TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ்த் தேசியத்தின் குரல்கள் ஒன்றுபட்டு ஒலிக்கும்

தமிழ்த் தேசியத்தின் குரல்கள் ஒன்றுபட்டு ஒலிக்கும் நாள் என்று வரும்?.

மே 18ம் நாள் நிகழ்விற்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் யாரால், எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படப் போகின்றது என்பது இன்று நிலத்திலும் புலத்திலும் வாழும் தமிழ் மக்களின் சிந்தனையாக உள்ளது.

தமிழ்த் தேசியம் என்பது இன்று நிலத்திலும் புலத்திலும் பிரிந்து நிற்கின்றது என்பதே பொதுவான கருத்து. முன்னர் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என்ற வகையிலேயே நிலத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் பிரிந்திருந்தார்கள்.

இதில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் சிறுபான்மையினராகவும் பலமற்றவர்களாகவுமே நிலத்திலும் புலத்திலும் காணப்பட்டனர். மே 18 வரைக்கும் இத்தகையோர்களின் குரல்கள் ஓங்கியொலிக்கவில்லை.

ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. நிலத்திலும் புலத்திலும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களின் எண்ணிக்கையும் அவர்களின் கருத்துக்களும் மேலோங்கி வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்விடயத்தில் நிலத்திலும் புலத்திலும் செயற்படுபவர்களின் நடவடிக்கைகளில் ஒரு வேறுபாட்டை அவதானிக்கலாம்.

நிலத்தில் அன்று விடுதலைப் புலிகளுக்கு ஆலோசகர்களாகச் செயற்பட்ட பலர் இன்று வெளிப்படையாகவே இலங்கை அரசாங்கத்தின் ஆலோசகர்களாகச் செயற்பட்டு வருகின்றனர். யாழ். பல்கலைக்கழப் பேராசிரியர்கள் உட்படப் பல புத்திஜீவிகள் ஈ.பி.டீ.பி யின் – அமைச்சரின் ஆலோசகர்களாகச் செயற்பட்டு வருவது யாவரும் அறிந்த உண்மையாகும்.

எனவே நிலத்தைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் வெளிப்படையாகவே தமது செயற்பாட்டை ஆரம்பித்துவிட்டனர். இது ஆபத்தானது. ஆனால் புலத்தில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது.

நிலத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக இருக்கின்ற புத்திஜீவிகள் மௌனமாக இருக்கின்றார்கள். தமிழ்த் தேசியத்திற்கு எதிராக இருக்கின்ற புத்திஜீவிகள் வெளிப்படையாக ஈ.பி.டீ.பியோடு மற்றும் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுகின்றனர். ஆனால் புலத்தில் அன்று விடுதலைப் புலிகளுக்கு ஆலோசகர்களாகவும் ஆதரவாளர்களாகவும் செயற்பட்ட பலர் இன்றும் தமிழ்த் தேசியம் என்று கூறிக்கொண்டு தமிழ்த் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது மிகுந்த ஆபத்தானது. இது புலத்திலுள்ளவர்களை மட்டுமல்ல நிலத்திலுள்ள மக்களையும் பெரிதும் குழப்புகின்றது.

புலத்திலுள்ள எந்த அமைப்பு தமிழ் மக்களை சரியான பாதையில் அழைத்துச் செல்ல முற்படுகின்றது என்பதில் மக்கள் குழப்பமடைந்திருக்கின்றனர். பழைய திரைப்படப் பாடல் ஒன்றுதான் இவ்விடத்தில் ஞாபகத்திற்கு வருகின்றது.

“வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்”

என்று தமிழ் மக்களை மலை உச்சிக்கு அழைத்துக் கொண்டு செல்கின்றார்கள். மலை உச்சியிலிருந்து அதளபாதாளத்தில் மக்களைத் தள்ளிவிடப் போகின்றார்களா? அல்லது மலை உச்சியில் தமிழீழ வெற்றிக் கொடியை நாட்டப் போகின்றார்களா? என்ன நடக்கின்றது? என்ன நடக்கப் போகின்றது?

