TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மகிந்தாவின் ஆசியுடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயம்

மகிந்தாவின் ஆசியுடன் தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் வெற்றி.

இலங்கை என்பது பௌத்த-சிங்கள மக்களைக் கொண்ட நாடாகவே சிங்கள தேசம் இன்றுவரை கூறிவருகின்றது. தமிழர்கள் கள்ளத்தோணிகள் என்றும் இவர்கள் சட்டவிரோதமாக சிங்கள-பௌத்த நாட்டை கைப்பற்றி இன்று தனிநாடு கேட்குமளவு மோசமான நிலைவந்துவிட்டதாக கூக்குரல் இடும் சிங்கள இனவாதிகள்…,

….கடந்த வருடம் வரை புலி என்றால் கிலிகொண்டு ஓடுமளவு பயமிருந்தவர்கள் எல்லாம் துணிச்சலுடன் இன்று தமிழர்களின் தாயகப் பிரதேசத்தில் காலடி வைத்து வரலாற்றிற்கு முன்னிருந்த காலப்பகுதிகளிலிருந்தே தமிழர்கள் வாழ்ந்த நிலங்களை அரசாங்கத்தின் நேரடி ஆதரவுடன் அபகரிக்க திட்டம்போட்டு அதிலும் வெற்றி கண்டுவருகின்றார்கள்.

சில ஈனத்தமிழர்கள் தமது சுகபோக வாழ்வுக்காக சிங்களத்தின் சிந்தனைக்கு ஆதரவளித்து செயல்வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் கவலைக்கிடமான செய்தி. போர் உச்சக்கட்டத்தில் இருந்தவேளையில் கூட சிங்கள இனவெறி அரசுகள், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் துணையுடன் சிங்கள காடையர்களையும் அவர்களின் குடும்பங்களையும் குடியேற்றி அவர்களுக்கு தேவையான பாதுகாப்பையும் வழங்கியது மட்டுமின்றி அவர்களுக்குத் துப்பாக்கிகளையும் வழங்கியது. காலப்போக்கில், கிழக்கின் பல கிராமங்கள் சிங்களமயமாக்கபட்டது. தமிழர்களோ அவர்தம் தாயகத்தில் சிறுபான்மையினர் ஆகுமளவு நிலைமை மோசமானது. வடக்கின் சில பகுதிகளிலும் இதே நிலைதான். சிங்களமயமாக்கப்பட்ட கிராமங்கள் பல சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டது.

கடந்த வருடம் புலிகளையும் அவர்களின் தமிழீழக் கனவையும் அழித்துவிட்டதாக கொக்கரித்து பல வேலைத்திட்டங்களை செய்துவரும் நிகழ்கால ஹிட்லர் என்று வர்ணிக்கப்படும் மகிந்தா தமிழர்களின் எதிர்கால அரசியல் எழுச்சியை தடுக்க பல வேலைத்திட்டங்களை செய்துகொண்டிருக்கின்றார். குறிப்பாக, தமிழர் நிலங்களை அபகரிப்பதன் மூலமாக தமிழருக்கு என்று சொந்த எல்லையே கிடையாதென்ற ஒரு நிலையை உருவாக்குவது மட்டுமன்றி, சிங்கள குடியேற்றம் மூலமாக தமிழர்களின் அரசியல் பலத்தை இல்லாதொழிப்பதுடன் சிங்கள இளைஞர் யுவதிகளை எப்படியேனும் தமிழ் குடும்பங்களில் திருமணம் செய்துவைத்து சிங்கள மயமாக்கும் திட்டம் நடைபெறுகின்றது. அத்துடன் முழு நாடும் சிங்கள-பௌத்த நாடு என்று உலக அரங்கில் கூறி, தமிழரின் அறுபது ஆண்டுகளுக்கு மேலான போராட்டத்தை மழுங்கடிக்க எத்தனிக்கின்றார் மகிந்தா. இதற்கு துணைபோகின்றன ஈனத்தமிழ்ப் பிறவிகள்.

