TamilSpy

பொழுது போக்கு இணையம்…

போராட்டத்தின் அடித்தளம் காக்கப்படல் வேண்டும்

இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம், சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வை பேட்டிகண்டு மூன்று நாட்களாகத் தொடர்ந்து பத்திரிகையில் எழுதியமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல.

நன்கு திட்டமிடப்பட்டு கருணாநிதியின் அறிக்கையோடும் ப.கிருஷ்ணாவின் அறிக்கையோடும் சேர்த்து ஒரே நேரத்தில்றோவினால் இயக்கப்பட்டுத் தமிழீழத் தேசியத்திற்கும், ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும் சேர்த்து வைக்கப்பட்ட சாவு மணியாகும். கொழும்பு சென்னை டெல்லி அச்சில் செயற்படுத்தப்பட்ட ஒரு கூட்டுச் சதியே இவ் அறிக்கையும், பேட்டியும்.

பாசிஸ்டுகளினதும், ஸ்ராலினிஸ்டுகளினதும் கோட்பாடுகளைப் பின்பற்றி, போர்க் குற்றவாளிகளைக் காத்து நின்று, போரிலே தோல்வியடைந்த மக்களை மேலும் அழிவிற்குள்ளாக்கி, அவர்கள் மீது சாத்தியமற்ற தீர்வுகளைத் திணித்து, அந்த மக்களை மேலும் தடுப்பு முகாம்களிலேயே அடைத்து வைத்து ஒரு இனத்தின் போராட்டக் குணமுள்ள ஒரு பகுதியையே தொடர் அழிவிற்குள்ளாக்கும் ஒரு இனப்படுகொலைக் கட்டமைப்பையே சிறீலங்காவின் இந்தக் கூட்டுச் சதியாளர்கள் நிறைவேற்றுகிறார்கள். இன அழிப்பு வழிமுறைகளில் இன்று இராஜபக்­வே முன்னணி வகிக்கின்றார்.

தமிழருக்கு எந்தத் தீர்ப்பும் தர விரும்பாது தனது தேர்தலைக் குறிவைத்து சிங்களவர் மனங்குளிரத் தமிழர்களைத் தடுப்பு முகாம்களில் வைத்து அழித்தொழிக்க நினைக்கிறார் மகிந்தர். நாட்டில் இராணுவத்தை மேலும் பெருக்கித் தனது மகிந்த சிந்தனைத் தீர்வை நிலைநாட்ட முதலீடு செய்வதற்குஉலகையும் துணைக்கு அழைக்கின்றார். கருணாநிதி தமிழீழத்தை முற்றாகப் புறக்கணித்து உரிமைகளற்ற மாநில சுயாட்சி முறையைப் பின்பற்றும்படி குரல் எழுப்பி சிங்களத்திற்கு ஒத்தடம் தடவுகின்றார். தமிழீழத் தேசியப் போராட்டத்தை ஒரு சிறுபான்மையினரின் கிளர்ச்சியாகப் பாவித்து இலங்கைத் தீவில் “பயங்கரவாதம்’ ஒழிக்கப்பட்டதைப் பாராட்டி, 13 ஆவது சட்டத்தை அமுலாக்குவதில் மட்டுமே ஆர்வம்காட்டிச் சென்ற வியாழனன்று பாராளுமன்றத்தில் பேசிய ப.கிருஷ்ணாவும் சிங்களத்திற்கு சாமரம் வீசவே எத்தனிக்கின்றார்.

கொழும்பும், புதுடில்லியும் தமிழருக்கு எதையும் தரப்போவதில்லை என்பது வெட்டவெளிச்சமானது. இவர்கள் கூறிக்கொள்ளும் பயங்கரவாதத்தின் முற்றுப்புள்ளிக்குப் பின்னரும் கொழும்பும், டெல்லியும் கூட்டாக ஒரு புதியவகையான இன அழிப்புக்கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இது தமிழீழம் என்ற எம் தாயகத்தையே இல்லாதொழிப்பதற்காகவும், சிறீலங்கா மீதான தனது பிராந்திய புவியியல் இலாபங்களிற்கு அப்பால் இந்தியா என்றுமே தமிழர் நலனில் அக்கறை காட்டவில்லை. இதற்காகவே கொழும்பில் இன அழிப்பு அட்டவணையை இந்தியா நிறைவேற்றுகின்றது. ஈழத் தமிழர் என்றுமே இந்தியாவை தமது விடுதலையை வழங்குவோராகவே எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்திய அரசு தமிழர் நலனில் எந்த அக்கறையையும் காட்டாது தனது சுய நலன்களிற்காகத் தமிழர்களை பலியிடவே விரும்பியுள்ளது. இதற்குத் துணைபோகும் தமிழக அரசு தமிழர்களால் என்றுமே மன்னிக்கப்படாததாக அமைந்துள்ளது.

ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மாபெரும் இனவழிப்புப் போரையோ அல்லது கொழும்பையோ போர்க்குற்றவாளிகளாகத் தட்டிக்கேட்க எந்த நாட்டிற்கும் துணிவற்றுப்போய்விட்டது. இவர்கள் தம்மீது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றுபோர்வையைப் போர்த்திக்கொண்டு உண்மையில் முன்னால் ஒளிந்துகொள்கின்றனர். இவர்கள் போர்த்திக்கொண்ட பயங்கரவாதம் இன்று இவர்கள் கூறுவதுபோல் அழிக்கப்பட்டுவிட்டதாயின் ஈழத் தமிழரின் சட்டபூர்வமான சுயநிர்ணயத்திற்கான தேசிய விடுதலையையும், அதன் நியாயத்தையும் ஏற்றுக்கொள்வதில் இருந்து இவர்களை இன்னும் என்ன தடுக்கின்றது?

இந்தப்போர் விடுதலைப் புலிகளிற்கு எதிரானது அல்ல, ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரானதே. இலங்கைத் தீவின் புவியியல் கேந்திரப் புள்ளியில் கண் வைத்திருக்கும் புவிசார் அரசியல் சக்திகளிற்கோ அல்லது சிறீலங்காவிலும் அதன் சுற்றுச் சூழலிலும் தனது பாதுகாப்பை உறுதிசெய்ய நினைக்கும் இந்தியாவிற்கோ ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரானது எந்தவிதப் பயனுமற்றது.

இந்தப் போரை அழிப்பதற்கும், தமிழர்களின் குரல்வளையை நசுக்குவதற்கும், இந்திய ‡சிறீலங்கா அரசுகள் நடாத்தும் போரிற்கும், தமிழீழம் என்ற கோரிக்கையை நசுக்குவதற்கும், இவர்கள் மிகவும் பொருத்தமானவராகத் தமிழின அழிப்பிற்குத் துணைபோகக்கூடியவருமாகக் கருணாநிதியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இன்றைய நிலையில் புலம் பெயர் ஈழத் தமிழர்களின் குரலானது தமது ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தி தமது சுயநிர்ணய உரிமையையும், தமிழீழத் தேசிய விடுதலையையும் உலகிற்கு உரக்கச் சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்று இந்தியாவிற்கு நேரெதிரான நிலைப்பாட்டைக் காட்ட முயலும் மேலைத் தேசங்களும், ஒரு பக்கத்தில் மனித உரிமைகள் பற்றியும், போர்க் குற்றங்கள் பற்றியும் வாய் கிழியப் பேசிக்கொண்டு தமது சொந்த நலன்களிற்காக மறுபக்கத்தில் சிறீலங்காவைத் தூக்கி நிறுத்த முயன்றாலும், போர் முடிவடைந்ததன் பின்னாலும் கூட ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காமலும், தமிழீழத் தேசியப் போராட்டத்தைப் புறுந்தள்ளியுமே விடுகின்றனர். எமக்கு அரசியல் தீர்வை அடக்கு முறை அரசாட்சி செய்யும் அல்லது மகிந்த பார்வைக்கு நிதியளிக்கும் ஜப்பானோ தந்துவிடப்போவதில்லை. இந்த நாடுகள் எல்லாம் போரில் தோற்ற ஜேர்மனின் பின்னான அல்லது ஜப்பானின் பின்னான “பொருளாராத அற்புதங்களை’ செய்கிறோம் என்று மூக்கை நுழைத்ததுபோல் எம்மிடமும் எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் நில ஆக்கிரமிப்புப் போரையும் நடத்தவில்லை, இரண்டு அணுகுண்டுகளிற்குப் பிறகு மிக்காடோ அரசுபோல் சரணடையவுமில்லை.