இன்று புலத்தில் என்ன நடக்கின்றது என்பதை நிலத்தில் உள்ள மக்கள் இணையத்தளச் செய்திகள் ஊடாகவே மட்டுமே அறிந்து கொள்கின்றனர். பெரும்பாலான தமிழ் இணையத்தளங்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகவே செயற்படுவதாகவே மக்கள் நம்புகின்றனர். ஆனால் மே 18ம் திகதிக்குப் பின்னர் வெளியாகும் செய்திகள் முரண்பட்டனவாகவே காணப்படுகின்றன.

அண்மைக்கால உதாரணமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பற்றிய செய்தியைக் குறிப்பிடலாம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு உருவாக்கம், மற்றும் பிரதம மந்திரி தெரிவு தொடர்பான அமர்வு வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றதாக சில இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டன. வேறு சில இணையத் தளங்கள் இம் அமர்வில் குழப்பங்கள் மற்றும் வெளிநடப்புகள் நடைபெற்றதாகச் செய்திகள் வெளியிட்டன.

திரு. ஜெயானந்தமூர்த்தியின் பேட்டியை சில இணையத் தளங்கள் வெளியிட்டன. சில இணையத் தளங்கள் அதனை இருட்டடிப்புச் செய்தன. ஏன் இந்த முரண்பாடுகள்?

இவை இறுதியில் தமிழ் மக்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தப் போகின்றது தெரியுமா? எதிர்காலங்களில் நிலத்தில் வாழும் மக்கள் தொடர்பாக புலத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கான ஆதரவு மற்றும் பங்குபற்றல்கள் பெரிதும் குறைவடையும். ( இப்பொழுதே குறைந்து விட்டது என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கின்றது) யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற மனோபாவம்தான் புலத்தில் உள்ள மக்கள் மத்தியில் உருவாகும்.

ஒட்டு மொத்த இனத்திற்காக சிந்திப்பதும் செயற்படுவதும் அற்றுப்போய்விடும். நிலத்தில் உள்ள தமது உறவினர்களுக்கு தனிப்பட்டமுறையில் உதவிகள் வழங்குவதோடு புலத்தில் உள்ள மக்களின் பங்களிப்பு முடிந்துவிடும். இது தான் புலத்தில் நடக்கப்போகின்றது? இதைத்தான் இலங்கை அரசாங்கமும் விரும்புகின்றது. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாகக் காட்டிக்கொண்டு அதற்கு முற்றிலும் எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் புலத்திலுள்ள சிலரும் இதைத்தான் விரும்புகின்றார்கள்.

புலத்தில் நடக்கப்போவது இது. சரி நிலத்தில் நடக்கப்போவது என்ன? புலத்தில் உள்ளது போல நிலத்தில் அவ்வளவு குழப்பமில்லை. முன்னர் குறிப்பிட்டதுபோன்று தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் என்ற பெயரில் வெளிப்படையாக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர். அதில் உள்ள அனைவருமே (திரு.சிவாஜிலிங்கத்தைத் தவிர்த்து) மே 18க்கு முன்னரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக செயற்பட்டவர்களே.

தற்போது திரு.சிவாஜிலிங்கத்தை உள்வாங்கியதன்மூலம் – அவரைப் அதிகம் பேசவைப்பதன்மூலம் தாங்களும் தமிழத் தேசியத்தின்மீது பற்றுள்ளவர்கள்தான் என்று காட்டமுற்படுகின்றார்கள். ஆனால் நிலத்திலுள்ள மக்கள் இவ்விடயத்தில் தெளிவாகவே உள்ளனர்.

நிலத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக செயற்படுகின்ற கட்சிகள் இரண்டு உண்டு.

1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
2. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உள்வாங்குவதற்கு தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முயற்சிகள் எடுத்து வருகின்றது. தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் வேண்டுகோளை கூட்டமைப்பு பரிசீலிக்கின்றது என்றும் சிலவேளைகளில் இணையலாம் என்றும் இங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் இவ்வாறான இணைவிற்கு இந்தியாவின் ஆசியும் உண்டு.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் இருதரப்பினருடனும் தனித்தனியே கலந்துரையாடிய பின்னர் அளித்த பேட்டியில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கொள்கைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்குமிடையில் தான் எவ்வித வேறுபாட்டையும் காணவில்லை. எனவே இவையிரண்டும் இணைந்து செயற்படலாம் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்திய வெளியுறவுச் செயலாளரின் இக்கருத்தை மறுத்தோ அல்லது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கொள்கையிலிருந்து தாங்கள் முற்றிலும் வேறுபட்ட கொள்கையுடையவர்கள் என்ற விளக்கத்தையோ கூட்டமைப்பு இன்று வரை மக்கள்முன் வைக்கவில்லை.

