TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மேற்குக்கரையாகும் தமிழீழ தாயகம்: சேரமான்

அபிவிருத்தி – மீள்குடியேற்ற நடவடிக்கைகள் என்ற போர்வையில் கடந்த ஓராண்டாக தமிழீழ தாயகப் பகுதிகளை சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளை முழுவீச்சுடன் மகிந்தரின் அரசு முன்னெடுத்து வருகின்றது. ஈழத்தீவை விட்டு ஆங்கில ஏகாதிபத்தியம் அகன்ற மறுகணமே டி.எஸ்.சேனநாயக்காவின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த சிங்கள மயப்படுத்தல் நடவடிக்கை, மாறிமாறி ஆட்சிக் கட்டிலேறிய சிங்களத் தலைமைகளால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற பொழுதும், இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று மகிந்தரின் ஆட்சிக்காலம் அமைந்துள்ளது.

முற்றுமுழுதாக சிங்கள இனவாதிகளின் வாக்குவங்கியைப் பயன்படுத்தி இரு தடவைகள் ஆட்சிக்கட்டிலேறியவர் என்ற வகையில், மகிந்தரின் இவ்வாறான சிங்கள மயப்படுத்தல் நடவடிக்கைகளையிட்டு நாம் ஆச்சரியப்படத் தேவையில்லை. எனினும் இதனை தடுத்து நிறுத்துவதற்கு குறைந்தபட்சம் பேச்சளவில்கூட கருத்துக்கூறாது உலக சமூகம் அமைதிகாப்பது, ஈழத்தீவை விட்டு தமிழினத்தை நிரந்தரமாக வேரறுக்க முற்படும் சிங்களத்திற்கு உலகம் துணைபோகின்றதா? என்ற கேள்வியை உலகத் தமிழர்களிடையே எழுப்பியுள்ளது.

ஒரு கடைந்தெடுத்த சிங்கள இனவாதி என்ற வகையில், ஈழத்தீவை முற்றுமுழுதாக சிங்கள மயப்படுத்துவதைக் குறியாகக் கொண்டு மகிந்தர் செயற்படுவது பட்டவர்த்தனமாகிய ஒரு விடயம். ‘மகிந்த ராஜபக்சவைப் போன்ற ஒரு தலைவர் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை’ என்று டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், கே.பியும் எத்தனை தடவை முழங்கினாலும், சிங்கள மயப்படுத்தல் என்ற மகிந்தரின் முழுப்பூசணிக்காயை இவர்களால் உண்மை என்ற சோற்றுக்குள் மறைத்துவிட முடியாது.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாளன்று சிங்கள தேசத்தின் அதிபராகப் பதவியேற்ற மறுகணமே தமிழீழ தாயகப் பகுதிகளில் உள்ள சிங்களக் குடியேற்றங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை மகிந்தர் தொடங்கியிருந்தார். நடுக்குறு நிலையில் போர்நிறுத்த உடன்படிக்கை தத்தளித்துக் கொண்டிருந்த அவ்வேளையில், வவுனியா, மணலாறு, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் உள்ள சிங்களக் குடியேற்றவாசிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, அனுராதபுரம், பொலனறுவை, மொனராகலை, அம்பாந்தோட்டை போன்ற எல்லைப்புற சிங்கள மாவட்டங்களில் இருந்து தமிழீழ தாயகப் பகுதிகளுக்கு சிங்களக் குடியேற்றவாசிகளை அனுப்பி வைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் மகிந்தரால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தண்ணீர்ப் பிரச்சினையை சாக்காக வைத்து 2006ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் நாளன்று மாவிலாறு நோக்கிய நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மகிந்தர் தொடங்கியிருந்த பொழுதும், உண்மையில் திருமலை மாவட்டத்தில் உள்ள சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதே அவரது இலக்காக அமைந்திருந்தது. இதன் அடுத்தபடியாக சம்பூர் பகுதியைக் குறிவைத்து நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடங்கிய மகிந்தரின் ஆயுதப் படைகள், பெருமெடுப்பிலான படைக்கலப் பிரயோகத்தின் ஊடாக மூதூர் கிழக்குப் பகுதிகளை ஆக்கிரமித்து, பின்னர் ஈச்சிலம்பற்று, வாகரை, திருக்கோவில் படுவான்கரை என தென்தமிழீழப் பகுதிகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன. ஏறத்தாள ஓராண்டாக தென்தமிழீழத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் மட்டும் 9,000 படையினர் பலியானதாக சிறீலங்கா படை அதிகாரிகளின் முன்னாள் முதன்மைத் தளபதியான எயார் மார்சல் டொனால்ட் பெரேரா, அண்மையில் இஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தென்தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சியில் இருந்து சிங்களப் படைகளால் பெரும் உயிர்விலை கொடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட பல பகுதிகள், ஈழத்தமிழர்களின் பூர்வீக வரலாற்றை உறுதிசெய்வதற்கான பல்வேறு தொல்லியல் எச்சங்களைக் கொண்டிருந்தன. இதில் மாவிலாறு என்று அழைக்கப்படும் பகுதி வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்து தமிழர்களால் அகத்தியனாறு என்று அழைக்கப்பட்டு வந்தது.