புலிகள் ஆயுத முனையில் பலமுடன் இருந்த வேளையில் ஏதோ தாம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்போமென கூறிய உலகநாடுகள் இன்று தமிழர்களின் அன்றாட பிரச்சனைக்கே குரல் கொடுக்க மறுக்கின்றது. புலிகளை வெற்றிகொண்டு தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தந்து விட்டதாக கூறும் மகிந்தாவின் அரசாங்கம் இன்று தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சம்பவங்களை இருட்டடிப்பு செய்கின்றது. பல பெண்கள் வெள்ளை வான் கும்பல்களினால் கடத்தப்படுவதும் பல பெண்கள் இராணுவத்தின் காம வெறியாட்டங்களுக்கு ஆளாவதும் இன்று பெருகிவிட்டது. என்றுமில்லாதவாறு தமிழர் தாயகம் கலாச்சார சீரழிவை எதிர்நோக்கி நிற்கின்றது. இவைகள் அனைத்தும் இருட்டடிப்பு செய்யப்படுகின்றது.

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமாயின் முதலில் அவ்வினத்தின் கலாச்சாரத்தை அழிக்கவேண்டும் என்று கூறுவார்கள். இதனடிப்படையிலேயே தான் சிங்கள தேசம் காய்நகர்த்துகின்றது. இக்கலாச்சார அழிவை மேற்கொள்ளும் அதேவளை தமிழரின் நிலங்களை நேரடியாகவே சிங்களவர்கள் மூலமாக கொள்ளையடிக்க சிங்கள அரசு திட்டம் தீட்டி அதிலும் வெற்றிகண்டு வருகின்றது. பல லட்சம் தமிழர்கள் தமது இருப்பிடங்களை விட்டு அகதிகளாக முகாம்களிலும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கி இருக்கின்றார்கள். பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி சிங்கள அரச படைகள் இவர்களின் நிலங்களை கையகப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். கடந்த ஆண்டு புலிகளை தாம் அழித்துவிட்டதாக கூறிய பின்னர், எதற்காக உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமிழர் நிலங்களை தம் வசம் படையினர் வைத்திருக்கின்றார்கள் என்பது வியப்பே. வெறும் பேச்சுக்கு ஏதோ தாம் வெகு சீக்கிரத்தில் காணிகளை அவைகளின் உரிமையாளர்களிடம் கொடுத்து விடுவோம் என்று கூறுகின்றார்கள் படையினர் மூத்த அதிகாரிகள். நான்காம் கட்ட ஈழப்போர் முடிந்து இன்று பதினேழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழர்கள் சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடக்குமுறைக்குள் தான் இன்றும் இருக்கின்றார்கள். இன்று என்ன நடக்கும் நாளை என்ன நடந்துவிடும் என்ற பதட்டத்துடனேயே தமிழர்கள் நாட்களை கழிக்கும் நிலை தமிழர்களின் தாயக பூமியில்.

சிங்களத்தின் திட்டத்தின்படி தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி சிங்களவர்களுக்கு கொடுக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இன்று இருக்கின்றது. இதுவே வன்னிப்பிரதேசத்திலும் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கண்ணிவெடி புதைக்கபட்டிருக்கின்றது என்பதனால் கால அவகாசம் தேவை என்று கூறிவிட்டு வேகமாக சிங்களவர்களை குடியேற்றும் நிலை இன்று வன்னிப் பெருநிலப்பரப்பில் நடைபெறுகின்றது. குறிப்பாக அரசாங்கத்தின் கூலிப்படையினரின் குடும்பங்களுக்கும் அவர்களின் உறவினர்கள் மற்றும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கும் இச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தாமும் யாழின் சொந்தக்காரர்களாம்

கடந்த சில வாரங்களாக வரும் செய்திகள் தமிழர்களின் மனங்களில் வேலைப்பாய்ச்சுவதாக உள்ளது. வன்னியில் சிங்களவர்களை குடியேற்றுவதாக செய்திகள் தினம்தினம் வந்துகொண்டிருக்கும் நிலையில், இன்னொமொரு செய்தி என்னவேனில் பல ஆயிரம் சிங்களவர்கள் யாழ்.குடாநாடே தமது பூர்வீகம் என்று சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

மகிந்தாவின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான பசில் ராஜபக்சாவின் நேரடி கண்காணிப்பில் யாழ் குடாநாட்டை தமது சிங்கள மயமாக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன. கிழக்கு மாகாணத்தில் எவ்வாறு தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் மோதலை உருவாக்கி விட்டு தமிழர்களை துரத்திவிட்டு அவர்களின் நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றினார்களோ அதைப்போலவே யாழ் பகுதியிலும் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலமாக இஸ்திரத்தன்மையை இல்லாதொழிக்க சிங்கள அரசு செயல்படுகின்றது.

ஐயாயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இரகசியமாக தமிழர்களின் நிலங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்பட்டும் வந்தனர். தமிழர்களுடன் ஒன்றாக இணைந்து வாழ விரும்புவதாக கூறி இதுவரை 500 சிங்கள குடும்பங்களை சேர்ந்த இரண்டாயிரம் பேர் யாழ் வந்துள்ளனர். இதில் அநேகமானவர்கள் யாழில் நிலை கொண்டுள்ள படையினரின் உறவினர்கள் குடும்பங்கள். மீண்டும் யாழில் புலிகள் மீள் எழாமல் இருப்பதற்கும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இவர்கள் யாழில் தமிழருடன் செறிந்து வாழ்வதால் தமக்கு பெரும் பாதுகாப்பு அரணாக இருக்கும் எனக் கருதியே இந்த புதிய சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர். இவர்களிற்கென புதிய வீட்டு திட்டம் அமைக்கப்பட்டு குடியேற்றப்படவுள்ளனர் என செய்திகள் வந்தவண்ணமுள்ளன.

பசிலின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பசிலின் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பவர் வடபகுதி ஆளுநரான சந்திரசிறியே. யாழ் வரும் சிங்கள குடியேற்றவாசிகளுக்கு அனைத்துவிதமான வசதிகளும் வழங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமது யாழ் மக்கள் தமது விசனங்களை தெரிவிக்கும் அதேவேளை தமது வீடுகளிற்கு அருகாமையில் இவர்கள் வாழ்வதால் தாம் எந்த வேளையும் இவர்களினால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் தமது ஆதங்கங்களை தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்தில், மிஹிந்தலை எனும் இடத்தில் இருந்து பல்வேறு தொழில்களை மேற்கொண்டு தமது வாழ்வியலை நகர்த்திக் கொண்டிருந்த இவர்கள் அங்கிருந்து திடீரென இடம்பெயர்ந்த மக்களைப் போல யாழ் வந்து மூட்டை முடிச்சுக்களுடன் தங்கியுள்ளதை பார்க்கும் பொழுது இதற்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்தியொன்று இருக்கின்றது என்பது மட்டும் உண்மை. இதில் வேடிக்கை என்னவேனில் இவர்கள் மீள்குடியேற்றத்திற்கு வந்தபோது இவர்களுடன் செய்திகளைச் சேகரிக்க தென்னிலங்கையில் இருந்து வெளியாகும் சிங்களப் பத்திரிகைகளின் செய்தியாளர்களும் வந்துள்ளனர். இவைகளை வைத்துப்பார்க்கும் பொழுது சிங்கள அரசின் முழு ஆதரவுடனே இந்த நாடகம் நடைபெறுகின்றது என்பது தெளிவாகின்றது.

யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்களக் குடும்பங்களை உடனடியாக இங்கு குடியேற்றும் சாத்தியங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் திட்ட வட்டமாகத் அறிவித்துள்ளார். குடியேறுவதற்கான எதுவித வசதிகள் இல்லாத நிலையில் சிங்களக் குடும்பங்கள் தொடர்ந்தும் யாழில் தங்கி இருப்பது ஆரோக்கியமானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில், பசிலிட்கு அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் திருமதி சுகுமார் கூறியுள்ளதாவது:

“எந்தவித முன்னறிவித்தலும் இன்றிச் சிங்கள மக்கள் தம்மை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் செய்யுமாறு கோரி யாழ். ரயில் நிலையக் கட்டடத்தில் தங்கியுள்ளனர். இந்த மக்களில் சிலர் இங்கு முன்னர் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களுக்குச் சொந்தக் காணிகளோ, சொந்த வீடுகளோ இங்கிருக்கவில்லை. இந்நிலையில் தம்மை மீள் குடியேற்றுமாறு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி இவர்கள் திடீரென யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.இதனால் யாழ். மாவட்டத்தின் அரச நிர்வாகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மீள் குடியேற்றம் கேட்கின்ற மக்களுக்கு உதவிகளைச் செய்கின்ற அரச சட்ட திட்டங்கள் எதுவுமில்லை. எனவே, இங்கு வந்துள்ள சிங்கள மக்களின் மீள் குடியேற்றம் உடனடியாகச் சாத்தியப்படக் கூடிய ஒன்றல்ல. அத்துடன் அந்த மக்கள் தொடர்ந்தும் ரயில் நிலையத்தில் தங்கியிருப்பதென்பதும் அவர்களுக்கு ஆரோக்கியமானது இல்லை.”