இந்தியாவின் மனம்நோகாமல் என்றுமே நடக்க விரும்பும் கூட்டமைப்பு தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைவதற்கான கதவைத் திறந்தே வைத்துள்ளது.

இரண்டாவதாகக் காணப்படுவது தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்ணணி. கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் நிலத்திலும் புலத்திலும் இம் முன்ணணி தொடர்பாக பரபரப்பாகப் பேசப்பட்டது. கூட்டமைப்பிற்குப் பலத்த போட்டியாக விளங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறிருக்கவில்லை. தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்ணணியைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவருவதில்லை.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்ணணியை தங்களோடு இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் தெரியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.

1. கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகளையே பெற்றமையால் மக்கள் ஆதரவற்றவர்கள் என்று கருதியிருக்கலாம்.
2. தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்ணணி தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் தனது கொள்கையில் உறுதியாக இருப்பது.

அண்மைக்காலங்களில் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் தேர்தல் காலத்தில் அவர்கள் வெளியிட்ட கொள்கைகளில் தொடர்ந்தும் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது. இதனை தமிழ்க் கட்சிகளின் அரங்கம் விரும்பாமை.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்ணணியை தங்களோடு இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடாமைக்கு இரண்டாவது காரணமே பொருத்தமானதாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

ஏனெனில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்ணணியைவிட மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைக்கப்படும்போது மக்கள் ஆதரவு இல்லாததனால்தான் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்ணணிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற கருத்து ஏற்கப்படக்கூடியதல்ல.

gagenதமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் சேருவதற்கு கூட்டமைப்பு அழைக்கப்படுதல், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்ணணி அழைக்கப்படாமை என்ற செய்திகள் தமிழ்த் தேசியத்தின் பக்கம் தொடர்ந்தும் உறுதியாக யார் இருக்கப் போகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாகவே கருதலாம்.

புலத்தைப் போலல்லாமல் நிலத்தில் முன்னர் குறிப்பிட்டதுபோன்று தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் வெளிப்படையாகவே செயற்பட ஆரம்பித்துவிட்டனர்.அண்மைக்காலமாக நிலத்தில் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களின் செயற்பாடுகள் பலமடைந்துகொண்டு வருகின்றது.

அதேநேரத்தில் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் ஒன்றில் மௌனமாக இருக்கின்றார்கள் அல்லது பிரிந்து நிற்கின்றார்கள். இது நிலத்திலுள்ள மக்களை பெரும் விரக்திநிலைக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான மக்களில் பலர் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிப்போகின்ற தன்மை காணப்படுகின்றது.

இன்று நிலத்திலுள்ள மக்களுக்கு இருக்கின்ற வாக்குரிமை என்ற அரசியல் பலத்தைக்கூடப் பயன்படுத்துவதில் அக்கறையின்றி இருக்கின்றனர். கடந்த பொதுத் தேர்தலில் இந்நிலைமை அவதானிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இவ் அக்கறையின்மை, அலட்சியம் என்பன அதிகரிக்கும்.

இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன. கூட வந்த குரங்குதான் ஆண்டால் என்ன? எங்கள்மீது பாய்ந்து கடிக்கமாமல் விட்டால் போதும் என்றநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். இது ஆபத்தானது. தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவானவர்கள் இவ்வாறு ஒதுங்க தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் முழுவீச்சடன் எழுந்து செயற்பட, தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களே நிர்ணயிக்கும் நிலைமை உருவாகப்போகின்றது. கடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் இதனையே எமக்கு உணர்த்துகின்றது.

