TamilSpy

பொழுது போக்கு இணையம்…

துணிச்சலுடன் தன் பேனாவை பயன்படுத்திய நிமலராசன்

துணிச்சலுடன் தன் பேனாவை பயன்படுத்திய ஊடகப்போராளி நிமலராசன்.

துணிச்சலுடன் தன் பேனாவை பயன்படுத்திய ஊடகப் போராளி நிமலராசன் படுகொலை செய்யப்பட்டு 10ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. வடக்கு கிழக்கில் ஊடக அடக்குமுறை பல தசாப்தங்களாக தொடர்கின்ற போதிலும் நிமலராசன் படுகொலையுடன்தான் ஊடகவியலாளர்களை படுகொலை செய்யும் கலாசாரம் மேலோங்கியது எனலாம்.

கடந்த 23வருடங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முரசொலி பத்திரிகையில் ஆசிரியபீடத்தில் நான் பணியாற்ற ஆரம்பித்த போது துடிப்புள்ள இளைஞனாக நிமலராசனை சந்தித்தேன்.

அவரது தந்தை மயில்வாகனம் 1983ஆம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக தென்னிலங்கையில் நடத்தப்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வந்தபின் முரசொலி பத்திரிகையின் அச்சகவேலைப்பகுதி முகாமையாளராக பணியாற்றினார். அதன் காரணமாக நிமலராசன் முரசொலி பத்திரிகையின் விளம்பர முகவராக பணியாற்ற தொடங்கினார்.

முரசொலியில் பணியாற்றிய விளம்பர முகவர்களில் நிமலராசனே அதிக விளம்பரங்களை சேகரித்து வருமானத்தைப் பெறுபவர் என்ற முத்திரையை பதித்திருந்தார். அந்த காலப்பகுதியில் மிக சுறுசுறுப்பாக யாழ் குடாநாட்டின் பல பகுதிகளுக்கும் விளம்பரங்களை சேகரிப்பதற்காக செல்லும் நிமலராசன் அந்தந்த பிரதேசங்களில் நடக்கும் செய்திகளை குறித்துக்கொண்டு வந்து ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய எங்களிடம் தருவார். நிமலராசன் சிறிய துண்டுகளில் குறித்துக்கொண்டு வரும் செய்திகள் சில வேளைகளில் தலைப்பு செய்திகளாக கூட வெளிவந்திருந்திருக்கின்றன.

தனது ஓய்வு நேரங்களின் பெரும்பகுதியை ஆசிரிய பீடத்திலேயே கழிக்கும் அவன் செய்திகளை எழுதுவதிலும் கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் காட்டிவந்தான்.

ஆரம்பத்தில் பத்திரிகை ஒன்றின் விளம்பர முகவராக இருந்த போதிலும் நிமலராசனிடம் இருந்த ஆர்வம் தேடல் சிங்கள மொழி ஆற்றல் காரணமாக ஊடகத்துறை அவனை உள்வாங்கிக்கொண்டது என நினைக்கிறேன்.

1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் மீண்டும் போர் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து முரசொலி மூடப்பட்டு அங்கு பணியாற்றிய ஊடகவியலாளர்கள் பலரும் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய போது நிமலராசன் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தான். 1991க்கு பிற்பட்ட காலத்தில் அவன் முழுநேர ஊடகவியலாளனாக தன்னை மாற்றிக்கொண்டான்.

1990களின் பின்னர் யாழ் குடாநாட்டிற்கான தரைவழிப்பாதை மூடப்பட்டு முற்றுகைக்கு உள்ளான போது யாழ்ப்பாணத்திலிருந்து நிமலராசன் போன்ற ஒரு சில ஊடகவியலாளர்களே நெருக்கடியான மிகக்குறைந்த வசதிகளுடன் வெளி உலகிற்கு அந்த பிரதேசத்தின் நிலைமைகளை சொல்லிக்கொண்டிருந்தனர்.

1996ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது அந்த மக்களின் அவலங்களை துயரங்களை தளத்திலிருந்து வெளிஉலகிற்கு சொன்ன ஒரேயொரு ஊடகவியலாளனாக நிமலராசனே இருந்தான். குடும்பங்களை பிரிந்து பெரும் அவலங்களை சந்தித்த போது அந்த மக்களின் குரலாக நிமலராசனின் குரல் சர்வதேச மட்டத்தில் ஒலித்தது. எனக்கு இப்போதும் ஞாபமிருக்கிறது.

சாவகச்சேரியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது இராணுவ எறிகணைத் தாக்குதல்களால் பலர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து நிமலராசன் பலரின் குரல்களை பதிவு செய்திருந்தான்.

யாழ் குடாநாடு 2006ஆம் ஆண்டின் பின் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபின்னும் அந்த மக்கள் வெளிமாவட்ட போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் திறந்தவெளி சிறைச்சாலைக்குள்ளேயே வைக்கப்பட்டிருந்தனர். அந்நேரத்தில் அங்குள்ள நிலைமைகளை மக்களின் அவலங்களை இராணுவ அடக்குமுறைகளை தென்னிலங்கைக்கு மட்டுமல்ல பி.பி.சி போன்ற சர்வதேச ஊடகங்கள் ஊடாகவும் வெளிக்கொண்டு வருவதில் நிமலராசன் பெரும் பங்கு வகித்தார்.

