TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை: இரா.துரைரத்தினம்

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்.

தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.

ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் வகையிலேயே இன்று சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் மட்டக்களப்பு பன்குடாவெளியில் நடைபெற்ற ஒரு சம்பவம் இனவிடுதலைக்காகவும் அந்த விடுதலைப் போராட்டத்திற்காகவும் முழுக்குடும்பமுமே தம்மை அர்ப்பணித்திருந்தவர்களுக்கு இந்த சமூகம் கைகொடுக்க தவறிவிட்டதே என்ற வேதனையும் ஆதங்கமுமே மேலோங்கியிருக்கிறது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்ப்பணித்த ஒரு குடும்பம். கடந்த வாரம் அந்த குடும்பத்தில் எஞ்சியிருந்த போராளித் தாயும் இறந்து போனபோது அவர்களின் இரு பிள்ளைகள் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் என மேற்குலக நாடுகளில் இருந்து வீரப்பிரதாபம் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு அந்த குழந்தைகளின் அழுகுரல்கள் கேட்டிருக்காது.

கடந்த பொதுத்தேர்தல் காலத்தில் எத்தனை கோடி ரூபா என்றாலும் தருகிறோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்பதற்கு மட்டக்களப்பில் தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவை நிறுத்த வேண்டும் என லண்டனிலிருந்து கங்கணம் கட்டி நின்ற அந்த அரசியல்வாதிக்கு கூட தனது பிரதேசத்தில் கேட்கும் அவலக்குரல்கள் கேட்டிருக்காது. ஏனெனில் அவர்கள் அந்த அழுகுரல்கள் கேட்கும் திசையை நோக்கி தமது புலன்களை செலுத்த தயாராக இல்லை. அவர்கள் பயணிப்பதெல்லாம் தமது மக்களை பலிகொடுத்து தமது சொகுசு வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்காகத்தான்.

பெண்போராளியான ஒரு தாய் தனது மருத்துவ செலவுக்கு வேண்டிநின்றதெல்லாம் வெறும் 38ஆயிரம் ரூபாதான். ஆனால் அந்த பணம் அவளது கைகளுக்கு கிடைக்காமலே இந்த மாதம் 17ஆம் திகதி தனது இரு குழந்தைகளையும் அனாதைகளாக விட்டு இந்த உலகைவிட்டு பிரிந்து போனாள். அவள் மட்டுமல்ல அவளின் கணவன், தந்தை என முழுக்குடும்பமுமே இனவிடுதலைக்காக தங்களது உயிர்களை தியாகம் செய்தவர்கள்தான். அப்படிப்பட்ட ஒரு தியாக குடும்பத்தின் வாரிசுகளான இரு பிஞ்சுக்குழந்தைகள் இன்று அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

செங்கலடியிலிருந்து 4கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளைவீதியில் அமைந்துள்ள கிராமம்தான் பன்குடாவெளியாகும். புளொட் இயக்க கொலைகாரக் குழுக்கள் ஆக்கிரமித்திருந்த கறுப்பு பாலத்தை கடந்து சென்றால் வரும் கிராமம்தான் பன்குடாவெளியாகும். பல போராளிகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் தந்த கிராமம்தான் அது.

அக்கிராமத்தில் பிறந்தவள்தான் சித்திரா என்ற ஷகிலா. அவளது தந்தை சீனித்தம்பி பத்மநாதன் அந்த கிராமத்தில் மிக வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். வயல் காணி என பொருளாதார ரீதியில் எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்த குடும்பம்.

இந்திய இராணுவம் வடகிழக்கை ஆக்கிரமித்திருந்த வேளையில் விடுதலைப்புலிகள் காடுகளிலேயே தஞ்சமடைந்திருந்தனர். இனவிடுதலையை நேசித்த பத்மநாதன் விடுதலைப்புலிகளுக்கு உணவு உட்பட அனைத்து உதவிகளையும் கொண்டு சென்று சேர்ப்பிப்பதில் அவரும் அவரது குடும்பமும் பெரும்பங்களிப்பு செய்தது.

இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருந்த போது மட்டக்களப்பு அம்பாறை பிரதேச போராளிகள் காடுகளில் சில இடங்களில் குழுக்களாக தங்கியிருந்தனர். வாகரை, அம்பாறை காட்டுப்பகுதிகளில் இரு குழுக்களும், தாந்தாமலை, மாவடிஓடை, புலுட்டுமானோடை, தொப்பிக்கல், கார்மலை, மீசைக்கல்திடல் ஆகிய அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏனைய மூன்று குழுக்களும் தங்கியிருந்தனர். இவர்களில் மாவடிஓடை, புலுட்டுமானோடை, தொப்பிக்கல், கார்மலை போன்ற காட்டுப்பகுதியில் இருந்த போராளிகளுக்கு உணவுப்பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதில் பத்மநாதன் பெரும்பங்கு வகித்தார். சகல காட்டுப்பாதைகளையும் பரிச்சயமாக கொண்ட பத்மநாதன் மகியங்கனை வீதிவரை போராளிகளை கொண்டு சேர்த்திருக்கிறார். பத்மநாதன் அண்ணன் என்றால் அப்போதையை போராளிகள் அனைவருக்கும் தெரிந்த ஒருவர்.

ஒரு சந்தர்ப்பத்தில் மறைந்திருந்த போராளிகளுக்கு உணவுப்பொருள்களை எடுத்து சென்ற போது இந்திய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பத்மநாதன் இந்திய இராணுவத்தாலும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய தமிழ்குழுக்களாலும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். அதன் பின்னர் சிறைவைக்கப்பட்டிருந்த அவர் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் விடுதலையானார்.

விடுதலையான பத்மநாதன் 1990ம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து படுவான்கரைப் பிரதேசத்தில் செயற்பட்ட விடுதலைப்புலிகளுக்கு பல வழிகளிலும் தொடர்ந்து உதவி செய்து வந்தார். இதனால் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும் அரச ஆதரவுத் தமிழ் குழுக்களாலும் பல முறை தாக்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் 1991 ஏப்ரல் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய புளொட் போன்ற ஆயுதக்குழுக்களும், இலுப்பையடிச்சேனையில் வைத்து பத்மநாதன் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். காலில் காயமடைந்த பத்மநாதனை கரடியனாறு இராணுவ முகாமுக்கு கட்டி இழுத்து சென்றனர். பின்னர் சடலத்தை கூட அவரின் குடும்பத்தினருக்கு இராணுவத்தினர் கொடுக்கவில்லை. அவரின் தேச விடுதலைப்பற்றையும் விடுதலைப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் மதித்து விடுதலைப்புலிகளின் தேசியத்தலைமை அவருக்கு நாட்டுப்பற்றாளர் என மதிப்பளித்திருந்தது.

அவரது மூத்தமகள் ஷகிலா 1990ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்போராளியாக இணைந்து சித்திரா என்ற பெயரோடு ஆயுதப்போரட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1990 ஜனவரியில் விடுதலை புலிகளின் மக்கள் முன்னணி அரசியல் கட்சியின் உருவாக்கத்தை தொடந்து வாகரையில் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டது இம் மகாநாடுக்கு விடுதலைப்புலிகளின் மகளிர் அமைப்பு பிரதிநிதி சுந்தரியும் வருகை தந்திருந்தார். அங்கு வந்த அவர் பெண்கள் மத்தியில் நடத்திய பல சந்திப்புக்களை தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து பல பெண்போராளிகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர். அந்த பெண் போராளிகளில் ஒருவர்தான் பன்குடாவெளி பத்மநாதனின் மகள் ஷகிலா என்ற சித்திரா. க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றிருந்த அவர் பல்கலைக்கழகம் செல்வதற்கு வாய்ப்பிருந்த போதிலும் அதை துறந்து இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு சென்ற சித்திரா அங்கு ஆயுதப்பயிற்சி பெற்று போராட்ட களத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார். 1991 முற்பகுதியில் ஆனையிறவு சமரின் போது சித்திரா காயமடைந்தார். அவரது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் ஓரளவு குணமடைந்த சித்திரா தொடர்ந்து பல களங்களைச் சந்தித்தார்.

சித்திரா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டதையடுத்து அவரது கிராமத்தை சேர்ந்த அவரது காதலனான உருத்தியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு வன்னியில் திருமணமும் நடைபெற்றது.

