TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் 7

இஸ்ரேலியர்கள் தமக்கென்று அமைத்துக்கொண்ட கிறிஸ்தவ பாதுகாப்பு வலயங்கள் எப்படி பல ஆபத்துக்கள், நெருக்கடிகள் போன்றனவற்றில் இருந்து இஸ்ரேல் தேசத்தை பாதுகாத்தன, பாதுகாத்து வருகின்றன என்று கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரில் பார்த்து வருகின்றோம்.

ஈழத் தமிழர்கள் தமக்கான நப்பு சக்திகளை உருவாக்கிக்கொள்வது எத்தனை அவசியம் என்பதை உணர்ந்து கொள்வதற்காகவே இந்த விடயத்தை சற்று ஆழமாக இங்கு பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அமெரிக்கா என்கின்ற நாட்டை இஸ்ரேல் தனது நட்பு நாடாக மாற்றிக்கொண்டதன் ஊடாக, இஸ்ரேலுக்கு கிடைத்த, கிடைத்துவருகின்ற நன்மைகள் ஏராளம். இதற்கு ஈழத் தமிழர் சம்பந்தப்பட்டதும், எமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தக்கூடியதுமான மற்றொரு உதாரணத்தை இந்த வாரம் ஆராய இருக்கின்றோம்.

1960களின் பிற்பகுதிகளில் இஸ்ரேலின் அயல்நாடுகள் தொடர்பாக இஸ்ரேல் செய்யவேண்டிய ஒரு விடயத்தை வலியுறுத்தி ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. (242வது தீர்மானம்).
அந்தத் தீர்மானத்தை இஸ்ரேல் ஏற்கமறுத்ததைத் தொடர்ந்து உலகில் உள்ள பல நாடுகள் இஸ்ரேல் உடனான தமது தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொண்டன. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், அமெரிக்கா தனக்குள்ள செல்வாக்குகளைப் பயன்படுத்தி பல நாடுகளை இஸ்ரேல் தேசத்துடன் நட்புறவு கொள்ள வைத்திருந்தது.

உதாரணத்திற்கு, சிறிலங்கா தேசத்துக்கு அப்பொழுதிருந்த தேவைகளைப் பயன்படுத்தி எவ்வாறு இஸ்ரேலை சிறிலங்கா அரசுடன் அமெரிக்கா நட்பாக்கி விட்டிருந்தது என்பது பற்றிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பலஸ்தீனரது உரிமை சம்பந்தப்பட்ட ஐ.நா. சபையின் 242வது தீர்மானத்திற்கு இஸ்ரேல் இணங்காதத்தைக் காரணம் காண்பித்து, 1970 இல் சிறிமா அரசு இலங்கையில் இஸ்ரேலியத் தூதரகத்தை மூடியிருந்தது. இஸ்ரேலுடனான தனது உறவைத் தூண்டித்தது பற்றி இலங்கை சர்வதேச மட்டத்தில் பெருமையும் வெளியிட்டிருந்தது.

அக்காலகட்டத்தில் இஸ்ரேலியப் பிரஜைகள் எந்த விடயத்திற்காகவது, எந்த வடிவிலாவது இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு கடுமையான தடையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் தமிழ் விடுதலை அமைப்புக்கள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல்கள் கட்டுப்படுத்த முடியாமல் எல்லை மீறிச் செல்ல ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிடம் தொடர்பைப் பேணும் ஒரு நிர்பந்தம் ஸ்ரீலங்கா அரசுக்கு உருவானது.

அந்த நிர்ப்பந்தத்தை அமெரிக்காவே உருவாக்கியும் விட்டிருந்தது.

அமெரிக்காவிடம் இராணுவ உதவிகளை சிறிலங்கா வேண்டி நின்ற பொழுது, இஸ்ரேலின் ஊடாகவே அமெரிக்கா ஆயுத, இராணுவ உதவிகளைச் செய்ய முடியும் எற்று அது கூறியிருந்ததது. எனவே வேறு வழியில்லாமல் தாம் தடை விதித்திருந்த இஸ்ரேலை இலங்கைக்குள் வரவழைத்து இஸ்ரேலில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது சிறிலங்கா அரசு.

அக்காலகட்டங்களில் பொதுநலவாய நாடுகளைப் பொறுத்தவரையில், இஸ்ரேல் என்ற நாடு ஒரு தீண்டத்தகாத நாடாகவே இருந்தது. எனவே ஸ்ரீலங்கா அரசு மிகவும் இரகசியமாகவே தனது இஸ்ரேலியத் தொடர்புகளை ஆரம்பித்திருந்தது.