இதற்கிடையே தமக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தருமாறு வைத்தியசாலை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வருகின்றது. இது தொடர்பில் வரும் செய்தி என்னவெனில், யாழ்.ரயில் நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் சார்பில், பிரதிநிதி மல்காந்தி தலைமையில் திங்கக்கிழமை விஜயம் செய்த ஒரு குழுவினர், தமது பெயர் விபரங்கள் மற்றும் கல்விச் சான்றிதழ் என்பவற்றை கொண்டு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானியிடம் சமர்ப்பித்தனர். யாழ் வந்துள்ள சிங்கள மக்களில் அநேகமான இளைஞர், யுவதிகள் உயர்தரக் கல்வியை நிறைவு செய்தவர்களாக உள்ளனர். இவர்களில் தாதிப் பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்கள், கொழும்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதியில் பிரபல தனியார் வைத்திய சாலைகளில் கடமையாற்றியவர்களும் அடங்கியுள்ளனர். இத்தகையவர்களுக்குத் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்குமாறு தாம் பணிப்பாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக மல்காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழர் நிலங்களை அபகரிப்பதில் சிங்கள கட்சிகளுக்குள் எந்தவித வேறுபாடுமில்லை

பல நிலைப்பாடுகளில் ஐக்கிய தேசிய கட்சி மக்கள் சுதந்திர கட்சியுடன் முறுகல் நிலையையே கொண்டுள்ளது. ஆனால், தமிழர்களை அழிப்பதென்று வந்துவிட்டால் யார் முதலில் அவர்களை அழிப்பதென்று போட்டிபோட்டுக்கொண்டுதான் இதுவரை காலமும் செயல்பட்டார்கள். அதைப்போலவேதான், இரு பிரதான சிங்கள கட்சிகளும் தமிழர்களின் நிலங்களை அபகரித்து சிங்களவர்களை குடியேற்றி ஆயுதங்களையும் வழங்கி தம்மை தாமே பாதுகாத்து கொள்ளும்படி அறிவுறுத்தபட்டனர்.

இன்றைய காலகட்டத்திலும் மகிந்தாவின் அரசு ஏற்கனவே திட்டம் தீட்டி சிங்களவர்களை எப்படியேனும் தமிழர் பகுதிகளில் குடியமர்த்திவிட வேண்டும் என்று களம் இறந்கியிருக்கும் வேளையில், பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்: “யாழ். குடாநாட்டில் முன்னர் வசித்த சிங்களக் குடும்பங்கள், அங்கு மீளக்குடியேற அரசாங்கம் சகல உதவி, ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பது அவசியம்.”

அவரின் அறிக்கையில் தெரிவிக்கபட்டுளதாவது: “1983 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரங்கள் காரணமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வந்த சிங்கள முஸ்லிம் மக்கள் தமது காணிகள், சொத்துக்களை கைவிட்டு தென்பகுதிக்கு வந்தனர். 28 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வடக்கில் தமது சொந்தக் காணிகளில் குடியேறவென யாழ்ப்பாணம் சென்ற 150 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. தமது சொத்துகள், காணிகளின் உரிமையை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களுடன் சென்றுள்ள இவர்களுக்கு, அரச அதிகாரிகளிடமிருந்தோ அரச தரப்பிடமிருந்தோ எதுவித உதவியும் கிடைக்காமல் அவர்கள் அகதிகளைப் போல் யாழ். ரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர்.”

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “மூன்று தசாப்த காலமாக இனங்களுக்கிடையே காணப்பட்ட குரோதத்தைக் குறைத்து புரிந்துணர்வை ஏற்படுத்தி இணைந்து வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவது அரசின் பொறுப்பென்றும், எனவே, தமது தேவைகளைப் பூர்த்தி செய்து இவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.”

வடக்கு கிழக்கில் சிங்கள மக்களை மீள் குடியேற்றுவதற்காக தேசப்பற்றுடைய சமூகங்கள் அணி திரட்டப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி எச்சரித்துள்ளது. போர் காரணமாக வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை அரசாங்கம் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என அறிவித்துள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வந்த 165,444 சிங்கள மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி ஒரு புதுக்கதையை அவிட்டு விட்டுள்ளது.