இரு பிள்ளைகள் பிறந்ததை தொடர்ந்தும் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்ததாலும் சித்திரா இயக்க பணிகளிலிருந்து விலகியிருந்தார். ஆனால் அவரது கணவன் உருத்தி தொடர்ந்து போராட்ட களத்திலேயே இருந்தார்.

வன்னியிலிருந்த உருத்தி 2007ஆம் ஆண்டு இயக்க பணிகளுக்காக மட்டக்களப்பு தளவாய் பகுதிக்கு அனுப்பபட்டிருந்த போது 2007ஆம் ஆண்டு யூலை மாதம் 23ஆம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவருக்கு விடுதலைப்புலிகளால் மேஜர் தரம் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் தனது இரு பிள்ளைகளுடன் பன்குடாவெளியில் வாழ்ந்து வந்த சித்திராவுக்கு கடந்த ஆண்டு மே மாதம் வரை விடுதலைப்புலிகளால் வன்னியிலிருந்து மாவீரர் குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நிதியில் தனது இரு பிள்ளைகளையும் சித்திரா படிப்பித்துக்கொண்டிருந்தார்.

ஆனையிறவு சமரின் போது முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டதால் நீண்டகாலமாக அந்த நோவினால் பாதிக்கப்பட்டிருந்த சித்திராவுக்கு முள்ளந்தண்டில் சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். அதற்காக அவளுக்கு 38ஆயிரம் ரூபா தேவைப்பட்டது. தனக்கு தெரிந்த வெளிநாடுகளில் உள்ள சிலரிடமும் உதவியை கோரியிருந்தாள். ஆனால் அந்த உதவி அவளுக்கு கிடைக்காமலே இந்த மாதம் 17ஆம் திகதி (17.08.2010) தனது இரு பிள்ளைகளையும் தவிக்க விட்டு இந்த உலகைவிட்டே சென்றுவிட்டாள். அவள் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முதல் வெளிநாடு ஒன்றில் தற்போது தஞ்சம் அடைந்திருக்கும் போராளி ஒருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது பிள்ளைகள் இரண்டும் அநாதைகளாக போய்விடப்போகிறார்கள் என கவலைப்பட்டிருந்தார்.

விடுதலையின் பேரால் சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துகள் மேற்குலக நாடுகளில் பலரின் கைவசம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சித்திரா வேண்டி நின்றதெல்லாம் 38ஆயிரம் ரூபா மட்டும்தான். மேற்குலக நாடுகளில் மக்களின் பணத்தில் ஏப்பம் விடுபவர்களுக்கு எங்கே சித்திரா போன்றவர்களின் அழுகுரல் கேட்கப்போகிறது.

சித்திராவின் தந்தையும் அவரது குடும்பமும் விடுதலைப்புலி போராளிகளுக்கு செய்த உதவிகள் கொஞ்சம் அல்ல. ஓடி ஒடி உதவி செய்த குடும்பத்தின் வாரிசுகள் இன்று அனாதைகளாக நடுவீதிக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.

போராளிகளுக்கு அவரது குடும்பம் செய்த உதவிகளில் ஒன்றை இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளரும் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியால் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு வடக்கு வட்டவையின் தலைவராகவும் இருந்த சட்டத்தரணி வேணுதாஸ் 1990 யூன் மாதத்தின் பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு முழுநேரமாக இணைந்து பன்குடாவெளிப் பகுதியிலேயே இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக மட்டக்களப்பு நகரிலிருந்து சென்ற வேணுதாஸின் மனைவியை இராணுவத்தினர் பிடித்து சித்திரவதை செய்து படுகொலை செய்து விட்டு செங்கலடி கறுப்பு பாலத்திற்கு அண்மையில் உள்ள கிணறு ஒன்றில் போட்டிருந்தனர்.

அதை அறிந்த பத்மநாதனும் சிலரும் அங்கு சென்று வேணுதாஸின் மனைவியின் சடலத்தை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு வந்தனர். சவ அடக்கத்தை செய்திருந்தனர். அதன் பின்னர் சிறிது காலத்தின் பின்னர் வேணுதாசும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதேபோன்றுதான் வேணுதாஸின் இரு பெண் பிள்ளைகளும் தாய் தந்தையை இழந்து அனாதைகளாக்கப்பட்டிருந்தனர்.