எமது போரானது மதிப்பிற்குரிய ஒரு இனத்தின் மூன்று தசாப்தத்திற்கும் மேலான ஒரு விடுதலைப்போர். இதில் நாம் பல அணுகுண்டுகளைப் பார்த்துவிட்டோம். பல இழப்புகளைச் சந்தித்துவிட்டோம். இவை கடந்தும் சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த எதிர்ப்புப் பலத்தையும் தாண்டி முன் எப்போதும் இல்லாதவாறு எமது போராட்டம் இன்று மிகவும் வலுப்பெற்றுள்ளது. எதிரி பலம், எதிரி வளம் அதிகரிக்க அதிகரிக்க எமது போராட்டமானது உரம் பெறும். இந்த அளவிற்கு எமது போராட்டம் வலுப்பெற்று வளர்வதற்கு ஒருங்கிணைந்த பலத்தோடு எமை எதிர்த்த சர்வதேச வல்லரசுகளிற்கு நன்றி.

எமது போர் சரணடைவில் முடிவடைந்துவிடவில்லை. தேசியத் தலைவர் கட்டியயழுப்பி, அதன் அத்தனை கட்டமைப்புக்களையும் உருவாக்கி, உலகை வியக்க வைத்த ஒரு சுதந்திரத் தமிழீழ அரசு என்றுமே சரணடைந்து விடவில்லை. இது தனது ஈழத் தமிழர்களின் சுதந்திர வேட்கையையும், விடுதலைப் போரையும் என்றுமே, எவரிடமுமே சரணடைய வைத்ததில்லை. இதை மனதிற் கொண்டு எம் போராட்டம் தொடரப்படல் வேண்டும்.

கொழும்பின் நிவாரணம், புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழீழத் தேசியத்தையே தற்கொலை முயற்சிக்குள்ளாக்கும் நிலையையே கொண்டுள்ளது. இந்த நிலையிலே நாம் நமது விடுதலைப்போரை உரமேற்றி தமிழீழத் தேசியத்தையும், ஈழத் தமிழர்கள் என்ற அடையாளத்தையும் ஆயுதமாகக் கைகளில் ஏந்திப் போராட வேண்டும். எமது உச்ச பலத்தைக் காட்டவேண்டும். நாம் இரண்டே இரண்டு பிரிவினர்தான் இப் போராட்டக் களத்தில் உள்ளோம். ஒன்று தமிழீழத் தேசியத்தை நசுக்கி ஒடுக்கும் பேரினவாதமும், அதன் கூட்டாளிகள், எம்மினத் துரோகிகள் என்கின்ற எதிரி அணி. மற்றொன்று தமிழீழத் தேசியப் போராட்டத்தைத் தக்கவைத்து அதன் அடித்தளத்தைத் தக்கவைத்து தமிழீழ விடுதலையைப் பெறும்வரை ஓயாது போராடும் தமிழர் கூட்டம். இதைத் தவிர எந்தப் பிரிவினையும் புதிய பிரிவுகளும் எமக்குத் தேவையில்லை. காரணம் எமது போராட்ட அடித்தளம் என்றோ நிறுவப்பட்டுவிட்டது. அந்த அடித்தளம் மீதான போராட்ட வலுவிற்கு உரம் சேர்ப்பதுதான் எம் கடமை. அந்தத் தலைமையே, அந்தக் கட்டமைப்பே எமது அடித்தளம். அடித்தளம் இழக்கப்பட்டால் போராட்ட அடிப்படை இழக்கப்படும்.

எமது போராட்டம் இங்கு புலத்தில் ஜனநாயக ரீதியாக மாற்றம் பெறலாம். ஆனாலும் களத்தில் அதன் அடிப்படை அப்படியே பேணப்படும். புலத்தில் அரசுகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள், யாருக்காகப் பேசுகிறார்களோ அந்த மக்களின் இதயங்களை வென்றவர்களாக இருத்தல் வேண்டும். மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். தம்மைத் தாமே பிரதிநிதியாக்கி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது. அது போராட்ட அடிப்படைக் களத்தையே சரணடைய வைப்பதற்குச் சமனாகும். சரணடைந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்குத் தகுதியற்றது.

