TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“நான் தங்கதுரையின் மகன்!” கரிகாலன்

தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்… ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்? சிங்கள இனவெறியின் கோர அடையாளங்களாக மூன்று உயிர்களும் வரலாற்றில் பதிந்துவிட்டன. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட, தங்க துரையின் குடும்பம் தமிழ்நாட்டில் வசித்தது. அந்த தங்கதுரையின் மகன் கரிகாலனுக்குக் கடந்த வாரம் சென்னையில் திருமணம்!

வெலிக்கடை சிறைக் கலவரத்தில் மோசமான சித்ரவதையால் தங்கதுரை கொல்லப்பட்ட பிறகு, அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., தங்கதுரையின் குடும்பத்துக்கு அரசு சார் பாக நந்தனத்தில் வீடு வழங்கி ஆதரவு அளித்தார். தங்கதுரையின் மனைவி நவமணி, தனது ஒரே மக னைப் படிக்கவைத்துக்கொண்டு இங்கேயே இருந்தார்.

தமிழகத்திலும், இலங்கையிலும், லண்டனிலும் படித்த தங்கதுரையின் மகன் கரிகாலன், இப்போது லண்டனில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தர்சனா என்ற லண்டனில் வசிக்கும் ஈழத் தமிழ்ப் பெண்ணுக்கும் கரிகாலனுக்குமான திருமண விழா வில் எங்கும் ஈழத் தமிழ் வாசம். பல்வேறு நாடுகளில் இருந்தும் குவிந்திருந்த உறவினர்கள், உறவுகளைச் சந்தித்து உணர்வுகளைப் பறிமாறிக்கொண்டனர்.

பார்க் ஹோட்டலில் தங்கி இருந்த கரிகாலனை அடுத்த நாள் சந்தித்தபோது அமைதியாகப் பேசத் தொடங்கினார். “எங்களுக்குச் சொந்த ஊர் வல்வெட்டித்துறை. கடல் வணிகம்தான் தொழில். எங்க அம்மாவின் குடும்பத்தினர் மூன்று தலை முறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டனர். இந்தியக் குடியுரிமையுடன் இங்கு வசித்த அம்மாவை, அப்பா தமிழ்நாட்டில்தான் சந்தித்திருக்கிறார்.

போராட்ட நோக்கங்களுக்காக தமிழ்நாட்டுக்கு வந்து போனபோது அம்மாவுடன் பழக்கமாகி, இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், என் அம்மாவுடன் அப்பா சேர்ந்து குடும்பம் நடத்தியது வெறும் 10 மாதங்கள்தான். நான் பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அப்பா மறுபடியும் இலங்கைக்குப் போய்விட்டார். நான் ஒரே ஓர் இரவுகூட அப்பாவுடன் சேர்ந்து உறங்கியது இல்லை.

எனக்கு இரண்டரை வயது இருக்கும்போதுதான் அப்பாவைக் கைது செய்து வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்திருந்தனர். கம்பியின் அந்தப் பக்கம் அப்பாவும், இந்தப் பக்கம் என்னை வைத் தபடி அம்மாவும் நின்று இருந்ததாக அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன். பிறகு, கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டு இருந்தபோது, அப்பா போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது அவ ரைப் பார்த்து நான் கதறி அழுதேன். என்னைத் தூக்கிக் கொஞ்சுவதற்கு அப்பாவுக்கு அனுமதி அளித்தார் நீதிபதி. பிறகு, அப்பா என்னைக் கண்ணீருடன் தூக்கிக்கொண்டார். இவை எல்லாம் மசமசப்பான நினைவுகளாக இருக்கின்றன. இவ்வளவுதான் அப்பாவுக்கும் எனக்குமான தொடர்பு. அதன் பிறகு கொஞ்ச நாட்களிலேயே அப்பா, மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுவிட்டார்.

நான் பள்ளிக்கூடம் படித்தது முழுக்க முழுக்க சென்னையில்தான். கல்லூரி படிப்பதற்கு 99, 2000 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொழும்பில் தங்கிஇருந்தேன். நான் இந்தியக் குடியுரிமை வைத்து இருந்ததால், தங்கதுரையின் மகன் என்ற அடை யாளமே தெரியாமல், படித்து முடித்தேன். பிறகு, லண்டனுக்கு படிக்கப் போனேன். இப்போது கல்யாணம். இதுவரையிலான, என் அமைதியான வாழ்க்கைக்கு ஆதரவளித்த தமிழகத் தலைவர்களுக்கு நன்றி!” என்கிற கரிகாலனுக்கு சிறையில் இருந்தபடியே அந்தப் பெயரை வைத்தவர் தங்கதுரைதான்.

“லண்டனில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புகளில் ஓர் அங்கத்தினனாக இணைந்து செயல்படுகிறேன். என் தந்தையின் உயிர்த் தியாகத்துக்குக் காரணமான ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்தப் போராட்டத்தின் மீது எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். பலர் விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் போராட்டத்தில் இணைத்துக்கொண்டதாகச் சொல்வார்கள்.


அப்படிக் கட்டாயத்தின் பேரில் இணைக்கப்பட்டு இருந்தால், நான் அதை ஆதரிக்கவில்லை. ஆனால், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் ஆதரவால்தான் இலங்கையில் போராட்டம் நடந்தது என்று சொல்வதை நான் ஏற்கவில்லை. அவர்கள் பணம் கொடுக்கலாம். ஆதரவாக இருக்கலாம். ஆனால், அவை எதுவுமே இல்லை என்றாலும், அங்கு போராட்டம் நடந்திருக்கும். அதற்கான தேவை அங்கு இருந்தது. தவிரவும், கோடி கோடியாக கொட்டிக் கொடுக்கப்படும் புலம்பெயர் தமிழர்களின் பணத்தைக் காட்டிலும் வன்னியில் சாகும் தமிழர்களின் உயிர் முக்கியமானது.

நான் கடைசியாக சமாதான காலத்தின் முடிவில் இலங்கைக்குப் போனேன். அதன் பிறகு போகவில்லை. இப்போது இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள்கூடக் கிடைக்காத நிலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சாப்பிட உணவும், வசிக்க ஒரு கூடாரமும், உடலை மறைப்பதற்குத் துணியும், தொடர்ச்சியான வருமானத்துக்கான தொழிலும்தான் அந்த மக்களுக்கான உடனடித் தேவைகள்.

ஈழத் தமிழர் பிரச்னையில், பல்வேறு கருத்து முரண்பாடுகள் உள்ள அமைப்புகள் ஒன்றிணைந்து இன்னும் உண்மையாக, நியாயமாக உழைக்க வேண்டும். இலங்கையில் இன்னொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமா என்று கேட்டால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால், விதவிதமான துப்பாக்கிகள் மட்டுமே ஆயுதங்கள் இல்லை. அடிக்க வருபவரை நோக்கி கல் எடுத்து வீசுவதும் ஆயுதப் போராட்டம்தான். அப்படி ஓர் உரிமைப் போராட்டத்தை நான் வரவேற்கிறேன்… ஆதரிக்கிறேன்!”

நன்றி:விகடன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
  • John says:

    Karikalan, name your first child your father’s name. His soul will be happy. Never leave the road for which your father gave his valuable life. Inspire as many Tamil youth as you can to fight for their rights. Never become selfish like the modern Tamil politicians

    September 11, 2010 at 20:24
  • csj says:

    அமைதியான வாழ்க்கைக்கு ஆதரவளித்தஇலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை

    September 28, 2010 at 05:42

Your email address will not be published. Required fields are marked *

*