அது மேலும் தெரிவித்துள்ளதாவது: “அரசாங்கம் வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீண்டும் அங்கே குடியேற்ற தவறினால், கொழும்பில் உள்ள இந்து கோவில்கள் எல்லாம் தரை மட்டமாக்கப்படும். இதன் மூலமாவது சிங்களவர்களை, தமிழர்களான இந்துக்கள் புரிந்து செயற்பட வேண்டும்.”

சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் குறித்து மீள் குடியமர்வு அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில் வடக்கில் இருந்து ஏற்கனவே இடம் பெயர்ந்த சிங்கள மக்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அங்கு மீளக்குடியமர்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீள்குடியமர்வு அமைச்சு அல்லது வடமாகாண ஆளுநரிடம் தகுந்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரச மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் தமிழர் மீதான நிலைப்பாட்டில் ஒரேவிதமான நடவடிக்கைகளையே செய்துவந்துள்ளனர். ஏதோ அரசு ஒன்றும் தெரியாத பாப்பா என்ற மாதிரியும் பிரதான எதிர்கட்சியின் அழுத்தம் காரணமாகவேதான் அரசு விரைந்து யாழ் வந்தடைந்துள்ள மக்களுக்கு உரிய நடவடிக்கையே மேற்கொள்ளுவது போன்று ரணிலும் மகிந்தாவும் ஏற்கனவே நேரிலும் தொலைபேசியிலும் கலந்துரையாடிவிட்டே இப்படியான நாடகங்களை போடுகின்றார்கள். சிங்கள ஆதிக்கவாதிகளால் ஒரு போதும் தமிழர்களின் குறைந்த பட்ச அரசியல் தீர்வைக்கூட அளிக்கமாட்டார்கள். சிங்கள அரசியல் கட்சிகள் தங்களிற்குள் பல முரண்பாடுகளை வைத்திருந்தாலும், தமிழர்களின் விடயம் என்று வந்துவிட்டால் ஓன்று சேர்ந்து அரசியல் காய்நகர்த்தலை மேற்கொள்வார்கள். இதைப் புரிந்தும் புரியாமல் பல ஈனத்தமிழர்கள் செயல்படுகின்றார்கள்.

தமிழ் அரசியல்வாதிகள் என்னதான் சொல்லுகின்றார்கள்

யாழ்ப்பாணத்திற்கு மீளகுடியேறுவதற்காக வந்துள்ள சிங்கள மக்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு மூன்று மாத கால அவகாசம் தேவையென ஈபிடிபியின் தலைவரும் மகிந்தா அரசில் அமைச்சர் பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் நிலவி வரும் காணிப் பிரச்சினைகள் மற்றும் காணிகளின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு காணிக் கச்சேரியொன்றை விரைவில் நடத்துவது அவசியமாகவுள்ளதெனக் கூறிய அவர், யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

டக்ளஸ் தனது மகிந்தா மீதுள்ள விசுவாசத்தை காண்பிப்பதற்கும், மகிந்தாவிடம் இருந்து மேலும் பல சலுகைகளை பெற்றுவிட வேண்டும் என்று கங்கணம் கட்டுகின்றார் போலும். இவர் தமிழீழமே தீர்வு என்று ஆயுதம் ஏந்தி பல ஈழ போராளி இயக்கங்களில் இணைந்து எப்படியாவது தலைவர் பதவி பெற்றுவிட வேண்டும் என்று போராடினார். பின்னர் இந்திய அரசின் கைக்கூலியாக தனது விசுவாசத்தை காட்டி இந்திய அரசின் பணத்தில் ஈபிடிபி குழுவை ஆரம்பித்து பல ஆயிரம் தமிழர்களை அழித்த எட்டப்பன்களில் முக்கியமானவர்.

