TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இன்றைய அரசியல் நெருக்கடிகள் பிராந்திய ஆதிக்கப் போட்டி

இன்றைய அரசியல் நெருக்கடிகள் பிராந்திய ஆதிக்கப் போட்டியை வலுப்படுத்தும்.

சிறீலங்காவில் புதிய அரசியல் யாப்புச்சட்டமான 18 ஆவது திருத்தச்சட்டம் கடந்த புதன்கிழமை (8) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் பிரகாரம் நீதித்துறை, காவல்த்துறை, தேர்தல் ஆணைக்குழு என்பவற்றின் ஆணையாளர்களை நியமிக்கும் அதிகாரம் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர் மீண்டும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் அது வழங்கியுள்ளது.

இந்த சட்டத்தின் நிறைவேற்றம் என்பது தென்னிலங்கiயில் அரசியல் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதுடன், தென்னிலங்கையில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளிடம் மேலும் பல விரிசல்களையும் தோற்றுவித்துள்ளது.

தற்போதைய அரசின் நகர்வுகளை அவதானிக்கும்போது சிறிலங்காவில் எதிர்க்கட்சிகள் தேவையற்றது என்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மறுவளமாக சிறீலங்கா அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது, சர்வாதிகாரத்தன்மை கொண்டது என எதிர்க்கட்சிகள் பெரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுவருகின்றபோதும், தற்போதைய அரசுக்கு அதனை விடுத்தால் வேறு வழியில்லை என்பதே உண்மை.

ஏனெனில் முன்னைய அரசியல் யாப்புக்களின் அடிப்படையில் எதிர்வரும் ஆறு வருடங்களில் தற்போதைய அரச தலைவரின் பதவி நிறைவடைந்தால், அது ஒட்டுமொத்த அரச உறுப்பினர்களுக்கும் பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தலாம் என அரசு அஞ்சுகின்றது.

பதவியேற்கும் புதிய அரசு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்தலாம் அல்லது மேற்குலகத்தின் சலுகைகளுக்காக ஐ.நா சபையிடம் அவர்களை ஒப்படைக்கலாம், அதற்கு ஏதுவான சூழ்ந்நிலைகளை தற்போதைய அரசு அதிகம் ஏற்படுத்தியுள்ளதாகவே நம்பப்படுகின்றது. அதனைத்தான் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலகமும் மீண்டும் மீண்டும் தெரிவித்தும் வருகின்றன.

எதிர்காலத்தில் தென்னிலங்கையில் ஆட்சியமைக்கும் அரசுகள் தமிழ் மக்களுக்கு சார்பாக செயற்படாது விட்டாலும், தற்போதைய அரசையும் அதன் உறுப்பினர்களையும் பழிவாங்க தமிழ் மக்களையும், வன்னியில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களையும் ஒரு அஸ்த்திரமாக பயன்படுத்தலாம்.

எனவே நீண்டகாலத்திற்கு தனது ஆட்சி அதிகாரங்களை கைவிட முடியாத நிலையில் தற்போதைய அரசு உள்ளது. இதனால் தமிழ் மக்களுக்கு என்ன நன்மை, தீமை நிகழும் என்பதை விட பெரும்பான்மை சமூகம் எதனை எதிர்கொள்ளப்போகின்றது என்பதே முக்கியமானது.

ஏனெனில் தென்னிலங்கையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்கள் தொடர்பில் அவர்களின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. மாறாக தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் என்பது தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்குள் பெரும் மோதல் ஏற்படும் நிலையை அங்கு தோற்றுவித்துள்ளது.

தென்னிலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை பொறுத்தவரையில் ஜே.வி.பி கட்சி மட்டுமே ஏதாவது செய்யமுடியும் என்ற நம்பிக்கைகள் தென்னிலங்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

அவர்கள் தற்போது ஆயுதப்போர் தொடர்பாகவும், இராணுவப்புரட்சி தொடர்பிலும் பேசுகின்றனர். 1971 மற்றும் 1988 களை போல மீண்டும் ஒரு ஆயுதப்போரை ஜே.வி.பி ஆரம்பிக்கலாம் எனவும் எதிர்வுகூறுகின்றனர்.

ஆனால் அதற்கான வலிமையும், பலமும் ஜே.வி.பியிடம் தற்போது உள்ளதாக என்பது சந்தேகமே. எனினும் சிறீலங்காவின் அரச தலைவர் பதவி எனப்படுவது, ஒரு தனி மனிதனை சுற்றி பின்னப்பட்டுள்ள அதிகாரக் குவிப்பாகும். தனிமனிதனை மையப்படுத்தும் இந்த வலைப்பின்னலை தகர்ப்பது அவர்களுக்கு சில சமயங்களில் சுலபமாக இருக்கலாம்.

