TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எதிரியின் பாசறைக்குள் இருந்து கொண்டே குரல் எழுப்பும் புனிதர்

எதிரியின் பாசறைக்குள் இருந்து கொண்டே குரல் எழுப்பும் புனிதர்கள்.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்ற பழமொழிக்கேற்ப எத்தனை இன்னல்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்தாலும் எதிரியின் பாசறைக்குள் இருந்துகொண்டே இறுதிப்போர் காலத்தில் நடந்த சம்பவங்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்கள்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தனது விசாரணைகளை கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளார்கள். நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த வருடம் முடிவுற்ற நான்காம் ஈழப்போர் வரை நடைபெற்ற சம்பவங்களை மக்களிடத்திலிருந்து கேட்டறியும் இந்த குழுவின் விசாரணை தொடர்ந்து இடம்பெறும் என்று சிறிலங்கா அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமையில் இருந்து பல ஆயிரம் மக்கள் வரிசையில் நின்று தமது குறைகளை தெரிவிக்க காத்திருந்தார்கள். இறுதியில் நூற்றுக்கும் குறைவானவர்களிடத்தில் இருந்துதான் முறைப்பாடுகளை கேட்டறிந்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த விசாரணைகள் பொதுமக்கள் முன்னிலையிலேயே பகிரங்கமாக நடைபெறும் என்று அறிவித்தார்கள். ஆனால் பல பத்திரிகையாளர்களை அரச அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. குறிப்பாக பிரித்தானியாவின் பிபிசி செய்தியாளர்கள் சென்று செய்தி சேகரிக்க அரசாங்கம் அனுமதி மறுத்தது. மறுப்புக்கு காரணம் தொடர்பில் அரசாங்கம் விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

அரசாங்கத்தின் இத்தகைய தமிழர் விரோதம் பற்றிய தொடர் நிலைப்பாடுகள் விசாரணைக்குழுவின் நம்பகத்தன்மையில் மீண்டும் சந்தேகத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது. ஏனெனில் குற்றத்தையும் கொலைக்களத்தையும் நடத்தியவனே விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கும் அவலமும் ஈழத்தமிழர்கள் முன் உருவாக்கி பக்கச்சார்பற்ற வகையில் சர்வதேச பத்திரிகையாளரின் பார்வையையும் தடைசெய்திருப்பது விசாரணையின் முடிவின் லட்சணம் எந்தளவுக்கு தமிழருக்கு நீதி வழங்குமென்பதை காட்டுகின்றது.

ஜனாதிபதி மகிந்தாவினால் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்ட இந்த ஏழு பேர் அடங்கிய தூதுக்குழுவுக்கு தலைவராக முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா நியமிக்கப்பட்டார். இந்த குழு தனது முதலாவது அமர்வை செப்டம்பர் 18-ஆம் நாள் தொடங்கியது. முதலாவது அமர்வு கிளிநொச்சி நகரிலும், இரண்டாவது அமர்வு கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளையிலும், மூன்றாவது அமர்வு முல்லைத்தீவு அரச அதிபர் அலுவலகத்திலும் இடம்பெற்றது.

தொடங்கிய நாள்முதல் ஒவ்வொரு முறைப்பாடு கேட்டறியும் நிகழ்விலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது ஆதங்கங்களை கூற முற்பட்டபோதும் அவர்களுக்கு அந்த கொடுப்பனவு கிடைக்கவில்லை. குறிப்பாக சொல்லப்போனால் கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வுக்கு நானூறுக்கும் அதிகமான மக்கள் குறிப்பாக பெண்கள் வரிசையில் நின்று தமது முறைப்பாடுகளை தெரிவிக்க கூடியிருந்தாலும், பதினைந்து பேர் மட்டுமே தமது குறைகளை கூற அனுமதிக்கப்பட்டார்கள். இதிலிருந்து என்ன புரிகின்றது என்றால் இந்த ஆணைக்குழுவினால் எக்காலத்திலும் தமிழருக்கு நீதி பெற்றுத் தரமுடியாது.

இதனால் தமிழருக்கு என்ன பயன் என்பதை இக்கட்டுரையூடாக ஆய்வு செய்வதன் மூலம் இக்குழுவின் உள்நோக்கம் என்ன என்பதை வாசகர்கள் அறியக்கூடியதாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்.

யாரை திருப்திப்படுத்த நியமிக்கப்பட்டது இந்த குழு?

