TamilSpy

பொழுது போக்கு இணையம்…

முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு ஒத்தடம்தர ஓர் திரைப்படம்

முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு ஒத்தடம்தர ஓர் உன்னதத் திரைப்படம்.

Fearless படத்தைப் பார்த்தால் உண்மையான எந்திரன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டு பிடிப்பீர்கள்..

ஈழத்தமிழ் மக்கள் மானம் காக்கும் மறவீரர்களின் வாழ்க்கைகளை அறிவதில் எப்போதுமே நாட்டமுள்ளவர்கள். அந்தவகையில் நமது மக்களுடைய மனங்களுக்கு மிகப் பக்தில் போகும் ஒரு திரைப்படமாக இருக்கிறது Fearless என்ற கொலிவூட் திரைப்படம். கடந்த முப்பதாண்டுகால போர் வாழ்வினை சோகத்துடன் சுமக்கும் தமிழ் மக்கள், அதைச் சுடர்ப்பேற்றி புகழுடன் சுமக்க வழிகாட்டும் அற்புதமான திரைப்படமே Fearless

படத்தின் கரு

தமிழ் ஈழத்தைப் போலவே..

1910 ம் ஆண்டுக்கு முன்னர் அன்னியர்களின் ஆக்கிரமிப்பில் சீன தேசம் அடிமைப்பட்டுக் கிடந்த வேளையில் புலி வீரர்களைப் போல மானம் காக்கும் மற வீரனாகப் புறப்படுகிறான் குவோயுவோனியா என்ற சீன இளைஞன்.
அன்னியர்களால் உச்சரிக்கப்படும் டொங்குயா பிங்பு என்கின்ற வார்த்தையைக் கேட்டு கொதித்தெழுகிறான். கிழக்கு ஆசியாவின் நோஞ்சான்கள் என்று வர்ணிக்கப்படுவோருடன் மோதுவதற்கு தயாராகிறான். ஒரே நேரத்தில் நான்கு வித்தியாசமான வீரர்களுடன் சண்டை செய்ய ஒத்துக்கொள்கிறான்.

அத்தருணம் சண்டை தர்மத்திற்கு அப்பாற்பட்ட விடயம் என்று பலர் போதித்தாலும் அதையெல்லாம் மீறி சீன மக்களின் மானத்தைக் காக்க களத்தில் குதிக்கிறான். எத்தனையோ தடைகள் வருகின்றன, சோதனைகள் வருகின்றன, ஆனால் மானத்தைக் காக்க போரிடுவோனுக்கு அவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதில் அவன் மட்டும் உறுதியுடன் இருக்கிறான்.

தன்மானமுள்ள அந்தவீரனுடன் பழகுகிறாள் ஒரு குருட்டுப்பெண். இறுதிவரை அவளுடைய உடலில் சுட்டுவிரல் கூட படாத வகையில் படத்தின் காதலை வடிவமைக்கிறார் இயக்குநர். தொட்டுக்கொள்ளாத குருட்டுக் காதலையும், வெட்டிச் சீவும் தன்மானப் போரையும் முறுக்கி கதைக்கருவை தொய்வின்றி இழுக்கிறார் இயக்குநர். இறுதியாக விடைபெறும்போது அவள் முகத்தினை இரு கரங்களாலும் பற்றி விழிகளைப் பார்ப்பான் – இப்போது உன்னைத் தெரியும் – சென்றுவா என்று அனுப்பி வைப்பாள்.

இறுதிவரை இனமானம் காக்கும் வீரனாகப் போரிட்ட அவன் இறுதியில் ஒரு வேண்டுகோளையும் விடுகிறான். நான் மானம் காக்க போரிடுகிறேன், அதை எதிரிகளுக்கு தெளிவாக உணர்த்தியுள்ளேன் இனி – பழிக்குப்பழி வேண்டாம், பழிக்குப்பழி என்பது மீண்டும் மீண்டும் பெரும் இரத்தக் களறியினை உருவாக்குமேயன்றி சுதந்திரத்தையும், சமாதானத்தையும் பெற்றுத்தராது என்பதை தனது செய்கையால் உணர்த்துகிறான்.

