TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பூகோள வலயத்தினுள் நாடுகடந்த அரசுகள்? – மதியழகன்

2009 மே 19 இற்கு முன்னரும் பின்னருமாக இலங்கையின் தமிழர் போராட்டத்தை இரு பிரிவிற்குள் கொண்டுவரலாம். 2009 மே இற்கு முன்னராக இலங்கை அரசாங்கத்தின் அதிகூடிய விற்பனைப் பொருளாக ‘யுத்தமும்’ பொருளாதாரத்தை ஈடுசெய்யும் உற்பத்திப் பொருளாக ‘சமாதானத்தையும்’ நகர்ந்து சென்ற கால வரலாற்றில் காணக்கூடியதாக இருந்தது.

2009 மே இற்கு பின்னராக இலங்கை அரசாங்கத்தின் விற்பனைப் பொருளாக ‘நாடுகடந்து தமிழர் உரிமைக்காக போராடும் அமைப்புகளை’ தடை செய்தல். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் தனது காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் அதேவேளையில், யுத்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றிய கவனத்தை திசை திருப்பும் ஒரு மார்க்கமாகவும் கொள்கிறது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திக்கு ஏற்றால்போல் புலம்பெயர் தமிழரமைப்புகளும் தமது கவனத்தை பாதிக்கபட்ட மக்களின்பால் பதிக்காமல் திசைதிரும்பி இருக்கும் நிலையையே காணலாம். இது இலங்கை அரசுக்கு கிடைத்த இன்னுமொரு வெற்றி.

யுத்தத்த அனர்த்தத்தால் பல்வேறுவகையாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைபற்றி கருத்தில் கொள்ள வேண்டியவர்கள் யார் யார் எனவும், அவர்களுக்கான என்னென்ன உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றது என்பதையும் பகுத்தாய வேண்டியது தமிழ்மக்களின் கடமையாகும். இந்த நிலையில் முதலாவதாக இலங்கை அரசை எடுத்துக்கொண்டால், மேலும் தமிழர்களின் வாழ்விடங்களையும், தமிழர்களையும் துடைத்தழிக்க வேண்டுமென சிங்களமக்கள் ஆணை வழங்கியதாக அரசு உரிமைகோருகின்றது. அதையே நடைமுறைப் படுத்தியும் வருகின்றது.

அடுத்ததாக தமிழ்த்தேசியத்தை நிலைபெறச் செய்யவேண்டுமென்பதற்காக பல குத்துவெட்டுகளுக்கு மத்தியிலும் தமிழ்மக்கள் ‘தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு’ அங்கீகாரமும் ஆணையும் வழங்கியிருந்தார்கள். இந்தியாவின் கிடுக்குப் பிடிக்குள் இருக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மீட்டெடுத்து முழுவதுமாக பாதிக்கப்பட்ட மக்களின் சுபீட்ச வாழ்விற்கு பணிசெய்யும் அமைப்பாக மாற்றியமைப்பது இலகுவானதாக இருக்கமுடியாது. அங்கீகாரம் அளிக்கப்படாமல் இருக்கின்ற அமைப்பான தமிழ்கட்சிகளின் ‘அரங்கம்’ அனர்த்தப்பட்ட தமிழ்மக்களின் நலனுக்காக முனைப்பெடுத்தாலும் அது ‘கூளோடியும் வாய்க்காலுக்குள் தான் சேரும்’ நிலையில் உள்ளது. தமிழ்மக்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தொடர் பாதிப்புகளின் மத்தியில் ஏதிலிகளாக, நாடற்றவர்களாக, உரிமைகளைத் தொலைத்து சொந்த வாழ்விடத்தில் வாழ்கிறார்கள் என்பதே யதார்த்தம்.

புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரையில் இலங்கையின் சாயலே தோற்றமளிக்கிறது. குறிப்பாக புலம்பெயர் தமிழ்மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில் ‘தமிழர் பேரவை’ தெரிவு செய்யப்பட்டது. அதன் நிலை என்னவென்பது எந்த மையிற்கும் வெளிக்காத நிலையில் உள்ளது. அதன் நிலைபற்றி ஆராய முற்படுபவர்கள் ‘காட்டிக்கொடுப்பவர்கள்’ என்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதும் உண்மை.

