TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இடர்நிலத்தில் இன்னும் ஏன் இப்படித் துயரம்?: தீபச்செல்வன்

ஈழத்தமிழரது அழிவை ஆதரித்த இந்தியா ஈழத்தமிழர்களின் வாழ்வில் மீட்சி ஏற்படும் பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் நக்கீரன் இதழுக்கு தெரிவித்திருக்கிறார். ‘இடர்நிலத்தில் இன்னும் ஏன் இப்படித் துயரம்?’ என்ற தலைப்பில் இன்றைய ஈழத்தமிழர்களின் நிலை குறித்து பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இங்கு நடக்கிற ஒவ்வொன்றுமே போர்தான். துயரமான போர்….. தீராத போர் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஒவ்வொரு இரவும் விடிகிறபோது தங்கள் வாழ்வில் ஒரு விடியல் வந்து விடாதா? என்று விம்மி நிற்கிற மக்களின் கனவுகள் இங்கே நொறுக்கப்பட்டிருக்கின்றன.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் சொந்த நிலத்தில் விடப்பட்ட மக்களின் துயரம் சொல்லி மாளாதவை. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கோணாவில், யூனியன்குளம், இரத்தினபுரம், திருவையாறு போன்ற 25 கிராமங்களில் உள்ள மக்களுக்கு தகரங்கள் தருகிறோம் என்று முதலில் சொன்னவர்கள் பின்னர் இந்தியா தந்தால் நாங்கள் தருகிறோம் என்றார்கள். மிதிவெடிகளை அகற்றிய பின் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்றார்கள். ஆனால் எங்கெல்லாம் மிதிவெடிகள் அகற்றப்பட்டதோ அந்த இடங்களை எல்லாம் புத்தர் சிலையும் அவரது படைகளும் அபகரித்துக் கொண்டன.

அமைதியும் சாந்தமும் அறமும் துறவும் வடிவான புத்தர் சிங்களவர்களின் இப்படியான நடவடிக்கைகளால் தமிழ் மக்களிடம் வேண்டப்படாதவர் ஆகியதுடன் தமிழர் நிலத்தை ஆக்கிரமிக்கும் மகிந்தராஜபக்சேவின் நவீன படையாக பார்க்கப்படுகிறார். ஒவ்வொரு மரத்தின் கீழாகவும் மூன்று மிதிவெடிகள் இருக்கின்றன என கிளிநொச்சி பாரதிபுரத்தில் உள்ள குழந்தை ஒன்று சொல்லியது. அந்தக் குழந்தையின் கூடாரத்திற்கு பக்கத்தில் உள்ள மரங்களின் கீழ் அப்படி வெடிக்காத மிதி வெடிகள் பல இருப்பதைப் பார்த்தேன்.

மீள்குடியேற்றம் என்ற அரசின் போரில் நிலங்களை மக்களிடமிருந்து சுவீகரிப்பது, மக்களுக்குரிய நிவாரணப் பொருட்களை சுருட்டுவது, இராணுவ அழுத்தங்களை மக்கள் மீது பிரயோகிப்பது, தமிழர் நிலத்தை ராணுவ மயமாக்குவது, வன்னியின் பூர்வீக அடையாளங்களை சிதைப்பது, ஈழப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை மேற்கொள்ளுவது, என்று பல நடவடிக்கைகளை இலங்கை அரசு விரிவாக்கியுள்ளது.

சாந்தபுரத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் சொந்தக் கிராமமான சாந்தபுரம் பாடசாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது காணி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்க்கக் கூடிய விதமாக தெரிகிறது. காணியில் உள்ள மாமரங்கள், தென்னைமரங்கள் தெரிகின்றன. ஆனால் அந்த மக்கள் காணிகளுக்கு செல்ல விடாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

மழைவெள்ளம் அவர்களின் கூடாரங்களை ஊடறுத்துப் பாய்ந்திருக்கிறது. பெருமழை கூடாரங்களை பிய்த்து ஒழுகி கூடாரத்தை சேறாக்கியிருந்தது. குழந்தைகள் விறைத்துப் போயிருந்தார்கள். பலர் தொற்று நோய் காரணமாக ஈரமான கூடாரத்திற்குள் படுத்திருந்தார்கள். சமையல் பகுதி நாறிக்கொண்டிருக்கிறது. மலக்குழிகள் நாறி புழு தள்ளுகின்றன. ஆனா லும் நாங்கள் எங்கள் காணிக்கு போகவேண்டும் என்றுதான் அந்த மக்கள் வேதம் போல சொல்லுகிறார்கள்.