மானம் காப்பதற்காக மரணத்தை ஏற்றுக் கொள்ளலாம் அதில் விட்டுக் கொடுப்புக்கே இடமில்லை என்று விளக்கும் ஜெற் லீயின் அற்புதமான கதை ஒவ்வொரு ஈழத்தமிழனையும் ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது. எதையும் சொல்லாமலே மானம் காத்து சென்ற ஒரு வீரன் போருக்குப் பிறகு செய்ய வேண்டியதை தனது மௌன மொழியால் பேசுவான் என்பதையும் திரைப்படம் புரிய வைக்கிறது. திரையரங்கைவிட்டு வெளியே வரும்போது ஏற்படும் உணர்வலைகள் முள்ளிவாய்க்காலை ஒரு தடவை முன்னால் நிறுத்துகிறது. அதேவேளை மானம் காக்கும் போர்களை தொடர்கதையாக்கி மறுபடியும் பழிக்குப்பழி செய்யக்கூடாது என்ற நீதியை விளக்கவும் அவன் உயிரைக்கொடுத்திருக்கிறான் என்பதும் அருவமாக மனதைச் சீவிச் செல்கிறது.

படத்தைப்பற்றி மேலும் ஒரு படி விளக்கம்:

பச்சைப் பசேலென்ற வயல் வெளிகள், சிறந்த இசை, சிறந்த கமேரா இவைகளோடு முத்துப்போல தரிசனமான இந்தத் திரைப்படம் ஒருமுறை பார்த்து திருப்தியடையக் கூடிய படமல்ல, பார்க்கப்பார்க்க பரவசமூட்டும்.

செப்.2006 ஆண்டு ரிலீசான இந்தத் திரைப்படம் நோர்வே – ஒஸ்லோவில் அதிக வசூலைப் பெற்றுக்கொண்ட திரைப்படமாகும். தொடங்கிய இரண்டாவது நிமிடமே ஒரு தரமான திரைப்படத்தைப் பார்க்கப் போகிறோம் என்ற பிரமையை உருவாக்கிவிடுகிறது. அக்கிரா குரோசேவா சொன்னது போல முதல் 15 நிமிடங்களுக்குள்ளேயே ரசிகனை கவர்ந்து நல்ல படமென்ற பெயரையும் பெற்றுவிடுகிறது. பார்க்கும்போது படத்திற்குள் இருந்து மாயக்கரமொன்று வந்து ரசிகரை உவிந்து இழுத்தது போல இழுத்தே சென்றுவிடுகிறது.

ஏற்கெனவே புறுஸ்லி, ஜாக்சிசான் போன்ற கராத்தே – குங் பூ போன்ற கலைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரை நாயகர்கள் நம்மால் மறக்கப்பட முடியாதவர்களாக வலம் வருகிறார்கள். அந்தவகையில் இத்திரைப்படத்தின் நாயகன் ஜெற்லீயின் நடிப்பும் அவர்களுக்கு இணையாக நம்மைக் கொள்ளை கொள்ள வைக்கிறது. இயல்பாகவே 1869 – 1910 வரை வாழ்ந்த ஒரு வீரனை கண்முன் தரிசிக்க வைக்கிறது.

இன்று தாயகத்தில் நடைபெறும் அவலங்களையும், பிள்ளைப்பெற்ற வயிறு போல காயப்பட்ட மனங்களையும், பிள்ளையையே சுற்றிக் கொன்ற நச்சுக் கொடிகளையும், ஆளுக்கு ஆள் எதிரிகளாகி சீரழியும் நம் இனத்தையும் பார்த்து வேதனைப்படுவோர், இந்தப் படத்தை ஒரு தடவை பார்த்தால் அமைதி பெற முடியும், தன்னையும் திருத்தி தனக்கு பக்கத்தில் இருப்பவர்களையும் ஒரு கணம் சிந்திக்க வைக்க முடியும்.

நேரமிருந்தால் வீடியோ கடைகளில் இந்தப்படத்தை எடுத்துப்பாருங்கள்..

உண்மையான எந்திரன் எங்கே இருக்கிறான் என்பதை கண்டு பிடிப்பீர்கள்.. அதைவிட திரைப்படமென்றால் என்னவென்பதையும் கண்டறிய இது உதவும்..

நோர்வேயிலிருந்து இ.மகேசன். 16.10.2010

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*