TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நிறைவேற்று அதிகாரம் சர்வாதிகாரமாக மாற வழி

நிறைவேற்று அதிகாரம் சர்வாதிகாரமாக மாற வழிகோலிய 18 வது அரச யாப்பு திருத்தம்.

மரத்தில் ஜனநாயகக் கொடியேற்றிய மேர்வின் சில்வா மறுபடியும் பிரதியமைச்சராகியுள்ளார். களனியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்த நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர், ஊடகங்கள் தமது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் ஜெனரல் சரத் பொன்சேகாவின் நிலை ஏற்படுமென்று எச்சரிக்கின்றார்.

18 ஆவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இவ்வகையான அதிரடி உரைகள், இனி அதிகம் வெளிவரலாமென்று எதிர்பார்க்கலாம்.
இச்சட்டத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ், மேர்வின் சில்வா போன்றோரின் புதிய ஜனநாயகச் சிந்தனைகளை கூர்ந்து அவதானிக்க வேண்டும்.

ரவூப் ஹக்கீம் தனது கட்சி உடைவினைத் தவிர்ப்பதற்காகவே இத்தகைய 18 ஆவது திருத்தச் சட்ட மூல ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்திருப்பதாகப் பலர் கருதுகின்றனர். அரசியலமைப்பு யாப்பினை தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடிய ரவூப் ஹக்கீம் ஜனநாயக விரோதச் சரத்துக்களை உள்ளடக்கிய இந்த திருத்தச் சட்டத்தை எவ்வாறு நியாயப்படுத்துவார் என்று புரியவில்லை.

கிழக்கில் சிறுபான்மை இன மக்களின் பூர்வீக நிலங்கள் பறிபோவதையிட்டு பல தடவைகள் நாடாளுமன்றில் எடுத்துரைத்து வரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தவாறு ஜனநாயக மறுப்புச் சட்ட மொன்றிற்கு ஆதரவளித்தமை மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது.

இச்சட்டத்தில் இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும், மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நாடாளுமன்ற அமர்வில் அதிபர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் அப்பால் ஆணைக்குழு நியமன விவகாரத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரின் ஏகபோக ஆளுமை, உறுதிப்படுத்தப்பட்டிருப்பதே ஆபத்தான விடயமாகிறது.

இவை தவிர அரசியலமைப்பு யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சகல துறைகளுக்கான நியமனங்களும் பதவி உயர்வுகளும் இடமாற்றங்களும் அவற்றிற்கான ஒழுக்காற்று கட்டுப்பாடுகளும் மற்றும் திணைக்களத் தலைவர்களை பதவியிலிருந்து நீக்குவதும் மந்திரி சபையால் நிறைவேற்றப்படுமென இப்புதிய திருத்தச் சட்டம் கூறுகிறது.

இதில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதுவித பங்களிப்பும் கிடையாது. ஆனால் அவர்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளே. ஆகவே, எதிர்க்கட்சியினர் அதிகார மற்றவர்கள் என்று இச்சரத்து குறிப்பிடும் போது, அதனை ஆதரிக்க வேண்டிய அவசியம் முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏன் ஏற்பட்டது?

இதைவிட கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது என்று கட்சித்தாவலை நியாயப்படுத்தும் அம்பாறை எம்.பி. பொடியப்பு பியசேன போன்று, அல்லது விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே நாற்காலிகளை இடம்மாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆறு உறுப்பினர்கள் போன்று முஸ்லிம் காங்கிரஸும் அரசோடு இணைந்திருக்கலாம்.

விரைவில் 13 ஆவது திருத்தச் சட்டத்திலும் மாற்றங்களைக் கொண்டு வர அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முழுக்க நனைந்த பின் அதற்கும் ஆதரவளிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்படும் போல் தெரிகிறது.

ஜே. ஆரால் 1978 ல் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் முறைமை, அடிப்படையில் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு வித்திட்டுள்ளதெனலாம். சர்வ அதிகாரம், நிறைவேற்று அதிகாரம், சொல்லளவில் சிறிதளவு மாறுபட்டு இருந்தாலும் பண்பு ரீதியாக ஒரே கருத்தியலைக் கொண்ட சொற்பதங்கள்தான்.

