TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இஸ்ரேலிடம் இருந்து தமிழர் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் 6

கிறிஸ்வர்கள் என்கின்ற சக்திவாய்ந்த பாதுகாப்பு வலயத்தை தன்னைச்சுற்றி அமைத்துக்கொண்டதன் ஊடாக, இஸ்ரேலியர்களால் ஒரு விடுதலையைப் பெற முடிந்தது என்று கடந்த வாரம் இந்தத் தொடரில் ஆராய்ந்திருந்தோம்.

கிறிஸ்வர்கள் என்கின்ற நட்பு வலயத்தை இஸ்ரேலியர்கள் அமைத்துக்கொண்டதால் ஒரு விடுதலையைப் பெற முடிந்தது மாத்திரம் அல்ல, அவர்கள் பெற்ற அந்த விடுதலையை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவும் அவர்களால் முடிகின்றது.

‘கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்காக இரங்கவேண்டும், ஜெருசலேமின் சமாதானத்திற்காகப் பிராத்தனை செய்யவேண்டும்” என்பது, பைபிளில் கூறப்படுகின்ற முக்கியமான கட்டளைகளுள் ஒன்று. ‘ஒருவன் எருசலேமை மறப்பதென்பது அவனது வலதுகை தன் தொழிலை மறப்பதற்கு சமமானது” என்று பைபிள் கூறுகின்றது. ‘இஸ்ரேலை நேசிப்பவர்கள், இஸ்ரேலுக்காக பிரார்த்தனை செய்பவர்கள் சுகித்திருப்பார்கள்” என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகின்றது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கிறிஸ்தவ குழுமங்கள் மற்றும் நாடுகளின் பைபிள் நம்பிக்கைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் இஸ்ரேல் வெற்றி பெறுவதுதான்.

பைபிளில் உள்ள வார்த்தைகளின் அடிப்படையில் வாழ்ந்துவருகின்ற கிறிஸ்தவக் குழுமங்கள் தாமாகவே முன்வந்து இஸ்ரேலியர்களுக்கு வழங்கும் உதவி ஒத்தாசைகளைப் பெற்றுக்கொண்டு தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்வதில் இஸ்ரேல் மிக மிக நுணுக்கமாகத், திறமையாகச் செயற்பட்டு வருகின்றது. இன்று இஸ்ரேலால் உலகில் வீறுநடை போட்டு வலம் வர முடிகின்றதென்றால், அதற்கான காரணங்களில் முக்கியமானது கிறிஸ்தவர்களிடம் காணப்படுகின்ற இந்த நம்பிக்கை என்றால் மிகையாகாது.

இஸ்ரேல் தொடர்பான கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும், கரிசனையும் இஸ்ரேலை யாருமே நெருங்கமுடியாதவாறான ஒரு பாரிய அனுகூலத்தை இஸ்ரேல் தேசத்திற்குப் பெற்றுக்கொடுத்து வருகின்றது.

இஸ்ரேல் தொடர்பான கிறிஸ்தவர்களின் நம்பிக்கை எப்படி இஸ்ரேலை பாரிய அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியது என்பதற்கு மற்றுமொரு உதாரணத்தை இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.

1973ம் ஆண்டு அக்டோபர் மாதம 6ம் திகதி இஸ்ரேலிய சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு நாள்.

சுதந்திரம் பெற்ற நாள் முதலாக தொடர் வெற்றிகளை மாத்திரமே பெற்றுவந்த இஸ்ரேல் தேசம் ஒரு மிகப் பெரிய தோல்வியின் விளிம்புக்குச் சென்றிருந்த நாள். இஸ்ரேலிய வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்ற யொம் கிப்பூர் யுத்தம் (Yom Kippur war) ஆரம்பமான தினம்தான் அது.

அன்றைய தினம் யூதர்களுக்கு ஒரு புனித நாள். யோம் கிப்பூர் என்கின்ற யூதர்களின் முக்கிய பண்டிகையை இஸ்ரேலியர்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நேரம்.

