TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பிரபாகரனும் ஜான் கென்றி நியூமேனும்…மாவீர ஒளியே…

பிரபாகரனும் ஜான் கென்றி நியூமேனும்…மாவீர ஒளியே கருணையுடன் வழிநடாத்து…

பிரபாகரனும் ஜான் கென்றி நியூமேனும்…
மாவீர ஒளியே கருணையுடன் வழிநடாத்து…

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் 56 வது பிறந்தநாளைப் பாராட்டி எழுதப்பட்டுள்ள நவீன சிந்தனைக்கட்டுரை.. உலகப் புகழ்பெற்ற தகவல்களுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது…

மாவீரர்கள் போராடித்தான் தமிழினத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்ற காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் போராடாமலே வழிகாட்டும் ஒளியாக அவர்கள் மாறும்போதுதான் மாவீரர்களின் சிறப்பு மகத்தான சிறப்பாக மலர்கிறது..

முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் தனது வாழ்விற்கு ஒளிகாட்டிய நூல் என்று Light From Many Lamps என்ற நூலைக் கூறுவார். உலகத்தை மூடியுள்ள இருளை அகற்ற விளக்கேற்றிய மனிதர்களின் வாழ்வின் செய்திகள் பல அதில் உள்ளன.

அதில் ஒரு கவிதைதான் இக்கட்டுரையை அலங்கரிக்கும் ஜான் கென்றி நியூமேன் எழுதிய உலகப் புகழ்பெற்ற கவிதையாகும்.. ஒளியால் எப்படி ஆபத்தைக் கடக்கலாம் என்ற செய்தியைச் சொன்ன உலகப் புகழ் பெற்ற கவிதை. நோயால் 32 வயதிலேயே மடிந்துவிட வேண்டிய ஒருவர் ஒளியின் பெரும் கருணையோடு 90 வயதுகள் வாழ்ந்து காட்டிய கவிதை அது.. இதோ முதலில் நிகழ்வைப் பாருங்கள்…

ஜான் கென்றி நியூமேன் பயணித்த கப்பல் போனி போசியோ என்ற கடல் ஜலசந்தியில் பாதை விலகிவிட்டது. ஒருவார காலமாக திசை தெரியாது அலைந்து கொண்டிருந்தது. பட்டினி, புயல், எல்லோரும் மடிய வேண்டிய அவலம் இளம் துறவியான அவர் 32 வயதிலேயே தன் வாழ்வு முடியப்போவதை உணர்ந்து கொண்டார்…

ஆம்.. திசை மாறிவிட்ட இந்தக் கப்பலை இனி வழி நடாத்தப்போவது யார் ?

இந்த அவலத்தை யார் பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அவரால்தான் அதன் பாதையை மாற்ற முடியும்.. ஒளி வடிவாக அந்தப் பேரருளே தம்மை அவதானித்துக் கொண்டிருப்பதை அவர் மனம் உணர்த்தியது… வெளிச்சமாய் விரிந்து கிடக்கும் பேரருளே… என்னால் வழியைக் காண முடியவில்லை… என்னை அன்புடன் வழிநடாத்து வெளிச்சமானவனே.. ! என்று கப்பல் தளத்தில் இருந்து மன்றாடினார்..

வெளிச்சம் அவர் மீது நீக்கமற விழுந்தது..

அப்போது அவர் உள்ளத்தில் ஒரு கவிதை மலர்ந்தது… சட்டையில் இருந்த பென்சிலை எடுத்து அந்தக் கவிதையை எழுத ஆரம்பித்தார்… எழுத எழுத அந்த அற்புதமும் கூடவே நடைபெற ஆரம்பித்தது…

எங்கிருந்தோ வந்த இனிய காற்று பொங்கிய நீரை மெல்லிய அலைகளாக சலசலக்கச் செய்தது..

பாய்மரத்தில் பாய்கள் திரும்பி ஆடின.. கப்பலின் அணியம் சரியான திசை நோக்கி திரும்பியது..

ஆம்… !

