TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சூப்பர் ஸ்டார் ரஜனியின் எந்திரன் படம் தோல்வியா?

ரஜனி ரசிகர்களே மன்னியுங்கள், நீங்கள் ரஜனி ரசிகர் என்பதற்காக நான் எனது விமர்சனத்தை கூறாமல் இருக்க முடியுமா ? சரி தவறு என்று எதையாவது சொல்லித்தானே ஆகனும்! (ராஜா)

சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எந்திரன் படம் தயாரிக்கப்பட்டதாக அரசல் புரசலாகக் கதைகள் அடிபடும் நேரத்தில், இப் படம் தோல்வியடைந்தால் தான் இனி நடிக்கபோவது இல்லை என ரஜனி சிலரிடம் கூறியுள்ளாராம். ஆனால் லண்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் எந்திரன் படம் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இப் படத்தை பார்வையிடுகின்றனர். அது ஒரு புறம் இருக்க நாங்கள் கதைக்குச் செல்வோம்!

6 ல் இருந்து 60வரை, படையப்பா, சிவாஜி, பாட்ஷா, போன்ற பெருவெற்றி தந்த ரஜனியா இப் படத்தையும் நடித்துள்ளார் என்று எண்ணத்தோன்றுகிறது.

3000ம் ஆண்டு வந்தால் கூட தயாரிக்க முடியாத ஒரு இயந்திர மனிதனைப் பற்றிய கதை இது. ஹாலிவுட் திரைப்படங்களான ஐ- ராபாட், மற்றும் டேர்மினேட்டர் ஆகிய 2 ஆங்கிலப் படங்களை ஒன்றாகக் கலந்து அதில் காதலைப் புகுத்தி காட்டியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர் அவர்கள். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்பது பிரம்மாண்டத்தில் புரிகிறது. மொத்தத்தில் கலாநிதி மாறனை மொட்டை அடித்துள்ளார் ஷங்கர். கலைஞர் குடும்பத்தாரிடம் இருந்து காசடித்த முதல் ஆள் ஷங்கராகத்தான் இருக்கவேண்டும்.

டாக்டராக வசீகரன் என்னும் பெயரில் வரும் ரஜனி, சுமார் 10 ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு தன்னைப்போல ஒரு ரோபோவை (இயந்திர மனிதனை) உருவாக்குகிறார். அதற்கு ஐஸ்வர்யா ராய் மீது காதல் வருகிறது. தன்னை உருவாக்கிய எஜமான் ரஜனியின் காதலி என்று கூடப்பாரமல் அவரை அது தூக்கிச் செல்கிறது. பின்னர் ஐஸ்வர்யாவை ரஜனி மீட்டு அந்த ரோபோவை அழிக்கிறார் இது தான் கதை. ஐரோப்பிய நாடுகளில் மேற்கத்தைய கலாச்சாரத்தோடு ஒத்துவாழும் தமிழர்களுக்கே இப் படம் பாதியோடு அலுப்புத்தட்ட ஆரம்பமாகியது. திரையரங்கில் இடைவேளையோடு ஒரு முதியவர் எழுந்து வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்தியாவைப் பொறுத்தவரை நகரங்களில் இப் படம் ஓடினாலும், கிராமப்புறங்களில் அவ்வளவான வரவேற்ப்பை இப் படம் பெறப்போவது இல்லை என்பது தெள்ளத்தெளிவாகிறது. அம்மா சென்டிமென்ட் அல்லது தங்கை அண்ணன் சென்டிமென்ட் வைத்து எடுத்தாலே நல்லா படம் ஓடாத இந்த காலகட்டத்தில் ஷங்கர் ஏன் இப்படி ஒரு படத்தில் இறங்கினார் என்றுகேட்டால், அது அவர் நீண்ட நாள் ஆசை என்கிறார்கள். அதற்கு ரஜனி பலிக்கடா. ஐஸ்வர்யா ராய் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனவே நடித்துள்ளார். குறிப்பாக ரஜனி படத்தில் பல நகைச்சுவைகளையும், திரில்லிங்கையும், நல்ல சண்டைக்காட்சிகளையும் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் ஆனால் இதில் ஒன்றுமே இப் படத்தில் நேர்த்தியாக இல்லை.

ரஜனி தான் உருவாக்கிய ரோபோவை கண்டபடி கன்னா பின்னா என்று திட்டுகிறார். அதிகம் ஆங்கில வார்த்தைகள் உபயோகம், நடக்கவே முடியாத சம்பவங்கள் பலவற்றை சர்வசாதாரணமாக காட்டியுள்ளமை, என பல பிழைகள் இப்படத்தில் உள்ளன. பாடல் காட்சிகள் மிக அருமையாகப் படமாக்கப்பட்டுள்ளதோடு, உடைகளும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. என்ன தான் விஞ்ஞானம் முன்னேறினாலும் கடவுள் என்றொருவர் இருக்கிறார் என்று ரோபோ வாயால் சொல்ல வைத்திருக்கிறார் ரஜினி.

பல வருடங்களுக்குப் பிறகு ரஜனி வில்லனாகவும் நடித்துள்ளார் இப் படத்தில்.

மொத்தத்தில் திரையரங்கு சென்று அதி கூடிய டிக்கட் விலைகொடுத்து பார்க்கும் அளவிற்கு எந்திரன் இல்லை என்றே சொல்லலாம். கொஞ்ச நாட்கள் பொறுத்தால் இதன் ஒரிஜினல் சீ.டி வெளியாகும் அதனை சாவகாசமாக வீட்டில் பார்வையிடலாமே எனத் தோன்றுகிறது.

ராஜா : சுவிஸ்

நன்றி: அதிர்வு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*