தமிழ் மக்கள் எதையும் செய்து கொள்ளும் உரிமையையோ அதிகாரத்தையோ வழங்காத நிலையில் எல்லாவற்றிற்கும் மகிந்தராஜ பக்சேவை கெஞ்சுகின்ற ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களையும் மக்களின் நிலத்தையும் இன்று இப்படித்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாவிடம் சிற்றம்பலம் என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் “இந்தியா, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்றும் தமிழ் மக்களை காப்பாற்றத் தவறிவிட்டது’ என்றும் சொல்லிய பொழுது அதை ஒத்துக் கொள்வதைப்போல நிருபமா கேட்டுக் கொண்டிருந்தார். நிருபமாவோ அல்லது இந்தியாவோ ஈழத் தமிழர்களுக்கு எப்படி துரோகம் இழைத்தோம் என்பது குறித்து தெளிவாக புரிந்து கொண்டிருக்கின்றனர். அதனால் ஈழத்தமிழர்களின் வாழ்வில் மீட்சி ஏற்படும் பாத்திரத்தை இந்தியா வகிக்க வேண்டும். ஈழத்தமிழரது அழிவை ஆதரித்த இந்தியாவிடம் எமது மக்கள் மீண்டும் வாழ்வதற்கான உதவிகளை எதிர்பார்க்கிறார்கள். சொந்த நிலத்தில் வாழும் உறுதியைப் பெற்றுத் தரும்படி கையேந்துகிறார்கள்.

வன்னியைச் சேர்ந்த விஜேந்திரன் என்ற யாழ் பல்கலைக்கழக மாணவன் டெங்கு காய்ச்சலால் இறந்திருந்தான். போர்வலயத்தில் சிக்கி தடுப்பு முகாமில் இருந்து வந்து படித்துக் கொண்டிருந்தான். அவனது பெற்றோர்கள் இன்னும் தடுப்பு முகாமில் இருக்கிறார்கள். அவன் இறந்து சில நாட்களில் பத்து வயதான ஞானசீலன் நிலக்ஷன் றொபேட் பாம்பு கடித்து இறந்து போயிருந்தான். கூடாரங்களுக்கு அண்மையாக புற்றுகளும் மிதிவெடி கவனம் என்ற பதாகைகளும்தான் தெரிகின்றன. மிதிவெடிகளும் பாம்புகளும் அலையும் பாதுகாப்பற்ற நிலத்தில் குழந்தைகள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

போரின் பொழுது கைவிடப்பட்டு இடரின் பெருவெளியைக் கண்ட எங்கள் மக்கள் தொடர்ந்தும் பேரிடர்களுக்கு முகம் அழிக்கிறார்கள்.

இன்று சுற்றி வளைக்கும் இடர் எமது மக்களின் வாழ்வுப் பசியையும் ஏக்கத்தையும் இனத்தின் இருப்பையும் அச்சுறுத்துகிறது. எல்லா வருகைகளும் நடவடிக்கைகளும் எங்கள் மக்களுக்கு தென்பளிக்கவில்லை. இடர்நிலத்தில் ஏன் இன்னும் இப்படித் துயரம் நிகழ்கிறது? மனிதாபிமான முள்ளவர்களே, இரக்கமுள்ளவர்களே, சனங்கள் குறித்து அன்போடு இருப்பவர்களே, இந்த சனங்கள் குறித்து பேசுபவர்களே இந்த சனங்களை கைவிடாதீர்கள். கடவுளால் கைவிடப்பட்ட சனங்கள் மீண்டெழ வேண்டும். இந்தச் சனங்கள் உயிர்த்தெழ, தெம்படைய, மீண்டும் வாழ நிலத்திலிருந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*