TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அமெரிக்காவிற்கு வேண்டப்பட்ட விருந்தாளியா மகிந்த?

பல ஆயிரம் ஈழத்தமிழரின் சாவுக்கும், கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக தண்டனை வழங்கப்பட வேண்டிய இலங்கையின் ஜனாதிபதி அடுத்த வாரம் இடம்பெற இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்த வாரம் அமெரிக்காவை வந்தடைந்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்று கூறும் அமெரிக்காவோ ராஜபக்சாவுக்கு வரவேற்பளித்திருப்பது அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர் மீது ஏவிவிடப்பட்ட அரச பயங்கரவாதத்திற்கு பல நாடுகள் நேரடியாகவும், சில நாடுகள் மறைமுகமாகவும் இலங்கை அரசிற்கு ஆதரவளித்தது என்பது அனைவராலும் அறியப்பட்டதே. இருந்தாலும் சில வல்லாதிக்க மேற்கத்தைய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் பொதுமக்கள் பலிக்கடா ஆகக்கூடாது என்றே கூறிவந்தார்கள். இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து யுத்தத்தை திணித்து பல ஆயிரம் உயிர்களை கொன்றும், பல லட்சம் மக்களை சிறைப்பிடித்தும் மேலும் பல ஆயிரம் தமிழ் இளைஞர்களை கைது செய்து தலைமறைவான இடங்களில் வைத்து அவர்களுக்கு என்ன ஆனது என்றே தெரியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிய இலங்கை அரசும் அதன் தலைவருமான ராஜபக்ச எப்படி ஜேர்மனியின் ஹிட்லர் யூத மக்களை அழித்தாரோ அதைப்போலவே செய்தார்கள்.

யுத்தம் முடிந்து ஒரு வருடம் ஆகியும் தமிழர்களின் சோகம் தொடர் கதையாகவே உள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையிடம் முறையிட்ட பின்னர் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனால் ஒரு குழு அமைக்கப்பட்டது. இலங்கையோ ஐநாவுடன் ஒரு பனிப்போரையே நடாத்தியது. நான்கு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று அவகாசம் கொடுத்தும் இந்த குழு ஒரு மந்தநிலையிலையே செயலாற்றிக்கொண்டுள்ளது. இதனிடையே, இந்த குழுவின் அங்கத்தவர்கள், மூனை இந்த வாரம் சந்திக்கின்றார்கள். இந்த சந்திப்பின் போது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராய்கின்றனர். எது எப்படியாயினும், மூனுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட இந்த குழு தமிழருக்கு நீதி பெற்றுத்தரக் கூடியவாறு உருப்படியாக எதனையும் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஐநா சபை எப்பொழுதுமே ஈழத்தமிழரின் இன்னல்களை களைய ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக, இலங்கை அரச தலைவர்களுடனும் சிங்கள அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு சிங்கள புத்த அரசாட்சிக்கு மறைமுகமாக மூன் ஆதரவளித்தார் என்பது மட்டும் உண்மை. தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சராக இருந்தவேளையில் இலங்கை அரசுடன் நட்புறவை பேணிவந்தது மட்டுமல்லாமல், சுனாமி அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவி செய்யவென இலங்கைக்கு விஜயம் செய்து சிங்களத் தலைவர்களை சந்தித்து ஆறுதல்களையும் பொருட்களையும் வழங்கினார் மூன். ஆனால், இந்த பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை. இப்படியாக, மூனின் நட்பு இலங்கையுடன் பல காலங்களாக உள்ளது. ஆகவே, இவரிடம் நியாயம் கேட்பது மூட நம்பிக்கையாகவே இருக்கும். இருந்தாலும் சில வல்லரசுகளின் வற்புறுத்தலுக்காக ஒரு கண்துடைப்பு நாடகத்தையே இவர் நடாத்திக்கொண்டிருக்கின்றார் என்பது மட்டும் உண்மை.

இந்த வாரம் இடம்பெறும் ஆலோசனைக் குழுவினருடனான சந்திப்பும் வெறும் நாடகமே. இதற்கான காரணம் என்னவெனில் ராஜபக்சாவிற்கு எதிராக எந்தவொரு நாடும் குரல் கொடுத்துவிடக் கூடாதென்றதினாலேயே இந்தக் குழுவினருடனான இந்த வார இத் திடீர் சந்திப்பு என்றே கருத வேண்டியுள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தொடர் முறுகல் நிலை

ஐநா ஈழத்தமிழர் விடயத்தில் பாராமுகமாக நடந்தாலும், அமெரிக்க வல்லாதிக்கம் இலங்கை அரசோடு ஒரு முறுகல் நிலையையே கொண்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற வேளையில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு சவால் விட்ட இலங்கை, இந்த நாடுகள் இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் உலக சட்ட மரபுக்கு மாறாக செயலாற்றுகின்றார்கள் என்று குற்றம்சாட்டியது இலங்கை அரசு. அமெரிக்காவோ ஒரு மெத்தனப்போக்கையே இலங்கை விடயத்தில் கையாண்டு வருகின்றது.