வேணுதாஸின் மரணம் குறித்து மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகள் தலைமைப்பீடத்திற்கு அறிவிக்கவே இல்லை. தமிழ் இளைஞர் பேரவையின் மட்டக்களப்பு செயலாளரும் பின்னாளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து செயற்பட்ட சட்டத்தரணி வேணுதாஸ் பற்றி ஈழநாதம் பத்திரிகையில் செய்தி வெளிவந்த போதுதான் அதை அறிந்து கொண்ட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வேணுதாஸிற்கு மேஜர் தரம் வழங்கி மதிப்பளித்திருந்தார். வேணுதாஸ் தனது ஆரம்பகால நண்பர் என்பதையும் பிரபாகரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு விடுதலைப் போராட்டத்திற்கு மட்டுமல்ல விடுதலைப் போராளிகள் ஆதரவாளர்கள் என அனைவருக்கும் உதவிகளை செய்து வந்த ஒரு குடும்பம்தான் பன்குடாவெளி பத்மநாதனின் குடும்பம். தமிழ் இனத்தின் விடுதலையை அதீதமாக நேசித்ததன் காரணமாக அவரின் பேரப்பிள்ளைகளான சங்கீதா (11வயது) சங்கீத் ( 7வயது) ஆகியோர் இன்று யாரும் அற்ற அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள். அவரின் போராளி மகள் வெறும் மருத்துவச் செலவுக்கு 38ஆயிரம் ரூபா கிடைக்காமல் இந்த உலகை விட்டு சென்று விட்டாள்.

யுத்தத்தின் கோரத்தின் ஒரு துளிதான் சித்திராவின் கதை. சித்திராவைப்போல ஆயிரம் ஆயிரம் போராளிகளும், போராளிகளின் இழப்பினால் அனாதைகளாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளும் மட்டக்களப்பு வன்னி என தமிழர் தேசம் எங்கும் காணப்படுகின்றனர். ஆனால் அவர்களின் அழுகுரல்களை மட்டும் இந்த சமூகம் கேட்கமறுக்கிறது.

மீண்டும் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என வீராப்பு பேசிக்கொண்டு விடுதலைப் போராட்டத்தின் பேரால் சொத்துக்களை பதுக்கி வைத்துக்கொண்டிருப்பவர்களின் காதுகளில் மட்டும் இந்த அவலங்களும் அழுகுரல்களும் கேட்பதாக தெரியவில்லை. கேட்டாலும் அதைப்பற்றி இரங்குவதற்கு அவர்களுக்கு மனங்களும் இல்லை. அவர்களின் நோக்கம் எல்லாம் அழுகுரல்களின் ஊடாக அவலங்களின் ஊடாக மரணங்களின் ஊடாக தமது சொகுசு வாழ்க்கையை அமைப்பதுதான்

இந்த வீராப்பு பேசுபவர்களுக்கு தேவைப்படுவதெல்லாம் வடக்கு கிழக்கில் எஞ்சியிருக்கும் தமிழ் இனமும் அழிந்து போகவேண்டும் என்பதுதான்.

இப்போது தமிழ் இனம் வேண்டிநிற்பதெல்லாம் ஆயிரக்கணக்கில் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்பதுதான். இனவிடுதலைக்காக தங்களை ஆகுதியாக்கிய அந்த தாயினதும் தந்தையினதும் ஆத்மாக்கள் வேண்டுதெல்லாம் தங்களின் குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள் என்பதுதான். அனாதைகளாக்கப்பட்ட சித்திராவின் இரு பிள்ளைகளைப்போல கண்ணீருடன் எதிர்காலத்திற்காக ஏங்கி நிற்கும் பிஞ்சுகளுக்கு யார் உதவ முன்வருவார்?

[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured
  • தமிழன் says:

    இங்கு புலத்தில் மக்களிடம் கொள்ளையடித்த கோடிக் கணக்கான பணத்தை அவரவர் சுறுட்டுவதற்காக போராடுகிறீர்கள். அங்கே இப்படியான அவலம். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் ஒரு சதமேனும் அன்றும் மக்களுக்காக செலவிடவில்லை. இன்றும் அதை உங்கள் சொந்த சொத்தாக மாற்ற போராடுகிறீர்கள்.

    September 5, 2010 at 10:21
  • nesan says:

    i would like to help the kids please send me more details.

    September 6, 2010 at 20:46

Your email address will not be published. Required fields are marked *

*