TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நிருபமா ராவ் – நமல் ராஜபக்ச – நியுசிலாந்து – அவுஸ்திரேலியா

நிருபமா ராவ் – நமல் ராஜபக்ச – நியுசிலாந்து – அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்).

கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைத்தீவுக்கு சென்ற இந்தியாவின் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ்வின் நகர்வுகள் சிறிலங்கா வட்டாரத்தில் சில நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நாட்டின் இறைமை என்பதும் அதன் தனித்துவம் என்பதும் அந்நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதிலும் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு அணுகின்றன என்பதிலும் தான் தங்கியுள்ளது. இதுவே யதார்த்தமானது.

ஆனால் சிறிலங்காவின் விடயத்தில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் என்னதான் பெரும்பான்மையை பெற்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை தமது பக்கம் ஈர்த்துக்கொண்டாலும் தமிழர் தேசத்தின் பிரச்சனை என்பது தனியானது தனித்துவமானது அதனை தனியே அணுகவேண்டும் என்ற சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடுகள் இருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக இதனை பார்க்கமுடியாது என்றாலும் அண்மைய நிருபமாராவின் பயணம் முக்கியமானது. இதற்கு முன்னரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்றபோது – அதற்கு முன்னரே சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்த – முக்கிய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்திக்கமுடிந்திருந்தது.

எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் வெளிநாட்டமைச்சர் எஸ்எம் கிருஸ்ணா இலங்கைக்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாகவே நிருபமாராவின் பயணம் அமைந்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு என ”கதைவிட்டு” காலத்தை ஓட்டாமல் பொருத்தமான அரசியல் அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்படவேண்டும் என நிருபமா ராவ் சொல்லியிருக்கின்றார்.

பழையவற்றை மறந்து புதியபாதையில் இணைந்து பயணிப்போம் என வன்னிப்பேரழிவில் இந்தியாவின் பங்கை சுட்டிக்காட்டிய யாழ்ப்பாண கல்விச்சமூகத்திற்கு சொல்லியிருக்கின்றார்.

இதனால் இந்தியாவுக்கு திடிரென தமிழர்கள் மீது பாசம் வந்துவிட்டது என எண்ணமுடியாது. பிராந்திய மற்றும் வர்த்தக நலனில் அக்கறையுள்ள இந்தியா, ”கட்டுமீறி செல்லும்” சிறிலங்கா அரசை தனது கைக்குள் கொண்டுவருவதற்கு மீண்டும் தமிழர் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. ஆனால் அதற்குள் சுழியோடி தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் பெற்றுக்கொள்வதற்கு தமிழர்கள் தரப்புக்கள் தமது வியூகங்களை வகுக்கவேண்டும்.

தற்போது வன்னியில் நடைபெறும் மீள்க்குடியமர்வுக்கான செயல்திட்டங்களில் ஏகபோக அரசியல் செய்யும் மகிந்தவின் கம்பனியின் இளையவாரிசு நமல் ராஜபக்ச பலத்த செல்வாக்கு செலுத்திவருகின்றார். வன்னியிலுள்ள பாடசாலைகளிலிருந்து அனைத்து மாணவர்களையும் கூட்டிய அவர் தனது ஆசிர்வாதத்தை வழங்கினாராம். இவருடைய ஆசிர்வாதத்துக்காக பரீட்சை நாட்கள் என்றும் இல்லாமல் பாடசாலை மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது ஒரு புறமிருக்க இதன் பின்னனியிலுள்ள மகிந்த சிந்தனையை பற்றிய அச்சமே இன்னும் அதிகமாக இருக்கின்றது.

தமிழர்களின் உரிமைப்போரின் போது அதன் தேவைகளுக்காக ஆயுதங்களை கப்பலில் கொண்டு சென்றார் என குற்றஞ்சாட்டப்பட்டு அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட தமிழர் ஒருவருக்கு அவரது கோரிக்கையை விடுதலைப்போராட்டத்துக்காக ஆயுதங்களை கொண்டுசேர்த்தார் என்பதற்காக நிராகரிக்கமுடியாது என அந்நாட்டு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த தமிழரோடு தொடர்புபட்ட மேலும் இரு தமிழர்கள் அந்நாட்டிலிருந்து ஏற்கனவே அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், தனியொருவராக அதனை எதிர்த்து வழக்காடி தமிழர்களது போராட்டத்தின் நியாயத்தையும் வெளிப்படுத்திய நிகழ்வாக அது அமைந்துள்ளது.

இதேவேளை ஜேர்மனியில் மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனை உரிய முறையில் எதிர்வுகொண்டு தமிழர்களின் விடுதலைப் போருக்கான நியாயத்தன்மைகளை சர்வதேச சமூகத்திற்கு கொண்டுவரவேண்டும்.

தற்போது சிறிலங்கா அரசின் மனித உரிமைகளுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்பிவரும் நிலையில் தமிழர்கள் தமது கருத்துக்களை வெளியுலகிற்கு கொண்டுவரவேண்டும். முன்னெப்போதையும் விட தற்போதைய சூழலில் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தினை நியாயப்படுத்தகூடிய சூழ்நிலை உள்ளது.

இன்று சர்வதேச மனிதஉரிமை சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவுஸ்திரேலியாவில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட மூன்று பேர் சிறிலங்காவில் சித்திரவதை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

சிறிலங்கா அரசையும் அவுஸ்திரேலிய அரசையும் குற்றஞ்சாட்டியுள்ள இவ்வமைப்பு அவர்களின் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்தும்படி கோரியுள்ளது.

இந்த மூன்று பேரும் தமிழர்கள் அல்ல. சிங்களவர்களான இம்மூவருக்குத்தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது. சிங்களவர்களுக்கே இந்தநிலை என்றால் தமிழர்களின் நிலையை சொல்லவா வேண்டும்.

சங்கிலியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • John says:

    Let all the sinahlaese understand the wolf in sheep’s cloth Mahindra is going to be a dictator for the sinhalses too. He must meet his end at the hands of the sinhalese. Let every sinhalese understand that this scoundrel is selling srilanka to Chinese government.

    September 4, 2010 at 14:15

Your email address will not be published. Required fields are marked *

*