யுத்தம் தொடர்பில் உருப்பெற்ற முறுகல் நிலை பின்னர் கடந்த வாரம் அமுல்படுத்தப்பட்ட 18-ஆவது சட்ட திருத்தத்திற்கு எதிராக கண்டன அறிக்கையை விட்டது. இது தொடர்பில் கடந்த சனிக்கிழமை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் பி.ஜே. குரோவ்லி தெரிவித்ததாவது: “நல்ல அரசாங்கத்தின் கொள்கைகளையும் ஜனநாயகத்தையும் மற்றும் சுயாதீன அரச நிறுவனங்களையும் விருத்தி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுக்கிறது. சுயாதீன நிறுவனங்களுக்கு தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரிகளை நியமித்தல், அதிகாரப் பகிர்வை அதிகப்படுத்துதல், பேச்சுவார்த்தை மற்றும் தேசிய நல்லிணக்கத்தை விருத்தி செய்தல் உட்பட ஜனநாயகத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.”

இது தொடர்பில் இலங்கை அரசு அமெரிக்க அரசிற்கு கண்டன அறிக்கையை விட்டது. இலங்கையின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று இலங்கை அரசு தெரிவித்தது. இலங்கையின் ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல கூறுகையில்: இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள் எதனையும் அரசாங்கம் பரிசீலனைக்கு எடுக்க மாட்டாது என்றும் அமெரிக்கா அதன் சொந்தப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வுகாண வேண்டும். இத்தகைய தேவையற்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் அமெரிக்கா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது மட்டுமன்றி நாட்டின் அதிஉயர் அதிகாரபீடமான உயர் நீதிமன்றத்தையும் அவமதித்துள்ளது. இலங்கையைப் பற்றி அறிக்கை விடுவதற்கு முன்னர் இலங்கையின் அரசியல் யாப்பை படித்துப் பார்க்க வேண்டும் என்று நாம் அமெரிக்காவை கேட்டுக் கொள்கிறோம்.

இரு நாடுகளுக்கிடையின் கருத்து முரண்பாடுகளுக்கு பின்னர், அமெரிக்க தூதுவர் புட்டெனிஸ் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் ஊடக அமைச்சரும் அரசாங்க பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்லவைச் சந்தித்து அமைச்சர் ரம்புக்வெல்ல வெளியிட்ட அறிக்கை, வெளிவிவகார அமைச்சர் பேராசியர் பீரிஸ் வெளியிட்ட அறிக்கை ஆகிய இரண்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாக தெவித்தார். இதன்பின்னர், ரம்புக்வெல்ல கருத்து தெரிவிக்கையில், தூதுவருடன் இடம் பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க அறிக்கை பற்றிய இலங்கையின் கவலையை தாம் மீண்டும் அவருக்கு நினைவூட்டியதாக தெரிவித்தார்.

இருதரப்பினரும் நீண்ட நேரம் அதுபற்றி உரையாடியதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அறிக்கை சம்பந்தப்பிட்ட பிரச்சனைகள் பற்றி பேசியதாகவும் தாம் அமைச்சர் பீரிஸ்சும் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து தூதுவர் புட்டெனிஸ் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு அறிவித்தள்ளதாக தூதுவர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல கூறினார். மேலும், எதிர்கால ஊடக நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது பரஸ்பரம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்படியாக இருதரப்பினர்களுக்கும் இடையே ஒரு முரண்பாடான கருத்துக்களே நிலவுகின்றது. ஆனால், உலகின் காவலாளராக தன்னை கூறிக்கொள்ளும் அமெரிக்கா இலங்கை விடயத்தில் ஒரு மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் வாழ்வையே தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா இருந்தும், குறிப்பாக ஐநாவுக்கு அமெரிக்காதான் அதிகளவிலான பணத்தை வாரி வழங்குகின்றது. இருந்தும், பல சம்பவங்களில் ஐநா சபை அமெரிக்காவுக்கு ஒவ்வாத நிகழ்ச்சி நிரல்களை தயாரித்து அமெரிக்காவின் வெறுப்பை சம்பாதித்தது.

ஈரானுக்கு எதிராக ஒரு நிலை, இலங்கை விடயத்தில் இன்னுமொரு நிலை: இது என்ன நியாயம்?

ஐநாவின் சட்டயாப்பின்படி ஐநாவின் காரியாலயங்கள் எங்கெங்கே உள்ளனவோ மற்றும் கூட்டங்கள் எங்கெங்கெல்லாம் நடைபெறுகின்றதோ, அந்தந்த நாடுகள் அரசியல் கருத்து முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு ஐநாவின் கூட்டங்களில் கலந்து கொள்ள வரும் 192 உறுப்பு நாடுகளின் தலைவர்களையோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளையோ எந்த வைகையிலும் அவமதிக்க கூடாது என்று கூறுகின்றது. குறிப்பாக, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வரும்போது அவர்களுக்கான விசாவை வழங்க வேண்டுமென்று ஐநாவின் சட்டயாப்பு கூறுகின்றது.