2004ம் ஆண்டுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எஞ்சிய வாக்குகளின் மூலம் தட்டுத்தடுமாறி ஒரு ஆசனத்தைப் பெற்ற ஈபிடிபி 2010 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட 17497 வாக்குகள் குறைவாகப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோரில் 18000 பேர் வாக்களிக்காமல் ஒதுங்கியிருந்தால் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோரில் 9000 பேர் ஈபிடிபிற்கு வாக்களித்திருந்தால் ஈபிடிபி 5 ஆசனங்களைப் பெற்றிருக்கும்.

அதுமட்டுமன்றி இத் தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்ட சில கட்சிகள் தனித்துப் போட்டி போட்டிருந்தன.

thumb_1264053411தமிழர் விடுதலைக் கூட்டணி 2892 வாக்குகள், சுயேச்சைக் குழு (சிறிலங்கா மக்கள் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் உடுகம என்பவரை முதன்மை வேட்பாளராக் கொண்டு எழுத்தாளர் செங்கையாழியான் போட்டியிட்ட சிங்களக் கட்சி) 2562 வாக்குகள், ஈ.பீ.ஆர்.எல்.எவ்(பத்மநாபா அணி) 1821 வாக்குகள், சிவாஜிலிங்கம் 868 வாக்குகள் ( இவர்கள் அனைவரும் தற்போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் உள்ளனர்) இவ் வாக்குகளையும் ஈ.பீ.டி.பி பெற்ற 47622 வாக்குகளோடு சேர்த்தால் மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 55765 ஆகும். இது கூட்டமைப்பு பெற்ற 65119 வாக்குகளைவிட 9354 வாக்குகள் மட்டுமே குறைவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4151 வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோரில் 2100 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தால் அவர்கள் 3 ஆசனங்களைப் பெற்றிருப்பர்.

மேலும் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஈபிடிபி 2867 வாக்குகளும் புளொட் 5900 வாக்குகளும் பெற்றிருந்தன. இவ்விரண்டு கட்சிகளுமே அரச ஆதரவுக் கட்சிகளாகும். தற்போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி 1073 வாக்குகள், ஈழவர் ஜனநாயக முன்னணி 1394 வாக்குகள் பெற்றிருந்தன. இவர்கள் தனித்துப் போட்டியிடாமல் அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிட்டிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 48756 வாக்குகள் கிடைத்திருக்கும்.

இது கூட்டமைப்பு பெற்ற 41673 வாக்குகளைவிட 7083 வாக்குகள் அதிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4226 வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தோரில் 2500 பேர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தால் அவர்கள் 3 ஆசனங்களைப் பெற்றிருப்பர்.

தற்போது தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி(பிள்ளையான்) 16886 வாக்குகள், தமிழர் விடுதலைக் கூட்டணி 4424 வாக்குகள், ஈழவர் ஜனநாயக முன்னணி 1066 வாக்குகள் பெற்றிருந்தன.

இவர்கள் தனித்துப் போட்டியிடாமல் அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிட்டிருந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு 84385 வாக்குகள் கிடைத்திருக்கும். இது கூட்டமைப்பு பெற்ற 66235 வாக்குகளைவிட 18150 வாக்குகள் அதிகமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இது நடைபெற்றிருந்தால் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றிருக்கும்.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆசனங்களையே பெற்றுக்கொண்டது. மேலும் திருகோணமலை மாவட்டத்தில் 2004ம் ஆண்டுத் தேர்தலில் முதலிடத்திலிருந்து இரண்டு ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம் முறை 3ம் இடத்திற்குத் தள்ளப்பட்டு ஒரு ஆசனத்தையே பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலைமையின்படி அம்பாறை மாவட்டத்தின் பிரதிநிதித்துவத்தைக் (பியசேனாவின் தாவலோடு) கூட்டமைப்பு இழந்துவிட்டது. நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது நடைபெறப்போகின்ற யோகேஸ்வரனின் தாவலோடு (அவர் இன்னும் இதனை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதித்துவம் இரண்டாகக் குறையப் போகி;ன்றது.

எனவே தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் நிலத்தில் மேலோங்கி வருகின்றனர் என்பதே இத் தேர்தல் முடிவுகளும் அதற்குப் பின்னர் நடைபெற்ற – நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்வுகளும் வெளிப்படுத்தும் உண்மையாகும்.