தமிழர்பேரவை தற்பொழுது இயக்கத்தில் உள்ளதா? அல்லது மறைந்து விட்டதா? அல்லது வேறு ஒன்றாக மாற்றப்பட்டு விட்டதா? என்று நியாயமாக கூட கேட்கமுடியாத முட்டாள்களாக வாக்களித்த மக்கள் இருக்கின்றார்கள் என அதன் ஸ்தாபகர்கள் மௌனித்திருப்பது பெரும் முட்டாள்த்தனம். தமிழர்பேரவைக்கு என்ன நடந்ததென்ற ஒரு ஊடக அறிக்கையாவது விட்டிருக்கலாம் என எண்ணுவது நியாயமானதே. இந்த நிலையானது எதிர்வரும் காலங்களில் தமிழ்மக்களின் நலன் கருதி எடுக்கப்படும் எந்தத் தேர்தலுக்கோ, கருத்துக்கணிப்புக்கோ பழையதை கருத்திற்கொண்டு விரக்தியுற்று முன்வரமாட்டார்கள்.

இலங்கை அரசாங்கத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசு அச்சுறுத்தலாக திகழுகின்றதென கற்பனா வாதத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பலர் சில உண்மைகளை புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதிப்பதவியை சுவீகரித்துக்கொண்ட மகிந்த ராஜபக்சவை மனித உரிமைகள் மீறல் சார்ந்த போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்படுமென்ற எதிர்பார்ப்பு மெது மெதுவாக கரைந்து கொண்டிருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ அரசால் நேரடியாகவோ(தமிழீழ பெயருடன்) மறைமுகமாகவோ ஈழம்வாழ் தமிழ்மக்களுக்கான நற்பணிகளின் பொருட்டு இலங்கையில் கால்பதிக்க முடியாது. ஆகவே தாயகத்தின் செயற்படமுடியாத அமைப்பினால் என்னபயன் இருக்கப் போகின்றது என்பதை எமக்கு நாமே கேட்டுக்கொள்வோம். தற்போதைய நிகழ்நிலையில் சிங்களமக்களின் அத்துமீறிய குடியேற்றம், புத்தர்சிலை வைப்புகள், தமிழரின் பூர்வீக நிலங்களில் இருந்து தமிழர்கள் துரத்தப்படுதல், போராளிகளை விடுவித்தல், மனிதாபிமானமற்ற முறையில் முகாம்களில் அடைத்து வைத்திருத்தல் போன்றவற்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசால் இதுவரை காலத்திற்கும் ஆக்கபூர்வமான, இயல்புவாழ்விற்கான என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதென்பதும், அதனால் ஏற்பட்ட அடைவு அல்லது தடங்கல் போன்ற ஒரு பதிவு அறிக்கையை இதுவரைகாலமும் மக்களின் பார்வைக்காக வெளியிட முடியவில்லை.

தாயகத்தில் மக்கள் ‘சேடம்’ இழுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் வெறுமனே தமிழ்மக்களின் நலனிற்கான கட்டமைப்பை மட்டுமே அமைத்துவிட்டு, ஓராண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாடுகடந்த அரசிற்கான கட்டமைப்புகளை மட்டுமே குளறுபடிகளுடன் அமைத்துவிட்டு, அதையே ஒரு ஈழம் அமைத்ததுபோன்ற வெற்றிக்களிப்புடன் அறிக்கைகள் விடுவது வெறும் ஏட்டுச்சுரக்காய் ஆகும். இது ஒரு துளியேனும் தாயகத்தில் அல்லலுறும் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவப்போகின்றதென்பதை எம்முள்ளே ஒரு வினாவாக எழுப்பி அதில் ஒரு சாதகமான பதிலைக் காண்போம்.

‘கதருடன் இருந்தால்த்தான் காந்தியின் போராட்டத்திற்கு மதிப்பு’ போல தாயகத்திலே தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் நிகழ் நிலையில் இருந்தால்த்தான் நாடுகடந்த தமிழீழ அரசிற்கும் மதிப்பு. உலகின் எப்பகுதியிலும் தாயக மீட்புக்கான போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, சர்வதேச அரங்கிலே அது ஒரு ‘விடுதலைப்போர்’ என்ற அங்கீகாரத்தை பெற வைப்பதற்கான ஒரு நிழல் அரசு கொண்ட கட்டமைப்பே நாடுகடந்த அரசாக இருக்கமுடியும். இதற்கான வரலாற்றுத் தரவுகள் ஏராளமாக உள்ளது. தலத்திலே தமிழர்கள் உயிருக்கும் உணவுக்கும் கையேந்தும் நிலையில் இருக்கையில் புலத்திலே அதற்கான நலன்பேண் திட்டங்களை உருவாக்காது, வெறுமனே கட்டமைப்புகளையும் பதவிகளையும் அமைப்பதால் தாயக மக்களை ‘சட்டிக்குள்ளிருந்து அடுப்புக்குள் தள்ளுவது’ போல் அமையும் என்பதை எவராலும் மறுத்துரைக்க முடியாத உண்மையாகும்.

நாகலிங்கம் மதியழகன்
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*