ஆனால், ஐநாவின் சட்டயாப்பை உதாசீனப்படுத்தி அமெரிக்க அரசு 2005-ஆம் ஆண்டு ஈரானிய அரச பிரதிநிதிகளுக்கு விசா கொடுக்க மறுத்தது. குறிப்பாக, ஈரானின் சபாநாயகருக்கே விசா கொடுக்க மறுத்தது. விசா மறுத்த காரணத்தை அமெரிக்கா கூறுகையில், ஈரானிய பாராளுமன்றமோ அல்லது அந்த அரசோ ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் உள்ள முறுகல் நிலையென்பது பல தசாப்தங்களாக தொடருகின்றது.

ஆக, அமெரிக்கா ஈரானுக்கு எதிரான ஒரு நிலையை எடுக்கமுடியுமாயின், எதற்காக அமெரிக்கா இலங்கையின் தலைவர்களுக்கு குறிப்பாக யுத்த குற்றவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு தலைவருக்கு விசா அளித்து நியூயோர்க்கில் அடுத்த வாரம் இடம்பெற இருக்கும் ஐநாவின் கூட்டங்களில் கலந்துகொள்ள சம்மதித்தது. முன்னர் அறிவித்ததற்கு மாறாக, திடீரென இந்த வாரம் புதன்கிழமை கொழும்பில் இருந்து புறப்பட்டு லண்டன் வழியாக அமெரிக்காவை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதியின் அலுவலக அறிக்கையின்படி, தனிப்பட்ட காரணங்களுக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிக்கு முன்னராகவே கிளம்பிவிட்டார் என்று கூறுகின்றது.

ராஜபக்ச பல உலகத் தலைவர்களை அமெரிக்க விஷயத்தின் போது சந்திப்பார் என்று ஜனாதிபதியின் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 29-ஆம் திகதி நாடு திரும்பு முன்னர் மெக்ஸிக்கோ மற்றும் ஜேர்மனி நாடுகளுக்கு செல்வாரென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கனேடிய தமிழர்கள் ரொறன்ரோ மற்றும் மொன்றியல் மாநகரங்களில் அமைந்திருக்கும் அமெரிக்க தூதுவராலயங்களின் முன் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் கோரிக்கை என்னவெனில், கனேடிய மற்றும் அமெரிக்க அரச தலைவர்கள் எந்தவொரு இராஜதந்திர தொடர்பையும் ராஜபக்சாவுடன் பேணக்கூடாது மற்றும் மகிந்தாவை அமெரிக்க அரசு கைது செய்து உலக நீதிமன்றத்தின் முன்நிறுத்தி போர் குற்ற சட்டங்களுக்கு எதிராக தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே. இப்படியாக, புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.

அமெரிக்கா நினைத்திருந்தால் நிச்சயம் இலங்கையின் தலைவர்களுக்கு அமெரிக்கா நுழைய அனுமதி மறுத்து இலங்கையை உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்தியிருக்கலாம். மேலும், ராஜபக்சாவை கைது செய்து உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது என்பது சாத்தியமற்ற ஒன்றே. காரணம் ராஜாபக்சா அமெரிக்காவின் குடியுரிமை பெற்றவர் அல்ல. அத்துடன், இவர் ஐநாவின் அழைப்பின் பேரிலேயே நியூயோர்க் வருவதனால், அமெரிக்க அரசிற்கு அவரை கைது செய்யும் உரிமை அறவே இல்லை.

அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகள் செய்யக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால், அடுத்த வாரத்தில் இடம்பெற இருக்கும் கூட்டங்களில் இலங்கைக்கு எதிராக பலத்த குரலை எழுப்பி ராஜபக்சாவின் முகத்திரையை கிழித்து அவரை உலக அரங்கில் இராஜதந்திர ரீதியில் அவமானப்படுத்துவதன் மூலமாக அரச பயங்கரவாதிகளுக்கு எதிரான முதல் செயலாக அமையுமென்பதே யதார்த்தமான உண்மை.

அமெரிக்கா எப்படி ஈரானை விசா வழங்காமல் பழிவாங்கியதோ, அதைவிட ஒரு படிமேல் சென்று இலங்கையின் ஜனாதிபதியை உலக அரங்கில் வைத்து உலக நாடுகள் கண்டனங்களை தெரிவித்து ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு, மனித பேரவலங்களை உருவாக்கிய ராஜபக்சாவை தலைகுனிய செய்வதே முதல் கட்டமாக அமையும் என்பதே மனித நேயமிக்க பலரின் அவாவாக இருக்க முடியும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்

[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*