TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எந்திரனை மிஞ்சுமா ஷங்கரின் அடுத்தப் பட்ஜெட்!

மிகப் பெரிய பட்ஜெட்டில் எந்திரன் படத்தை பிரமாண்டமாய் தந்து இந்தியாவின் ‘காஸ்ட்லி டைரக்டர்’ என்றப் புகழினை பெற்றுள்ளார் ஷங்கர்.

மும்பையில் நடந்த ரோபோ பிரிமியர் ஷோவில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், அமீர்கான், இயக்குனர் சுபாஷ் கய் உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஷங்கரை பாராட்டினர்.

இந்தியாவின் இளம் நடிகர்கள் முதல் மூத்த நடிகர்கள் வரை அனைவரும் வியந்து பாராட்டும் இயக்குனர் என்றால், அது ஷங்கர்தான்.

ஜென்டில் மேன் முதல் எந்திரன் வரை… ஷங்கரின் ஒவ்வொரு படத்தின் பட்ஜெட்டையும் மிஞ்சும் விதமாகவே அடுத்தப் படம் அமையும். ஷங்கரின் முந்தையப்படமான சிவாஜிதான் அவரின் படங்களில் அதிக பட்ஜெட் படமாக இருந்தது. ஆனால், இப்போது ‘எந்திரன்’ இந்தியப் படங்களிலேயே பெரிய பட்ஜெட் படமாக சாதனைப் படைத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படமாக தந்து ‘காஸ்ட்லி இயக்குனர்’ என்று பேர் வாங்குவதுதான் லட்சியமா? என ஷங்கரிடம் கேட்கப்பட்டதற்கு,

“அப்படி எல்லாம் இல்லை. பட்ஜெட் என்பது எனது கற்பனையில் உருவாகும் கதையை படமாக்கதான். மற்றபடி இவ்வளவு பட்ஜெட்டில் தான் அடுத்தப் படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. சிறந்த இயக்குனர், தரமான படங்களைத் தருபவர் என சொல்லப்படுவதைதான் விரும்புகிறேன்.

எந்திரன் கதையே இன்று உருவானது இல்லையே. பத்தாண்டுக்கு முன் உருவான கதையை இன்றுதான் எடுக்க முடிந்திருக்கு.” என்றார் ஷங்கர்.


இந்நிலையில் எந்திரனுக்கு பிறகு ஷங்கரின் அடுத்தப் பிரமாண்டம் என்ன…? என்ற எதிர்பார்ப்பும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தியில் மிகப் பெரிய ஹிட்டான அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தை ஷங்கர் ரீமேக் செய்யப்போவதாக நீண்ட நாட்களாக தகவல்கள்கள் வெளியாகிவருகின்றன. இப்போதும் சிலத் தகவல்கள் அதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன.

ஷங்கர், 3 இட்யட்ஸ் ரீமேக் செய்தால் அதில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் விஜய்யும், அவருடன் ஜீவா, சித்தார்த் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகின்றன.

3 இடியட்ஸில் விஜய்யுடன் நடிப்பீர்களா? என சிம்புவை கேட்டதற்கு, “விஜய்யுடன் நடிக்க முடியாது. அப்படி நடித்தால் அஜித் ரசிகர்கள் வருத்தப் படுவார்கள்” என வெளிப்படியாகவே கூறியிருந்தார் சிம்பு.

அதன் பிறகுதான் ஜீவாவிடம் கேட்கப்பட்டதாம். அதற்கு ஜீவா, “3 இடியட்ஸ் போன்ற ஒரு படத்தில் நடிக்க ஆசைதான். அதுவும் ஷங்கர் இயக்கத்தில் நடிப்பதென்றால் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டதாகவும் திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும், இந்தப் படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்கும் பட்சத்தில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

இவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பாக, மும்பையில் நடந்த ரோபோ பிரிமியர் ஷோவின் போது அமீர்கானும் ஷங்கரும் சந்தித்து பேசியுள்ளனர். இந்தச் சந்திப்பு 3 இடியட்ஸ் விவகாரத்தை உறுதிப்படும் விதமாகதான் அமைந்துள்ளது.

ஆனாலும், தான் எடுக்கும் எந்த ஒரு படத்தின் சிறு தகவலைக்கூட கசியவிடாத ஷங்கர், ஏற்கனவே வெளியாகி ஹிட்டான ஒரு படத்தை ரீமேக் செய்வாரா ? அப்படி செய்தால், அதில் ஷங்கர் செய்யும் மாற்றம் ( பிரமாண்டம்) என்னவாக இருக்கும்…? என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

இந்த நம்பகத் தன்மைகளை எல்லாம் உறுதிப்படுத்த இன்னும் ஒருமாததிற்கும் மேல் காத்திருக்க வேண்டும்.ஏனெனில், தனது ஒவ்வொரு படம் முடிந்ததும் ஓய்வெடுக்க ஷங்கர் வெளிநாடு செல்வது வழக்கம். அதன்படி ஷங்கர் இப்போது குளு குளு தேசத்தில்.

இனி ஷங்கர் சென்னை வந்தப் பிறகுதான் தெரியும்… ஷங்கரின் அடுத்தப் படம் 3 இடியட்ஸா… ? இல்லை எந்திரனைப் போல் இன்னொரு பெரிய பட்ஜெட் படமா…? என்று.

அதுவரை காத்திருப்போம்…

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*