TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மேற்குலகின் சிலுவையாக மாறிவரும் ஈழத் தமிழர் விவகாரம்

சிங்கள தேசத்தின் இன அழிப்பு யுத்தத்தை தடுத்து நிறுத்துமாறு புலம்பெயர் தேசங்கள் எங்கும் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி, கண்ணீர் சிந்திப் போராடினார்கள். எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று எல்லாத் திசைகளிலும் இரஞ்சினார்கள். ஆனாலும், இறுதிக் கணம் வரை அவர்கள் எழுப்பிய அவலக் குரல்கள் பயனற்றதாகவே போய் விட்டது.

அத்தனை நாடுகளும், இந்தியாவை மீறி எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கைகளைப் பிசைந்து கொண்டன. ஈழத் தமிழர்களைக் காப்பாற்றும் முயற்சியில் மூக்கை நுழைத்து, இந்திய சந்தையை இழக்க மேற்குலகு விரும்பவில்லை. இந்தியா அத்தகைய ஒரு அழுத்தத்தை மேற்குலகிற்குக் கொடுத்திருந்தது. ஈழப் போரில் இந்தியா கண்ணனாக இருந்து சிங்களப் படைகளை வழி நடாத்தியதால், மேற்குலகின் மனிதாபிமான எண்ணங்களும் மௌனமாக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு, சாட்சிகள் இல்லாத இன அழிப்பு யுத்தத்தை நடாத்தி முடித்த சிங்கள தேசத்தின்மீது போர்க் குற்றம் சுமத்தப்படுவதையும் இந்தியாவே முன் நின்று எதிர்த்தது. காந்தி தேசத்தின் பழிவாங்கும் வெறிக்கு அப்பாவித் தமிழர்களும் பல பத்தாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்டது மனிதாபிமான உள்ளங்களை வெகுவாகவே பாதித்தது. உலக நாடுகள் எங்கும் சிங்கள தேசத்தின் மீது போர்க் குற்ற விசாரணையை நடாத்தியே ஆகவேண்டும் என்ற மனித குல அவலங்களுக்கெதிரான குரல்கள் ஓங்கி எழுந்த காரணத்தால் இந்தியா மௌனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்பட்டது.

முள்ளிவாய்க்காலில் தப்பிப் பிழைத்தவர்கள் சிங்கள – இந்தியக் கொடூரங்களை எதிர்கொள்ளவோ, மறக்கவோ முடியாத நிலையில் உலகின் கடல்கள் எங்கும் கப்பல்களில் மிதக்கத் தொடங்கினார்கள். முள்ளிவாய்க்காலில் தப்பிய உயிர்கள் கடலுக்கு இரையாகாமல் தப்பியவை இப்போது கரைகளைத் தொடுகின்றன.

சில படகுகள் அவுஸ்திரேலியாவிலும், இரண்டு கப்பல்கள் கனடாவிலும், சில படகுகள் வழிமறிக்கப்பட்டு தாய்லாந்திலும், இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும் கரையேறியுள்ளன. இன்னமும் பல படகுகள் தங்கள் நாடுகளை நோக்கி வருவதாக நியூசீலாந்தும், கனடாவும் கவலை தெரிவிக்கின்றன.

வியட்நாம் போருக்குப் பின்னர், படகு மக்களாகக் கடலில் தத்தளிக்கும் இனமாக ஈழத் தமிழர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். அந்த சின்னஞ்சிறு மக்கள் கூட்டம் சுதந்திரமாக, நிம்மதியாக வாழ நினைத்த பாவத்திற்காய் சொந்த மண்ணை இழந்தவர்களாக தாயக நினைவுகளுடன் வாழும் எதிர்பார்ப்புடன் மேற்குலகின் கரைகளைத் தேடுகின்றார்கள். சிங்கள தேசத்தின் இனவாத அடக்குமுறைக்கெதிராகப் போராடிய தமிழர்களைக் காப்பாற்றத் தவறிய மேற்குலகு அந்தப் பாவத்தின் சம்பளமாக ஈழத் தமிழர்களை சிலுவையாகச் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

ஈழத் தமிழர்களுக்கான நீதி என்றோ பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் தவறு செய்து விட்டோம் என்று வருத்தப்படும் அளவிற்கு இங்கிலாந்து தேசம் இறங்கி வந்துள்ளது. வெட்கத்தை விட்டு, வேறு வழியின்றி தப்பிக் கரையொதுங்கிய ஈழத் தமிழர்களை ‘நீ புலி’ என்ற குற்றச்சாட்டோடு கூண்டில் அடைக்கிறது தாய்த் தமிழகம்.

ஏனையோரை அகதி முகாம் என்ற வாழ் நிலைக்குதவாத ஒதுக்குப் புறங்களில் வாழ அனுமதிக்கின்றது. காந்தி தேசத்தின் மனிதாபிமானத்தை அதற்கும் மேல் எதிர்பார்க்க முடியாது என்பதை காஷ்மீர் மக்களின் கல்லெறி யுத்தம் அறுதியிட்டுச் சொல்கிறது. ஆனால், நாகரிக ஜனநாயக வாழ்க்கைக்குள் சங்கமித்துள்ள மேற்குலகின் மனச்சாட்சிக்கு ஈழத் தமிழர்களின் அவலம் நிராகரிக்கப்பட முடியாதது.

நன்றி: ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • John says:

    I am really sorry that our own Tamil people are refused entry in our mother land and some of them are branded LTTE, we must of course give first entry and welcome if they are LTTE as they have laid down their lives for the freedom of World Tamils and every Tamil who enter Tamilnad. There will be a war in Tamilnad soon and at the time these Ettappan will beg the mercy of these people. I appreciate the westerners for their human feelings who accomodate my Tamil brothren

    September 12, 2010 at 13:41

Your email address will not be published. Required fields are marked *

*