TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழர்களின் வளங்களை அபகரித்துவரும் சிங்களம்

ஈழத்தமிழர்களின் வளங்களை அபகரித்துவரும் சிங்கள இந்திய தேசங்கள் : இரா.துரைரத்தினம்.

வடகிழக்கில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தை ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் ஸ்ரீலங்கா அரசு வடகிழக்கின் வளங்களை அபகரித்து தென்னிலங்கைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருக்கிறது. சிங்களதேசம் மட்டுமன்றி இந்திய தேசமும் தமிழர் பிரதேசங்களின் வளங்களை அபகரித்து செல்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது.

கனியவளங்கள் நிறைந்திருக்கும் வடக்கு கிழக்கிலிருந்து இந்த வளங்களை அபகரிக்கும் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது.

கடல் வளம்

இலங்கை கடலால் சூழப்பட்டிருந்தாலும் அந்த கடல் பிரதேசத்தின் பெரும்பகுதியை வடகிழக்கு மாகாணங்களே கொண்டிருக்கின்றன. மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தின் அறுகம்மை வரையான கடற்கரைப் பிரதேசம் வடகிழக்கு மாகாண எல்லைக்குள் காணப்படுகிறது. 1817.5 கிலோ மீற்றர் நீளமான இலங்கையின் கடற்கரைப் பிரதேசத்தில் ஐந்தில் மூன்று பங்கு கடற்பிரதேசம் வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்குள்ளேயே வருகிறது.

இதைவிட மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரைக்குமான பாக்குநீரிணையின் இலங்கை கடல் எல்லைக்குள்ளேயே மீன் வளம் அதிகம் உள்ள பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இலங்கையிலேயே அதிக மீன் வளம் உள்ள பகுதியாகவும் மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான பவளப்பாறை நிறைந்த கடற்பிரதேசமே காணப்படுகிறது. 21,500 சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவுள்ள இந்த கடற்பிரதேசத்தின் கடல்வளங்களை அபகரிப்பதிலும் அப்பிரதேசத்தின் மீன் வளம் அழிந்து போவதற்கும் தமிழக மீனவர்களும் சிங்கள மீனவர்களுமே காரணமாக உள்ளனர்.

போர் காரணமாக வடக்கு கிழக்கில் உள்ள மீனவர்கள் தொழில் செய்ய முடியாது தடுக்கப்பட்டிருக்கும் அதேவேளை, வடகிழக்கு கடற்பிரதேசத்திற்குள் தமிழக மீனவர்களும் சிங்கள மீனவர்களும் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்து வருவதுடன் மீன் வளத்தையும் அழித்து வருகின்றனர். முக்கியமாக தமிழக மீனவர்களே வடக்கு கிழக்கு தமிழ் மீனவர்களின் வாழ்வை அழிப்பதற்கு காரணமாக உள்ளனர்.

தமிழகத்திலிருந்து இலங்கையின் வடபகுதி கடற்பிரதேசத்திற்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் கேரள மீனவர்கள் இரட்டைமடி என கூறப்படும் தடைசெய்யப்பட்ட வலைகளையே உபயோகிக்கின்றனர். சீன மீன்பிடிக் கப்பல்களும் இந்த பகுதியில் பிரவேசித்து மீன்பிடிப்பதாக வடஇலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரட்டைமடி எனப்படும் இந்த வலையை பாவிப்பதால் மீன் உற்பத்திக்கு துணையாக இருக்கும் பவளப்பாறைகள் மற்றும் கண்டல் தாவரங்கள்; என்பன முற்றாக அழிக்கப்படுவதுடன் மீன் குஞ்சுகளும் இந்த வலைகளில் அகப்பட்டு மீன் உற்பத்தி அற்றுப்போவதற்கும் காரணமாக அமைகிறது.

