TamilSpy

பொழுது போக்கு இணையம்…

திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்: கனக கடாட்சம்

‘மனிதனென்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம் வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்’ ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக ஈழத் தமிழ் மக்களின் உரிமைக்கான போரியல் வரலாற்றில் தியாகி திலீபனின் தற்கொடைப் போராட்டம் ஒரு திருப்பு முனையானதாகும்.

தற்கொலை என்பது கோழைகளின் மொழி! தற்கொடை என்பது தியாகிகளின் மொழி! காந்தீய தேசத்திற்கு மட்டுமல்ல, அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட முழு உலகத்திற்கும் அகிம்சைப்போரின் மகத்துவத்தை போதித்தவன் தியாகச்சுடர் திலீபன்.

1987 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 15 ம் நாள் தியாகி திலீபனின் அஸ்தமனத்தோடு அறப்போரின் முற்றுப்புள்ளி அதுவென ஏமாந்தவர்கள் ஏராளம். ஈழப்போர் வரலாற்றில் மிகப்பெரிய பாரதப் படையணியினருக்கெதிரான மறப்போர்த் தடத்தின் தொடக்கப்புள்ளி என்பதை பலர் உணர மறுத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் திலீபனின் தற்கொடை பெரும் சாட்டையடி.

திலீபனின் ஆகுதியில் தர்மமிருந்தது! நீதியிருந்தது! நேயமிருந்தது! அதனால் தான் அவனையும் அவன் கொள்கையையும் இன்றுவரை மக்கள் மனதில் கலங்கரை விளக்காக வைத்திருக்கிறார்கள். அகிம்சைப் போரினூடாக தன்னை ஈந்த திலீபனின் அர்பணிப்புக்கு பின்னால் மறைந்து கிடக்கும் தீர்க்க தரிசனங்கள் யாவை? அவை இன்றுவரை எதை உணர்த்துகிறது? தமிழர் தாயகத்திற்காக தியாகச் செம்மலால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளின் நிறைவேறியவை தான் எத்தனை? இயல்பாக, விடையின்றி எம்முள்ளே பொசுங்கிக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. இந்தக் கோரிக்கைகளினூடாக நிஜத்தின் விம்பமாக தமிழ்மக்களின் மனத்திரைகளில் நிதர்சனமாக வாழ்ந்துவருவது தவிர்க்க முடியாததாகின்றது.

திலீபனின் கோரிக்கைகள்

* மீள்குடியமர்வு என்ற பெயரில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துதல்
* சிறையிலும் தடுப்பு முகாம்களிலும் தகுந்த காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க்கைதிகளை விடுதலை செய்தல்.
* இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீக்குதல்.
* ஊர்காவல், கூலிப்படையினரின் ஆயுதங்களைக் களைதல்.
* தமிழ்ப் பிரதேசங்களில் புதிய காவல்நிலையங்கள் அமைத்தலை நிறுத்தல்.

திலீபனின் இன்றுவரையிலான தீர்க்கதரிசனத்தை உறுதிப்படுத்துவதன் பொருட்டு சில நிகழ்வுகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாக அமையும்.

திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர்க்கிழக்கு, திரியாய் போன்ற பல பிரதேசத்து மக்கள் மோதல் காரணமாக முற்றாக இடம்பெயர்ந்தது அறியப்பட்டதே. இதுவரைக்கும் தமிழ்மக்கள் மீளக்குடியேற்றப்படவில்லை. வரலாற்றுக்காலங்களையும் தாண்டி தாயகத்திலே புரான தமிழ்க் கிராமங்களில் தற்பொழுது புதிதாக புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. இது விடயமாக எத்தனை எதிர்ப்புக் குரல்கள் எழும்பியும் இலங்கை அரசை அசைக்க முடியாமல் உள்ளது. அதோடு இணைந்ததாக சிங்களக் குடியேற்றங்களும் அவர்களின் பாதுகாப்புக்காக காவல் நிலையங்களும் இன்றுவரை நடைபெற்றுக்கொண்டிருப்பதை அறிவோம். தியாகி திலீபனின் கோரிக்கைகளில் முதலாவதும் இறுதியானதும் இன்றுவரை நிதர்சனமாகி வருவதற்கான சில உதாரணங்களாகும்.

இலங்கை அரசின் உயர் பாதுகாப்பு வலயங்கள்

இலங்கையின் பேரினவாதிகள் தங்களுக்கு சாதகமாகவும் தமிழ்மக்களுக்கு பாதகமாகவும் நடைமுறைப்படுத்துவதற்கென இரு சொற்பிரயோகங்களை காலம் காலமாக பாவித்து வருவது ஒரு தந்திரமாகும். ஒரு வரையறைக்குள்ளும் கட்டுப்பட வைக்காமல் ஒரு ‘வழுவல்’ தன்மையை ஏற்படுத்துவது இலங்கை அரசின் வழக்கமாகும்.

ஒன்று ‘பாதுகாப்பு வலயம்’ மற்றையது ‘அபிவிருத்தி’. இவை இரண்டினூடாக தேவையான போது தமிழ்மக்களை குடியகற்றவும், சிங்கள மக்களை குடியேற்றவும் இலங்கை அரசினால் பிரயோகப்படுத்தப்படுகிறது.