கொல்வின் ஆர் டி சில்வா தலைமையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட போது, ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணியின் முதல் ஒலி ஒலித்தது. ஒரு தேசிய இனத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட, கொடூரமான ஒடுக்கு முறையின் உச்சக்கட்டம், முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்தேறியது.

அங்கு சுற்றி வளைக்கப்பட்ட மக்களின் அவலக் குரல்கள், மரண ஓலங்கள், பேரினவாதத்தின் ஜனநாயகமாக உலகெங்கும் இனம் காணப்பட்டது.

தமிழ் மக்கள் தமது இறைமையை, பூர்வீக நிலங்களை இழந்திருக்கும் இவ்வேளையில் நாடாளுமன்ற தேர்தலிலும் ஜனாதிபதி தேர்தலிலும் இதற்கான மக்கள் ஆணையை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்தாராவென கேள்வி எழுப்புகிறார் கூட்டமைப்பின் உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி. பெரும்பான்மையின மக்களை தன்மைப்படுத்தும் அரசியல் வாழ்வுச் சூழலிற்குள் ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்காகப் போராடுவதை விடுத்து தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராட கூட்டமைப்பு முன் வந்தால் பொருத்தமாகவிருக்கும். இந்தியாவின் செல்லக் குழந்தையான 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் இப்புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் சாவு மணி அடித்திருக்கிறது அரசு.

ஆனாலும் 13 ஆவது திருத்தச் சட்டமே தமிழ் மக்களிற்கான பொருத்தமான அரசியல் தீர்வென்று பரிந்துரைத்து வந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தமது தலைமையில் இயங்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம், தீர்வுத் திட்டமொன்றை தயாரித்து வருவதாகக் கூறியுள்ளார்.

அவர் சேர்ந்திருக்கும் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மை நாடாளுமன்றில் இருப்பதால் இனி இத்தீர்வுத் திட்டத்திற்கான அங்கீகாரத்தை சம்பிக ரணவக்க, விமல் வீரவன்ஸ போன்றோரின் எதிர்ப்பின்றி நிறைவேற்ற முடியும்.

தமிழ்க்கட்சி அரங்கத்தால் வரையப்படும் தீர்வுத் திட்டம், 18 ஆவது திருத்த சட்டத்திற்கு அமைவாகவும் அதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள காணி உரிமை, காவல்துறை உரிமைகளை உள்ளடக்காமலும் இருக்க வேண்டும்.

நடைமுறையிலுள்ள அரசியல் யாப்போடு அனுசரித்துச் செல்லாத எந்த தீர்வுத் திட்டத்தையும் சிங்கள ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல.

இப்புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கொண்டாடி, வெடி கொளுத்தி, மகிழ்ச்சிக் கடலில் அரச ஆதரவாளர்கள் திளைத்துள்ள இவ் வேளையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட விவகாரம் ஓரங்கட்டப்பட்டுள்ளது.

அண்மையில் பாணின் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மொசாம்பிக் மக்களில் 13 பேர் கொல்லப்பட்ட விடயத்தை நினைவு கூர்வது இத்தருணத்தில் பொருத்தமாகவிருக்கும்.

இவ்வருட இறுதிவரை, கோதுமை ஏற்றுமதியை நிறுத்தப் போவதாக ரஷ்யா எடுத்த தீர்மானத்தினால் அதன் விலை, சர்வதேச சந்தையில் அதிகரிக்குமென்று பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலக அளவில் உணவுப் பற்றாக்குறை மீண்டும் தலைதூக்கும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதை அவதானிக்கலாம். வெள்ள அனர்த்தங்கள் அதற்கான நியாயப்பாடுகளை வலியுறுத்துகின்றன. 2003, 2008, 2009 ஆண்டிற் கான விலைச் சுட்டெண்ணை (Price Index) அவதானித்தால், 2008 இல் உலகளவில் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாடு, 2010 இல் மீண்டும் உருவாகி இருப்பதை காணலாம்.

பாணின் 30 சதவீத விலையுயர்வால் முன்னெடுக்கப்பட்ட மொசாம்பிக் போராட்டங்கள் இன்னமும் தணிவடையவில்லை. அதேவேளை காய்கறி உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிக்கு சீனா அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.