கடலில் மீன் உற்பத்தியை தொடர்ந்து தக்கவைக்க வேண்டுமானால் மீன் குஞ்சுகள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் அவை வளர்வதற்கு தேவையான நீரில் அடியில் இருக்கும் தாவரங்களும் பவளப்பாறைகளும் அழியாமல் இருக்க வேண்டும். ஆனால் இந்த இரட்டைமடி வலையில் மீன் குஞ்சு, தாவரங்கள் அனைத்தும் வழித்து எடுக்கப்படுவதுடன் பவளப்பாறைகளும் சேதப்படுத்தப்படுகிறது

இந்திய தமிழக மீனவர்களே இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்க்கையை முற்றாக அழித்து அவர்கள் பட்டினியால் மரணமடைவதற்கு வழிவகுக்கிறார்கள் என்பதை பலர் மறந்து விடுகிறார்கள். சில அரசியல் காரணங்களை முன்வைத்து தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வடகிழக்கில் உள்ள 78 ஆயிரத்து 281 மீனவ குடும்பங்கள் தங்களது தொழில்களை இழந்து வறுமையில் வாடப்போகிறார்கள் என்பதை அறியாமல் இருப்பதுதான் பெரும் கவலை.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கையின் வடகிழக்கு கடற்பிரதேசத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து தடைசெய்யப்பட்ட வலைகளை பாவிப்பதால் வடகிழக்கின் மீன்வளம் முற்றாக அழிந்து விடும். இவ்வாறு தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்ததால் சில கடற்பிரதேசங்கள் மீனினம் அற்ற கடற்பரப்பாக மாறியிருப்பது இதற்கு நல்ல உதாரணமாகும். ( வேதாரணியம் உட்பட தமிழக கடற்பிரதேசங்கள் தற்போது மீனினம் அற்ற பிரதேசமாக உள்ளன. இதற்கு காரணம் இந்த தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளாகும்)

இவ்வாறு தமிழக மீனவர்கள் வடகிழக்கில் அத்துமீறி பிரவேசித்து மீன்வளத்தை அழித்து வருவதால் வடகிழக்கில் உள்ள தமிழ் மீனவ குடும்பங்களின் எதிர்காலம் சூனியமாகி அவர்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

அதேபோன்று சிங்கள மீனவர்களும் இந்த பிரதேசங்களுக்குள் அத்துமீறி பிரவேசித்து தடைசெய்யப்பட்ட வலைகளை பாவித்து மீன்பிடித்து வருகின்றனர். வடகிழக்கு கடற்கரைப் பிரதேசத்தில் சிங்கள மீனவர்கள் திட்டமிட்டு குடியேறி வருவதுடன் தமிழர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த இடங்களில் சிங்களவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

சுண்டிக்குளம், முல்லைத்தீவு, திருகோணமலை, மூதூர், வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர், புன்னைக்குடா ஆகிய பகுதிகளில் தற்போது சிங்கள மீனவர்கள் குடியேறி வருகின்றனர். வாகரையில் மட்டும் 10 க்கு மேற்பட்ட கரைவலை வாடிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இதில் தொழில் செய்வதற்காக 300 க்கு மேற்பட்ட சிங்களவர்கள் தென்னிலங்கையிலிருந்து வந்திருப்பதாகவும் வாகரைப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் துணையுடன் தமிழக மீனவர்களும், சிறிலங்கா அரசாங்கத்தின் துணையுடன் சிங்கள மீனவர்களும் வடகிழக்கின் கடல்வளத்தை அபகரித்து வருவதுடன் அழித்தும் வருகிறார்கள். வடக்கின் கடல்வளத்தை அழிப்பதில் சிங்களவர்களை விட தமிழக மீனவர்களே முன்னணியில் இருப்பதாக யாழ்ப்பாண மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

வடகிழக்கின் மிகப்பெரிய சொத்தாக கருதப்படும் கடல்வளத்தை அபகரிப்பது மட்டுமல்ல அதை அழிப்பதற்கும் கங்கணம் கட்டி நிற்கும் தமிழக மீனவர்களின் செயல்களை தடுப்பதற்கு ஈழத்தமிழர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர தமிழக மீனவர்களுக்காக அனுதாபப்படுவதோ அவர்களுக்காக பேசுவதோ வடகிழக்கில் உள்ள 78ஆயிரம் தமிழ் மீனவ குடும்பங்களுக்கு துரோகம் இழைப்பதாகவே முடியும்.

சுண்ணாம்புக்கல் வளம்

இலங்கையில் சுண்ணாம்புக்கல் வளம் யாழ்ப்பாணத்திலேயே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக பருத்தித்துறையிலிருந்து காங்கேசன்துறை வரையான கரையோரப் பிரதேசம் சுண்ணாம்புக்கல் வளம் உள்ள பகுதியாகும். இதனால்தான் சீமெந்து உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளாக இருக்கும் சுண்ணாம்புக்கல் அதிகம் உள்ள காங்கேசன்துறையில் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

போர் உக்கிரம் அடைந்ததை தொடர்ந்து காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மூடிய அரசாங்கம் காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி ஆகிய பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி அங்கிருந்த மக்களை வெளியேற்றினர்.

