TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கையின் அபிவிருத்திப் போராட்டங்களும் வல்லரசுளும்

இலங்கையின் அபிவிருத்திப் போராட்டங்களும் வல்லரசுகளின் பொருளாதார மோதல்களும் – இதயச்சந்திரன்.

அவசரமாக நிறைவேற்றப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்ட மூலம் குறித்து, பல வாதப் பிரதிவாதங்கள் நிகழும் இவ்வேளையில் அதன் உள்ளார்ந்த அரசியல் நோக்கம் பற்றிப் புதிய சிந்தனைகள் வெளிவருகின்றன.

நிறுவனமயப்பட்ட முதலீட்டாளர்களுக்கான நியூயோர்க் நகரத் தரகு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர், ஒருவர் இது குறித்து கூறும்போது, இலங்கையில் உருவாகும் அரசியல் ஸ்திரத்தன்மையானது, பொருளாதாரச் சந்தையைப் பொறுத்தவரையில் நன்மை பயக்கும் விடயம் என்று தெரிவிக்கின்றார்.

அதாவது தற்போதைய ஜனாதிபதி மீண்டும் தெரிவானால் கொள்கையளவில் மாற்றங்கள் ஏற்படும் சாத்தியப்பாடுகள் இல்லையென்பதால் முதலீட்டாளர்களும் தமது முதலிற்கு உத்தரவாதம் உண்டென்பதை நம்புவார்களென்பதே அந்த ஆய்வாளரின் பார்வையாக அமைகிறது. சமூக, அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நாடுகளில், பன்னாட்டு நிதி நிறுவனங்களோ அல்லது தொழில் துறை சார்ந்த முதலீட்டாளர்களோ தமது பணத்தினை முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்பது உண்மை.

முதலீடு செய்வதற்கான நாடுகளின் பட்டியலில் உலக வல்லரசான அமெரிக்கா, ஒன்பதாவது இடத்திற்கு கீழிறங்கி வந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுவதையும் நோக்க வேண்டும். உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஆகஸ்ட் 2008 இல் ஏற்பட்ட சீர்குலைவினால் பல நாடுகள் பாதிப்புற்றதை இது உணர்த்துகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற இனஅழிப்பு நடவடிக்கையால் நாட்டின் பெரும்பாலான வளங்கள், யுத்த செலவீனங்களுக்குள் விழுங்கப்பட்டு விட்டன.

வல்லரசாளர்கள், தமது பிராந்திய நலனிற்காக முதலிடும் துறைமுக அபிவிருத்தித் திட்டங்கள், அனல் மின் நிலையங்கள், நாட்டின் திறைசேரியை நிரப்ப உதவாது. இருப்பினும் சிதைவுற்ற உட்கட்டுமானங்களை மீளக் கட்டியமைப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு அவசியம் என்பதை உணரும் இலங்கை ஆட்சியாளர்கள், அபிவிருத்தி போராட்டங்களை பல பரிமாணங்களில் முன்னெடுக்க விரும்புகிறார்கள்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசாட்சியை உறுதிப்படுத்துவதோடு படைத்தளங்களை வடக்கு கிழக்கெங்கும் நிறுவுவதன் ஊடாக இனி ஒரு ஆயுதப் போராட்டம் அங்கு நிகழ வாய்ப்பில்லை என்பதையும் இந்த சர்வதேச முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க அரசு முனைகிறது. போர்க் குற்ற விசாரணைகள், மனித உரிமை மீறல் போன்ற சூடான விவகாரங்கள், மேற்குலகின் முதலீடுகளை தடுத்து விடுமென்கிற கவலையை இலங்கையை வாட்டுகிறது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நியூயோர்க் சென்றுள்ள இலங்கை அதிபர், முதலீடு செய்யக் கூடிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலை தான் உருவாக்கி விட்டதாக அங்கு வருகை தரும் பன்னாட்டு தலைவர்களிடம் விளக்க முற்படுவாரெனத் தெரிகிறது. அதேவேளை போர்க் குற்ற விசாரணையில் தீவிரமாக ஈடுபடும் நாடுகளின் தலைவர்களுடன் விசேட சந்திப்புக்களை அதிபர் மேற்கொள்வாரென எதிர்பார்க்கலாம்.