பல காரணங்கள் கூறினாலும் குறிப்பாக சொல்லப்போனால் இந்த குழு என்பது தமிழருக்கு நீதி பெற்று தர நியமிக்கப்பட்டதல்ல. இந்தக்குழுவின் தலைவர் சட்டமா அதிபராக கடமையாற்றிய வேளையில் பல ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் பல காலமாக எந்த விசாரணையுமின்றி சிறைவாசம் அனுபவித்தார்கள். இவர்களுக்கே நீதி பெற்றுத்தர முடியாத இந்த சட்டமா அதிபரினாலா பல லட்சம் தமிழரின் இன்னல்களுக்கா நீதி பெற்றுத்தர முடியும்.

இந்த குழு என்பது இந்தியாவின் உளவுத்துறையின் நேரடி ஆலோசனையின் பேரிலேயே நியமிக்கப்பட்டது. இந்தியாவுக்கு இதன் அவசியம் பல மாதங்களாக தேவைப்பட்டது. தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் நேரத்தில், தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் ஈழத்தமிழர் விடயத்தில் எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் யாரிடத்திலிருந்தும் கேட்க விரும்பவில்லை. ஈழத் தமிழரின் இன்னல்கள் சிறிலங்காவில் இருக்கும் வரையில் தமிழகத்தில் அதன் எதிரொலி இருந்துகொண்டே இருக்கும். இதனை நன்கே அறிந்த கலைஞர் கருணாநிதி, தனது கட்சி அங்கம் வகிக்கும் இந்திய மத்திய அரசுக்கு சில அழுத்தங்களை கொடுக்கவேண்டிய தர்மசங்கடத்தில் இருந்தார்.

கருணாநிதி பல தடவைகள் தூதுவர்களை புதுடெல்லி அனுப்பியும், தொலைபேசி மூலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்திக்கும் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் அழுத்தங்களை பிரயோகித்தார். கருணாநிதியின் அழுத்தம் வெறும் அரசியலுக்காகவே கொடுக்கப்பட்டது. குறிப்பாக சொல்லப்போனால், தமிழ்நாட்டு தமிழர்களின் ஈழத்தமிழர் மீதுள்ள அனுதாபத்தை அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமென்றால் கடந்த வருடம் இடம்பெற்ற போர் பற்றிய உண்மையறிதல் என்ற நாடகமூடாக காலத்தை இழுத்தடிக்கலாம் என்று எண்ணினார் கலைஞர். மேலும், மகிந்தாவுக்கு தேவைப்பட்டது எப்படியேனும் ஐக்கிய நாடுகள் சபை எடுக்கப்போகும் எந்தவொரு நடவடிக்கைகளையும் முடக்கி சிறிலங்காவில் இடம்பெறும் பிரச்சனைகள் அனைத்தும் உள்நாட்டு விடயங்கள் என அடித்துக்கூற தேவைப்பட்டது இப்படியான டுபாக்கூர் ஆணைக்குழு.

மகிந்த அரசு பல நெருக்கடிகளை உலக நாடுகளிடமிருந்து எதிர்நோக்குகின்றது. மேலும், ஐரோப்பிய யூனியன் தடைசெய்துள்ள வரிச்சலுகையை எப்படியேனும் மீளப்பெற்று, சிறிலங்காவின் பொருளாதாரத்தை ஓரளவேனும் சரிசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பில் இருக்கின்றார் மகிந்தா. ஆக, செல்வாக்குமிக்க நாடுகளை பகைக்க விரும்பாத மகிந்த அரசு எப்படியேனும் அவர்களுடன் நட்புறவை பேணவேண்டுமென்ற முனைப்பில் இருக்கும் மகிந்தாவுக்கு தேவைப்பட்டது இந்த ஆணைக்குழு. இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகளின் மூலம் ஏதோ சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு நீதியை பெற நடவடிக்கை எடுக்கின்றது என்ற மாயையின் மூலமாக பல நாடுகள் மீண்டும் சிறிலங்காவுடன் பழைய தோழமையைப் பேண தேவைப்பட்டது இப்படியான ஆணைக்குழு.