போர்த்துக்கேயரிடம் சரணடையும் பத்திரத்தில் கையயாப்பமிட்ட யாழ்ப்பாண முதலியார்களாலோ அல்லது ஆங்கிலேயரிடம் சரணடைந்த கண்டி உயர்தட்டு அரசர்களாலோ நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. சரணடைவதிலும் சாவே மேல் எனும் சித்தாந்தம் கொண்ட விடுதலைப் புலிகளால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுபவர்கள். எங்கள் பலம் இதுதான். இந்த எங்கள் அடித்தளத்தைப் பேணுபவர்களால் மட்டுமே தமிழர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட முடியும். இந்திய அரசிடமோ, சிறீலங்கா அரசிடமோ சரணாகதியடைபவர்களால் முடியாது. பேச்சுக் கருத்துச் சுதந்திரத்தோடு வாழும் புலம்பெயர் தமிழர்கள் நாம், எமது தமிழீழத் தேசிய சுயநிர்ணய உரிமையை அரசியல் ஜனநாயக ரீதியாக 1976ல் எடுத்துக் கூறியதை மீண்டும் இந்தப் புவிசார் நலன்களிலும், பொருளாதார இலாப நட்டங்களைக் கணக்குப் பார்க்கும் இந்த மேலைத்தேய அரசுகளிற்கு மீண்டும் புரியவைப்போம். எமக்கான ஆதரவு நிலையை அவர்கள் எடுப்பதற்கான நெருக்கடியை நாம் கொடுப்போம். நோர்வேயிலும், பிரான்சிலும் சொல்லப்பட்டதை தமிழன் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் சொல்வோம். எங்கு வாழும் தமிழனாலும் ஜனநாயக முறைப்படி எமது சுயநிர்ணய உரிமையை மீள வலியுறுத்த முடிந்தாலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டும் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழர்களிற்கு இந்த அடிப்படைச் சுதந்திரம்கூடப் பறிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

புலம்பெயர் தமிழர்கள் ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் இணைந்து இந்த அரசுகளோடு சவால்விட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். சர்வதேசத்தில் எமது போராட்டம் சர்வதேசத்தாலேயே ஏற்றுக்கொள்ளப்படாது போய்விட்டது. சர்வதேசத்தின் ஒன்றுபட்ட முகமான ஐ.நாவாலேயே ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இங்கு எமக்கான ஜனநாயக அமைப்பிற்கான அடித்தளம் இருந்திருக்கவில்லை.

இப்போது பல நாடுகளில் உருவாக்கப்படும் மக்களவைகள் இந்த வெற்றிடத்தை நிரப்பும். இதில் பல்லாயிரக்கணக்கில் நாம் அங்கத்துவம் வகிக்கவேண்டும். கல்வியாளர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் என்று அனைவரும் ஒன்றுசேர வேண்டும். இவ் அமைப்பின் மூலம் எமது தமிழீழ சுயநிர்ணய உரிமையை நாம் வலியுறுத்த முடியும். எமக்கான தேசம் கட்டியயழுப்பப்பட்டிருந்ததை சுட்டிக்காட்ட முடியும். அதை அழித்தொழித்தவர்களையே மீளக் கட்டியயழுப்பித் தரவைக்க முடியும்.

எமக்கான நிர்வாகம் சிறப்பாக இயங்கியதைச் சுட்டிக்காட்டி அதை நசுக்கியவர்களையே அதை மீளக் கட்டியயழுப்பித் தரவைக்க முடியும். எமது தேசத்தின் போராட்ட அடித்தளத்தை நாம் புலத்தில் வைத்துக் காக்கமுடியும். அது தனது இலக்கை அடையவைக்க முடியும். இவற்றின் மூலம் நாம் சர்வதேசப் பேச்சவார்த்தையை ஏற்படுத்தமுடியும். அரசுகளோடு மக்கள் பிரதிநிதிகளாக எமது நியாயத்தை முன்வைக்க முடியும்.

தேசியங்களை அங்கீகரித்து, ஈழத் தமிழரின் போராட்டத்தையும், தேசியத்தையும் அங்கீகரித்து எமது ஜனநாயகப் போராட்டங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் சர்வதேசம் மீண்டும் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியயழுப்ப முடியும். சர்வதேசம் தன் நாடுகளிற்கும், தங்கள் நாகரீகத்திற்கும், அரசுகளிற்கும், புவிசார் அரசியல் இலாபங்களால் வரும் நன்மையையும், மதிப்பையும்விட, தேசியங்களையும், தேசங்களையும் அங்கீகரிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளும், மதிப்புகளும், இலாபங்களும், அங்கீகாரமும் பெரியது.

