TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழீழ தேசத்தின் ஒரேதெரிவு – சேரமான் – ஈழமுரசு

இந்தியாவின் உதவியுடன் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாகவும், காந்தியடிகளின் வழியில் அறவழிப் போராட்டங்களில் ஈடு படப் போவதாகவும் இரா.சம்பந்தரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சூளுரைத்துநிற்க, தனது ஏகோபித்த சிங்கள இனவாதக் குடும்ப ஆட்சியை நிரந்தரமாக்கும் நடவடிக்கையை கனக்கச்சிதமாக மகிந்தர் நிறைவேற்றி யுள்ளார்.

அரசியல் குள்ளநரி என்று பெயர்போன ஜுனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனாவால் கொண்டுவரப்பட்ட நிறை வேற்று அதிகாரம்கொண்ட அதிபர் ஆட்சிமுறை மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை, அவரது வழியிலேயே சென்று நீக்கியதன் மூலம் ஜெயவர்த்தனாவையும் விஞ்சிய அரசியல் குள்ளநரி தானே என்று மீண்டுமொரு தடவை மகிந்தர் பிரகடனம் செய்துள்ளார். சிங்கள தேசத்தின் அரசியலமைப்பில் மகிந்தர் மேற்கொண்ட பதினெட்டாவது திருத்தம் என்பது, வெறுமனே அதிபராட்சி முறையின் ஆயுட்காலத்தை நிரந்தரமாக்குவதை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

வெளித் தோற்றத்திற்கு தான் விரும்பும் காலம் வரை அதிபராகப் பதவி வகிக்க வேண்டும் என்ற பதவியாசையில் இவ்வாறான திருத்தத்தை மகிந்தர் கொண்டுவந்திருப்பது போன்று தென்பட்டாலும்கூட, உண்மையில் தனது சிங்கள இனவாதக் குடும்ப ஆட்சியை நிரந்தரமாக்குவதை அடிப்படையாகக் கொண்டே தனது காய்களை மிகவும் நுட்ப சிங்கள தேசத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராகப் பதவி வகித்த பொழுது, ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றும் அதிகாரத்தைத் தவிர ஏனைய சகல அதிகாரங்களும் தன்னிடம் இருப்பதாக ஜெயவர்த்தனா பெருமிதம் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்பொழுது இதிலிருந்து ஒருபடி மேலே சென்றிருக்கும் மகிந்தர், ஜெயவர்த்தனாவிடம் இல்லாத ஏனைய அதிகாரங்களையும் தற்பொழுது தன்வசப்படுத்தியுள்ளார்.

அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவருவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவைபட்டிருந்த நிலையில், அதனையும் விட அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பதினெட்டாவது திருத்தத்தை மகிந்தர் நிறைவேற்றியுள்ளார். இது அவரது ஆட்சியை நீடிப்பதற்கான வாய்ப்பாக மட்டுமன்றி, அரசியலமைப்பில் மேலும் பல திருத்தங்களை கொண்டுவருவதற்கான பூர்வாங்க நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது. இப்பொழுது கிடைத்துள்ள நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அரசியலமைப்பில் மேலும் பல திருத்தங்களை மகிந்தரால் கொண்டு வர முடியும்:

அவ்வாறான திருத்தங்களை எதிர்வரும் மாதங்களில் அவர் மேற்கொள்வார் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. இதன் ஓர் அங்கமாக ஆட்சியதிகாரத்தில் நாடாளுமன்றத்தின் பங்கை மட்டுப்படுத்துவதற்கான திருத்தங்களை மகிந்தர் கொண்டு வருவார் என்று நாம் எதிர்பார்க்க முடியும். நாடாளுமன்றத்தில் மகிந்தருக்கு கிடைத்துள்ள பெரும்பான்மை ஆதரவு என்பது, ஒருபுறத்தில் சிங்கள அரசியலில் ஏகோபித்த குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான அடித்தளமாக அமைந்தாலும், மறுபுறத்தில் தமிழீழ மக்களைப் பொறுத்தவரை மிக மோசமான அரசியல் ஆபத்துக்களையே இது கொண்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து விட்டதாக மகிந்தர் பிரகடனம் செய்து ஏறத்தாழ பதினாறு மாதங்கள் எட்டியுள்ள நிலையில், தொடர்ந்து அவசரகால நடைமுறை அமுலில் இருப்பது இதற்கான சமிக்ஞையாகவே அமைகின்றது. இந்த வகையில் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தமிழீழ மக்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக, தேர்தல் முறைமையில் பல்வேறு மாற்றங்களை மகிந்தர் கொண்டுவருவார் என்று நாம் உறுதியாகக்கூற முடியும். இங்கு தமிழீழ மக்களின் அரசியல் தலைமை என்று கூறிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் மூலோபாயம் கேள்விக் குறியாகின்றது.

கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலம் தமிழீழ மக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பெரும் தவறிழைத்ததாகக் குற்றம் சுமத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இறுதியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் தமிழீழ மக்களை கொன்றுகுவித்த சரத் பொன்சேகாவிற்கு ஆதரவளித்ததன் ஊடாக இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்தை கனக்கச்சிதமாக நிறைவேற்றினார்.

