TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மகிந்தவிற்கு எதிரான சர்வதேசப் போராட்டம்

மகிந்தவிற்கு எதிரான சர்வதேசப் போராட்டம் அவரது பதவிக்கு அச்சுறுத்தலாக அமையுமா?.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மகிந்தாவிற்கு எதிராக மட்டுமல்ல, அவருக்கு முன்பு ஜனாதிபதியாக பதவி வகித்து சிலருக்கு எதிரான போராட்டங்கள் கூட சர்வதேச ரீதியாக நடத்தப்பட்டன. இவையனைத்தும் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழ் மக்களினால் அவர்களது தமிழர் தாயகம் என்ற அடிப்படையிலேயே நடத்தப்பட்டன.

இன்னொரு வகையாக இந்த போராட்டங்களைப் பார்த்தால் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான போராட்டங்களாகவும் சர்வதேச நாடுகளினால் பார்க்கப்பட்டன.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாகவும் இலங்கையில் பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டங்கள் என்ற பார்வையில் நமது புலம் பெயர்ந்த மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் சர்வதேசம் ஒரு கணிப்பை கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் கூட தமிழ் மக்கள் தங்கள் பாதிப்புக்களிலிருந்து விடுபடுவதற்காக போராட்டங்களை நடத்தினாலும் அவை கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இன்னும் தங்கள் அமைப்பின் இருப்பை தக்கவைப்பதற்காகத்தான் போராட்டங்களை நடத்துகின்றார்கள் என்று சர்வதேசத்தை நம்பவைக்கும் முயற்சிகளிலும இலங்கை அரசு ஈடுபட்டு அதில் வெற்றி கொண்டுள்ளது.

ஆனால் அண்மைக்காலமாக இலங்கையிலும் சர்வதேசத்திலும் சில மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. சர்வதேசத்தின் போக்கு மகிந்தா அரசாங்கத்தின் போக்குகளுக்கு எதிராக செல்லுவதை அரசியல் பார்வையுள்ளவர்கள் கவனிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

சீனா இலங்கை அரசு மீது மிகுந்த செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதையும் அதை விரும்பாத இந்தியா சீனாவிற்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றபோது இலங்கை அரசோடு கொண்டுள்ள நட்பு பாதிக்காத வகையில் நடந்து கொள்கின்றது. ஆனால் மறுபக்கத்தில் அமெரிக்கா போன்ற சீன எதிர்ப்புத் தன்மையுள்ள நாடுகளுடன் தனது நட்பை மேலோங்க வைப்பதையும் உறுதி செய்துவருகின்றது.

உலகின் வல்லரசாவதற்கு சீனா முயல்வதும் அமெரிக்காவிற்கு தெரியாத விடயமல்ல. சீனாவிற்கு எதிரான காய்நகர்த்தல்களை இந்தியா தானே முன்வந்து செய்யாமல் அமெரிக்கா மூலம் செய்து வருதை நாம் காண்கின்றோம். இலங்கையிலும் தென்னாசிய கடற்பிராந்தியத்திலும் சீனாவின் நடவடிக்கைகளை கவனிப்பதற்கா இந்தியா பல கண்காணிப்பு கருவிகளை ஆங்காங்கே பொருத்தியுள்ளது.

இதைக் கூட இந்தியா தானே செய்யாமல் அமெரிக்காவைக் கொண்டு செய்துள்ளது. அண்மையில் இலங்கை அரசு பற்றி வெளியான செய்தி ஒன்றின் சூத்திரதாரியாக இந்தியா இருந்துள்ளது என்பதை சிலர் நம்பவும் மாட்டார்கள். அந்த செய்தி இதுதான் “அல்கெய்தா போராளிகளுக்கு இலங்கை அரசும் அதன் இராணவமும் போர்ப்பயிற்சிகளை வழங்கியுள்ளது என்றும் அந்த பயிற்சிகள் இலங்கையின் இராணுவ முகாம்களிலேயே கொடுக்கப்பட்டது என்பதே அது.