மக்களினுVடாக நாம் சிறீலங்கா அரசிற்கெதிரான பொருளாதாரப் போராட்டத்தையும் முன்வைக்க முடியும். சிறீலங்கா அரசின் பொருட்களின் கொள்வனவை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், முழுமையான பொருளாதாரத் தடையை புலம்பெயர் மக்களால் கொண்டுவரல் முடியும். ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தனது சிறீலங்கா அடையாளத்தை மறுதலிப்பதன் மூலம் அந்நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குறிக்குள்ளாக்க முடியும்.

இப்படியான முழுமையான மக்கள் போராட்டங்கள் சர்வதேசத்தின் பார்வையை எம்மீது திருப்ப வைக்க வழிவகுக்கும். அந்த முயற்சியினைத் தனிப்பட்டவர்கள் எடுக்கும்போது அது ஆக்கபூர்வமற்றதாகிவிடும். ஒருங்கிணைந்த மக்கள் முயற்சியாகத் தோற்றம் பெறும்போது அதன் தாக்கம் பலமானதாக இருக்கும். குறிப்பாக இளையோர்களை ஒன்றுசேர்த்து அவர்கள் குரலில் சர்வதேசத்திற்கு, அவர்கள் இன்னும் சிறீலங்காவைத் தாங்கிப் பிடிப்பதையும், அவர்களின் அரைகுறைத் தீர்வுகளையும் வரவேற்பதை நிறுத்திவிட்டு, ஈழத் தமிழர்களின் விடுதலைப்போரை அங்கீகரித்து, தங்களது தமிழீழத் தேசியத்தை ஒரு அங்கீகாரம் பெற்ற இனமாக ஏற்றுக்கொள்ளும்படி நிர்ப்பந்திக்க வேண்டும். அனைத்து வகை வழிகளிலும், பேச்சுவார்த்தைகளையும், வேறுபல முன்னெடுப்புகளையும் மேற்கொண்டாலும் தமிழீழத் தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் இழக்கப்படாமலோ, மாற்றப்படாமலோ காத்தல் வேண்டும்.

இன்று பலரும் தமிழரின் போராட்டத்தின் அடித்தளத்தையே அழித்துவிடவும், தமிழீழத் தேசியத்தை இந்திய சிறீலங்கா அரசுகளின் கால்களில் சரணடைய வைக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கின்றனர். இதில் நாம் விழிப்பாக இருத்தல் வேண்டும். எமது தேசிய இலக்கு உடைக்கப்படுமாயின் என்றும் அது மீளக் கட்டியயழுப்ப முடியாது. அரைகுறைத் தீர்வுகளாலும், பிச்சைகளாலும் இதை உடைத்துவிட முடியாது. ஈழத் தமிழர் ஒவ்வொருவர் மனத்திலும் இந்தத் தமிழீழத் தாயகத்தின் கோரிக்கை கொளுந்துவிட்டு எரியவண்டும். விடுதலைத் தாகத் தீ அணையாது காக்கப்படல் வேண்டும். மக்களின் போராட்டக் குணமானது பேணப்படல் வேண்டும்.

புவிசார் அரசியலிலும், சில சுயநலவாதிகளினதும் வலைக்குள்ளும் சிக்காது தமிழீழம் காக்கப்படல் வேண்டும். இதற்கு நாம் எம் உணர்வில் தமிழீழம் தவிர்ந்த வேறு எதற்குமே இடமளிக்கக் கூடாது.

2000ம் வருடப் போராட்டத்தின் பின்னரும் கூட யூதர்களால் ஒரு நாடு அமைக்க முடிந்தது. காரணம் யூதர்கள் மனதில் அவர்களின் தேசிய விடுதலையும், இஸ்ரேலும் மட்டுமே நிறைந்திருந்தது. அவர்களது போராட்ட அடித்தளம் அழிக்கப்படாததால் தேசம் அவர்களிற்குச் சாத்தியப்பட்டது.

“‘யூதர்களால் முடிந்தது நிச்சயம் எம்மாலும் முடியும்”‘.

சோழ.கரிகாலன்

ஈழமுரசு(24.07.09)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*