இந்நிலையில் உலகளாவிய உணவுத் தட்டுப்பாடு, சிறிய இலங்கையில் பாரியளவு தாக்கத்தினை உருவாக்குமென்பதை சுட்டிக்காட்டத் தேவையில்லை. மக்களின் அடிப்படை ஜீவாதாரப் பிரச்சினைகளை நிராகரித்தவாறு அது குறித்த எதுவித பிரக்ஞையும் இல்லாமல், அதிகாரத்திற்கான இருப்பினை தக்க வைக்கும் முனைப்பில் எதிரணியினர் ஈடுபடுவது வேடிக்கையாக இருக்கிறது.

இராணுவப் புரட்சி ஏற்படும் சர்வாதிகார ஆட்சி வரப் போகிறது என்ற அரசியல் கோஷங்களை வெளியிட்டு அறிக்கைப் போர் நிகழ்த்தும் எதிர்க்கட்சிகள், மக்களை அணிதிரட்டி வெகுஜனப் போராட்டங்களை நடத்த முன்வருவதில்லை.

தற்போதைய நிலையில் 43 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, தனது ஒன்பது தேசிய அமைப்பாளர்கள் மீது விசாரணை ஒன்றினை மேற்கொள்ளவிருப்பதாக தீர்மானித்திருக்கிறது.

விரிசல்கள் பெரும் பிளவாக மாறக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கின்றன. ஐ. தே. கவின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக இயங்கும் நிலையும் காணப்படுகிறது.

அதேவேளை எதிரணியினர் பலவீனமாவதை உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், தற்போதைய இலங்கை நிலைவரம் குறித்த விரிவான அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருக்கிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க இந்திய இராஜதந்திர உறவு நிலையின் இணைவு நிலையையே இவ்வேண்டுகோள் வெளிப்படுத்துகின்றது.

1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரில் கப்டனாகப் பணியாற்றி, இந்திய அமைதிப் படையின் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளில் தன்னை இணைத்துக் கொண்டு, இந்திய அரசின் அதியுயர் இராணுவ விருதான “யுத்த சேனா’ பதக்கத்தை பெற்ற, ஜெனரல் விஜயகுமார் சிங்கின் அண்மைய இலங்கைப் பயணம், இந்த அறிக்கைக்கு பல தகவல்களை வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.

அதேபோன்று கிழக்கு மாகாண முதலமைச்சர், தமிழ்க் கட்சிகளின் அரங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய வடகிழக்கு அரசியல் தரப்பினரோடு கலந்துரையாடிய, இந்திய வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ் அவர்களும் தற்போதைய இலங்கை அரசியல் நகர்வுகளை தமது பிராந்திய நலன் சார்ந்த பார்வையூடாக இவ்வறிக்கைக்கு வலுச் சேர்ப்பார்.

தமது நீண்ட கால அரசியல் அதிகார இருப்பிற்காக அரசியலமைப்புச் சட்டத்தினை சாதகமாக மாற்றியமைக்கும் நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கை ஆட்சியாளர்களின் அடுத்த இலக்கு மியன்மார் (பர்மா) போன்றதொரு குவிக்கப்பட்ட அதிகார மைய அரசியலை நோக்கியதாக அமையுமென்று அமெரிக்கா சந்தேகப்படுவது போல் தெரிகிறது.

“பிரிக்’ (BRIC) என்றழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, ஈரான், சீனா என்கிற கூட்டிற்குள் இலங்கையும் ஒரு பக்கத்துணை பின்னிணைப்பாக மாறிவிடலாமென்கிற எச்சரிக்கை உணர்வு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உண்டென்பதை மறுக்க முடியாது.

தென்சீனக் கடல் எல்லைக்குள், சீனாவின் கடற்படை வலுவை மட்டுப்படுத்த இயலாவிட்டால் அதன் அடுத்த கட்ட விரிவு நிலை, இந்து சத்திரப் பிராந்தியத்தை நோக்கி நீண்டு செல்லுமென்று “பென்டகன்’ அச்சமுறுகிறது.

ஆகவே அம்பாந்தோட்டையில் சீனாவின் கால் பதித்தல் நடைபெறும் வரை காத்திராமல் தென்சீனக் கடலையும், இந்து சத்திரக் கடல் பிராந்தியத்தையும் சமாந்தரமாகக் கையாளும் இருவழி மூலோபாய (Two wat Stratery) முறைமையை பிரயோகிக்க, அமெரிக்கா முனைவதாக பல சர்வதேச அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

இதயச்சந்திரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*