TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழ தேசிய சொத்துக்கள்

புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழ தேசிய சொத்துக்களை குறிவைக்கும் இலங்கை! பாதுகாப்பதற்கு செய்ய வேண்டியது என்ன?.

கடந்த வாரம் சிறீலங்கா ஜனாதிபதியின் ஐக்கியநாடுகள் அமர்வின் கூட்டத்தொடறிற்கான அமெரிக்கப் பயணத்தின் பின்னர் மெல்ல மெல்ல வெளியே கசிந்த செய்திகளின் பிரகாரம் கீழ்க்கண்ட விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதனை பெரும்பாலும் சிங்கள ஊடகங்களே வெளிக் கொண்டு வந்துள்ளன.

– விடுதலைப்புலிகளின் நடவடிக்கை பற்றியும் சொத்துக்கள் பற்றியும் மேற்குலக நாடுகளுடன் பேசுவதற்கென்று ஒரு அதிகாரிகள் குழு ஜனாதிபதியுடன் வந்துள்ளது.
– நோர்வே பிரதமரிடம் மகிந்த நேரடியாகவே விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலைப் பின்னலில் உள்ளவர்களை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். இதேகோரிக்கை வேறு சில நாடுகளிடமும் விடப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
– விடுதலைப்புலிகளிற்கு ஆதரவான உள்நாட்டு அமைப்புக்களும் தடைசெய்யப்பட்ட மேற்குலக நாடுகளில் முதலில் நடவடிக்கையை ஆரம்பிப்பது.
– இதன் அடுத்த கட்டம் தொடர்பான ஆவணங்கள் சிறீலங்காவிலுள்ள தூதரங்களினூடாகக் கையளிக்கப்படும்.

இவை ஏதோ பத்தோடு பதினொன்றாக இப்போது விடப்படக்கூடிய விவகாரமல்ல. ஏனென்றால் கடந்த வாரச் செய்திகள் சிறீலங்கா அரசு இந்த சொத்து மீட்பு நடவடிக்கையின் ஆரம்பப் பணிகளில் இறங்கி விட்டது என்பதை அப்படியே புடம் போட்டுக் காட்டுகிறது.

இதற்கும் மேலால் இந்த வார இறுதியில் இரண்டு சிங்கள ஊடகங்கள் கனடாவில் புலிகளின் சொத்துக்களைப் பிரிப்பதில் தகராறு என்ற சாரப்படவும், ஒரு தமிழர் அமைப்பில் இடம்பெற்ற கணனித் திருட்டுக்கூட சொத்து விவகார விடயத்தை முன்னிட்டே என்றுவகையிலான செய்திகளை வெளியிட்டிருந்தன.

இன்னொரு செய்தியில் இந்த சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு சிறீலங்கா அரசு மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த மேற்குலக அரசுகளை அணுகும் சிறீலங்கா அரசு அதேவேளை இந்தச் சொத்துக்களின் உரிமையாளர்கள் குறித்த விபரங்களை இன்ரப்போல் எனும் சர்வதேசப் பொலிசிடம் கொடுத்து அவர்களை சிவப்புப் பட்டியலில் இட்டு தேடப்படும் நபர்களாகவோ அல்லது பயங்கரவாத அமைப்பின் சொத்தாக மேற்படி இடங்களைப் பட்டியலிடுதல் என்பதாகும். இதன் மூலம் மேற்படி நாடுகளின் உடணடி நடவடிக்கைக்கு அத்திவாரமிடுதல் என்பதாகும்.

தமிழீழ தேசிய சொத்துக்கள் மாத்திரமல்ல, தேசியத்திற்கு ஆதரவான அமைப்புக்களையும் குறிவைப்பதையே கனடாவில் இடம்பெற்ற கணனித் திருட்டைத் தொடர்பு படுத்திய செய்தி வெளியீடு தெரிவிக்கின்றது. இதேபோன்று ஒரு சில வாரங்களிற்கு முன்னரும் கனடா சொத்துக்கள் தொடர்பான ஒரு செய்தியை திவயின மிக நுட்பமான முறையில் வெளியிட்டிருந்தது.

இந் நிலையில் இவ்வாறு உண்மையான சொத்துக்கள் குறிவைக்கப்படுவதை விட ஆதரவு அமைப்புக்களும் குறிவைக்கப்படும் ஒரு அபாயகட்டத்திலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் மீள வேண்டிய தேவை ஒன்று இப்போது தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி விசுவமடுவில் கைப்பற்ற ஆவணங்களில் வெளிநாட்டுச் சொத்து விபரங்கள், செயற்பாட்டாளர்கள் விபரங்கள் உள்ளன என்பதை சிறீலங்கா இராணுவ அதிகாரிகளும் அரசும் பல தடவைகள் கூறி வந்துள்ளது.

இந்த நிலையில் சிறீலங்காவிடம் என்ன உள்ளது ஏது உள்ளன என்பது பற்றி இப்போது விவாதிக்க நேரமில்லா விட்டாலும் அவ்வாறான ஒரு சம்பவத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்கள், நிறுவனங்கள், பங்களிப்புக்கள் குறித்த விபரங்கள் இருந்தால் அது தாக்கதையேற்படுத்தும் என்பது திண்ணம்.
எனவே இது தொடர்பாக என்ன நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி ஆராய வேண்டிய ஒரு கட்டத்திற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இவ்வாறான தேசிய ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், கலை பண்பாட்டுக் கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்றன பல அமைப்புக்கள் இணைந்த அறக்கட்டளைகளிற்குள் கொண்டு வரப்படாவிட்டால் அவை பறிபோகும் அபாயத்தை எட்டியுள்ளன.

குறிப்பாக விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில் விடுதலைப்புலிகளிற்கு அங்குள்ள அமைப்புக்கள் பங்களித்த விபரக்கோவைகள் அல்லது அந்த அமைப்பில் விடுதலைப்புலிகளிற்கு உள்ள பங்கு என்பன தகுந்த ஆதாரங்களோடு மேற்குலகிடம் கொடுக்கப்பட்டால் அவை மூடப்படுபவது திண்ணம்.

ஆனால் அந்த அமைப்புக்கள் பொதுப் பராமரிப்புக்குள், அறக்கட்டளையாக, மக்களிற்கு சேவையாற்றுவதாக மாற்றம் செய்யப்பட்டால் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் அதனை தடுக்க வாய்ப்புண்டு. அதற்கான நடவடிக்கையை விரைந்து செயற்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.
கிடைத்த செய்திகளை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் தேசத்தின் விடுதலையின் தேவை கருதி இந்தச் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*