பசிலின் திட்டத்தை உயிரூட்ட டக்ளஸ் மேலும் கூறுகையில் எது எவ்வாறெனினும் குடாநாட்டில் சிங்கள மக்களின் பிரச்சனைகளை குறுகிய சுயலாப அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்தக் கூடாதெனவும் அம்மக்கள் தமது நிலைப்பாடு பற்றி தெரிவிக்கையில், தாம் 50 வருடத்திற்கு மேல் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்ததாகவும் தாம் தனிச் சிங்கள மக்கள் அல்ல என்றும் தங்களுள் தமிழ் மக்களும் உறவுகளாகக் கலந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதாகவும் டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த டக்ளஸ், அவர்கள் வாடகை அடிப்படையில் குடியேற விரும்புபவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும் எனத் தெரிவித்ததுடன் குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீளக்குடியேறி சகோதரத்துவத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் தமதும் எதிர்பார்ப்பாகும் என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் ஒன்றை மட்டும் தெளிவாக அமைச்சரிடம் இருந்து பதிலை எதிர்பார்க்கின்றனர். தமிழீழமே இறுதித் தீர்வு எனவும் அதன் கொள்கைக்காக ஆயுதம் ஏந்தி அதன் காரணமாக ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்களை சாவுகொள்ள டக்ளஸ் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள். இதன் காரணமாக தமிழர்களுக்கு எந்த அரசியல் உரிமையை இவர்களினால் இன்றுவரை பெற்றுத்தர முடிந்தது…தமிழர்களை காரணம்காட்டி பல அனுகூலங்களை பெற முடிந்ததே தவிர தமிழர்களுக்கு இதுநாள் வரை விடிவே இல்லாமல் தெருத்தெருவாக அலையும் துர்ப்பாக்கிய நிலை.

தாம் ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்துவைப்பதாக தொடர்ந்து கூறிவரும் டக்ளஸ், இன்று தமிழர்கள் பல இன்னல்களை சந்திப்பதை அறியாதவராக உள்ளாரா? பல ஆயிரம் தமிழர்களை சிங்கள படையினர் கொல்லும்போது, எவ்வாறு புலிகளை அழிக்கலாம் என்று மகிந்தாவுடன் கலந்துரையாடும்போது இவருக்கு தமிழர்கள் தான் அதிகமான தொகையில் கொல்லப்படுகின்றார்கள் என்று தெரியாதா? உலக அரசுகளினால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை சிங்கள படையினர் பாவிக்கும்போது இவரின் தொண்டர்கள்…மன்னிக்கவும்…கூலிப்படையினர் சிங்கள அரக்கர்களுடன் சேர்ந்து நின்று தமிழர்களை அழிப்பதை வேடிக்கை பார்த்தார்கள் என்பதை மறுப்பாரா டக்ளஸ்? தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத்தினர் செய்யும் அட்டுழியங்கள் எதையேனும் தட்டிக்கேட்டிருக்கின்றாரா இதுவரை டக்ளஸ்? இவரின் குழுவின் ஆட்கள் தமிழர் நிலங்களில் செய்யும் அட்டுழியங்களையும், காட்டிக்கொடுப்புக்களையும் மறுப்பாரா டக்ளஸ்? சின்ன மீனை தமிழர்களிடம் வீசி தனது சுயநலன்களுக்காக பெரிய மீனை சிங்களவனிடம் இருந்து பறித்தெடுக்கும் வேலையில்தானே டக்ளஸ் ஈடுபட்டிருக்கின்றார் என்று தமிழர்கள் பரவலாக கூறுகின்றார்கள். இதனை மறுப்பாரா டக்ளஸ்?

ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து இவரினால் எதனை சாதிக்க முடிந்தது…மன்னிக்கவும்…இவரினால் தனது பொருளாதாரத்தை உயர்த்தும் சாதனையையும், அமைச்சர் பதவியையும் பெற முடிந்தது. இவைகளைத் தவிர தமிழருக்கென்று எதனை பெற்றுத்தர முடிந்தது என்பதை தமிழர்கள் கேட்கின்றார்கள்? இவரைப் போன்ற எட்டப்பர்களின் காட்டிக்கொடுப்பினால்தானே தமிழீழப் போராட்டம் இன்று இப்படியொரு மந்தநிலையை அடைந்துள்ளது. இதனை மறுப்பாரா டக்ளஸ்? இப்படியாக பல ஆயிரம் கேள்விகள் கேட்க எண்ணுகின்றார்கள் தமிழர்கள் ஆனால் வெள்ளை வான்களை அனுப்பி கொலைசெய்துவிடுவாரோ என்ற பயத்தினாலோ என்னவோ பல லட்சம் தமிழர்கள் தமது ஆதங்கங்களை உள்ளத்துடன் தேக்கிவைத்து புலம்புகின்றார்கள்.

