TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாணவர் ஆர்ப்பாட்டங்களும் அதன் பின்னனியும்

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவைக் கலைக்கக்கோரி கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பாகக் கடந்த ஜூலை மாத முற்பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாகத் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான விமல் வீரன்ச தனதுஆதரவாளர்கள் சகிதம் ஆர்ப்பாட்டம் செய்தபோது அது குறித்து அரசாங்கத்தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

நிபுணர்குழுவை செயலாளர் நாயகம் கலைக்கும்வரை ஐ.நா. அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளையும் ஊழியர்களையும் பணயம் வைக்கவேண்டுமென்று பகிரங்கமாக அறிவித்த வண்ணம் வீரவன்ச நடத்திய முற்றுகைப் போராட்டத்தை “அமைதி வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக உரிமையின் வெளிப்பாடு’ என்றே அரசாங்கம் வர்ணித்தது.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் அமைதி வழிப்போராட்டங்கள் ஊடாக அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதற்கு மக்களுக்கு இருக்கும் உரிமையை அரசாங்கம் மதிக்க வேண்டியிருக்கிறது. அமைதி வழியில் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு எந்தக் குழுவுக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறது என்று அரசாங்கம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் தொடர்பிலும் அமைதி வழியில் எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கு மக்களுக்கு இருக்கின்ற உரிமை தொடர்பிலும் அரசாங்கத்துக்கு ஒரு திடீர்ப் பற்று ஏற்பட்டுவிட்டதோ என்று நாமெல்லோரும் அப்போது வியப்படைந்தோம். ஆனால், அண்மைக்காலமாக எதிரணி அரசியல் கட்சிகளினாலும் பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்படுகின்ற எதிர்ப்பியக்கங்களைப் பொலிஸாரையும் பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தி அரசாங்கம் கலைத்துவிரட்டுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இருவாரங்களுக்கு முன்னர் கொழும்பில் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்துக்கு முன்பாகப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நடத்திய எதிர்ப்பியக்கத்தைக் கலைப்பதற்குப் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை இறுதியில் பெரும் வன்முறையாக மாறியது. அமைதி வழிப் போராட்டத்தில் ஒரு அங்கமென்று வர்ணிக்க முடியாததாக அமைந்த வீரவன்சவின் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக உரிமையின் போர்வைக்குள் மறைந்துகொண்டு நியாயப்படுத்திய அரசாங்கம் ஏனைய போராட்டங்களை அவ்வாறு நோக்கத் தயாராயில்லை என்பது தெளிவாகிறது.

பல்கலைக்கழக மாணவர்களினாலோ அல்லது எதிரணிக் கட்சிகளினாலோ நடத்தப்படுகின்ற சகல ஆர்ப்பாட்டங்களையும் வன்முறைக்கு வழிவகுக்கக்கூடிய எதிர்ப்பியக்கங்களையும் ஒருபோதும் நியாயப்படுத்துவதற்கு நாம் முயற்சிக்கவில்லை.

ஆனால், அரசாங்கம் அதன் நிலைப்பாடுகளுக்குச் சாதகமாக அமையக்கூடிய எதிர்ப்பியக்கங்களுக்கு அமைதி வழியிலான ஜனநாயக உரிமையின் வெளிப்பாடு என்று அங்கீகாரம் அளிக்கின்ற அதேவேளை, அதன் நிலைப்பாடுகளுக்குப் பாதகமாக அமையக்கூடிய போராட்டங்களை ஒடுக்குவதற்குப் பொலிஸாரையும் படையினரையும் பயன்படுத்துகின்ற போக்கு எதுவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

நேற்று முன்தினம் காலை களனி பல்கலைக்கழகத்துக்கு வெளியே பெருந்திரளானவர்கள் ஒன்றுகூடி ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.)க்கு சார்பான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர்கள் சம்மேளனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகக் கோஷமெழுப்பியதையும் காணக்கூடியதாக இருந்தது. களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களினால் விரட்டிச் செல்லப்பட்டுத் தாக்குதலுக்கு உள்ளான வேளையில் அவரை சில பெண்மணிகள் பேராபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள்.இச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் நேற்றைய தினம் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன.