தமிழ் மொழியின் முதன்மை முனிவராகக் கருதப்படும் அகத்தியர், வரலாற்றுக்கு முந்திய காலப்பகுதியில் ஈழத்திற்கு வருகை தந்து சிறிது காலம் திருமலையில் தங்கியிருந்தார் என்றும், அவர் தங்கியிருந்த பகுதியைக் குறியீடும் செய்யும் வகையில் அங்கு காணப்படும் ஆற்றிற்கு அகத்தியனாறு என்று பெயர்சூட்டப்பட்டதாகவும் திருமலை தெற்குப் பகுதி மக்களிடையே பரம்பரை பரம்பரையாக ஐதீகம் ஒன்று நிலவுகின்றது. இதிலும் குறிப்பாக அகத்தியர் வழிபட்டதாகக் கூறப்படும் சைவ ஆலயம் ஒன்று கடந்த ஆண்டின் நடுப்பகுதி வரை திருமலை தெற்குப் பகுதியில் உள்ள காட்டுப்புறத்தில் அமைந்திருந்தது. எனினும் வரலாற்றுத் தொன்மை மிகுந்த இவ்வாலயம் கடந்த ஆண்டு சிங்கள இனவெறியர்களால் எச்சங்கள் எவையும் இன்றி துடைத்தழிக்கப்பட்டது.

இதேபோன்று பல வரலாற்றுத் தொன்மை மிக்க பகுதிகள் திருமலை மாவட்டத்தில் அமைந்துள்ளன. இதில் குறிப்பாக மூதூர் கிழக்கு – ஈச்சிலம்பற்று எல்லையில் அமைந்திருக்கும் இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைக் குறிப்பிடலாம். கரிகாற்பெருவளவன், இராசராச சோழன், இராசேந்திர சோழன் போன்ற மாமன்னர்களின் ஆட்சிக்கு ஈழத்தீவு உட்பட்டிருந்த காலப்பகுதிகளில் தென்கிழக்காசியாவிற்கான சோழர்களின் கப்பற் படைகளின் முதன்மைத் துறைமுகமாக திருமலை துறைமுகம் விளங்கியிருந்தது.

இங்கிருந்தே சாவகம் என்று தமிழில் அழைக்கப்படும் இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்திற்கான வணிக வலையமைப்பை சோழ மாமன்னர்கள் பாதுகாத்து வந்தனர். இவ்வாறான வரலாற்றுச் சிறப்பு மிக்க திருமலை துறைமுகத்தின் உப இறங்குதுறைப் பகுதியாகவே இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதி இயங்கியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியை தற்பொழுது சிங்களப் பூர்வீகப் பகுதியாக உரிமைகோரிவரும் பௌத்த பிக்குகள், பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக அரச மரக்கிளையுடன் இலங்கைக்கு அசோகச் சக்கரவர்த்தியின் புதல்வி சங்கமித்தையும், புதல்வன் மகிந்தனும் வருகை தந்த பொழுது, முதன்முதலில் முகத்துவாரம் பகுதியிலேயே தரையிறங்கியதாக கதையளந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக முகத்துவாரம் உள்ளடங்கலான திருமலை தெற்குப் பகுதிகளில் பரவலாக பௌத்த விகாரைகளும், புத்தர் சிலைகளும் நிறுவப்பட்டிருப்பதோடு, ஐக்கிய நாடுகள் கல்வி – விஞ்ஞான – பண்பாட்டு அமைப்பின் அனுசரணையுடன் சேருவில் பகுதி உலகப் பௌத்த பாரம்பரியப் பகுதியாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று குடும்பிமலை, கஞ்சிக்குடிச்சாறு போன்ற பூர்வீக தமிழ்ப் பகுதிகளிலும் பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டு சிங்கள மயப்படுத்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. சைவ ஆலயங்களை மட்டும் கொண்டிருந்த குடும்பிமலைப் பகுதியில் புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறி அங்கு பௌத்த விகாரைகளை மகிந்தரின் அரசு நிறுவியிருப்பதோடு, கஞ்சிக்குடிச்சாறு பகுதியிலும் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