மறுபக்கம் இஸ்லாமியர்களும் ரமழானை அனுஷ்டித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சண்டை ஏற்படுவதற்கான சந்தர்ப்பமே இல்லா தினம் அது.

ஆனால் திடீரென்று ஒரு பெரிய யுத்த மேகம் இஸ்ரேலை சூழ ஆரம்பித்தது.

யூதர்கள் மத அனுஷ்டானங்களுடன் அன்றைய தினத்தைக் கழித்துக்கொண்டு இருக்க, திடீர் என்று குண்டுச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்காண குண்டுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலிருந்த பல பிரதேசங்கள் மீது தொடர்சியாகப் பொழிய ஆரம்பித்தன.

என்ன அங்கு நடக்கின்றது என்று சிந்திப்பதற்குக்கூட நேரம் கொடுக்காதபடி அரபு உலகம் இஸ்ரேல் மீது ஒரு திடீர் தாக்குதலை ஆரம்பித்திருந்தது.

இஸ்ரேல் மீது தொடர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் எகிப்து நாட்டின் 600 யுத்தத்தாங்கிகள் சுவிஸ் கால்வாயைக் கடந்து இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சீனாய் தீபகத்திற்குள் நுழைந்தன. பெரிய சண்டைகள் எதுவும் இன்றி எல்லைகளில் காவல்கடமைகளில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினரை அழித்துக்கொண்டு அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்தது எகிப்து.

அதேவேளை சீரியாவின் நூற்றுக்கும் அதிகமான மிக் மற்றும் சுக்காய் ரக குண்டுவீச்சு விமானங்கள் இஸ்ரேலின் கட்டுப்பட்டுப் பிரதேசமான கோலன் கைட்ஸ் (G0lan Heights) பகுதிகள் மீது குண்டுகளை வீசி வான் முற்றுகையை மேற்கொண்டன.

இஸ்ரேலின் இரண்டு திசைகள் மீது ஒரே நேரத்தில் இரண்டு நாடுகள் எதிர்பாராதவிதமாக மேற்கொண்ட திடீர் தாக்குதல் அது.

அதிர்ந்துவிட்டது இஸ்ரேல் தேசம்.

அடுத்து என்ன செய்வது?

அணுஆயுதத் தாக்குதலைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேல் நாடாளுமன்றம் தீர்மானம் எடுத்தது.

மறுபக்கம் சீரியாவுக்கு அதிக அளவில் இராணுவ ஒத்தாசைகளை வழங்கிக்கொண்டிருந்த சோவியத் யூனியன், இஸ்ரேல் அனு ஆயுதங்களைப் பாவிக்கும் சந்தர்ப்பத்தில் சிரியாவுக்கும் எகிப்துக்கும் அணுவாயுதங்களை வழங்கும் சாத்தியங்களும் தென்பட்டது.

ஒரு அழிவின் விளிம்புக்கு மத்திய கிழக்கு மாத்திரம் அல்ல முழு உலகுமே சென்றுவிட்டிருந்த ஒரு சூழ்நிலை உருவானது..

அந்த நேரத்தில் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்தவர் ஒரு மூதாட்டி. அவரது பெயர் கோல்டா மேயர் அம்மையார் (Golda Meir).

இஸ்ரேலின் அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வையுங்கள் என்று இஸ்ரேலியப் படைகளுக்கு உத்தரவை வழங்கிவிட்டு, அவரச அவசரமாக அமெரிக்காவைத் தொடர்புகொண்டார் கோல்டா மேயர்.

அமெரிக்கா தமக்கு உதவாவிட்டால் இஸ்ரேல் அழிவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறிய கோல்டா மேயர் அம்மையார், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத தளபாடங்களைத் தந்து உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அந்த நேரத்தில் அமெரிக்காவின் அரச தலைவராக ரிச்சரட் நிக்சன் (Richard Nixon) பதவி வகித்தார். நிக்சன் ஒரு நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காண்பிக்காத ஒரு நல்ல அரசியல்வாதி என்று மக்களால் வர்ணிக்கப்பட்டவர். அதற்கும் மேலாக நல்ல கடவுள் பக்தி மிக்கவர். சிறுவயது முதலே அவர் தாயின் பிள்ளை. தாயை மிக அதிகமாக நேசித்து வளர்ந்தவர்.