சாட்சியமளிக்க முன்வரும் மக்கள் தொகையை பார்க்கும்பொழுது நிச்சயம் சிறிலங்கா அரசையும் அதன் தலைவர்களையும் குறிப்பாக மகிந்தா மற்றும் அவர் சகோதரர்களுக்கு தண்டனை நிச்சயம் என்பதை உணர்ந்த சிறிலங்கா அரசு, சில குறிப்பிட்ட மக்களையே சந்தித்து குறைகளை கேட்பதன் மூலமாக உலகின் கண்களை மூடிவிடலாம் என்று நினைக்கும் சிறிலங்காவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி என்னவென்றால் இந்த நிகழ்வுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து பல சர்வதேசப் பத்திரிகைகள் செய்திகளாக வெளியிட்டுவருவதை பார்க்கும் பொழுது ஐக்கிய நாடுகளின் விசாரணை தேவை என்பதை உணர்த்துகின்றது. பக்கசார்பற்ற விசாரணை மூலமாகவேதான் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரலாம். இது இப்படியிருக்க தமிழர்களை அழிக்க அதிகாரங்களை கொடுத்த ஜனாதிபதியினால் எப்படி உண்மையான ஒரு விசாரணையை நடாத்த முடியும் என்பதுதான் பலரிடத்தில் எழும் கேள்வி.

உலகத்தையும், தமிழரையும் ஏமாற்றி எப்படியேனும் பதவிகளை தக்கவைத்து நடந்து முடிந்த கொடிய போரை மூடிமறைக்க இந்தியா மற்றும் சிறிலங்கா அரசுகளினால் எடுக்கப்படும் சதிநாடகமே இந்த டுபாக்கூர் ஆணைக்குழு. சிறிலங்காவின் சதிவலைகளை களைந்து நீதியானதும், ஆக்கபூர்வமானதுமான ஒரு விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் சபை அமைத்து எப்படி பிற உலக நாடுகளின் தலைவர்களுக்கு யுத்த குற்றங்களுக்காக தண்டனை பெற்று தரப்பட்டதோ அதைப்போலவே ஈழத்தமிழருக்கு எதிராக இடம்பெற்ற கொடிய அரச பயங்கரவாதத்தை விசாரித்து தண்டனைக்குரியவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்பதே பலரின் அவா.

பான் கி மூனினால் நியமிக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய ஆலோசனைக் குழுவினர் தமது பணியை திறம்பட நடாத்தி உண்மையான அறிக்கையை மூனுக்கு அளிப்பதன் மூலமாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு நடுநிலையான விசாரணைக்குழுவை அமைத்து விசாரிப்பதன் மூலமாகவே நடந்த சம்பவங்களின் உண்மையை வெளிக்கொண்டு வரமுடியும். அதைவிடுத்து ஜனாதிபதியினால் நியமிக்கபட்ட இந்த ஆணைக்குழுவினால் எந்தவொரு விமோசனமும் கிடைக்கமாட்டாது. இருப்பினும் தமிழர்கள் முழுமூச்சாக செயற்பட்டு இந்த விசாரணைக்குழுவுக்கு கொடுக்கப்படும் முறைப்பாடுகளை பதிவுசெய்து உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டுவருவதன் மூலமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தத்தை கொடுக்க முடியும். ஆகவே, எதிரியின் பாசறைக்குள் இருந்துகொண்டே முறைப்பாடுகளை தெரிவிக்கும் மக்கள் நிச்சயம் புனிதர்களே.

புனிதர்கள் என்னதான் சொல்லுகின்றார்கள்

மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரியைச் சேர்ந்த கமநல உத்தியோகத்தர் ந.சுந்தரமூர்த்தி நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தெரிவிக்கையில்: “போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் சிறிலங்கா இராணுவத்தினர் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது. இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர். அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர்.”

அவர் மேலும் கூறுகையில்: “பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் மக்களை ஓரிடத்தில் தஞ்சம் அடைய வைத்ததன் மூலம் புலிகள் தமது ஆளணியை இலகுவாகத் திரட்டவும் ஆயுதங்களை வைத்து இயக்குவதற்கு தளங்களை அமைக்கவும் அரசே வழிசமைத்துக் கொடுத்தது. அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தாவிட்டால் எமக்குரிய பாதுகாப்பான இடங்களை நாமே தேர்ந்தெடுத்து அழிவுகளை ஓரளவுக்கு குறைத்திருப்போம். பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த போது உயிர் இழப்புக்களையும் அழிவுகளையும் நாம் சந்திக்க நேர்ந்தே இருந்தது. மக்களை அரணாக வைத்து படையினர் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி விட்டு புலிகள் நகர்ந்ததும் அவ்விடத்தில் படையினரின் சரமாரியான எறிகணை வீச்சும் விமானக் குண்டுத்தாக்குதலும் நிகழும். இதனால் தினமும் 200 வரையிலான பொதுமக்களை இழக்கவேண்டியிருந்தது.”