தொலைக்காட்சிகளிலும் இச்சம்பவம் பற்றிய காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. உயர் கல்வி நிறுவனமொன்றுக்கு முன்பாக திடீரென்று பெருந்திரளாக மக்கள் கூடி குறிப்பிட்ட தொரு மாணவர் அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், வன்முறையிலும் ஈடுபடுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட்டது? ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு சம்பவ இடத்திற்கு பொலிஸார் ஏன் விரைந்துசெல்லவில்லை? மாணவர் அமைப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் அரசாங்க அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோ என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

எமது பல்கலைக்கழகங்கள் இன்று பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.மாணவர் அமைப்புக்களின் அரசியல் நோக்கத்துடனான போராட்டங்கள்,மாணவர்களுக்கிடையேயான மோதல்கள்,கீழ்த்தரமான பகிடிவதைகள் என்று பல்வேறுவகையான பிரச்சினைகளினால் இன்று பல்கலைக்கழகங்களில் கல்விச் செயற்பாடுகள் கவலைக்குரிய வகையில் முடங்கிப்போயிருக்கின்றன. அநேகமாக ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு பீடம் மூடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் சம்பவம் இடம்பெறாமல் ஒரு வாரம் கூடக் கழிவதாக இல்லையென்று கூறலாம்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுசிறித மெண்டிஸ் கடந்த வாரம் மாணவர்களினால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளாயிருக்கிறார். ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளை உபவேந்தரின் முன்னிலையில் தாக்கியதாகக் கூறப்படும் சில பிக்கு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் பரீட்சை எழுதிய மாணவிகள் தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு எண்ணற்ற வன்முறைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பல்கலைக்கழகங்களை ஸ்தம்பித நிலைக்குக் கொண்டு வந்திருக்கும் இத்தகைய சம்பவங்களுக்கு ஜே.வி.பி. சார்பான மாணவர் அமைப்பே பின்னணியில் இருப்பதாக அரசாங்கம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுவதுடன், சில வாரங்களில் வன்முறைகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுமென்று அமைச்சர்களும் அறிவிப்புச் செய்கிறார்கள். இத்தகைய பின்னணியிலேயே களனி பல்கலைக்கழகத்துக்கு வெளியே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நோக்கவேண்டியிருக்கிறது.

பல்கலைக்கழகங்கள் எதிர்நோக்குகின்ற நெருக்கடிகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு கல்விச் செயற்பாடுகள் எந்தவிதமான இடையூறுமின்றி முன்னெடுக்கப்படக்கூடிய சூழ்நிலை தோற்றுவிக்கப்படவேண்டுமென்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை. ஆனால், பல்கலைக்கழகங்களில் நெருக்கடிகளை உருவாக்கும் வன்முறைச் சம்பவங்களில் சம்பந்தப்படும் மாணவர்களுக்கும் அவர்களின் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் சக்திகளுக்கும் எதிராக யார் நடவடிக்கைகயில் இறங்குவது என்பது மிக முக்கியமானதொரு விடயமாகும்.

வன்முறையைத் தூண்டும் சக்திகளுக்கு எதிராக பொலிஸார் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமேயன்றி, எந்தவொரு அரசியல்வாதியினதும் தூண்டுதலின் பேரில் உயர்கல்வி நிறுவனங்கள் முன்பாகக் கூடும் கும்பல்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுப்பதை அரசாங்கம் ஒருபோதுமே அனுமதிக்கக்கூடாது. குறிப்பிட்டதொரு மாணவர் சம்மேளனத்துக்கு எதிரான கோஷங்களுடன் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் பல்கலைக்கழகங்களில் சுமுகநிலையை ஏற்படுத்தும் நோக்குடனானவை என்று கூறிவிடமுடியாது.

அவை நிச்சயமாக அரசியல் நோக்குடனானவையே. இத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு உற்சாகமளிக்கும் அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் பல்கலைக்கழக நெருக்கடிகள் தணிவதற்குப் பதிலாக, மேலும் தீவிரமடையும் ஆபத்தே தோன்றும் என்பதில் சந்தேகமில்லை.

அரசியல் வாதிகளின் ஏற்பாட்டில் திடீரென்று வீதிகளில் இறங்கக்கூடிய கும்பல்களின் அடாவடித்தனங்களை ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் மக்கள் கண்டிருக்கிறார்கள். இத்தகைய கும்பல்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதை அனுமதித்தால் நாடுபூராவும் பெரும் அராஜகத்திற்குகள் மூழ்கும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ளவேண்டும். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பியக்கங்களை அனுமதிப்பதில் அல்லது அடக்குவதில் அரசாங்கம் கடைப்பிடிப்பதாகத் தோன்றும் “விருப்பத்தெரிவு’ மிகவும் ஆபத்தான போக்கிற்கே வழிவகுக்கும்!.

தினக்குரல் ஆசிரிய தலையங்கம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*