அப்பிரதேசங்களிலிருந்து தற்போது சுண்ணாம்புக்கற்கள் தென்னிலங்கைக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்துள்ளது. தென்னிலங்கைக்கு மட்டுமல்ல இந்தியா சீனா ஆகிய நாடுகளுக்கும் சுண்ணாம்புக்கல் காங்கேசன்துறையிலிருந்து கப்பல்களில் கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மாவை சேனாதிராசா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது அரசாங்கம் அதை மறுக்கவும் இல்லை. பதிலளிக்கவும் இல்லை. ஆனால் தொடர்ந்தது சுண்ணாம்புக்கல் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் எடுத்துச்செல்லப்படுவதாக தெரியவந்திருக்கிறது.

சுண்ணாம்புக்கல் வளம் என்பது மட்டுப்படுத்தப்பட்ட வளமாகும். அது திடீரென பல்கிப்பெருகும் வளம் அல்ல. அங்கிருக்கின்ற சுண்ணாம்புக்கல் முற்றாக எடுக்கப்படுமாக இருந்தால் எதிர்காலத்தில் யாழ் மாவட்டத்தின் சுண்ணாம்புக்கல் தேவைக்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது தவிர ஒரு மாவட்டத்தின் வளம் இன்னொரு மாவட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதாக இருந்தால் உற்பத்தியான அம்மாவட்டத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால் சுண்ணாம்புக்கல் ஏற்றுமதியில் இந்த நடைமுறை பின்பற்றப்படவே இல்லை.

மணல் வளம்

கட்டிட வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் குருகுமணல் என அழைக்கப்படும் சுத்தமான மணல் வடகிழக்கு கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலேயே அதிகம் காணப்படுகிறது. போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து வடகிழக்கில் இந்த மணல் கொள்ளை மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

யாழ் மாவட்டத்தில் நாகர்கோவிலிருந்து சுண்டிக்குளம் வரையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுண்டிக்குளத்திலிருந்து கொக்குளாய் வரையான பிரதேசங்களில் இந்த குருகுமணல் அதிகமாக காணப்படுகிறது.

மணல் ஏற்றுவதாக இருந்தால் பிரதேச செயலாளரிடம் அனுமதிப்பத்திரம் பெற வேண்டும் என்பது கனியவள பயன்பாட்டு சட்டத்தில் கீழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வடகிழக்கில் இது தலைகீழாகத்தான் நடைபெறுகிறது.

யாழ் குடாநாட்டில் தற்போது மணல்காடு, நாகர்கோவில் தொடக்கம் வடமராட்சி கிழக்கு கிராமங்களிலிருந்து மணல் ஏற்றப்படுகிறது. அங்கிருந்து மணலை பெறுவதற்கான அனுமதியை ஈ.பி.டி.பியினரே வழங்கிவருகின்றனர். மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பே இதற்கான அனுமதியை வழங்கி வருகிறது.

சட்டத்திற்கு புறம்பான இந்நடவடிக்கை பற்றி அரசாங்க அதிபரிடம் கேட்டால் இது பற்றி தனக்கு எதுவும் தெரியாது. கொழும்பில் மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இது நடைபெறுவதாக அவர் கூறுகிறார்.

நாகர்கோவில், மணல்காட்டுப் பகுதியிலிருந்து தினசரி 50க்கு மேற்பட்ட பாரஊர்திகளில் மணல் ஏற்றப்பட்டு யாழ் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கு மட்டுமல்ல தென்னிலங்கைக்கும் கொண்டு செல்லப்படுகிறது. அந்த பிரதேச செயலாளரின் அனுமதியின்றி ஈ.பி.டி.பியினர் இந்த மண்கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பில் கல்லடி, செங்கலடி உட்பட பகுதிகளில் மணல் ஏற்றப்படுகிறது. இந்த பிரதேசங்களிலிருந்து மணல் எடுக்கும் அனுமதி சிங்கள ஒப்பந்தகாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மணல் ஏற்றுவதற்கான அனுமதி பிரதேச செயலகத்தில் வழங்கப்பட வேண்டும் என்ற நியதிக்கு மாறாக மட்டக்களப்பிலிருந்து மணல் ஏற்றுவதற்கான அனுமதி கொழும்பில் உள்ள பசில் ராஜபக்சவின் பொருளாதார அமைச்சிலேயே வழங்கப்படுகிறது. அதுவும் கொழும்பில் உள்ள சிங்கள கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