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 6 ஆயிரத்து 957 குடும்பங்களில் 697 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது கணவன்மார்களை இழந்துள்ளதாக கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் என்.சத்தியசீலன் தெரிவித்தார். தாய் மற்றும் தந்தையை இழந்த 150 குடும்பங்கள் உள்ளதுடன் – 340 குடும்பங்களில் தலா ஒருவர் உடல் உறுப்புகளை இழந்துள்ளதாகவும் சத்தியசீலன் கூறியுள்ளார். பிரதேசத்தில் உள்ள 99 வீதமான குடும்பங்களில் வீடுகள் யுத்தம் காரணமாக அழிவடைந்துள்ளன. மீள்குடியேற்றப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள கூடாரங்கள் மற்றும் பிளாஸ்டிக் கூரைகள் மழைக்காலத்தில் வசிப்பதற்குப் போதுமானவையல்ல என்றும் அவர் கூறினார்.

ஒரு தாய் தனது சாட்சியத்தில் கூறுகையில்: “என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் மே மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு வீதியால் பதினாறு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன். இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது. சகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன். எங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.”

கிருஷ்ணபாலன் ஜெயபாரதி என்ற தாயொருவர் கூறுகையில்: “தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத் தெரியாது.”

அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை கூறுகையில்: “நாங்கள் 2009-ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களுடைய வீடுகளும் வாகனங்களும் முழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இப்போது வாகனங்கள் எங்கேயென்று தெரியாது. வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு எமக்கான நஷ்ட ஈடுகள் கொடுக்கப்படவேண்டும். சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் மக்கள் மீது ஷெல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்தகொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 75 ஆயிரம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம்.”

தொடர்ந்து தேவரூபன் சுசீலாதேவி என்பவர் சாட்சியமளிக்கையில்: “2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற பெயரில் என்னுடைய 19 வயது மகனைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இரண்டு முறை அவர் புலிகளிடமிருந்து தப்பி வந்து வீட்டில் நின்ற போதும் 3-ஆம் முறை பிடித்துச் சென்று ஆனந்தபுரம் சண்டையில் விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன். இன்று என்னுடைய மகன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள்.”

இந்த குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி அனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் மற்றும் புலிகளின் ஏழு சிரேஸ்ட உறுப்பினர்கள் உட்பட பல நூறு போராளிகளும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர்களையும் தனது கணவரையும் குறித்த எவ்வித தகவலும் இல்லை எனக் கூறியுள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகள் ஆணையகத்தின் செயலாளர் நாயகம் திருமதி.எஸ்.நவநீதம்பிள்ளை அவர்களுக்கு இந்த மாதம் பத்தாம் திகதி எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் ஒரு மடலை அனுப்பிவைத்தார். அதன் பிரதியை இக்கட்டுரையாளருக்கு அனுப்பி வைத்தார். அவரின் மடல் பின்வருமாறு:

சரணடைந்த போராளிகளிற்கான பொதுமன்னிப்பு

முழுப்பெயர்: சின்னத்துரை சசிதரன் (சி.எழிலன்)

பிறந்த திகதி: 27.10.1966.
தேசிய அடையாள அட்டை இல: 663010514ஏ

மேற்படி விடயம் தொடர்பாக சரணடைந்த போராளியின் மனைவியாகிய திருமதி. ஆனந்தி சசிதரனாகிய நான் தங்களின் தயவான கவனத்திற்கும் நடவடிக்கைக்குமாக சமர்ப்பிக்கும் வேண்டுகை எனது கணவரின் பொது மன்னிப்பு தொடர்பான கோரிக்கையை தங்களிற்கு சமர்ப்பிக்கின்றேன்.

எனது கணவர் 18.05.2009 அன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பிரான்ஸ்சிஸ் சேவியர் பங்குத்தந்தை முன்னிலையில் பல்வேறு போராளிகளுடனும், பொறுப்பாளர்களுடனும் இணைந்து இராணுவத்தினரிடம் சரணடைந்தவர். இதன்பின்னர் அவர் எங்கிருக்கிறார் என அறிந்து கொள்ள நான் எடுத்த பல முயற்சிகளும் பயனளிக்கவில்லை.

என்னைப்பொறுத்தவரை நான் தாய் தந்தை யாருமற்ற அநாதை. அத்துடன் எனது பராமரிப்பில் மூன்று பெண் குழந்தைகளும் என்னுடன் உள்ளனர். மிகச்சிறிய வயதினைக் கொண்ட மூன்று குழந்தைகளும் தந்தையை பற்றிய தகவல் தெரியாது பாரிய மனத்தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் ஆதரவு எதுவுமற்ற என்னால் பராமரித்து கொள்வது பாரிய சுமையாக உள்ளது.