வெகுவிரைவில் வடக்கில் நடைபெறப்போகின்ற உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் இதன் தாக்கம் உணரப்படப்போகின்றது. தொட்டால்தான் பாம்பு, சுட்டால்தான் நெருப்பு என்று பட்டுப்பட்டுத் தெளியப் போகின்றோமா? அல்லது கடந்த அனுபவங்களைக் கொண்டு சரியான முடிவை எடுக்கப் போகின்றோமா? முடிவு யார் கைகளில் ………?

நன்றி: ஈழம் ஈ நியூசிற்காக தாயகத்திலிருந்து தேனுப்பிரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
 • நக்கீரன் says:

  நல்ல கட்டுரை. கடந்த தேர்தலில் முன்பு போல் அல்லாது இபிடிபி (யூபிஎப்ஏ) ஆள், அம்பு, அதிகாரம், பணபலம் போன்றவற்றோடு போட்டியிட்டது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பணபலமோ, அதிகாரபலமோ இல்லாது போட்டியிட்டது. ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் – வவுனியா உள்ளுராட்சி தேர்தல் 2009 ஓகஸ்ட் மாதம் நடந்தபோதுதான் வடக்குக்குப் போகக் கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் யாழ்ப்பாணத்தில் இரண்டாவது இடத்தையும் வவுனியாவில் முதலாவது இடத்தையும் பிடிக்க முடிந்தது. எனவே 2004 போலல்லாது 2010 இல் ததேகூ அரச இயந்திர வளங்களை எதிர்த்துப் போட்டிபோட வேண்டியிருந்தது. ஒரு இயல்பான. சுதந்திரமான சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் ததேகூ வெற்றிவாகை சூடும் என்பதில் அய்யமில்லை. திருகோணமலையில் 67,000 இல் இருந்து 40,000 ஆகக் குறைந்ததற்கு இடப்பெயர்வு ஒரு காரணமாகும்.
  தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஒருநாளும் அரங்கேறப் போவதில்லை. அரசு தன்னை ஓரங்கட்டுவதை சரிசெய்யவே டக்லஸ் தேவானந்தா இந்த அரங்கை கையில் எடுத்தார். இந்த அரங்கில் ததேகூ பங்கேற்காது. தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமையை ஏற்றுக் கொள்ளும் கட்சியோடுதான் ததேகூ கூட்டு வைக்கும்.
  தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஒரு காளான் கட்சி. தேர்தல் மழைக்கு முளைத்த கட்சி. வி.புலிகளின் செல்வாக்கால் வென்ற கஜேந்திரன் தனக்குச் சொந்த செல்வாக்கு இருப்பதாக நினைத்து ததேகூ ஓடு முரண்டு பிடித்து உள்ளதும் போனதடா நொள்ளைக் கண்ணா என்ற நிலையில் உள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பொறுத்தளவில் அவருக்கும் பொதுவாழ்வுக்கும் எட்டாப் பொருத்தம். அவருக்கு புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார்தான் தலைப்பாக்கட்டி பப்பாசி மரத்தில் ஏற்றி விழச் செய்தார்கள்!
  மடடக்களப்பு மாகாண தேர்தல் ஒன்று இன்று நடக்குமானால் பிள்ளையான் கட்டுக்காசு இழப்பது நிச்சயம். விரைவில் வடக்கில் நடக்கவிருக்கும் உள்ளுராட்சி அவைத் தேர்தல்கள் ததேகூ பலத்தை கூட்டும் என எதிர்பார்க்கலாம்.
  கடந்த தேர்தலில் டக்லஸ் தேவானந்தா ஒரு வாக்குக்கு ஆயிரம் ரூபா கொடுத்து வாங்கினதை இங்கு குறிப்பிட வேண்டும்.
  தமிழ்த் தேசியத்தை நிலத்திலும் புலத்திலும் வலுப்படுத்தலே இன்றைய தேவையாகும்.
  11-10-2010

  October 11, 2010 at 17:14

Your email address will not be published. Required fields are marked *

*