கா படையினர் குண்டுத்தாக்குதல் நடத்திய போது கூட கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அறிவித்தார்கள். போர் நடந்த காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதெல்லாம் அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்றே ஜே.வி.பியினர் சொல்லிக்கொண்டிருந்தனர். ஏன் சுனாமியில் வடக்கு கிழக்கில் பெருந்தொகையான தமிழ் மக்கள் பலியானபோது அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என ஜே.வி.பியினர் கூறியதை எப்படி தமிழ் மக்களால் மறக்க முடியும்.

ஊடகவியலாளர் சிவராம் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டபோது சிவராம் கொழும்பில் இருந்த பயங்கரவாதி என்றுதானே ஜே.வி.பியினரும் ஹெல உறுமய கட்சியினரும் அறிவித்தனர்.

தமிழ் மக்களுக்கு ஓரளவு நிம்மதியையும் ஆறுதலையும் வழங்கும் வகையில் பிரபாகரனுக்கும் ரணிலுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமைந்திருந்தது. அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்து நின்றவர்கள் ஜே.வி.பியினர்தான். அப்போது அரசுத்தலைவராக இருந்த சந்திரிக்காவுக்கு அழுத்தங்களை கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை பலவீனப்படுத்தும் வகையில் ரணில் தலைமையிலான அமைச்சரவையின் மூன்று அமைச்சுக்களை பறித்தெடுத்து குழப்பங்களை ஏற்படுத்துவதற்கும் பின்னர் அந்த அரசாங்கத்தை கலைப்பதற்கும் ஜே.வி.பியினர்தான் காரணமாக இருந்தார்கள் என்பதை பின்னர் ஒருமுறை சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்திருந்தார்.

ஜே.வி.பியினரின் சொல்லைக்கேட்டு தவறான முடிவை எடுத்துவிட்டேன் என சந்திரிகா கூறியிருந்தது பலருக்கும் ஞாபகம் இருக்கலாம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரணில் விக்கிரமசிங்காவும் நோர்வே அரசாங்கமும் வடக்கு கிழக்கை தமிழர்களுக்கு பிரித்து கொடுத்து விட்டார்கள் என தென்னிலங்கை முழுவதும் பிரசாரம் செய்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்த ரணில் விக்கிரமசிங்கா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் வகித்த எரிக் சொல்ஹைம் ஆகியோரின் படங்களுக்கு புலி உடை தரித்து கொழும்பு வீதிகளில் ஊர்வலம் நடத்தி தமிழ் மக்களுக்கு எதிராக மிக மோசமான இனவாதத்தை கக்கிய ஜே.வி.பியினரை எப்படி இடதுசாரிகள் என்று சொல்ல முடியும்.

யாழ்ப்பாணத்திற்கு சென்று தாங்கள் தமிழ் மக்களுக்கு ஆதரவானவர்கள் என ஜே.வி.பி காட்டிக்கொள்வதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

தென்னிலங்கையில் அவர்களின் செல்வாக்கு வெகுவாக வீழ்ச்சியடைந்து வருகிறது. விடுதலைப்புலிகள் இல்லாத இச்சூழலில் அதை பயன்படுத்திக்கொண்டு இந்த இடைவெளியில் யாழ்ப்பாணத்தில் கால் பதிக்கலாம் என்பதே ஜே.வி.பியினரின் நோக்கமாகும். அதற்கு அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம்தான் காணாமல் போனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது.
தமது உறவுகளை மீட்பதற்காக எந்த பிசாசுகள் அழைத்தாலும் சென்று தமது உறவுகளை மீட்டுத்தாருங்கள் என கெஞ்சும் நிலையில்தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் கூட்டம் ஒன்றையோ அல்லது ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதாக இருந்தால் காணாமல் போனவர்களின் பிரச்சினையை கையில் எடுத்தால்தான் மக்கள் அதிகம் வருவார்கள் என்பது ஜே.வி.பிக்கு தெரிந்த விடயம்தான்.

வங்குரோத்து நிலையில் இருக்கும் தமது அரசியலை மீளக்கட்டி எழுப்புவதற்காக இப்போது தாங்கள் தமிழர்களுக்கான ஆதரவு கரங்கள் என்ற பசுத்தோலை போர்த்தவாறு யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்கள். தமிழர்களின் கண்ணீரை வைத்து அரசியல் நடத்தப்பார்க்கிறார்கள்.

தமிழ்மக்கள் வகை தொகையின்றி காணாமல் போவதற்கு ஸ்ரீலங்கா படையினர்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த படையினருக்கும் போருக்கும் முழுமையான ஆதரவை கொடுத்தவர்கள் ஜே.வி.பியினர்தான். ஒருவகையில் தமிழ் மக்கள் காணாமல் போவதற்கும் படுகொலை செய்யப்படுவதற்கும் ஜே.வி.பியும் காரணமாக இருந்தது யாரும் மறுக்க முடியாது. ஒரு புறத்தில் தமிழர்களை படுகொலை செய்து காணாமல் போகச்செய்து விட்டு மறபுறத்தில் வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜே.வி.பியை தமிழ் மக்கள் நம்புவதற்கு அவர்கள் மானம் ரோசம் அற்றவர்கள் அல்ல.

அவர்கள் உண்மையில் தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்டிருக்கிறார்கள் என்றால் தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். வடகிழக்கு மாகாணத்தை பிரித்தது தொடக்கம் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு ஜே.வி.பி இழைத்த அநீதிகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். வடகிழக்கு தமிழர் தாயகம் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் ஜே.வி.பி உட்பட இடதுசாரிகள் தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகளுக்கு நிவாரணத்தை தேடி தராமல் பகிரங்கமாக மன்னிப்புக்கோராமல் தமிழ் மக்களின் வாசல்படிகளை மிதிப்பதற்கு இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழர்கள் இன்று நொந்துபோய் இருக்கலாம். அதற்காக தமிழ் மக்கள் இழிச்சவாயர்கள் என்றோ அடிமைகள் என்றோ ஜே.வி.பியினர் உட்பட சிங்கள பேரினவாதிகள் நினைக்க கூடாது. தமிழ் மக்களுக்கு துன்பங்களையும் அழிவுகளையும் தந்த இடதுசாரிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களும் இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜே.வி.பி போன்ற இனவாதிகளையும் கொடுங்கோலர்களையும் தன்மானம் உள்ள எந்த தமிழனும் தனது வீட்டு வாசல்படிக்கு எடுக்க மாட்டான்.

இறுதியாக இடதுசாரிகள் என்று சொல்லிக்கொண்டு அண்மைக்காலத்தில் செந்தில்வேல் போன்றவர்கள் ஐரோப்பிய நாடுகளில் வலம் வருகிறார்கள். அவர்களின் போலி அரசியல் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*