இலங்கை நிலவரம் தொடர்பாக இந்தியாவிடம் அறிக்கை கோரிய அமெரிக்க இராஜாங்க திணைக்கள விவகாரம், மஹிந்த ராஜபக்ஷவின் பயண நிகழச்சி நிரலில் நிச்சயம் இடம்பெறும். ஆனாலும் சீனாவை நோக்கி சரிந்து செல்லும் இலங்கையின் இராஜதந்திர நிலைப்பாடு குறித்து மேற்குலகம் அதிருப்தியடைந்துள்ள விடயத்தைப் புறந்தள்ள முடியாது.

அண்மையில் இந்திய இராணுவத் தளபதி வி.கே. சிங், கடற்படைத் தளபதி நிர்மல் வர்மா போன்றோரின் இலங்கைப் பயணங்களை அடுத்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தலைமையில் மேஜர் ஜெனரல் தயா ரட்ணாயக்க, வை. மாஷல் பி. பிரேமச்சந்திரா ஆகியோர் சீனாவிற்கு விஜயம் செய்ததை மேற்குலகமும் இந்தியாவும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றன.

விமானப் படையின் உயர் நிலைத் தளபதியின் சீனப் பயணம், அம்பாந்தோட்டைக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையம் குறித்த விவகாரத்தை உள்ளடக்கி இருக்கலாமென்று கருதப்படுகிறது.

இவை தவிர இராணுவ உயரதிகாரியின் விஜயத்தில் சீனாவின் நவீன போர்த் தொழில் நுட்பம் தொடர்பான ஆற்றலை பரிமாறிக் கொள்ளும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு.

இந்த வாரம் கண்டியிலுள்ள சிங்கரெஜிமென்ட் தலைமையகத்தில் கணணி ஆய்வு மையத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய இலங்கையின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவ மற்றும் படைத்தளங்களைக் கணனிமயப்படுத்தி அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டுவர, சீனா உதவ முன்வந்துள்ளது என்று கூறியுள்ளார்.

அத்தோடு இலங்கை புலனாய்வுத் துறையினருக்கு நவீன தொழில்நுட்ப அறிவூட்டலை வழங்க, சீன அதிகாரிகள் முன் வருகிறார்கள் என்கிற செய்தியையும் அவர் தெரிவித்தார். ஆகவே பாதுகாப்புச் செயலாளரின் சீன விஜயம், பாதுகாப்புத் துறை விரிவாக்கம் சார்ந்ததாக அமைந்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.

அதேவேளை அதிகரிக்கும் சீனாவுடனான இலங்கையின் நெருக்கமான உறவுகளையிட்டு சோகத்தில் ஆழ்ந்து போகாமல் தனது நகர்வுகளையும் இந்தியா சலிப்பின்றி முன்னெடுத்துக் கொண்டுதானிருக்கிறது. இந்தியாவின் பொருண்மிய, படைத்துறை வளர்ச்சி அதிகரிக்கும் முன்பாக இலங்கையில் ஆழமாக வேரூன்றி விட வேண்டும் என்கிற சீனாவின் தந்திரோபாயத்தை இந்திய ஆட்சியாளர்களும் உணர்ந்து கொள்வார்கள்.

அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வியட்னாமில் நடைபெறவிருக்கும் ஆசியான் (அண்ஞுச்ண) மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங், ஜப்பானிற்கும் மலேஷியாவிற்கும் செல்கின்றார். இதில் ஜப்பான் விஜயமே, அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜப்பானுடன் உயர் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் தனது வர்த்தக உறவை வலுப்படுத்த விரும்பும் இந்தியா, அடுத்து வரும் வருடங்களில் அணுசக்தித் துறையில் 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். 1998 மே மாதமளவில் இந்தியா மேற்கொண்ட ஐந்து அணுசக்தி பரிசோதனைகளையடுத்து இந்தியாவுடனான உயர் தொழில் நுட்ப வர்த்தக உறவினை ஜப்பான் முறித்துக் கொண்டது.

