TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அனோமாவின் அழுகையும் வன்னி மக்களின் அவலமும்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளை இவரது விடுதலை தொடர்பாக பிக்கு முன்னணிகளுக்கிடையே இரண்டு விதமாக கருத்துக்கள் நிலவுகின்றன.

தேசிய பிக்கு முன்னணி, ஜாதிக ஹெல உறுமய இரண்டுக்கும் மத்தியில் அரச சார்பு, அரச எதிர்ப்பு முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இவை தவிர, தேசியக் கடமை புரிந்தவர் சரத் பொன்சேகாவென்று, இலங்கை கத்தோலிக்க திருச்சபையும் ரணிலிற்கு ஆதரவளிக்கிறது.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஒன்றிணையாத எதிரணியினர், ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தலைமை வகித்த சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக ஒன்று திரள்கின்றனர்.

இவர் அரசியலில் குதிக்காமல் இருந்திருந்தால் காங்கேசன்துறை விடுதியை திறந்து வைக்கும் பாக்கியத்தை பெற்றிருப்பார்.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கியவர் யார் என்கிற பங்காளிச் சண்டையை தமக்குச் சாதகமாக பயன்படுத்த முனைந்த யூ. என். பி.யும் ஜே. வி. பி.யும் சரத் பொன்சேகாவை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த முனைந்து, கடந்த தேர்தல்களில் தோற்றுப் போனார்கள்.

நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டம், அதிகாரத்தைக் கைப்பற்றும் சாத்தியப்பாடுகளை பின்னோக்கி நகர்த்தியிருப்பதால், “சரத்தின் விடுதலை’ என்கிற விடயத்தை தமது முக்கிய அரசியல் கோஷமாக முன்வைத்து போராட ஆரம்பித்துள்ளனர்.

“பீங்கான் கோப்பை, பாய், தலையணையுடன், வெலிக்கடையில் சாதாரண கைதி போல் சிறைவாசம் இருக்கிறார். நாட்டைப் பயங்கரவாதப் பிடியிலிருந்து மீட்ட பொன்சேகா என்று கழிவிரக்க அரசியலை முன்னெடுக்க முற்படுகிறது பேரினவாதச் சிந்தனை கொண்ட எதிர்க்கட்சி முகங்கள்.

பாண் விலையேற்றம் குறித்தோ அல்லது பருவ மழையினால் பாதிப்புறப் போகும் வன்னி மக்களின் அவல நிலை பற்றியோ இவர்கள் போராட முன்வருவதில்லை.

முகவரியில்லாத சித்திரவதை சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகளின் விடுதலை குறித்து, இப்போராட்டவாதிகள் சிந்திக்க மறுப்பதனால் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆதரவு இவர்களுக்கு கிட்டப் போவதில்லை.

பெரும்பான்மையின எதிரணியினன் அதிகாரப் போட்டிக் களத்தில் தமிழ் மக்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்காது என்பதே யதார்த்த நிலையாகும்.

156 உயரதிகாரிகளையும் 5088 படைச் சிப்பாய்களையும் தனது சேவைக் காலத்தில் இராணுவ நீதிமன்றத்தினூடாக தண்டித்த சரத் பொன்சேகாவை வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்தது சரியென்று அரச தரப்பினர் வாதிடுவதையிட்டு தமிழ் மக்கள் கவலை கொள்ளவில்லை.

இதே சிறைச்சாலையில் தான் 83 ஆம் ஆண்டில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட பல தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். விழிகள் பிடுங்கப்பட்டு, பெரும் ஊழித் தாண்டவமே அங்கு நிகழ்த்தப்பட்டது.

அரசியலில் நிரந்தர நண்பர்கள் இல்லையென்பதற்கு இந்த வெலிக்கடைச் சிறைச்சாலை சாட்சியாக இருக்கிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் போன்றோருக்கும் இச்சிறைச்சாலையின் வரலாற்றில் இடமுண்டு.

சரத் பொன்சேகாவை மையமிட்டுச் சுழலும் இலங்கை அரசியலில் அதிகார மாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பு, இம்மியளவும் இல்லையென்பதை ரணில் விக்கிரமசிங்கவும் புரிந்து கொள்வார்.
ஆனாலும் எதிர்க்கட்சித் தலைவராக தனது எஞ்சியுள்ள அரசியல் வாழ்வினை நீட்டிச் செல்வதைத் தவிர அவருக்கு வேறு தெரிவு கிடையாது.

