TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இராணுவ நிர்வாகத்தை விரும்பும் வன்னி மக்கள்

சிறிலங்கா அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தபோதே அது உரிய தீர்வைத் தரும் ஒன்றாக இருக்க முடியாது என்ற கருத்து வலுவாக எழுந்திருந்தது.

கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கங்கள் இதுபோன்ற பல ஆணைக்குழுக்களை நியமித்திருந்தன.

ஆனால் அவையெதுவும் தமிழர்களின் காயங்களுக்கு மருந்திடக் கூடிய வகையில் காரியங்களை ஆற்றவில்லை.

அவையெல்லாம் சிங்களப் பேரினவாதத்தை வலுப்படுத்தவே துணை நின்றன.

இதன் காரணமாகவே, இப்போது அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் மீது தமக்கு நம்பிக்கையில்லை என்று பல சர்வதேச அமைப்புகள் சிறிலங்கா அரசின் முகத்தில் அறைந்தாற் போல கூறிவிட்டன.

சில வெளிநாடுகள் மட்டும் ஏதோ ஆணைக்குழுவின் விசாரணைகள் நடக்கட்டும் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றளவில் கருத்துகளை வெளியிட்டுள்ளன.

சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் ஒரு போலி நாடகமாகவே நடத்தப்படும் இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் சில திருப்பம் நிறைந்த சாட்சியங்களும் பதிவாகியிருப்பது உண்மை.

வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு என்று சாட்சியங்களைப் பதிவு செய்யத் தொடங்கிய நல்லிணக்க ஆணைக்குழு இப்போது யாழ்ப்பாணத்துக்குப் புறப்படத் தயாராகியுள்ளது.

இந்தநிலையில் தான் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக உள்ள சி.ஆர்டி.சில்வா ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

வன்னியிலும், வவுனியாவிலும் தான் நடத்திய விசாரணைகளின் போது- அங்குள்ள மக்கள் சிவில் நிர்வாகத்தை விரும்பவில்லை, இராணுவத்தினரின் சேவையையே விரும்புவதாக்க் கூறியுள்ளார் அவர்.

மக்களுடன் கலந்துரையாடிய போதே இது தெரியவந்ததாகவும், படையினர் அங்கு வீடுகளை அமைக்கின்றனர்- குளங்களை அமைக்கின்றனர் அவையெல்லாவற்றையும் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆணைக்குழுத் தலைவரின் இந்தக் கருத்து- இந்த ஆணைக்குழு எந்த வழியில் பயணம் செய்யப் போகிறது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

அண்மைக்காலத்தில் அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு பேராயர் டுலிப் சிக்கேரா போன்ற பலர் வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கையையும், அவர்களின் தலையீடுகளையும் மட்டுப்படுத்த வேண்டும் என்று சாட்சியமளித்திருந்தனர்.

இதையெல்லாம் முறியடிக்கும் வகையில் தான் ஆணைக்குழுத் தலைவர் சி.ஆர்.டி சில்வா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

வன்னிப் பகுதி மக்கள் சிவில் நிர்வாகத்தை விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளது- அங்கு ஒரு இராணுவ ஆட்சிக்கான அத்திவாரத்தைப் போடும் முயற்சியில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.

இதற்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளார்.

உலகில் எந்தவொரு மக்களாவது இராணுவ நிர்வாகம் தான் வேண்டும். சிவில் நிர்வாகம் தேவையில்லை என்று கூறுவார்களா? இதைக் கேட்பதற்கு வியப்பாகத் தான் இருக்கிறது.

வன்னிப்பகுதி மக்களுக்கு இராணுவத்தினர் சில நன்மைகளைச் செய்து அவர்கள் மத்தியில் நற்பெயரைப் பெற முனைகிறார்கள் என்பது உண்மை.

அதற்காக அவர்களின் நிர்வாகத்தில் இருக்க விரும்புவதாகவோ- அல்லது சிவில் நிர்வாகம் தேவையில்லை என்று கூறுமளவுக்கோ அவர்கள் முட்டாள்களாக இருப்பதற்கு நியாயமில்லை.

அப்படியான கருத்தை ஆணைக்குழுத் தலைவரிடத்தில் யாரேனும் கூறியிருந்தால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று படையினரின் அழுத்தத்தின் பேரால் அளிக்கப்பட்ட சாட்சியமாக இருக்கும்.

அல்லது வன்னியில் இப்போது எதற்கெடுத்தாலும் படையினரைச் சுற்றி மையப்படுத்தப்பட்டு விட்ட வாழ்க்கை முறையாக இருக்கலாம்.

படையினர் ஊடாகத் தான் அங்கு எதையும் செய்ய முடியும்.

உதவி நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக அணுக முடியாது. எல்லாம் படைமுகாம் ஊடான தொடர்பு தான்.

இப்படிப்பட்ட நிலையில் சிவில் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை அரசாங்கம் திட்டமிட்டே குறைத்து விட்டது.

இதன் காரணமாகக் கூட அந்த மக்கள் படையினர் வழியாகச் சில நன்மைகள் கிடைப்பதாகக் கருதியிருக்கக் கூடும்.

எது எவ்வாறாயினும் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து அபத்தமானது -ஆபத்தானது.

ஆணைக்குழுத் தலைவர் இப்படியானதொரு கருத்தை வெளியிட்டிருக்கும் நிலையில், வடக்கில் இராணுவ நிர்வாகத்துக்குத் துணை போகும் வகையிலான பரிந்துரைகளை முன்வைப்பதற்குத் தயங்கமாட்டார் என்பது வெளிப்படை.

இது நிச்சயம் சிறிலங்கா அரசினால் கவனத்தில் எடுக்கப்படும்.

தமிழர் மீதான அழுத்தங்களைப் பேண- இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்ட அது துணை நிற்கும்.

இன்னொரு பக்கத்தில், ஆணைக்குழுத் தலைவர் விசாரணைகளின் போது வெளியிட்ட இந்த தகவல்- இந்த ஆணைக்குழு எந்தளவுக்கு நியாயபூர்வமானதாக இருக்கும் என்ற கேள்விகளை மீளவும் எழுப்ப வைத்துள்ளது.

அதாவது மனிதஉரிமை அமைப்புகள் கூட்டாக சிறிலங்கா அரசின் இந்த ஆணைக்குழுவை நிராகரித்திருந்தன.

அது முற்றிலும் சரியான செயலே என்பதை ஆணைக்குழுவின் தலைவர் தனது கருத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.

வன்னி மக்களின் கருத்து என்று அவர் கூறியுள்ள இந்தக் கருத்து சிவில் நிர்வாகத்தை இல்லாமல் செய்வதற்கான முதற்படி.

வடக்கில் இராணுவ மேலாதிக்கத்தை சிறிலங்கா அரசு பேணப்போவதற்கான அறிகுறிதான் இது.

இந்தக் கட்டத்தில் சிறிலங்கா அரசு மிகவும் நன்றாகவே காய்களை நகர்த்தி தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் இந்த விடயத்தில் பின்னால் உள்ள ஆபத்துகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகளும் இல்லை. அரச அதிகாரிகளும் இல்லை.

முகிலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*