திசையின்றி அலைந்த ஒரு கூட்டம் சரியான திசையில் பயணிக்க ஆரம்பித்த அதிசம் அப்போது நடந்தது.. அந்த நேரம் அவர் எழுதிய அற்புதமான பாடல் இதுதான்..

ஒளியே, கருணையுடன் வழிநடாத்து, சூழும் இருளினூடே..
நீ என்னைத் தொடர்ந்து வழி நடாத்து..
இருள் மயமானது இந்த இரவு..
இல்லத்தில் இருந்து வெகு தொலைவில் நான்..
நீ என்னைத் தொடர்ந்து வழிநடாத்து..
நீயே என் பாதம் பார்த்துக் கொள்
தூரத்தில் இருக்கும் காட்சியைக்காண விரும்பி நான் கேட்கவில்லை
ஒரு தப்படி எனக்குப் போதும்
இதற்கு முன் நான் இப்படியில்லை என்னை வழிநடாத்து என்று
நான் பிரார்த்தித்ததில்லை
நானே தேர்ந்தெடுத்து என் பாதையை பார்க்க விரும்பினேன்.
ஆனால் இன்று
நீ என்னை தொடர்ந்து வழிநடாத்து..
பகட்டான நாளை நான் நேசித்தேன்,
பயங்களுக்கு பதிலாக ஆணவம் என்னில் குடிபுகுந்தது
கடந்த காலத்தைக் காணாதே
உன் சக்தியும் ஆசீர்வாதமும் எனக்குக் கிடைத்தால்
நிச்சயம் அது என்னை வழி நடாத்தும்
புதர்கள், சகதி, பாறை, ஓடைகளைக் கடந்து
இரவு கடக்கும்வரை
காலையில் அந்தத் தேவதைகளின் புன்சிரிப்பு
நீண்ட காலமாய் என் இதயம் கவர்ந்தது
இடையில் மறந்தது..
ஒளியே, கருணையுடன் வழிநடாத்து..

அந்த அவலக்குரலை ஒளி கேட்டது.. தன் அன்புக்கரங்களை அந்த இடத்தில் பதித்தது.. அன்றிலிருந்து இந்தக் கவிதை உலக மக்களால் பேராபத்து வரும்போதெல்லாம் பாடப்படும் கவிதையாக மாற்றம் பெற்றதும் வரலாறாகும்…

அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மரணித்தபோது தனது இறுதிக் கிரியையில் ஒளியே என்னை கருணையுடன் வழிநடாத்து என்ற பாடலையே பாடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்… இனிய ஓசையுடன் ஒளி அவரின் ஆத்மாவை சரியான திசையில் வழி நடாத்த அப்பாடலே அவசியமென நம்பினார்…

பிரித்தானிய பேரரசின் ஏகாதிபத்திய அடாவடித்தனங்களின் முன்னால் மகாத்மா காந்தி ஒற்றைத் தடியுடன் போராடப் புறப்பட்டபோது பாடிய பாடல் ஒளியே என்னை வழி நடாத்து என்பதுதான்… ஒளி அவரை சரியான திசையில் வழி நடாத்தியது.. சூரியனே அஸ்தமிக்காத பேரரசு பணிந்தது.. ஆயுதம் ஏந்தாத ஒரு போரைக்கூட ஒளியின் கருணை இருந்தால் வெற்றியாக்க முடியும்..

அதனால்தான் வின்ஷன் சூன் என்பவர் மகாத்மா காந்தி பற்றிய ஒரு நூலை எழுதியபோது அதற்கு ஒளியே கருணையுடன் வழிநடாத்து என்ற தலைப்பையே அதற்கு வைத்துக் கொண்டார்.

அதுபோல… ஒரு நாள்…

அன்டாட்டிக் துருவத்தில் லிங்கன் எல்ஸ் வெர்த் என்பவரின் விமானம் வானத்திலேயே பழுதடைந்தது. அதன் றேடியோ சமிக்ஞைகள் யாவும் துண்டிக்கப்பட்டுவிட்டன. திசை தெரியாத தும்பிபோல அது சுழன்றது… அப்போது அவர் ஒளியே என்னை கருணையுடன் வழி நடாத்து என்ற இப்பாடலைப் பாடினார்.. அவருடைய விமானத்தை அந்தப் பேரொளி வழிநடாத்தி சரியான திசையைக் காட்டியதாக உயிர் தப்பி வந்து உலகுக்கு சொன்னார்..