மட்டக்களப்பில் உள்ள ஒரு தமிழர் கட்டிடம் ஒன்றை கட்டவேண்டுமாக இருந்தால் இந்த சிங்கள ஒப்பந்தகாரரிடம் இருந்துதான் மணலை பெற முடியும். இதனால் மட்டக்களப்பில் உள்ள மக்கள் மட்டுமல்ல அங்குள்ள தமிழ் ஒப்பந்தகாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பின் வளத்தை சிங்களவன் எடுத்து தமிழனுக்கு அதிக விலைக்கு விற்கும் அவலம்தான் அங்கு நடைபெறுகிறது. இதை மட்டக்களப்பில் உள்ள அரசாங்க அதிபராலோ பிரதேச செயலாளராலோ தடுக்க முடியாமல் இருக்கிறது.

கருங்கல் வளம்

யாழ்ப்பாணத்தில் சுண்ணாம்புக்கல் அதிகம் காணப்படுவது போல கட்டிடங்களுக்கும் வீதிகளுக்கும் பயன்படுத்தப்படும் கருங்கல் மட்டக்களப்பிலேயே அதிகம் காணப்படுகிறது. புல்லுமலை, அதன் தெற்கு மற்றும் மேற்கு பக்கமாக அமைந்திருக்கும் பிரதேசங்களிலேயே கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படும் தரமான கருங்கல் காணப்படுகிறது. இங்கிருந்தே தற்போது தென்னிலங்கையின் பல பாகங்களுக்குமான கட்டிட மற்றும் வீதி அபிவிருத்தி வேலைகளுக்கு கருங்கல் எடுத்து செல்லப்படுகிறது.

இலங்கையில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருக்கும் சீன நிறுவனங்கள் கூட கரடியனாறு, புல்லுமலை பகுதியிலேயே கல்உடைக்கும் நிலையங்களை வைத்திருக்கிறது. அப்பகுதியில் கல் உடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வெடிமருந்துகளே அண்மையில் கரடியனாற்று வெடிச்சம்பவத்திற்கு காரணமாக அமைந்திருந்தது.

சீன நிறுவனங்களும் தென்னிலங்கை சிங்கள கட்டிட ஒப்பந்தகாரர்களும் இந்த பகுதியிலிருந்தே தினசரி பெருந்தொகையான கருங்கற்களை எடுத்து செல்கிறார்கள். மலைப்பாங்கான இடங்களில் வெடிவைத்து தகர்த்து அவற்றை முக்கால் இஞ்சி கற்களாக உடைத்து எடுத்து செல்லப்படுகிறது.

இதற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடமோ அல்லது இப்பகுதி அமைந்திருக்கும் செங்கலடி பிரதேச செயலாளரிடமோ அனுமதி பெறப்படவில்லை. கொழும்பில் மேலிடத்து உத்தரவு என கூறி கருங்கற்களை எடுத்துச்செல்லும் சிங்களவர்களுக்கும் சீனர்களுக்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

காட்டு வளம்

வன்னியிலும் மட்டக்களப்பிலும் அதிகம் காணப்படும் காட்டுமரங்களான தேக்கு, பாலை, முதிரை மற்றும் வேம்பம் மரங்கள் தறிக்கப்பட்டு தினசரி தென்னிலங்கைக்கு கடத்தப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாந்தாமலை, புலிபாய்ந்த கல், தேக்கம்சோலை (தேக்கம்சோலையில் முன்னர் விடுதலைப்புலிகளின் பண்ணை இருந்தது) ஆகிய இடங்களில் உள்ள பெறுமதியான மரங்கள் தறிக்கப்பட்டு தென்னிலங்கைக்கு கடத்தப்படுகிறது.