தமிழர்களுக்கு நிகழ்ந்த அவலத்திற்கும் இழப்புகளுக்கும் டக்ளஸ் போன்ற போராளித் தலைமைகள் பொறுப்பேற்க வேண்டும். புலிகளை குற்றம்சாட்டிவிட்டு தப்பிக்க ஒருபொழுதும் இவர்கள் முயலக்கூடாது காரணம் புலிகள் ஒரே கொள்கையுடனே களம் கண்டு தமது இன்னுயிர்களை துச்சமென மதித்து போராடினார்கள்.

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட மட்டத்திலான கூட்டமொன்று கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறியதாவது: “வடக்கில் நமது மக்களின் பூர்வீகக் காணிகள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருவது மட்டுமன்றி இன்று யாழ்ப்பாணத்திற்கு ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் வந்திறங்கி அங்கு குவிந்து தங்களுக்கு வீடு வேண்டும்,காணி வேண்டுமெனச் சண்டைபிடிக்கும் அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது.”

மாவை சேனாதிராஜா தொடர்ந்து உரையாற்றுகையில்: “அம்பாறை மாவட்ட மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அதை விடப் பெரிய பிரச்சினைகளை இன்று யாழ்ப்பாண மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. இது மட்டுமன்றி எமது மக்கள் அங்கு அரை நூற்றாண்டுக்கு மேலாக வாழ்ந்த பிரதேசங்களில் புதிய குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல் நம் மக்களின் நிலங்கள் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதற்கு ஆயிரம் ஆயிரம் ஏக்கர்கள் எடுக்கப்பட்டுள்ளன.”

மேலும் பல தமிழ் அரசியல் கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை கூறியுள்ளனர். தமிழர்கள் இன்று பலமிழந்த ஒரு இனமாக சிங்கள-பௌத்த சாசனத்தின் வழிவந்த அரசியல்வாதிகளின் பின்னால் நிற்கும் துர்ப்பாக்கிய நிலை. சில ஈனத் தமிழர்களோ எலும்புத்துண்டுக்கு ஆசைபட்டு தமது இனத்தையே காட்டிகொடுக்கின்றார்கள்.

தமிழர் பிரதேசங்களில் கலாச்சார அழிவுகள் நடக்கின்றது மற்றும் சிங்கள குடியேற்றங்கள் வேண்டுமென்றே நடைபெறுகின்றது என்பதை அறிந்தும், சிங்கள அரசு கொடுக்கும் பணத்திற்காகவும் பதவிகளுக்காகவும் அரசிற்கு ஆதரவளிக்கின்றார்கள் இந்த ஈனத் தமிழர்கள். ஈழம் வேண்டும் என்று களம் புகுந்தவர்கள் எல்லாம் இன்று தமிழீழ பிரதேசங்களில் வேகமாக சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலமாக தமிழரின் இருப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டார்கள்.

பல ஆயிரம் சிங்களவர்கள் பல ஆயிரம் ரூபாய்களை கொடுத்து யாழ் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தமிழர் நிலங்களை பல லட்சம் ரூபாய்களை கொடுத்து வாங்குமளவு சிங்களவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். பாவம், வெள்ளிக்காசுகளையும் தங்கக்காசுகளையும் சம்பாதிக்கும் மக்களின் உறவினர்களோ தமது வீடுகளை சிங்களவருக்கு விற்றும் வாடகைக்கும் கொடுக்குமளவு நிலை இன்று சிறிலங்காவில் மாறியுள்ளது.

யாழ் வந்து குடியேற எந்தவொரு இலட்சாதிபதியோ அல்லது கோடீஸ்வர சிங்களவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். ஆக, சிங்கள அரசின் நேரடி பண உதவியினாலேயே இந்த சிங்களவர்கள் தமிழர்களின் தாயகத்தில் காலடி வைத்து அவர்களின் நிலங்களை வாங்கியும் அவர்களின் குடும்பங்களில் திருமணம் செய்தும் தமிழர் என்ற இனமே தமிழீழத்தில் இல்லை என்ற நிலை ஒன்றை உருவாக்க நடைபெறும் சதியே சிங்கள மயமாக்கும் திட்டம். இதற்கு துணை போகின்றார்கள் ஈனத்தமிழர்களில் பலர். மீண்டும் புலியாய் வீறுகொண்டெழுந்து தமிழர்களின் மண்ணையும் மானத்தையும் காப்போமாக!

[email protected]
அனலை நிதிஸ் ச. குமாரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*