TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணம்

வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?.

தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

ஆனால் அவரின் பயணம் தமிழ் மக்கள் மத்தியில் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை. 1987 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்திய அதிகாரிகள் திருபூரி மற்றும் குப்தா ஆகியோர் யாழ் வந்தபோது தமிழ் மக்கள் கொண்ட எழுச்சிகள் மிகப்பெரியன.

அதன் பின் பல தசாப்தங்களின் பின்னர் யாழுக்கு விஜயம் செய்யும் இந்திய அரசின் உயர்மட்டத் தலைவராக நிருபமாவை தென்னிலங்கை ஊடகங்கள் சித்தரித்தபோதும், அவரின் விஜயம் யாழ் மக்களிடம் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தவில்லை.

மேலும் யாழ். நூலகத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட விரும்பத்தகாத நடவடிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் சார்பில் கலந்துகொண்ட ஒரு சில அதிகாரிகள், படைத்துறையின் அழுத்தங்களையும் மீறி தமது உள்ளக் குமுறல்களைக் கொட்டியுள்ளனர்.

நிருபமா இடம்பெயர்ந்த மக்களின் முகாம்களுக்கு சென்றார் எனவும், வடக்கில் 50,000 வீடுகளையும், கிழக்கில் 10,000 வீடுகளை கட்டித்தருவோம் எனத் தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் அவன் வடக்கு, கிழக்குப் பயணம் என்பது ஒரு சுயாதீனமானது அல்ல, இலங்கைப் படை அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோருடன் சென்ற அவர், ஒரு படைத்துறை அழுத்தங்களின் கீழ் உள்ள மக்களின் உண்மையான நிலையைக் கண்டிருக்க முடியாது எனக் கூறுவதை விட, காண்பதற்கு அவர் முற்படவில்லை என்பதே சரியானது.

இலங்கை அரசு சந்தித்துள்ள சவால்களை இந்தியா இணைந்து எதிர்கொள்ளும் என யாழில் பேசும்போது, நிருபமா தெரிவித்துள்ள கருத்தின் அர்த்தம் தமிழ் மக்களுக்கு புரியாதது அல்ல.
இருந்தபோதும், இந்திய இராணுவத்தளபதி லெப். ஜெனரல் விஜயகுமார் சிங், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார், வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோரும் இந்த வருட முடிவுக்குள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இவர்களின் வருகையின் நோக்கம் தெளிவானது, அதாவது இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் பிரசன்னத்தை புறம்தள்ளி வடக்கு கிழக்கில் ஆளுமை செலுத்தும் தன்மை தமக்கு உண்டு என காண்பிக்கவே இவர்கள் இங்கு வருகின்றனர். ஆனால் எந்த மக்கள் தனக்கு பின்னால் உள்ளனர் என இந்தியா இலங்கையை மிரட்ட முற்படுகின்றதோ, அந்த மக்களின் வேண்டாத விருந்தாளிதான் இந்தியா என்பதை புரிந்து கொள்ளாத முட்டாளாக நாம் இலங்கையைக் கருதி விட முடியாது.

எனினும் தனது வரட்டு கௌரவத்தை விடுத்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கு நன்மை தரும் விடயங்களை அவர்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் இந்தியாவுக்கு விருப்பமில்லை. ஆனால் தற்போதைய நிலையில் வடக்கு கிழக்கை கைவிட்டால் இந்தியா தப்பிப்பிழைக்க வழியில்லை. அதற்கான காரணத்தை உலகின் ஆய்வாளர்கள் தெளிவாக முன்வைத்து வருகின்றனர்.

பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான எரிக் மார்கொலிஸ் (Eric Margolis) கூறும் செய்தி இந்தியாவுக்கு அதிர்ச்சியானது.

அதாவது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மிகப்பெரும் போர் ஒன்று நெருக்கி வருவதாக கடந்த மாதம் 21 ஆம் திகதி “த எகொனமிஸ்ட்’ என்ற சஞ்சிகை வெளியிட்ட கட்டுரையில் எரிக் தனது கருத்தை முன் வைத்திருந்தார்.