இதன்பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களை ஓரம்கட்டியதன் ஊடாக, நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து இந்திய-சிங்கள அரசுகளின் நிகழ்ச்சித் திட்டத்தை மிகவும் பயபக்தியுடன் சம்பந்தர் நடத்தி முடித்தார். இறுதியாக நடைபெற்ற பதினெட்டாது திருத்தம் மீதான வாக்கெடுப்பில்கூட, அம்பாறை மாவட்டத்தில் சம்பந்தரால் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றியீட்ட வைக்கப்பட்ட பியசேன, சடுதியாக மகிந்தரின் பக்கம்தாவி தமிழீழ மக்களுக்கு அரசியல் துரோகம் இழைத்துள்ளார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் துரோகிகளின் பட்டியல் என்பது மிகவும் நீண்டது. தமிழகத்திற்குள் சுல்தான்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்த சுந்தரபாண்டியனாக இருந்தாலும் சரி, தமிழீழத்தில் சங்கிலியனின் யாழ்ப்பாண இராச்சியத்தை போர்த்துக்கேயரிடம் வீழ்த்திக் கொடுத்த பிரதானிகளாக இருந்தாலும் சரி, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் துரோகம் என்பது புதிய விடயம் அல்லவே. இந்த வகையில் டக்ளஸ், கருணா, கே.பி என்று நீண்டு செல்லும் துரோகிகளின் வரிசையில் பியசேனவும் இணைந்து கொண்டிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல. இங்கு நாம் கவனிக்க வேண்டியது சம்பந்தரின் கேலிக்கூத்து அரசியலையே.

கடந்த காலப் பின்னடைவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சகல பழிகளையும் சுமத்திவிட்டு, அரசியல் சாணக்கியத்துடன் நடந்து கொள்வதாகக்கூறிக் கொண்டு கேலிக்கூத்து அரசியலை சம்பந்தர் அரங்கேற்றி வருகின்றார். இந்தியாவின் உதவியின்றி எதையும் சாதிக்க முடியாது என்று அடிக்கடி மந்திரம் ஓதும் சம்பந்தர், கடந்த ஓராண்டாக இந்தியாவின் உதவியுடன் எதைத்தான் சாதித்தார்? இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக்குடியமர்த்தப்பட்டார்களா? சிறைப்பிடிக்கப்பட்ட போராளிகள் விடுவிக்கப்பட்டார்களா? தமிழீழ தாயகத்தில் இயல்புவாழ்வு ஏற்படுத்தப்பட்டதா? அல்லது சிங்களக் குடியேற்றங்களாவது தடுத்து நிறுத்தப்பட்டனவா? ழீழ நிழல் அரசையும் துடைத்தழிக்க வேண்டும் என்பதில் மகிந்தரின் சிங்கள அரசை விட சோனியா காந்தியின் இந்தியப் பேரரசே கங்கணம்கட்டி நின்றது.

ஒருபுறம் சீனாவின் பக்கம் மகிந்தர் சாய்ந்திருப்பது உண்மையாக இருந்தாலும்கூட, இந்தியாவின் எதிர்ப்பையும் மீறிய ஒரு சாய்வாக அது அமையவில்லை என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். வெளியுறவு விடயங்களில் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்சின் ஆலோசனையுடன் பிரித்தானியாவை பிரதமர் ரொனி பிளேயர் ஆட்சிசெய்தமை போன்று, தேசிய நலன்கள் சார்ந்த விடயங்களில் சோனியா காந்தியினதும், மன்மோகன் சிங்கினதும் ஆலோசனையைப் பெற்றே தனது அரசியல் வியூகங்களை மகிந்தர் செயற்படுத்தி வருகின்றார்.

இந்த வகையில் இந்தியப் பேரரசு நினைத்தால் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காண முடியும். அதற்கான நாடாளுமன்றப் பெரும்பான்மையும் மகிந்தரிடம் உண்டு. ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடாது, உதட்டளவில் அர
சியல் தீர்வு பற்றிப் பேசிக் கொண்டு, தமிழீழ மக்களை சிறுபான்மை இனமாக சிறுமைப்படுத்துவதிலேயே இந்தியப் பேரரசு குறியாக உள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை, இந்திய – இலங்கை ஒப்பந்தம் என்பது எதிர்மறையான பல அம்சங்களைக் கொண்டிருந்த பொழுதும், முதற்தடவையாக தமிழீழ நிலப்பரப்பை ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாக அது அங்கீகரித்திருந்தது.

தற்பொழுது தமிழீழ மக்களை சிறுபான்மை இனமாக சிறுமைப்படுத்துவதற்கும், ஈழம், தமிழீழம் போன்ற சொற்பதங்களை அரசியல் வழக்கில் இருந்து தூக்கியெறிவதற்கும் இந்தியா முனைப்புக் காட்டுவது இந்திய ஆட்சியாளர்களின் ஆழ் அடிமனதில் புதைந்துகிடக்கும் நயவஞ்ச நோக்கங்களை பட்டவர்த்தனமாக்குகின்றது. இவ்வாறான பின்புலத்தில் சம்பந்தரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சாதிக்கப்போவது என்ன? இந்தியாவின் உதவியுடன் அரசியல்த்தீர்வை ஏற்படுத்தப் போவதாக அடிக்கடி சம்பந்தர் வெளியிடும் அறிவிப்புக்கள் எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமானவை? இந்த இரு கேள்விகளுக்குமான பதில் நிச்சயம் ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் நன்கு தெரியும்.

குறிப்பாக இவ்விரு கேள்விகளுக்குமான பதில் மட்டுமன்றி அதற்கான மாற்றீடு என்ன என்பதும் ஒவ்வொரு புலம்பெயர்வாழ் ஈழத்தமிழருக்கும் தெளிவாகத் தெரியும். அதனை ஏற்கனவே புகலிட தேசங்களில் நடைபெற்று முடிந்த தமிழீழத் தனியரசு மீதான பொதுக்கருத்து வாக்கெடுப்பின் ஊடாக ஐயம்திரிபுற புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நன்றி: ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*