TamilSpy

பொழுது போக்கு இணையம்…

முத்துமாலைக் கனவில் இலவுகாத்த கிளியாக்கப்படும்

பனிப்போருக்குப் பின்னரான ஒருதுருவ உலக ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பதில் கடந்த இரண்டு தசாப்தங்களாக அமெரிக்கப் பேரரசு மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறான ஒருதுருவ ஒழுங்கை பல்துருவ ஒழுங்காக மாற்றியமைப்பதற்கான வல்லமையை ஐரோப்பிய ஒன்றியம், ரசியா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்றவை கொண்டிருப்பதாக பனிப்போரின் முடிவில் பன்னாட்டு அரசறிவியலாளர்கள் பலர் கருத்து வெளியிட்டிருந்த பொழுதும், இதற்கான வாய்ப்புக்களை வெற்றிகரமாக அமெரிக்கப் பேரரசு தடுத்து நிறுத்தியிருப்பதை கடந்த இரண்டு தசாப்தங்களாக நிகழ்ந்தேறிய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

பனிப்போர் காலப்பகுதியில் சோவியத் முகாமின் பக்கம் சாய்ந்து மேற்குலக எதிர்ப்புக் கொள்கையைக் கையாண்டு வந்த இந்தியா, சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பின்னர் படிப்படியாக மேற்குலகின் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் சென்று, இன்று மேற்குலகின் நெருங்கிய நண்பனாகப் பரிணமித்துள்ளது. 1980களில் ஈழத்தீவில் அமெரிக்காவின் காலூன்றலுக்கு அஞ்சி தமிழீழ விடுதலை இயக்கங்களுக்கு உதவிபுரிந்து, சிங்கள அரசை தன்னிடம் மண்டியிட வைத்த அதே இந்தியப் பேரரசு, இன்று இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஒரு வகையில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பன்னாட்டுக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வழங்கல் கப்பல்கள் தாக்கியழிக்கப்பட்ட சம்பவங்களுடன், இந்திய – அமெரிக்க கடற்படையினருக்கு மறைமுகத் தொடர்பு இருந்தமை தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் தற்பொழுது கசியத் தொடங்கியுள்ளன. இந்த வகையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டம் என்பது அமெரிக்காவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஒத்திசைவானதாகவே அமைந்துள்ளது. அண்மைக் காலங்களில் திருமலை துறைமுகத்தை மையப்படுத்தி அமெரிக்க துருப்புக்கள் மேற்கொள்ளும் பயணங்கள் இதனையே புலப்படுத்துகின்றன.

இதேநேரத்தில் முத்துமாலை வடிவில் பர்மாவில் இருந்து சிறீலங்கா உள்ளடங்கலாக பாகிஸ்தான் வரை தனது கடல் வியூகத்தை வகுத்து, இந்தியாவை கேந்திர நெருக்கடிக்குள் இட்டுச்செல்வதற்கு சீனப் பேரரசு முற்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இதன் உச்சகட்டமாக சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் வருங்காலத்தில் பெரும் போர் வெடிக்கக்கூடும் என்றும், இது ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக அமையலாம் என்றும், சில இந்திய ஆய்வுக் கட்டுரைகள் கட்டியம்கூற முற்படுகின்றன.

உண்மையில் நிகழ்கால உலக ஒழுங்கு தொடர்பான தெளிவற்ற புரிதலையே இவ்வாறான கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. இங்கு நாம் ஒருவிடயத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எந்தவொரு அணுவாயுத வல்லரசுகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில்லை என்பதே அவ்வுண்மையாகவும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான பனிப்போர் என்பது அணுவாயுதச் சமநிலையை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்த வகையில் அமெரிக்காவிற்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான யுத்தங்கள், நேச நாடுகள் ஊடான நிழல் யுத்தங்களாகவே வடிவமெடுத்திருந்தன. கியூபா, வியட்னாம், நிக்கராகுவா, ஆப்கானிஸ்தான், எரித்திரியா என உலகெங்கும் நிகழ்ந்தேறிய ஒவ்வொரு யுத்தங்களும் அமெரிக்காவிற்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான நிழல் யுத்தங்களாகவே அமைந்திருந்தன. இங்கு அமெரிக்காவோ அன்றி சோவியத் ஒன்றியமோ நேருக்கு நேர் மோதிக் கொள்ளவில்லை: அன்றி இரு வல்லரசுகளின் அணுவாயுதங்களும் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளவும் இல்லை.

இதேபோன்று 1960களில் சீனாவிற்கும், சோவியத் ஒன்றியத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல்கூட யுத்தமாக வெடிக்கவில்லை. இரு வல்லரசுகளும் தம்மகத்தே அணுவாயுதங்களைக் கொண்டிருந்த நிலையில், நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது இவர்களைப் பொறுத்த வரையில் மூலோபாய ரீதியில் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையையே கொண்டிருந்தது.

பனிப்போர் முடிவுக்கு வந்து தற்பொழுது செப்டம்பர் 11இற்குப் பின்னராக உலக ஒழுங்கு பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்ற பொழுதும், இன்றும்கூட வல்லரசுகளிடையேயான யுத்தங்களை தவிர்க்கும் சக்தியாக அணுவாயுதச் சமநிலையே விளங்குகின்றது. சுயதேசிய நலன்களின் அடிப்படையில் செயற்படும் ஒவ்வொரு அரசுகளும், தமது படைய – பொருண்மிய வலிமையை விரிவுபடுத்த முற்படுவதென்பது இயல்பானதே. இதில் பகடைக் காய்களாக சிறிய அரசுகளும், நிழல் அரசுகளும், விடுதலை வேண்டி நிற்கும் தேசிய இனங்களும் சிக்கிச் சின்னாபின்னமாகின்ற பொழுதும், பொதுவாக அணுவாயுத வல்லரசுகள் தமக்குள்ளே பெருமெடுப்பில் நேரடியாக மோதிக் கொள்வதைத் தவிர்த்தே வருகின்றன.