ஏதாவது போராட்டங்களை முன்னெடுத்து கட்சியினை இயங்கு நிலையில் வைத்திருக்க வேண்டும். இல்லையேல் உட்கட்சிப் பூசல் பூதாகரமாகி, தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறித்து விடுமென்று ரணில் அச்சமடைவது போல் தெரிகிறது.

இவைதவிர மென் இலக்கு ஒன்றினைக் குறிவைத்து, நாடாளுமன்றத்திற்குள்ளும் ஒரு பிரச்சினையை ஐக்கிய தேசியக் கட்சி கிளப்பியுள்ளது.

வெளிநாட்டமைச்சர் ஜீ. எல். பீரிஸின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் ரணில் கட்சியினர் ஜீ. எஸ். பீ. பிளஸ் வரிச் சலுகையை இழந்த விவகாரம் மற்றும் அவர் நீண்ட நாட்களாக சீனாவில் தங்கியிருந்த விடயம் ஆகியவற்றை அவர் மீதான நம்பிக்கை இழந்து போனதற்கான காரணிகளாக முன்வைக்கின்றனர்.

ஆனாலும் முதலீடுகள் ஊடாக, இலங்கையில் குவியும் சீனத் தொழிலாளர்கள், எத்தனை ஆண்டுகளுக்கு இங்கு தங்கியிருக்கப் போகிறார்கள் என்பது குறித்து ரணில் கவலைப்படவில்லை.

வரிச் சலுகை இழப்பிற்கான காரணிகளில் தன்மையாக முன் வைக்கப்பட்ட மனித உரிமை மீறல் என்கிற விடயத்தோடு, புவிசார் அரசியல் மாற்றங்களும் பின்னிப் பிணைந்திருப்பதை ரணில் புரிந்து கொள்வார்.

தற்போது பேராசிரியரும் ஜெனரலுமே ரணில் விக்கிரமசிங்கவின் அடுத்தகட்ட அரசியல் போராட்டத்திற்கான மையப் புள்ளிகளாக இருக்கின்றனர்.

கட்சிகளின் உதிர்வினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை, நாடாளுமன்றில் பெற்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணியினர், ரணிலின் நம்பிக்கையில்லாப் பிரேரணையை மிக இலகுவாக தோற்கடித்து விட்டனர்.

இருப்பினும் வரிச் சலுகை இழப்பினால், தொழில் வாய்ப்பினை இழக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களை அரசுக்கு எதிராகத் திருப்புவதற்கு பீரிஸ் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பயன்படுத்த ஐ.தே. கட்சியினர் முயல்வது போலுள்ளது.

பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நீண்ட நாட்கள் சீனாவில் தங்கியிருந்த விடயமோ அல்லது ஐ. நா சபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள, 200 பேர் கொண்ட குழுவோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்ற விவகாரமோ சாதாரண பொதுமக்களுக்கு அதிர்ச்சி தரக் கூடிய விடயமல்ல.

ஆகவே சிங்களப் பொதுமக்களின் கூட்டு உளவியலை அசைக்கக் கூடிய விவகாரமாக சரத் பொன்சேகாவின் சிறைவாசத்தைக் கருதுகின்றார்கள்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற வேண்டுமாயின் பொன்சேகா அல்லது அவன் பாரியார் அனோமா பொன்சேகா மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்க வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறுகின்றார்.

சட்டம் தனது கடமையைச் செய்கிறது என வியாக்கியானம் அளிக்கும் ஆட்சியாளர்கள், சட்டம் வழங்கிய தீர்ப்பு, தனிமனிதனால் எவ்வாறு மாற்றப்படலாம் என்பதையும் விளக்க வேண்டும்.

ஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, சட்டத்தின் முடிவுகளையும் மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவர் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அனோமா பொன்சேகாவை முன்னிறுத்தி எதிர்க்கட்சியினர், அரசியல் காய்களை நகர்த்தப் போகிறார்கள் என்பதே ஆளும் கட்சியினர் மத்தியில் உருவாகியிருக்கும் அச்சம்.

அதேவேளை சரத் பொன்சேகாவின் மனைவி ஊடாக, புதிய அரசியல் போராட்டமொன்றினை முன்னெடுப்பதைத் தவிர எதிர்க்கட்சிகளுக்கு வேறு வழி தெரிவில்லை.