இந்திய சீனா போர் குறித்து கடந்த ஒரு தசாப்தமாக தான் சிந்தித்து வருவதாகவும், 2.3 பில்லியன் மக்களை கொண்ட இந்த நாடுகளின் மோதல் ஆசியா பிராந்தியத்தின் பேரழிவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

21 ஆவது நுõற்றாண்டின் முதலாவது பெரும் நெருக்கடி ஆப்கானிஸ்தானில் ஏற்படும் எனத் தான் முன்னர் தெரிவித்த ஆய்வு, பல வருடங்களின் பின்னர் உண்மையாகியதாகவும், அதன்போது தன்னை பெருமளவான ஊடகங்கள் தொடர்பு கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை எவ்வாறு நீங்கள் அறிந்துகொண்டீர்கள் என எல்லோரும் தன்னைக் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமன்றி, வடதிசையில் திபெத்தின் ஊடாகவும், தெற்கில் இலங்கை ஊடாகவும், கிழக்கில் பர்மா ஊடாகவும், மேற்கில் பாகிஸ்தான் ஊடாகவும் இந்தியாவை சீனா ஏற்கனவே சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கான படையினரை கொண்டுள்ள போதும் சீனாவின் எழுச்சியை கண்டு இந்தியா அஞ்கின்றது. எந்தவொரு சிறு எல்லைத் தகராறும் மிகப்பெரும் மோதலாக மாறும் சாத்தியம் மெல்ல மெல்ல உறுதியாகி வருகின்றது.

இந்நிலையில், இந்துசமுத்திரத்தில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாகவும், இலங்கை உட்பட அதன் எழுச்சிகளை இந்தியா புறக்கணிக்க முடியாது எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாது, முதன் முதலாக பர்மா துறைமுகத்தினை சீனாவின் இரண்டு போர்க் கப்பல்கள் சென்றடைந்துள்ளன. இதனால். இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு தேவையான எரிபொருட்களின் 80 விகிதத்தையும், இந்தியாவுக்கு தேவையான 65 விகிதத்தையும் கொண்டு செல்லும் பாதை இந்து சமுத்திரப் பிராந்திய பகுதியாகும். இந்தப் பாதைகளின் பாதுகாப்பை சீனா தன்வசப்படுத்தியுள்ளதால் இந்தியாவில் நிலைமை கவலைக்கிடமாக மாற்றமடைந்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மாற்றீடாகாக சேது சமுத்திரத் திட்டத்தை இந்தியா கையில் எடுத்தபோதும் அதுவும் தோல்வியில் முடிந்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனா செலவிட்டதை விட அதிகமான தொகையை இந்தியா செலவிட்டும் அதனால் பலன்கள் எதுவும் ஏற்படவில்லை.

அது வெற்றிபெற்றாலும் 30,000 தொன்னுக்கு அதிகமான கப்பல்கள் (பெரிய கப்பல்கள்) அதனூடாக செல்லமுடியாது. இந்த நிலையில் தான் இலங்கை மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்த இந்தியா மீண்டும் தமிழ் மக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகவே இந்திய அதிகாரிகளின் தொடர் பயணங்கள் அமைந்துள்ளன.

ஆனால் தலைக்குமேல் கத்தி தொங்கும் போதும் அவர்களின் தெரிவுகள் என்பது தவறானதாகவே உள்ளது. தமிழர் தரப்புடன் அவர்கள் மேற்கொள்ளும் உறவுகளும், இலங்கை தொடர்பில் அவர்கள் காண்பித்துவரும் மென்மையான போக்கும் இந்தியாவின் இறைமையை காப்பாற்ற உதவப்போவதில்லை.

மாறாக 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தொடர்பில் இந்திரா காந்தி என்ன முடிவை துணிச்சலாக எடுத்தாரோ அதே ஒரு சூழ்நிலை இந்தியாவின் தென் மூலையில் தற்போது ஏற்பட்டுள்ளது. அன்று மேற்கில் தோன்றிய நிலை தற்போது இந்தியா விரும்பியோ, விரும்பாமலோ தெற்கில் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் முடிவில் தான் அதன் எதிர்காலம் தங்கியுள்ளது என்பது தெளிவானது, ஏனெனில் இந்தியா சீனா போர் ஆரம்பித்தாலும் மேற்குலகம் நாலாவது ஈழப்போல் காண்பித்த மௌனத்தை தான் கடைப்பிடிக்கும். ஐ.நாவும் நிலைமையை சமாளித்து தான் தப்பிக்கொள்ளவே வழிதேடும், ஒரு தரப்பு அழிந்துபோவதை அவர்கள் மறைமுகமாக அனுமதிப்பார்கள்.

இரண்டாவது உலகப்போரில் ஐரோப்பா கண்ட அழிவை ஒத்த பேரழிவை ஆசியாவில் காண அவர்கள் காத்திருக்கிறார்கள். அதனால் ஆசியாவில் அமைதியும், உறுதித்தன்மையும் ஏற்படும் என மேற்குலகம் நம்புகின்றது.

இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் உள்ள ஈழத்தமிழ் இனத்திற்கு தற்போது இந்தியா தேவையற்றது, மாறாக இந்தியாவுக்கு தற்போது ஈழத்தமிழர்களின் உதவி தேவையாக மாற்றமடைந்துள்ளது. அதனைத் தான் இந்திய அதிகாரிகளின் ஓய்வற்ற பயணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

வேல்ஸிலிருந்து அருஷ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*