TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அடொல்ப் ஹிட்லரை ஏன் ஸ்டாலின் கொல்லாமல் விட்டார்

17 தடவைகள் வைத்த குறிகளில் தப்பினார் ஹிட்லர்..

ரஸ்ய ராணுவத்தினரிடையே நடைபெற்ற கருத்தரங்கில் சொல்லப்பட்ட செய்திகள்..

டேனிஸ் மொழியில் வரலாறு என்ற தலைப்பில் புதிய சஞ்சிகை ஒன்று வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்தச் சஞ்சிகை வரலாற்று ஏடுகளில் பதியப்படாத பல சுவாரஸ்யமான தகவல்களை மாதாமாதம் வெளியிட்டு வருகிறது. இம்மாத வரலாற்று நூலில் இடம் பெற்ற செய்தியே கீழே தரப்படுகிறது..

ஜேர்மனிய சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லரை கொலை செய்வதற்காக ரஸ்ய இராணுவ உளவாளிகள் திட்டமொன்றைத் தீட்டினார்கள். ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் அனாரோலிக் கூலிஸ்கோவ் தலைமையில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டது. 1943 – 44 காலப்பகுதியில் ஹிட்லரை கொல்வதற்கு இரண்டு அரிய வாய்ப்புக்கள் ரஸ்யர்களுக்குக் கிடைத்தன. இரண்டையுமே ரஸ்ய சர்வாதிகாரி யோசப் ஸ்டாலின் நிராகரித்தார்.

முதலாவதாக ஹிட்லர் பதுங்கியிருந்த பங்கர் கண்டு பிடிக்கப்பட்டது. அவரை பங்கருடன் அழித்தொழிக்கும் வாய்ப்பு கைக்கு வந்தது. தாக்குதலை நடாத்த ஸ்டாலினிடம் அனுமதி கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். ஹிட்லரின் உயிர் தப்பியது.

ஏன் மறுத்தார் ஸ்டாலின்.. ?

அதற்கு அவர் கூறிய விளக்கம் ஹிட்லரை கொலை செய்தால் அமெரிக்காவும், பிரிட்டனும் போரைத் தவிர்த்து புதிய பாதையை வகுத்துவிடும். இரண்டு நாடுகளுமே ஜேர்மனியுடன் ஒப்பந்தம் செய்து யுத்தத்தை முடித்துவிடும், ரஸ்யாவுக்கு அதனால் யாதொரு பலனும் கிடைக்காது. சர்வாதிகாரி ஹிட்லர் கொல்லப்படுவது தாமதமடைய இதுவே காரணம்.

அடுத்த தடவை சினைப்பர் தாக்குதல் மூலம் அவரைக் கொல்ல அரிய வாய்ப்பு கிட்டியது. ரஸ்ய கொலைக்குழு ஹிட்லருக்கு மிக அண்மையில் நின்றது. அவர்களுடைய முயற்சியை உடன் கைவிடும்படி ஸ்டாலின் அறிவித்தார்..

இப்பொழுது ஏன் ஸ்டாலின் மறுத்தார் என்பதற்கு அவர் வேறொரு காரணத்தைக் கூறினார்..

சோவியத் யூனியன் மிகவும் ஸ்திரமான நிலையில் இருப்பதாக ஸ்டாலின் கருதினார். போர் தொடர்ந்து நடைபெற வேண்டும், இறுதியில் ரஸ்யா வெற்றிபெறும் என்றும் கருதினார். மேலும் போரில் பெறும் வெற்றியால் சோவியத்யூனியன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வளைத்துப் போடக்கூடிய வாய்ப்பு அப்போதுதான் வரும் என்றும் கருதினார்.

1935 – 1945 வரை ஹிட்லரைக் கொல்ல 17 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தனையிலும் அவர் உயிர் தப்பினார். அவரைக் கொல்ல முயன்றவர்கள் ஆசைப்பட்ட இலக்குகள் யாவும் எட்டப்பட்டவுடன் ஹிட்லர் தானாகவே தற்கொலையும் செய்து கொண்டார். அவரைக் கொல்ல வேண்டிய தேவை எதிரிகளுக்கு ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவலை அனாரோலிக் கூலிஸ்கோவ் சோவியத் இராணுவத்தினரிடையே பேசும்போது எடுத்துரைத்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இந்தக் கொள்கையை அப்படியே ஈழப்போருக்குள் கவிழ்த்துப் போட்டுப் பார்த்தால் பதிலற்ற சில கேள்விகளுக்கு பதிலும் கிடைக்கலாம் அல்லவா..

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*