பொதுமக்களை கவரக் கூடிய, ஆளுமை பொருந்திய தலைவரோ அல்லது தலைமைத்துவமோ எதிர்த் தரப்பில் இல்லை என்கிற விடயம் உணரப்படுகிறது. இங்கு பேரினவாத சிந்தனைத் தளத்தினை அடிப்படையாகக் கொண்ட மாற்று அரசியலிற்கான தலைமைத் தெரிவில், சரத் பொன்சேகாவும் அவரது பாரியாருமே தற்போது முன்னிலையில் நிற்கின்றனர்.

இன நல்லிணக்கத்தை உருவாக்கக் கூடிய, முற்போக்கான அரசியல் பார்வை இரு தரப்பினரிடம் இல்லை.

அதிதீவிர பேரினவாதத்தின் உரிமையாளர் யார் என்பதில்தான் இவர்களுக்கிடையே முரண்பாடுகளும், மோதல்களும் ஏற்படுகின்றன.

ஒரு பூர்வீக தேசிய இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்குமுறை, அடக்கும் ஆட்சியாளர்களின் சொந்த இனத்தின் மீதும் பிரயோகிக்கப்படுகின்றது.

தமிழர் தாயகத்தை பொறுத்தவரை சுயமாக இயங்கக் கூடிய குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட உள்ளூராட்சி சபை, பிரதேச சபைகளின் அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன.

திருமலையிலுள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியின் நிர்வாக அதிகாரம் தற்போது கைமாறியிருப்பதை ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

இந்த லட்சணத்தில், வடக்கில் உருவாகும் மாகாண சபையின் நிலை எவ்வாறு அமையு மென்பதை புரிந்து கொள்ள பூதக் கண்ணாடிகள் தேவையில்லை.

இறுதிப் போர் நிகழ்ந்த புதுக்குடியிருப்பிற்கும் வற்றாப்பளைக்கும் இடைப்பட்ட 10,000 ஏக்கர் நிலப்பரப்பில், இராணுவ முகாம்களும் படையினருக்கான குடியிருப்புக்களும் நிறுவப்படுவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

ஏ9 பாதையூடாகப் பயணம் செய்பவர்களுக்கு வன்னி பெருநிலப்பரப்பின் கிழக்குப் பகுதியில் நடைபெறும் நில ஆக்கிரமிப்புக் குறித்து அறியும் வாய்ப்பில்லை.

இடைத்தங்கல் முகாம்களிலிருந்து வெளியேறிய வன்னி மக்கள், வெட்ட வெளிகளில் தற்காலிக குடில்களை அமைத்து வாழ்வதாக அவர் மேலும் கூறுகின்றார்.

“வாழ்வது’ என்பதன் அர்த்தங்களைக் கடந்து, வாழும் அவல வாழ்வினை எவ்வாறு அழைப்பது?

கொழும்புத் துறைமுகத்தில், கொள்கலன்களை (இணிணtச்டிணஞுணூண்) கையாளும், புதிய மையம் ஒன்றினை அமைக்கும் பணியில் சீனா ஈடுபடுவதையிட்டு இந்தியா எரிச்சலடையலாம். ஆனால் வாழ்வாதாரங்களை இழந்து, பருவமழையை எதிர்நோக்கி நிற்கும் வன்னி மக்களுக்கு அது அந்நியப்பட்ட செய்திதான்.

ஐரோப்பா போன்று அமெரிக்காவும் வரிச்சலுகையை நிறுத்தினால் இலங்கைத் திறைசேரியில் 150 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும். தென்னிலங்கையில் பல இலட்சம் தொழிலாளர்கள் வருமானத்தை இழப்பார்கள். ஆட்சியாளருக்கு அரசியல் நெருக்கடி ஏற்படும். ஆனால் இதைவிட மோசமாக, இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் வாழும் தமிழ் மக்களின் நிலை குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் கவலைப்படுவதில்லை.

போர் முடிவடைந்து விட்டதால், சமஷ்டி குறித்தோ அல்லது அதிகார பகிர்வு குறித்தோ இனிப் பேசுவதற்கு எதுவுமில்லையென்று ஐ.தே. கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க போன்றோர் கூறும் போது, சர்வவல்லமை பொருந்திய மூன்றில் இரண்டு பலம்கொண்ட ஆட்சியாளர்கள், என்ன சொல்வார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஆகவே வல்லரசாளர்களின் முரண்பாட்டு மையமாக மாறும் இலங்கையில், உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கங்களும், இதனையும் மீறி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் நிகழ்த்தும் பனிப் போர்களும், தமிழர் அரசியல் வாழ்வுச் சூழலில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குமென்பதை அவதானிக்க வேண்டும்.

இதயச்சந்திரன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*