1997ஆம் ஆண்டில் தமிழ்நெற் ஆரம்பிக்கப்பட்ட போது யாழ்ப்பாண செய்தியாளராக நிமலராசனே நியமிக்கப்பட்டார். அப்போது தொலைத்தொடர்பு வசதிகள் மிகக்குறைவாக இருந்த போதிலும் தினசரி கொழும்பில் இருந்த சிவராமிடம் செய்திகளை வழங்குவார். சிவராமை தொடர்பு கொள்ள முடியாமல் போகும் போது என்னிடம் தொடர்பு கொண்டு செய்திகள் விரைவாக வெளிவர வேண்டும் என்பதில் வேகமாக செயற்படுவார்.

1997ஆம் ஆண்டின் பின்னர் நிமலராசன் தனக்கு இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாக கூறிவந்திருக்கிறார். 1999ஆம் ஆண்டு இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் கருத்தரங்கு ஒன்றிற்காக நிமலராசனை யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்திருந்தோம். விமான மூலம் கொழும்பு வந்த நிமலராசனை சில நண்பர்கள் கொழும்பிலேயே தங்கிவிடுமாறு கூறினர். ஆனால் அதை மறுத்த நிமலராசன் அவ்வாறு வெளியேறுவது எதிரிக்கு பலமாக அமைந்துவிடும் என்ற பதிலைத்தான் சொன்னான்.

2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது நிமலராசன் நேரடியாக ஈ.பி.டி.பியினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக நேரிட்டது. உள்ளுர் தேர்தல் கண்காணிப்புக்குழுவின் யாழ்ப்பாண இணைப்பாளராக நிமலராசன் நியமிக்கப்பட்டிருந்தார். அங்கு நடந்த தேர்தல் வன்முறைகளை பதிவு செய்து வெளியிடுவதில் நிமலராசன் அதிக ஆர்வம் காட்டியது ஈ.பி.டி.பியினருக்கு பெரும் இடைஞ்சலாக இருந்தது.

தேர்தல் தினத்தன்று தீவுப்பகுதியில் ஈ.பி.டி.பியினர் நடத்திய அடாவடித்தனங்கள் வாக்கு மோசடிகள் உட்பட பல விடயங்களை ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் நிமலராசன் உள்ளுர் தேர்தல் கண்காணிப்புக்குழுவுக்கும் ஊடகங்களுக்கும் அனுப்பியிருந்தார். தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாட்களிலிருந்து ஈ.பி.டி.பியினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுத்து வந்ததாக ஊடக நண்பர்களிடம் நிமலராசன் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முடிந்து சரியாக ஒன்பதாவது நாளில்தான் ஈ.பி.டி.பியினர் இராணுவத்தினரின் உதவியுடன் இந்த கோரக்கொலையை புரிந்திருந்தனர்.

அன்று நாகர்கோவிலில் உள்ள இராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல் பற்றியும் அந்த பகுதியில் விடுதலைப்புலிகளால் உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தியையும் நிமலராசன் தமிழ்நெற் உட்பட தான் பணியாற்றும் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தான். அந்த தாக்குதல் பற்றி நிமலராசனின் குரல் பி.பி.சி தமிழோசையில் ஒலித்து சில நிமிடங்களில்தான் அந்த கோரச் சம்பவம் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் சுண்டிக்குளியில் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு நிறைந்த இடத்தில்தான் நிமலராசனின் வீடு இருந்தது. நிமலராசன் தனது அறையிலிருந்து செய்தி எழுதிக்கொண்டிருந்த போது வளவினுள் நுழைந்த ஆயுததாரிகள் அறையில் இருந்த நிமலராசன் மீது யன்னல் ஊடாக துப்பாக்கி பிரயோகம் செய்தனர். பின்னர் வீட்டில் இருந்தவர்கள் மீது குண்டைவீசிவிட்டு சென்றனர். இதில் நிமலராசனின் தந்தை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம், நிமலராசனின் அக்காவின் மகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் காயமடைந்திருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியைச் சேர்ந்த 10பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதிலும் அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். நிமலராசனின் படுகொலையில் சம்பந்தப்பட்டதாக கருதப்படும் ஈ.பி.டி.பி உறுப்பினர் நெப்போலியன் என்று அழைக்கப்படும் செபஸ்தியான்பிள்ளை ரமேஷ் என்பவர் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் பிரித்தானியாவுக்கு சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியிருந்தார். நிமலராசனின் படுகொலையில் சம்பந்தப்பட்ட நெப்போலியன் என்ற நபர் தற்போதும் லண்டனிலேயே இருப்பதாக அறியமுடிகிறது.

நிமலராசன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை. அவர்களில் சிலர் இன்றும் அங்கு சுதந்திரமாகவே நடமாடி வருகின்றனர். நிமலராசனின் படுகொலையின் சூத்திரதாரியான அரசியல்வாதி இன்று மகிந்த அமைச்சரவையில் ஒரு அமைச்சராக விளங்குகிறார்.

நிமலராசனின் படுகொலையுடன் தீவிரமடைந்த ஊடகவியலாளர்களை படுகொலை செய்யும் கலாசாரத்தால் இதுவரை 15க்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். இந்த படுகொலைகள் தொடர்பாக இதுவரை யாரும் தண்டிக்கப்படவும் இல்லை. நீதி விசாரணை நடத்தப்படவும் இல்லை.

குற்றவாளிகளே அரியாசனத்தில் இருக்கும் போது யாரிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.

[email protected]
இரா.துரைரத்தினம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*