அவ்வாறான அணுவாயுத வல்லரசுகளிடையே ஏற்படும் எல்லைச் சண்டைகள்கூட, சிறிதுகாலத்திற்கு நீடித்துப் பின்னர் இராசதந்திர முன்னெடுப்புக்கள் ஊடாகத் தணிக்கப்படுகின்றன. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் கடந்த காலத்தில் இந்தியா போர்புரிந்த பொழுதும், இவை மரபுவழி ஆயுதங்களைக் கொண்ட யுத்தங்களாகவே அமைந்திருக்கின்றன.

பனிப்போருக்குப் பின்னரான ஒருதுருவ உலக ஒழுங்கில் ஏகோபித்த உலகக் காவலாளியாக தன்னை நிர்ணயித்திருக்கும் அமெரிக்கா, அணுவாயுத வல்லரசுகளிடையே மோதல்கள் நிகழ்வதைத் தடுப்பதிலும், தணிப்பதிலும் கவனம் செலுத்தி வருகின்றது. குறிப்பாக செப்ரம்பர் 11இற்குப் பின்னர் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் போர் வெடிப்பதை தடுத்து நிறுத்துவதில் பல தடவைகள் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டுள்ளது.

இதேபோன்று சீனப் பேரரசின் படைய எழுச்சி அமெரிக்காவிற்கு உறுத்தலாக அமைந்துள்ள பொழுதும், பொருண்மிய ரீதியில் சீனாவுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் அமெரிக்காவும், ஏனைய மேற்குலக வல்லரசுகளும் முனைப்புக்காட்டி வருகின்றன. கார்ல் மார்க்ஸின் பொதுவுடமைத்துவக் கொள்கையைக் கைவிட்டு தாராண்மைப் பொருண்மியத்தை ஆரத்தழுவியுள்ள சீனாவுடன் கைகோர்த்திருக்கும் அமெரிக்கா, சீனா – மேற்குலகம் – இந்தியா என்ற திரிகோணப் பொருண்மிய வியூகத்தை வகுத்து, அதனூடாகத் தனது மேலாதிக்கத்தைப் பேண முற்படுகின்றது.

வெளிப்புறத்தில் தமது படை வலிமையைப் பெருக்கிக் கொள்வதிலும், பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிசெய்வதிலும் சீனாவும், இந்தியாவும் முனைப்புக்காட்டுகின்ற பொழுதும், திரைமறைவில் அமெரிக்காவின் திரிகோணப் பொருண்மிய வியூகத்திற்கு உட்பட்டு இரு வல்லரசுகளும் தம்மிடையேயான பொருண்மிய உறவை கட்டியெழுப்ப முற்படுவது பல ஆய்வாளர்களின் கண்களை மறைத்துவிடுகின்றது.

இவ்வாறான இந்திய-சீன பொருண்மிய உறவைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள், பாரதப் பிரதமாக வாஜ்பாய் அவர்கள் பதவி வகித்த காலப்பகுதியிலேயே தொடங்கப்பட்டிருந்தன. மேற்குலகின் அனுசரணையுடன் தற்பொழுது இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு இந்திய-சீன வல்லரசுகள் முழுமையாக செயல்வடிவம் கொடுத்து வருகின்றன.

பொருண்மிய உறவைக் கட்டியெழுப்புவதன் ஊடாக உலக நாடுகளுக்கு இடையிலான யுத்தங்களை தடுக்க முடியும் என்பது, தாராண்மைத்துவக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்குகின்றது. இவ்வாறான கோட்பாட்டிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலேயே சீனா – மேற்குலகம் – இந்தியா என்ற திரிகோணப் பொருண்மிய வியூகத்தை தற்பொழுது அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வருகின்றன.

வெளித்தோற்றத்தில் தென்படும் சீனாவின் முத்துமாலை வியூகம் பற்றி இந்திய ஆய்வாளர்களும், படைத்துறை நிபுணர்களும் அலறியடித்துக் கொண்டிருக்க, சத்தம் சந்தடியின்றி பொருண்மியக் கதவின் ஊடாக சீனாவையும், இந்தியாவையும் தனது நிகழ்ச்சித் திட்டத்திற்குள் கொண்டு வந்து தனது உலக மேலாதிக்கத்தை தக்க வைக்கும் நடவடிக்கைகளை முனைப்புடன் அமெரிக்கப் பேரரசு செயற்படுகின்றது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் போர் வெடிக்கும் என்ற கற்பனையில் இலவு காத்த கிளியாக ஈழத்தமிழர்கள் காத்திருக்க, உலகத் தமிழினத்தின் இதயங்களில் இருந்து தமிழீழக் கருத்தியலை சிதைப்பதற்கான வியூகங்களை உலக வல்லரசுகள் செயற்படுத்தி வருகின்றன. இவ்வாறான கனவுலகிலிருந்து மீண்டெழுந்து தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து மாவீரர்களின் இலட்சியக் கனவை நனவாக்குவது என்பது உலகத் தமிழர்களின் காத்திரமான செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.

நன்றி: ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*