1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஸ்ரீலங்காவின் அமைச்சரவைச் செயலாளர் ஜீ.வி.பி.சமரசிங்க இஸ்ரேலுக்கு ஒரு இரகசிய விஜயத்தை மேற்கொண்டார். அமெரிக்கா ஊடாக ஏற்கனவே இஸ்ரேலுடனான தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், சமரசிங்க அவர்களின் விஜயத்தின்போது இஸ்ரேலின் உதவி பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

1984ம் ஆண்டு சித்திரை மாதத்தில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசியப் பிராந்திய உதவிப் பணிப்பாளர் டேவிட் மட்னாய் இலங்கைக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அமெரிக்க தூதராலயத்தில் வந்து தங்கியிருந்த இவர் சிறிலங்காவின் ஜனாதிபதி உட்பட பல்வேறு தரப்பினருடனும் இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலர் இஸ்ரேலுக்கு இராணுவப் பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

1984ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ‘இல்ரேலிய நலன் காக்கும் பிரிவு’ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையில் இஸ்ரேல் மீண்டும் காலூன்ற ஆரம்பித்தததைக் கண்டித்து நாட்டில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அப்பொழுது நடைமுறையிலிருந்த அவசரகாலச்சட்டம், பத்திரிகைத் தணிக்கை என்பன, எதிர்ப்புக் குரல்கள் வெளிவராமல் முற்றாகவே தடுத்துவிட்டன.

1984ம் ஆண்டு ஆனி மாதம் 9ம் திகதி நடைபெற்ற ஐ.தே.கட்சி செயற்குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய சிறிலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன, இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியைத் தெரிவிக்க முற்பட்டபோது, ‘முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆதரிக்க விரும்பாவிட்டால் தாராளமாக வெளியேறலாம்’ என்று ஜே.ஆர். உறுதியாகத் தெரிவித்திருந்தார். ‘அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்துப் பேசுபவர்களும் வெளியேற்றப்படுவார்கள்’ என்றும் அவர் தெரிவித்துவிட்டார்.

இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனமான ‘ஷின் பெய்த்’ மற்றும் இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனமான ‘மொசாட்’ என்பன இலங்கைப் படையினருக்குப் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தன.

தமிழ் போராளிகள் லெபனானிலும், பலஸ்தினத்திலும் பயிற்சி பெற்றுவருவதால், அவர்களை முறியடிக்க இஸ்ரேலே சிறந்த பயிற்சியை வழங்கமுடியும் என்பதில் அனேகமான ஸ்ரீலங்காப் படை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் உறுதியாக இருந்தார்கள்.

இஸ்ரேலியர்களும், ‘கெரில்லா தாக்குதல்களை எப்படி முறியடிப்பது என்கின்ற பயிற்சிகளை வழங்குகின்றோம் பேர்வழிகள்’ என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களை எப்படிக் கொன்றொழிப்பது என்கின்ற பயிற்சிகளைத் தாராளமாக வழங்க ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட விஷேட அதிரடிப் படையினருக்கும் (Special Task Force-STF) இஸ்ரேலியர்களே முழுப் பயிற்சிகளை வழங்கினார்கள். தமிழ் இளைஞர்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டு, அவர்கள் அனைவருமே தமிழ் போராளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் மவுசு மேலும் இலங்கையில் அதிகரிக்க ஆரம்பித்தது.

1984ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி, இல்ரேலின் நலன் காக்கும் பிரிவின் புதிய பொறுப்பாளராக ‘அக்ரயில் கார்பி’ நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேல் கற்றுத்தந்த யுக்திகள் களமுனையில் முன்னேற்றம் கண்டுவர ஆரம்பித்ததைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த ஸ்ரீலங்கா அரசு இஸ்ரேல் மீது முன்னர் விதித்திருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் தளர்த்த ஆரம்பித்தது.

அதுவரை இஸ்ரேல் மீது இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த வர்த்தகத் தடை, ஜனாதிபதி ஆணையினால் நீக்கப்பட்டது.

இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்டது மட்டுமல்ல இஸ்ரேலியர்களுக்கு விஷேட சலுகைகளும் ஸ்ரீலங்கா அரசினால் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்காவின் வெளிவிவகார உதவி அமைச்சராக அப்பொழுது கடமையாற்றிய டிரோன் பெர்னாண்டோ இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவினர் இலங்கைக்குள் வர விசா எதுவும் தேவையில்லை என்று அறிவித்தார்.