இதனையடுத்து இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் போன்றவற்றை கறுப்புப் பட்டியலில் சேர்த்தது மேற்குலகும் ஜப்பானும். அணு ஆயுத பரவலாக்க தடைச் சட்டத்தில் இதுவரை இந்தியா கைச்சாத்திடாவிட்டாலும் புவிசார் இராஜதந்திர உறவுகளில் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ஜப்பானுடனான இந்திய வர்த்தக உறவு சீரடைந்திருப்பதைக் காணலாம்.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்ட அணுசக்தி உடன்படிக்கையின் பின்னரே, இத்தகைய மாற்றங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அணுசக்தியிலிருந்து எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தின்படி 2020 ஆம் ஆண்டளவில் தனது எரிசக்தி உற்பத்தித் திறனை 20,000 மெகாவட்ஸ் ஆக உயர்த்த வேண்டுமென்கிற இலக்கு நோக்கி நகர, இந்தியா முனைவதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்துகின்றன.

இப்பயணத்தின் போது அணுசக்தி ஒப்பந்தமொன்றில் இந்தியாவும் ஜப்பானும் கைச்சாத்திடலாமென்று இந்தியச் செய்திகள் கூறுகின்றன. இருப்பினும் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்கான பனிப் போரில் இந்தியாவும் சீனாவும் ஈடுபடும் அதேவேளை, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு, புதிய தளத்தில் புகுந்துள்ளதாக பொருளியல் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா சீனாவின் இரு தரப்பு வர்த்தகம், இந்த ஆண்டின் ஜூலை மாதம் வரை 32 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளதாகவும் வருட இறுதிக்குள் 60 பில்லியன் டொலரை அது அடைந்து விடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கான சீனாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் 36 சதவீதம் மின்சார இயந்திரமும் ஏனைய இயந்திர உபகரணங்களுமாகும்.

ஆனால் சீனாவிற்கான இந்திய ஏற்றுமதியில் 53 சதவீதம் இரும்புத் தாது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் சுரங்கக் கைத் தொழிலில் கோலோச்சும், அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டியங்கும் ரியோ ரின்ரோ, பி.எச். பிலிரன் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடனேயே சீனா தனது வர்த்தக உறவை விரிவுபடுத்துகிறது.

அதேவேளை தற்போது பரவலாக விவாதிக்கப்படும் நாணய மதிப்பு தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே தோன்றியுள்ள முறுகல் நிலை, உலக வர்த்தகத்தில் புதிதாக பல சிக்கல்களை உருவாக்கப் போவதை அவதானிக்க வேண்டும். சீனா, தனது யூவான் நாணயத்தின் பெறுமதியை மறு மதிப்பீடு செய்ய வேண்டுமென, எவ்வளவு தான் அமெரிக்கா அழுத்தம் கொடுத்தாலும் செஞ்சீனா அசைவது போல் தெரியவில்லை.

பொதுவாக சர்வதேச நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதியோடு ஒப்பிட்டே, ஏனைய நாடுகளின் நாணயப் பெறுமதி நிர்ணயிக்கப்படுகிறது. சீனாவானது தனது யுவான் நாணயத்தின் பெறுமதியை குறைத்துக் காட்டியவாறு, ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் அமெரிக்கா, அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவிலிருந்து அமெரிக்õவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு மேலதிக வரியினை விதிக்கப் போவதாக அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது.