அரசாங்க அலுவலராகிய நான் பிரதம பொதுமுகாமைத்துவ உதவியாளராக மாவட்ட செயலகத்தில் கடமையாற்றி வருவதனால் எனது குடும்பத்தை பராமரிப்பதில் மேலும் சிரமங்கள் காணப்படுகின்றன. அண்மைக்கால போர் நடவடிக்கையின் போது பாரிய சேதத்திற்குள்ளான எனது வீடும் சொத்துக்களும் அற்ற நிலையில் வாடகை வீட்டில் குடியிருந்து வாழவேண்டிய நிலையில் எனது வருமானமும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் எனது கணவரைப் பற்றி எங்கிருக்கிறார் என்ற தகவல்கிடைக்குமாயின் அதுவே எனக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.

சிறிலங்கா அரசின் சட்டத்தினை மதித்து போர் முனையில் இருந்து நேரடியாக சரணடைந்த எனது கணவருக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்கான தார்மீக நியாயம் இருக்கிறது. அத்துடன் போர்க்குற்றவாளிகளை நிர்வகிப்பு செய்வதற்கான சர்வதேச சட்ட ஏற்பாடுகளும் இருக்கின்றன. உலகம் மனிதாபிமானத்தின் மையமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நானும் எனது மூன்று சிறிய பிள்ளைகளும் கடந்த 16 மாதங்களாக போர்முனையில் சரணடைந்த ஒருவரைப்பற்றி ஒருவித தகவலும் பெற்றுக்கொள்ளாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளோம். இவ்வகையில் தங்களிடம் இருந்து நியாயபூர்வமான பதிலும் எனது கணவர் பற்றிய செய்தியும் கிடைக்கும் என்ற பெருநம்பிக்கையோடு இந்த முறைப்பாட்டை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.

இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,

ச.ஆனந்தி,
ச.நல்விழி (மகள்),
ச.எழில்விழி (மகள்),
ச.கல்கி (மகள்).

இப்படியாக, இவர்களின் அவலங்கள் தொடர்கதையாக இருக்கின்றது. இந்த நல்லிணக்க ஆணைக்குழுவில் முறையிடும் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் ஏதோ சிறு பலனாவது கிடைக்கும் என்று நம்புகின்றனர். நடைமுறையில் இது சாத்தியமற்ற ஒன்றாகவே கருத வேண்டியுள்ளது.

கடந்த அறுபது வருடத்திற்கு மேற்பட்ட தமிழர் போராட்டத்தில், அவர்களுக்கு அதிகாரங்களை அளிப்போம் என்பதும் பின்னர் ஒப்பந்தங்களை செய்துகொள்வதும் பின்னர் கிழித்தெறிவதும்தான் சிங்கள அரசுகள் இதுவரை செய்தவை. அதுமட்டுமல்ல, ஏறத்தாழ பத்துத் தடவைகளுக்கு மேலாக விசாரணைக் குழுக்களை அமைப்பதும் பின்னர் அவைகள் கலைக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.

என்னசெய்வது என்று தெரியாது பரிதவிக்கும் தமிழ் மக்கள் தமது குறைகளை தெரிவிப்பதன் மூலமாக புனிதர்களாக ஆகின்றார்கள். ஆமாம் உண்மைதான் இவர்கள் புனிதர்களே.

சிங்கள ஆட்சியாளர்களின் வரலாற்றில் உண்மையை வெளிக்கொண்டுவருபவர்கள் அனைவரையும் கொல்லுவதையையே செய்து கொண்டுவந்தார்கள். எந்தவித அச்சமுமின்றி நடந்த உண்மைகளை இத்தமிழர்கள் தெரிவிப்பதன் மூலமாக மகிந்தாவினால் அமைக்கப்பட்ட இந்தக்குழுவினால் நீதி பெற்றுத்தர முடியுமோ என்னவோ நிச்சயம் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் இவ் ஆணைக்குழுவிற்கு முறையிடப்படும் தகவல்களை தொகுத்து சாட்சிகளாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல உலக நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதன் மூலமாக இதுநாள் வரை தமிழர்கள் சிந்திய இரத்தத்திற்கு அர்த்தம் இருக்கும். நீதி கிடைக்கும் நாள் வெகுதொலைவிலில்லை என்ற நம்பிக்கையுடன் பயணத்தை தொடருவோமாக.

அனலை நிதிஸ் ச. குமாரன்
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
 • DILIPANSURESH says:

  our nation
  our people
  our identity
  TAMILEELAM.
  DILIPANSURESH. 9786373917INDIA.

  September 30, 2010 at 09:36

Your email address will not be published. Required fields are marked *

*