சிறு வயது முதலே அவரது தாயார் ஒரு காரியத்தை நிக்சனுக்கு அடிக்கடி கூறி வந்துள்ளார். அதாவது, இஸ்ரேலுக்கு உன்னால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும். நீ அப்படிச் செய்வதை கடவுள் விரும்புகிறார். இஸ்ரேலுக்கு நீ உதவினால் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று கூறி வந்துள்ளார்.

அமெரிக்காவிடம் உதவி கோரிய இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மேயரின் குரல் தனது தாயின் குரல் போன்று நிக்சனுக்கு தோன்றியது.

உடனே இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து இராணுவ உபகரணங்களையும் சப்ளை செய்யுமாறு உத்தரவிட்டார் நிக்சன்.

உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பொரிய இராணுவ உதவி என்று போரியல் ஆய்வாளர்களால் கூறப்படுகின்ற இராணு உதவியை இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்தது.
1973ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் நவம்பர் மாதம் 14ம் திகதி வரை அமெரிக்க விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலுக்கான அந்த வான் வழி ஆயுத வினியோகத்தை அமெரிக்கா ஒரு ஒப்பரேஷனாகவே செய்திருந்தது. அந்த ஆயுத வினியோக நடவடிக்கைக்கு ஒப்பரேசன் நிக்கல் க்ராஸ் (Operation Nickel Grass) என்று அமெரிக்கா பெயரிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையின் பொழுது சுமார் 22,325 தொன் ஆயுத தளபாடங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியிருந்தது. யுத்தத் தாங்கிகள், ஆட்டிலறிகள், வெடிபொருட்கள் என்று ஒரு யுத்தத்திற்குத் தேவையான அனைத்து யுத்த தளபாடங்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியது.

அமெரிக்கா வழங்கிய அந்த ஆயுத தளபாடங்களின் உதவி கொண்டு அரபு நாடுகளுகளின் படையெடுப்புக்கு எதிராக மிகப் பொரிய வெற்றியை பெற்றது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்தப் பாரிய யுத்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது றிச்சர்ட் நிக்சன் என்ற ஒரு மனிதனின் கிறிஸ்தவ மத நம்பிக்கைதான். (இஸ்ரேலுக்கு உதவி வழங்கியதன் காரணமாக அமெரிக்காவில் பாரிய அரசியல் நெருக்கடியை நிக்சன் சந்திக்கவேண்டி இருந்தது என்பது வேறு விடயம்)

தம்மைச் சுற்றி ஒரு நட்பு வலயத்தை வைத்துப் பேணுவதன் மூலம் எப்படியான அனுகூலங்களை ஒரு தேசத்தால் பெறமுடியும் என்பதற்கு, இஸ்ரேல் -கிறிஸ்தவ நம்பிக்கை ஒரு சிறந்த உதாரணம்.

அடுத்ததாக, இந்த இஸ்ரேல்- அமெரிக்க நட்பை ஒட்டியதான மற்றொரு விடயத்தைப் பற்றி இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் உலகில் இருந்த பெரும்பாலான நாடுகள் இஸ்ரேல் மீது விரோதம் பாராட்டியிருந்த நிலையில், இஸ்ரேல் எவ்வாறு அந்த நாடுகளைச் சமாளித்தது என்பதும், அதற்கு அமெரிக்கா எவ்வாறு உதவி செய்தது என்றும் நிச்சயம் நாம் ஆராய்ந்துதான் ஆகவேண்டும்.

அதற்கு, இலங்கைத் தீவினுள் இஸ்ரேல் எவ்வாறு உள் நுழைந்தது, அதற்கு அமெரிக்கா எவ்வாறு காரணமாக இருந்தத என்கின்ற வியடம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

சிறிலங்கா–அமெரிக்கா-இஸ்ரேல் என்கின்ற நாடுகளுக்கிடையிலான நப்பு, அந்த நட்பின் பின்னணி, அவற்றில் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்பன பற்றி அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம்.

[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*