ஐ.தே.கவை பொறுத்தவரையில் எந்த பேயுடனும் சேர்ந்தாவது, தென்னிலங்கையில் உள்ள அரசை அகற்றிவிட வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளதையே அவர்களின் அண்மைய நடவடிக்கைகள் காட்டுகின்றன. கடந்த வாரம் இந்தியா சென்ற அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்த கருத்ததும் அதனை தான் பிரதிபலிக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு தன்னால் ஒத்தழைப்புக்களை வழங்கமுடியும் என ஐ.தே.க தெரிவித்துள்ளது. ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை சிக்கல் மிக்கதும், அதிக அழிவு மிக்கதுமான பாதையில் நகர்த்தியதில் முக்கிய பங்கு ஐ.தே.கவுக்கு உண்டு.

சிறீலங்காவின் முதலாவது அரச தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவினால் கடுமையான வழிகளில் அணுகப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சனை அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த அரச தலைவராலும் மென்மையாக கையாளப்படவில்லை. தமது பதவியை தக்கவைப்பதற்கும், மீண்டும் அதனை கைப்பற்றுவதற்கும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டது வடக்கு – கிழக்கில் நடைபெற்ற போரை தான்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவியை ஒழிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோதும், அந்த சுகத்தை அனுபவிப்பதற்காகவே அதனை தவறவிட்டிருந்தார் சந்திரிக்கா பண்டாரநாயக்கா. தற்போது அதற்காக அவர் வருந்தலாம். ஆனால் அதனால் பலன் எதுவும் ஏற்படப்போவதில்லை.

இந்த நிலையில் சிறீலங்காவின் எதிர்காலம் என்பது என்ன? என்ற கேள்விகள் தென்னிலங்கை மக்களின் மனங்களில் தோன்றலாம். எதிர்க்கட்சிகளின் அடுத்த நகர்வு என்ன என்பதிலும் பல குழப்பங்கள் உண்டு. பல உடைவுகளை சந்தித்துள்ள எதிர்கட்சிகள் முற்றாக பலமிழந்துபோகும் நிலையை அடைந்துள்ளன.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட சிறீலங்கா நாடாளுமன்றத்தில் 161 உறுப்பினர்களின் ஆதரவுகளை அரசு கொண்டுள்ளதை குறைவாக மதிப்பிட முடியாது. எனவே தமிழ் மக்களைப்போல எதிர்க்கட்சிகளுக்கும் தற்போது உள்ள ஒரே நம்பிக்கை மேற்குலகம் மட்டும் தான்.

விரும்பியோ, விரும்பாமலோ அவர்களின் நகர்வுகளுக்குள் செல்ல வேண்டிய தேவை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதை விடுத்தால் தப்பிப்பிழைக்க அவர்களுக்கு வழி இல்லை. அதனை தான் ரணில் விக்கிரமசிங்காவின் இந்திய பேச்சு கோடிட்டு காட்டியுள்ளது.

சிறீலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் அனைத்துலக சமூகமும், மேற்குலமும் கருத்து எதனையும் தெரிவிக்க முன்வரவில்லை. ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டமும், 17 ஆவது திருத்தச்சட்டமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்திருந்தனர். எனினும் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் வரவு 17 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாது செய்துவிட்டதாகவே கருதப்படுகின்றது.

சுருக்கமாக கூறினால் 18 ஆவது திருத்தச்சட்டத்தின் வரவு மேற்குலகத்திற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான நெருக்கடிகளை மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். இது சீனாவின் நகர்வுகளுக்கு அனுகூலமானது என்பதுடன், தற்போது சிறீலங்காவில் உள்ள ஆட்சி முறைமையும், சீனாவின் ஆட்சி முறைமையும் அதிக ஒற்றுமைகளை கொண்டுள்ளதாக மாற்றம் பெற்றுள்ளது.

அங்கும் ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் பல நெருக்கடிகளை சந்தித்தே வருகின்றன. அம்பாந்தோட்டை துறைமுகம் மட்டுமல்லாது, கொழும்பு துறைமுகமும், தென்னிலங்கையின் முழுமையான உட்கட்டுமானங்களும் சீனா வசம் சென்ற பின்னர் தற்போதைய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கு மேற்குலகத்திற்கு எதுவுமே இல்லை.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஆதரவுடன் ஏதாவது நகர்வை மேற்கொள்ளமுடியுமான என சிந்திக்கும் மேற்குலகத்தின் வலைக்குள் தற்போது தென்னிலங்கை எதிர்க்கட்சிகளும் வந்து வீழ்ந்துள்ளன.

எனவே சிறீலங்காவில் ஏற்பட்டுவரும் அரசியல் நெருக்கடிகள் என்பது தெரிந்தோ தெரியாமலோ இந்துசமுத்திர பிராந்தியத்தின் பூகோள அரசியல் ஆதிக்கப்போட்டிகளை வலுப்படுத்தவே அதிகம் பயன்படப்போகின்றன. எனவே சிறீலங்கா அரசின் நகர்வுகள் என்பது, அதற்கு ஒரு பூமராங் ஆகுமான என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

நன்றி: வீரகேசரி வாரஏடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*