மூதூர்க் கிழக்கைச் சார்ந்த மக்களும், பலாலி பகுதி மக்களும் ‘உயர் பாதுகாப்பு வலயம்’ என்ற போர்வையில் குடியகற்றப்பட்டதை நினைவில் கொள்ளலாம். அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகம் பறிபோவதும், இணைந்ததாக முஸ்லிம் தமிழ் மக்களின் அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் நாளாந்தம் மேற்கொள்வதையும் அறியலாம்

இவற்றுக்கும் மேலாக தடுப்பு முகாம்களையும் காவல் நிலையங்களையும் தமிழர் பகுதிகளில் நிறுவி, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை ஊக்குவிப்பதற்கான சக்திகளை அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. காவல் நிலையங்கள் திறக்கப்படுவது நாட்டு மக்களை சட்ட விரோத செயல்களில் இருந்து தடுப்பதற்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குமாகும்.

இலங்கையின் குறிப்பாக தமிழ்மக்களின் வாழ்வியலுக்கு அச்சுறுத்தலாக அமைவது காவல் நிலையங்களாகும். தமிழர் பகுதியில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டால் இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ‘இயமன் வந்திறங்கிய’ பயமாக இருக்கும். இவைகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக சிந்தித்துப் பார்க்கையில் தியாகி திலீபன் முன்வைத்த கோரிக்கைகளிலுள்ள நியாயங்கள் வெளித்தெரியும். அவனது தற்கொடையிலும் அர்த்தம் இருக்கும்.

தியாகி திலீபனின் மரணம் அனைத்து தமிழ்பேசும் மக்களை நோக்கிய சுதந்திரத்திற்கான தூர நோக்கு. அதுவே சுதந்திர வாழ்விற்கான அறைகூவல். வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென கோஷமிடுபவர்கள் ஒருகணம் சிந்திக்க வேண்டுகிறேன். வடக்கையும் கிழக்கையும் பிரித்ததன் பின் அமைந்த சூழலை சிந்தித்துப் பார்க்கவேண்டும். பலவந்தமான தமிழ்மக்கள் குடியகற்றலுக்கும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்துக்கும் இவர்களால் தீர்வுகாண முடியுமா? தாயினும் மேலான தாய்மண்ணை அன்னியவனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க தன்மானமுள்ள தமிழினத்தால் முடியாதென்பதை பிரதிபலிப்பதே தியாகச்சுடர் திலீபனின் தற்கொடை மரணமாகும்.

தியாகி திலீபனின் மரணம் உலக அரங்கில் வாழும் தமிழ்மக்கள் மனதில் என்றுமே அழியாது நிற்கும். அதற்கான பிரதான காரணம் யாதெனில் திலீபனால் முன்வைக்கப்பட்ட நியாயமிக்க 5 கோரிக்கைகளையும் அரசு என்றுமே நிறைவேற்றாது என்பது காலம் கூறும் பதில். இதற்கான வழிதான் என்ன என்பதை தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவரும் நேர்மையாகவும் நியாயமாகவும் சிந்திக்க வேண்டும். தனிப்பட்ட தேவைகளையும் சுயநலங்களையும் புறம்தள்ளிவிட்டு பேதங்களுக்கு அப்பால் தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைத்தல் வேண்டும்.

‘தேனீ கொட்டினால் உன்னோடு! தேனெடுத்தால் எனக்கும் பங்கு’ என்ற நிலை தமிழ்பேசும் மக்களிடமிருந்து மறையவேண்டும். அனைவரும் சர்வதேசரீதியாக ஒற்றுமையாய் நின்று ஓங்கி அழுத்தம் கொடுத்தால் பேரினவாதிகள் நியாயத்தை நோக்கி வருவார்கள். இன்றைய இந்த கால கட்டத்தில் மெளனமாக இருப்பின் ஈழத்தமிழினம் முற்றாகவே தொலைந்துவிடும். தலைமுறை தலைமுறையாய் இந்த வரலாற்றுத் தவறுகள் தொடர்ந்துகொண்டே வருமாயின் முடிவுதான் யாது? திலீபனின் மரணத்தில் ஒரு அர்த்தம் வேண்டுமென்றால் அவனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படல் வேண்டும்.

அவனது தற்கொடையை நினைவுகூருவதோடு மட்டுமல்லாது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான வழிவகைகளையும் கண்டு ஆராயவேண்டும். இல்லையெனில் தியாகி திலீபனின் கோரிக்கைகள் மட்டும் அவன்போன்று என்றுமே மரணமின்றி நிரந்தரமாய் வாழும்.

கனக கடாட்சம்
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
 • Dr.Murugan says:

  I was in Jaffna during the last day of Thileepan’s fast. I was part of Red Cross medical unit. I was asked to examine him. I dutifully reported that he might last one more day and asked his family to do any religious obligation that they have to perform for a departing soul.

  Thileepan’s mother wanted to give him some milk or water as a final liquid but there were some guys around him stopping that saying “Annan told us that nothing should be given to Thileepan”.

  Later on, I went to give a report to the Indian ambassador JN Dixit, who was in a meeting with the LTTE team. When I told them that Thileepan will live for an hour or two. No one cared and they were all having sumptious lunch with no regard to the fasting man.

  Only two people felt sad and did not eat lunch. One was an Indian diplomat, G.Parthasarathy and the other one was from the LTTE, Mattaya.

  I left Sri Lanka within a week and never set foot there. To me it is land of tragedy with no value for human life.

  September 14, 2010 at 14:59

Your email address will not be published. Required fields are marked *

*