1979 இல் டெங்சியாவோ பிங்கினால் ஆரமபிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக அனைத்துலக மட்டத்தில் சீனாவின் ஏற்றுமதி அதிகரித்தது. உள்ளூர் வர்த்தகங்களுக்கு கடனுதவிகளை வழங்குவதன் ஊடாகவும் சீனச் சரக்குகளை கொள்வனவு செய்யும், வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு ஏற்றவாறு நாணய மாற்றீட்டு விகிதத்தை மாற்றியமைப்பதன் மூலமும் தனது பொருண்மியத்தை சீனா வளர்த்துக் கொண்டது.

2009 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி சீன மத்திய வங்கியின் கையிருப்பில் 2.3 ரில்லியன் டொலர்கள் குவிந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் பல சீன வர்த்தக வங்கிகள் வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட இறுதிக்குள் திறைசேரி நாணயக் கையிருப்பின் அளவு 300 பில்லியன் டொலர்களால் அதிகரிக்குமென எதிர்வு கூறப்படுகிறது.

சீனாவின் வெளிநாட்டு நிதிக் கொள்கை, இரண்டு வகையான மூலோபாயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிப்பது, இரண்டாவது நேரடி முதலீடு மற்றும் கடனுதவி மூலம் வெளிநாட்டு மூல வளங்கள், புதிய தொழில்நுட்பம் போன்றவற்றை தங்கு தடையின்றிப் பெறுவதை உறுதிப்படுத்துவது என்பதாகும்.

ஆனாலும் சீனாவின் இத்தகைய அபரிமிதமான பொருண்மிய வளர்ச்சியானது சர்வதேச மூலதனச் சந்தையை சீர் குலைத்து விடலாம் என்கிற அச்சம் அமெரிக்க அரச அதிகாரிகள் மத்தியிலும் சீனா குறித்து சிறப்பாய்வுகளை மேற்கொள்ளும் அறிஞர்கள் மட்டத்திலும் ஏற்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

சீனாவின் தேசிய புள்ளி விபரத் திணைக்களத்தின் அறிக்கையில் 2009 ஆம் ஆண்டிற்கான வர்த்தக உபரியானது 196 பில்லியன் டொலர்களென கணிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு ஏறத்தாள 281 பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்காவின் திறைசேரி முறியை சீனா வாங்கிக் குவித்துள்ளது. இதில் 130 பில்லியன்கள், குறுகிய கால கடனடிப்படையில் சீனாவால் கொள்வனவு செய்யப்பட்டவையே.

டொலர் நாணயமானது, இந்த இரு நாட்டையும் பரஸ்பரம் தங்கி நிற்கும் பணயக் கைதிகளாக வைத்திருக்கிறது என்பது தான் ஆச்சரியமான விடயம். இந்நிலையில் யுவான் நாணயத்தின் உண்மையான பெறுமதியை வெளிப்படுத்தி, வர்த்தக உறவில் ஈடுபடுமாறு அமெரிக்கா வலியுறுத்தும் விவகாரம், ஆசியாவில் புதிய சிக்கல்களை உருவாக்கப் போகிறது.

இந்த பொருண்மிய மேலாதிக்க போட்டியினால் வெளிப்படும் விரிசல்கள், மோதல் நிலைமைகளையும் தோற்றுவிக்கலாம். தமக்குச் சார்பான அணிகளின் ஊடாக வல்லரசாளர்களின் முரண்பாடுகள் வெளிப்படுவதே தற்போதைய உலக ஒழுங்கின் விதியாக அமைகிறது. இதில் இலங்கைக்கும் ஒரு இடம் உண்டு.

ஆனாலும் இன்று உலக ஜனநாயக தினத்தை கொண்டாடுவதும் மனித உரிமைகள் தினத்தை போற்றுவதும் இன அழிப்பை ஏற்றுக் கொள்ளாமல் போர் குற்ற விசாரணை என்கிற போர்வையில் ஒடுக்கும் அரசின் இறைமையை காப்பாற்ற முயல்வதும் நவீன உலக மயமாதலின் சடங்குகளாக மனித குலத்தின் மீது திணிக்கப்பட்டு விட்டது என்பது தான் கசப்பான உண்மை.

நன்றி: வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*