ஆம்… ! தெளிவுடன் தன்னம்பிக்கையுடன் நடவுங்கள் மேலே ஒரு கை உங்களை வழி நடாத்தும்.. என்றார் பிலிப் ஜேம்ஸ் பெய்லி என்ற அறிஞர்.

இனி…

இதே கவிதையை மறுபடியும் கூர்ந்து பாருங்கள்…

தியாகி திலீபனும்…

அன்னை பூபதியும்…

பெயரே தெரியாது ஈகமான மாவீரர்களும்…

உலகம் செய்த கபடமான ஏமாற்றில் அப்படியே மறைந்துவிடுவார்கள் என்று எண்ணி விடாதீர்கள்.. எத்தனையோபேரை சரியான வழியில் நடாத்திய ஒளி மாவீரரை மட்டும் இருள் குழியில் போட்டுவிடுமென்று நினைக்காதீர்கள்..

தீபங்கள் இருளில் என்றுமே மறைவதில்லை…

மாவீரர்கள்… ஒளியாக வழி காட்டுவார்கள்..

இனிய ஈழத்தமிழர்களே இந்தியா எதற்கு உங்களுக்கு..

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.நாவும் எதற்கு உங்களுக்கு…

இருள் மனங்கள் கொண்ட பதவிப்பித்துப் பிடித்த பாவிகள் கூடும் பாராளுமன்றுகளுக்கு முன்னால் வழிகாட்டும்படி நின்றீர்களே ! அன்று ஒளியே கருணையுடன் வழி காட்டு என்று ஏன் கேட்கவில்லை..

இது ஒரு தவறு இதை இனியாவது எண்ணிப்பார்க்க வேண்டும்…

அன்று ஜான் கென்றி நியூமேனின் கப்பல் பாதை தடுமாறியபோது ஒளியாக வந்த பேரருள் எது ?

இந்தியாவா அமெரிக்காவா.. சோனியாவா, கருணாநிதியா இல்லையே….

அதோ மாவீரரின் பேரொளி வழிகாட்டுகிறது.. நான் நடக்கிறேன் என்றார் பிரபாகரன்… பேரொளியே வழிகாட்டு என்றார் ஜான் கென்றி நியூமேன்.. இருவர் கோரிக்கைகளுமே ஒன்றுதானே..

பிரபாகரன் எங்கே.. ?

இறுதியாக முள்ளி வாய்க்காலில் இருந்து உலகத்தை நோக்கி உதவி கோராமலே அமைதி காத்தாரே ஏன்.. ?

ஒளியிருக்க இந்த கேடுகெட்ட உலக நாடுகள் எதற்கு…

இந்த இருள் நிறைந்த உலக மோசடியாளரை நாம் எப்படி நம்புவது..

மாவீர ஒளியே கருணையுடன் இந்த இனத்தை வழிநடாத்து என்பதுதான் அவருடைய கோரிக்கையாகும்..

ஒளியே, கருணையுடன் வழிநடாத்து, சூழும் இருளினூடே..

இந்த ஆண்டு மாவீரருக்கான வேண்டுதலாக இந்த வரியை வைத்து ஒரு விளக்கை ஏற்றுங்கள்..

ஒளி உங்களுக்கு கருணையுடன் வழி காட்டும்…

தலைவர் எங்கிருந்தாலும் அவருக்கு ஈழத்தமிழினத்தின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…

அலைகள் மாவீரர்நாள் நவீன சிந்தனைகளுக்காக…
கி.செ.துரை 26.11.2010

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • Thangavel says:

    Thesiya thailavar oru varalaru.So didn’t say anything

    November 28, 2010 at 11:04

Your email address will not be published. Required fields are marked *

*