இந்த செய்தியை பரப்புவதில் சில சர்வதேச நாடுகள் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதும் தற்போது கசிந்துள்ள செய்திகளாக உள்ளன. இந்த செய்தி எதற்காக பரப்பப்படுகின்றது என்பதை நாம் சற்று ஆராய்ந்தால் இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் ஜனாதிபதி மகிந்தாவிற்கும் எதிராக சர்வதேசம் சிறிது எதிர்ப்புத் தன்மை கொண்ட நகர்வை கொண்டுள்ளது என்பது தெரியவரும். சீனாவிற்கு எதிரான போக்கு கொண்ட அமெரிக்கா இந்தியாவோடு மிகுந்த நேச உறவை அதிகரித்து வருவதை நாம் காண்கின்றோம். இதற்கு உதாரணமாக அமெரிக்க அதிபர் ஒபாமா மிக விரைவில் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வமான விஜயத்தை நாம் கொள்ளலாம்.

இது ஒரு புறமிருக்க சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாகவும் இலங்கையின் ஜனாதிபதிக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அறிவிப்பு என்பது மிகவும் சாதாரணமான அறிவிப்பு என்று நாம் கொள்ளக் கூடாது. இதுவரையிலும் இவ்வாறான ஒரு அரசியல் சார்ந்த போராட்டத்திற்கான அறிவிப்பு இலங்கையிலிருந்து விடுக்கப்படவில்லை என்பதை நாம் நன்கு கவனிக்க வேண்டும். இவ்வாறு இலங்கையிலிருந்து மகிந்தாவிற்கு எத்pராக ஆரம்பிக்கப்படும் ஒரு போராட்டம் என்பது நாங்கள் நடத்திய போராட்டங்களை ஒத்ததாக இருக்காது என்பது நிச்சயம். இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியும் அரசுக்கு எதிரான அமைப்புக்களும் நடத்தவுள்ள போராட்டங்கள் சர்வதேசத்தில் பல நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் என்பதை நாம் எதிர்பார்க்கலாம். இவ்வாறான நிலை ஒன்று ஏற்படுகின்றபோதுதான் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் இலங்கை அரசினது அராஜகங்களை சுட்டிக்காட்டி போராட்டங்களை நடத்த வேண்டும்.

முன்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை அரசு நடத்தியபோது அதற்கு ஆதரவு அளித்து நாடுகளின் ஒரே நோக்கம் விடுதலைப் புலிகளை அழிப்பது மட்டும் அல்ல. இலங்கையையும் அதன் ஆளும் அரசாங்கத்தையும் தங்கள் பிடியில் வைத்திருக்கவேண்டும் என்று எண்ணியதே ஆகும். ஆனால் இப்போது சீனாவின் கைப்பிள்ளையாக இருந்து கொண்டு அமெரிக்காவையும் வேறு சில நாடுகளை கண்டித்து அறிக்கைகள் விடும் இலங்கை ஜனாபதியின் கொட்டத்தை அடக்க சர்வதேசம் தயாராகி வருகின்றது. பயங்கரவாதத்தை அழிக்கின்றோம் என்று அறிவித்து விட்டு அல்கெய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி வழங்குவதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிராது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரவேல் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ள அல்கொய்தா அமைப்புக்கு பயிற்சி வழங்கும் நாடு இலங்கையாக இருக்குமானால் சர்வதேசம் அதை ஏற்றுக்கொள்ளாது இவ்வாறான சந்தர்ப்பத்தில் கொழும்பிலிருந்து சிங்கள மக்களால் ஆரம்பிக்கப்படும் போராட்டம் ஒரு துளியாக இருக்கலாம். இந்த சந்தர்பத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் மி;கவும் கவனமாக தங்கள் காய்களை நகர்த்தி ஜனாதிபதி மகிந்தாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மைச் சம்பவங்களை சர்வதேசத்திடம் கையளிக்க வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி மகிந்தாவிற்கு எதிரான இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து சர்வதேசத்தை நோக்கி நடத்தப்படவுள்ள போராட்டத்தை நன்கு கவனிக்கும் சக்தியாக நமது புலம் பெயர் மக்கள் தங்களை தயார் படுத்த வேண்டும். அதன் பலத்திற்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதையே உதயன் இவ்வார வேண்டுகோளாக முன்வைக்கின்றான்.

கனடா உதயனின் இவ்வாரக் கதிரோட்டம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*