உரோகணை இராச்சியத்தின் மன்னனாக விளங்கிய துட்டகாமினியால் பௌத்த பிக்குகளுக்கு உணவளிப்பதற்கு கஞ்சிக்குடிச்சாறு பகுதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, அதனையும் பௌத்த பாரம்பரியப் பகுதியாக மகிந்தரின் அரசு உரிமைகோரியுள்ளது. ஏற்கனவே பன்குளம், முதலிக்குளம் போன்ற திருமலை மாவட்டப் பகுதிகளுக்கு சிங்களப் பெயர்சூட்டியிருக்கும் சிங்கள அரசு, தற்பொழுது மகிந்தரின் ஆட்சியில் தென்தமிழீழப் பகுதிகள் முழுவதற்கும் படிபடியாக சிங்களப் பெயர்சூட்டும் நடவடிக்கைகளை மும்முரமாக முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான சிங்கள மயப்படுத்தல் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு பௌத்த கர்ணவழிக் கதைகளை பௌத்த பிக்குகளும், சிங்கள ஊடகங்களும் பயன்படுத்தி வருவது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.

ஈழத்தீவின் பூர்வீகக் குடிகளாக விளங்கும் தமிழர்கள், வரலாற்றுக்கு முந்திய காலத்தொட்டு முழுத்தீவிலும் வாழ்ந்ததை உறுதி செய்யும் தொல்லியல் சான்றுகள் காலத்திற்குக் காலம் வெளிப்படுகின்ற பொழுதும், இவற்றை மூடிமறைப்பதிலும், திரிவுபடுத்துவதிலுமே சிங்களம் குறியாக உள்ளது. இதில் குறிப்பாக அண்மையில் அம்பாந்தோட்டைப் பகுதியில் வெளிவந்த தொல்லியல் சான்றுகளை குறிப்பிட முடியும்.

மேலைத்தேய ஆட்சியாளர்களின் வரலாற்றுக் குறிப்புக்களை நாம் புரட்டிப் பார்க்கும் பொழுது, தமிழீழ தாயக மாவட்டங்களில் மட்டுமன்றி 16ஆம், 17ஆம், 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளில் அனுராதபுரம், பொலனறுவை போன்ற மாவட்டங்களிலும் பெரும்பான்மையினராக தமிழர்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

எனினும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஊடாகவே இரு மாவட்டங்களிலும் தமிழர்களின் பெரும்பான்மைப் பரம்பலை இல்லாதொழித்த சிங்களம், தற்பொழுது இதே யுக்தியைக் கையாண்டு தமிழீழ தாயகப் பகுதிகளில் தமிழர்களின் பெரும்பான்மைப் பரம்பலை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இவ்வாரம் யாழ்ப்பாணத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபாமா ராவ் அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பொழுது, இது தொடர்பாக மிகவும் துணிச்சலாக வரலாற்றுப் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் கேள்வியெழுப்பியிருந்தார். இடம்பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதாகக் கூறிக் கொண்டு, தமிழீழ தாயகப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபடுவது, தமிழீழ மக்களிடையே கிளப்பியுள்ள சீற்றத்தையே பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களின் கருத்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யாழ்ப்பாணம், வன்னி ஆகியவற்றின் திசைகளில் தலைவைத்துப் படுப்பதற்குக்கூட அஞ்சிய சிங்களவர்கள், இன்று யாழ் குடாநாடு நோக்கியும், வன்னிப் பெருநிலம் நோக்கியும் படையெடுத்து வருகின்றனர். யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் சிங்கள சுற்றுலாப் பயணிகளாலும், யாத்ரீகர்களாலும், வணிகர்களாலும் நிரம்பி வழிவதோடு, தமிழர்களின் காணிகளை எந்த விலை கொடுத்தாவது கொள்வனவு செய்து அங்கு குடியமர்வதில் சிங்களவர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.