28.03.1985 இற்கு பின்னர் இஸ்ரேலியர்கள் எவருக்குமே இலங்கைக்குள் வர விசா தேலை இல்லை என்றும் ஸ்ரீலங்கா அரசு அறிவித்திருந்தது. அந்த அளவிற்கு ஸ்ரீலங்கா அரசு இஸ்ரேலுடன் கொஞ்சி விளையாட ஆரம்பித்திருந்தது.

சுற்றி வளைப்புக்கள், கைதுகள், அழித்தொழிப்புக்கள், சித்திரவதை நுணுக்கங்கள் என்று எதிர் கெரில்லாப் போரியல் நுணுக்கங்கள் முதல் ‘டோரா’ கடற்கலங்கள் வரை ஸ்ரீலங்காப் படைகளுக்கு வழங்கி இஸ்ரேல் இராணுவ ஒத்தாசைகளைப் புரிந்திருந்தது.

உண்மையிலேயே இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளும் அமெரிக்காவின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலின் பெயரிலேயே ஸ்ரீலங்கா அரசு செய்தது என்பது இங்கு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராணுவ ஜெனரல் வேர்ணன் வால்டர்ஸது தலைமையில்தான் இஸ்ரேலின் தொடர்பும், அதனது நடவடிக்கைகளும் அமைந்திருந்தன என்பது, அமெரிக்கா, ஸ்ரீலங்கா மற்றும் இஸ்ரேலின் உயரதிகாரிகளுக்கு மட்டுமே அப்பொழுது தெரிந்த இரகசியம்.

ஸ்ரீலங்காவிற்கு இஸ்ரேலின் பெயரில் வழங்கப்பட்ட அனைத்து உதவிகளும் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடனேயே மேற்கொள்ளப்பட்டன. இஸ்ரேலிய இராணுவ மற்றும் புலனாய்வு முக்கியஸ்தர்களுடனான சநதிப்புக்கள் அனைத்தையும் அமெரிக்காவே செய்திருந்ததும், அனேகமான சந்திப்புக்கள் அமெரிக்கத் தூதராலயத்திலேயே நடைபெற்றிருந்ததும், இஸ்ரேலிய நலன்காக்கும் பிரிவு அமெரிக்கத் தூதராலயத்திலேயே முதன் முதலில் அமைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது இஸ்ரேல் தேசம் தனக்கென்று அமைத்துக்கொண்ட கிறிஸ்தவ பாதுகாப்பு வலயமானது, எப்படி ஒரு பௌத்த தேசத்தில் யூதர்கள் தளம் அமைக்கக் காரணமாக இருந்ததது என்பதைச் சுட்டிக் காட்டவே சிறிலங்காவுக்குள் இஸ்ரேல் நுழைந்த இந்த உதாரணத்தை இங்கு பார்த்திருந்தோம்.

சரி மறுபடியும் முன்னர் இந்தத் தொடரில் நாம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு வருவோம்.

இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே – ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்?

ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு சக்தியாக அமையமுடியும்?

ஈழத் தமிழர்களின் நேச சக்திகள் என்று யார் எமக்கு இருக்கின்றார்கள்?

எப்படி எங்களுக்கான ஒரு பாதுகாப்பு வலயத்தை எங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்?

ஈழத் தமிழருக்கான பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிக்கொள்ள நிச்சயம் எங்களால் முடியும்.

இஸ்ரேலியர்களை போலவே எங்களுக்கும் பல இனக் குழுமங்கள், மதக் குழுமங்கள் நேச சக்திகளாக இருக்கின்றன.

அந்த நேச சக்திகளை நாம் சரியான முறையில் எங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே தவிர, நேச சக்திகளே எங்களுக்குக் கிடையாது என்று நாம் கூறிவிட முடியாது.

இஸ்ரேலியர்களுக்கு உள்ளது போன்று ஈழத் தமிழருக்கு உள்ள நேச சக்திகள், மதக் குழுமங்கள் என்ன, இஸ்ரேலியர்களைப் போன்று ஈழத் தமிழர் எப்படி தமக்கென்று ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்று அடுத்தவாரம் விரிவாக ஆராய்வோம்.

தொடரும்…

[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured

Your email address will not be published. Required fields are marked *

*