இந்த கடத்தல் நடவடிக்கைகளில் முஸ்லீம் சிங்கள வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். மரம் எடுத்துச்செல்வதாக இருந்தால் அப்பிரதேச பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் ஆகியோரின் அனுமதி கட்டாயம் இருக்க வேண்டும் என்பது இலங்கையில் நடைமுறையில் இருக்கும் சட்டம். ஆனால் வடக்கு கிழக்கில் இந்த சட்டம் பற்றி இவர்கள் கவனத்தில் எடுப்பதே இல்லை.

வனவளத் திணைக்களமும் இது பற்றி எந்த நடவடிக்கைகளும் எடுக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர். கொழும்பில் மேல் மட்ட அனுமதியுடன் தாம் இதை எடுத்து செல்வதாக சிங்கள முஸ்லீம் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மரங்களை வெட்டிவந்து செங்கலடி வாளைக்காலை என்ற இடத்தில் வைத்து இராணுவத்தினரும் முஸ்லீம் வியாபாரிகளுக்கு விற்கின்றனர். மரங்கள் தறிக்கப்பட்டு ஏற்றப்படுகின்ற வேகத்தைப் பார்த்தால் இன்னும் ஒரு வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேக்கு, பாலை, முதிரை, வேப்பம் மரங்கள் எதுவும் இருக்காது என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காட்டு வளம் அழிக்கப்படுவதால் மட்டக்களப்பில் மழை வீழ்ச்சியும் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் என அப்பிரதேச மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று யுத்தம் முடிவடைந்து வன்னிப் பிரதேசம் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்தபின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதியிலிருந்து குறிப்பாக நெடுங்கேணி, துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் மணலாற்று பிரதேசத்திலிருந்தும் மரங்கள் வெட்டப்பட்டு தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இராணுவத்தினரின் உதவியுடனேயே இந்த மரக்கடத்தல்கள் நடைபெறுகின்றன.

கால்நடை வளம்

வன்னிப்பிரதேசம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வந்தபின் மக்கள் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு வருடகாலம் வன்னியில் இருந்த கால்நடைகள் அனாதரவாகவே விடப்பட்டிருந்தன. இக்காலப்பகுதியில் அங்கிருந்த இராணுவத்தினர் தாராளமாக கால்நடைகளை இறைச்சிக்காக அழித்தனர்.

இதுதவிர தென்னிலங்கையிலிருந்து சென்ற முஸ்லீம் சிங்கள வியாபாரிகளுக்கும் கால்நடைகளை பிடித்து விற்றுவந்தனர். மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னரும் முஸ்லீம்களால் தமது கால்நடைகள் கடத்திச்செல்லப்படுவதாக அப்பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

அண்மையில் கூட சிங்கள, முஸ்லீம் வியாபாரிகளால் கிளிநொச்சியில் பசுமாடுகள், கன்றுகள் உட்பட பெருந்தொகையான மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. வன்னி மக்களின் மிகப்பெரிய சொத்தாக இருக்கும் கால்நடை இராணுவத்தினரின் உதவியுடன் சிங்கள முஸ்லீம் வியாபாரிகளால் திட்டமிட்டு கடத்தப்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் வன்னிப்பிரதேசம் கால்நடைகளே இல்லாத பகுதியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வன்னியிலிருந்து முஸ்லீம்களால் கடத்தப்படும் கால்நடைகள் மன்னார் ஊடாகவே தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மட்டக்களப்பு படுவான்கரைப் பிரதேசத்திலும் தமிழ் மக்களின் கால்நடைகள் முஸ்லீம்களால் கடத்தப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கெவிளியாமடு தாந்தாமலை குடும்பிமலை பிரதேசங்களில் மேய்ச்சலுக்காக விடப்படும் மாடுகள் முஸ்லீம்களால் பட்டிபட்டியாக கடத்தப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பால் உற்பத்திக்காக வளர்க்கப்படும் பசுமாடுகளை முஸ்லீம்கள் கடத்தி சென்று இறைச்சிக்காக வெட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பால் உற்பத்திக்கு பிரசித்தி பெற்ற மட்டக்களப்பில் கால்நடைகள் கடத்தப்படுவதால் பால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பு மாத்திரமல்ல வளங்களும் சிங்கள தேசத்தாலும் இந்திய தேசத்தாலும் சுரண்டப்பட்டு வருகிறது. தமிழர்களின் பொருளாதார பலத்தை அழிப்பதே சிங்கள இந்திய தேசங்களின் நோக்கமாகும்.

[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*