இதற்கு உடந்தையாக தமது காணிகளை சிங்களவர்களிடம் அற்ப பணத்திற்காக தாரைவார்ப்பதற்கு புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் சிலர் முற்படுவது வேதனைக்குரியது. யாழ் குடாநாட்டிலும், வன்னியிலும் அதியுயர் படைவலயப் பகுதிகளாக சிங்களப் படைகளால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள இடங்களில் இருந்து குடிபெயர்ந்து இரவல் காணிகளில் ஏதிலிகளாகத் தங்கியிருந்த தமிழ் உறவுகளை விரட்டியடித்து விட்டு, அதேகாணிகளை சிங்களவர்களிடம் இவ்வாறான புலம்பெயர்ந்த சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

தரிசு நிலங்களாக விளங்கிய காணிகளை கூடுதல் விலையில் யூதர்களிடம் விற்பனை செய்து தமது பூர்வீக நிலங்களை பலஸ்தீனர்கள் இழந்தமை போன்று, இன்று பணத்திற்காக தமிழீழ தாயகத்தை சிங்களத்திடம் தாரைவார்த்து தமது சந்ததியின் தலையில் இவ்வாறான புலம்பெயர்ந்த சிலர் தூர்வாருகின்றனர்.

யுத்த வெற்றியின் மமதையில் மூழ்கிக் கிடக்கும் மகிந்தர், தமிழீழ தாயகத்தை முழுமையாக சிங்கள மயப்படுத்துவதில் கங்கணம்கட்டி நிற்கின்றார். கடுகதியில் தமிழீழ தாயகப் பகுதிகளில் முளைவிடும் பௌத்த விகாரைகள் இச்செய்தியையே உணர்த்துகின்றன. பண்டைக்காலத்தில் பௌத்த மதத்தைத் தழுவிய தமிழ் மன்னர்களால் நிறுவப்பட்ட பௌத்த விகாரைகளின் எச்சங்களைக் கொண்ட கதிரமலை என்று பண்டைக்காலத்தில் அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதிக்கு தற்பொழுது கந்துறுகொட என்று சிங்களப் பெயர்சூட்டப்பட்டுள்ளது. இதேபோன்று இதனை அண்டியுள்ள சுன்னாகம் பகுதிக்கு குணுகம என்று சிங்களப் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

யாழ் புறநகரப் பகுதியிலும், வலிகாமம் வடக்கு அதியுயர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள பூர்வீகத் தமிழ்க் கிராமங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது. இதேபோன்று வன்னியில் சைவ ஆலயங்களும், கிறிஸ்துவ தேவாலயங்களும் அமைந்துள்ள பல பகுதிகளுக்கு சிங்களப் பெயர்சூட்டப்பட்டு, பௌத்த விகாரைகள் நிறுவப்பட்டு, மீள்குடியேற்றம் என்ற போர்வையில் காதும்காதும் வைத்தாற் போன்று அங்கு சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றன.

மேற்குக்கரையிலிருந்து பலஸ்தீனர்களை நிரந்தரமாக வேரறுக்கும் நோக்கத்துடன் அங்கு யூதக் குடியேற்றங்களை இஸ்ரேலிய அரசு நிறுவுவதற்கு ஒப்பான நடவடிக்கையையே இன்று தமிழீழ தாயகத்தில் மகிந்தரின் அரசு முன்னெடுத்து வருகின்றது.

இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களாகிய நாம் என்ன செய்யப் போகின்றோம்? கடந்த ஓராண்டுக்கு மேலாக தேர்தல் திருவிழாக்களிலும் நாடுகடந்த அரசு என்ற மாயைக்குள்ளும் சிக்கிக் கிடந்த புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள், இனியாவது உண்மையை உணர்ந்து காத்திரமான முறையில் செயற்பட வேண்டும். கே.பி-உருத்திரகுமாரன் குழுவினரின் முகத்திரை இன்று உலகத் தமிழினத்தின் முன்னால் அசிங்கமாகக் கழன்று விழுந்துள்ளது.

கடந்த மூன்றரை மாதங்களாக எதனையுமே சாதிக்காது அறிக்கைகளுடன் மட்டும் நாடுகடந்த அரசு முடங்கிக்கிடக்கும் நிலையில், 2009 மே 18இற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டார்களோ, அதேபோன்று மீண்டும் ஒரே குடையின் கீழ் செயற்படுவதற்கு புலம்பெயர்வாழ் தமிழீழ தேசிய அமைப்புக்களும், செயற்பாட்டாளர்களும் முன்வரவேண்டும். இதற்கு உறுதுணையாக தமது செயற்திட்டங்களை ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழீழ மக்களவைகள் வகுத்துக் கொள்வது அவசியமானது.

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*