TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“கலைஞ”ரின் சீடருக்கு ஓர் கனிவான விண்ணப்பம்!

29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் “தேசத் துரோகி”யு(?)மான சரத் பொன்சேகாவினால் “அரசியல் கோமாளிகள்” என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.

இந்தப் “பெருமகன்” முன்னர் இந்தியா அனுப்பிவைத்த குழுவில் முக்கிய அங்கம் வகித்து, இலங்கையின் “மனிதாபிமானம் மிக்க” செயல்பாடுகளைப் புகழ்ந்து கூறியவர் என்பதையும் தமிழர்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

தமிழர் பிரதேசங்களில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படுவது தொடர்பான கேள்வி ஒன்றுக்குக்குப் பதில் அளித்த அவர், அவ்வாறு தமிழர் கூட்டமைப்பினர் உட்படப் பலரும் கூறுகிறார்கள் என்றாலும் அதனை நாம் நேரடியாகப் பார்வையிட்ட பின்னரே கருத்துத் தெரிவிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பசில் ராஜபக்சவிடம் இது பற்றித் தாம் பேசிய போது, அவர் அவ்வாறு எதுவும் இல்லை என்று கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே பசில் ராஜபக்ச, இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே தடுப்பு முகாம்களில் இன்னும் 35,000 பேர் இருப்பதாகக் கூறிய போது, அப்படி ஏதும் இல்லை இன்னும் சிலரே இருக்கிறார்கள் என அறிவித்திருந்தார். கலைஞரின் சீடர், ஐ.நா பிரதிநிதியின் கூற்றை நம்பாது, இந்தியாவின் நட்பு நாடான இலங்கையின் “பொருளாதார மேம்பாட்டு” அமைச்சரின் சொல்லை ஏற்றுக்கொள்கிறார் போலும்.

நல்ல வேளை முள்ளிவாய்க்காலில் முப்பதாயிரம் தமிழர்கள் மூன்றே நாட்களில் பலியானதற்கும் ஆதாரம் தேவை என்று சொல்லாமல் விட்ட அவரது “தமிழ் உணர்வை”ப் பாராட்டத்தான் வேண்டும்!

இந்தியா இலங்கைக்கு உதவி செய்யத்தான் முடியும். அங்கு “பொலீஸ்காரன்” வேலை பார்க்க முடியாது என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார். அப்படி ஒரு வேளை “பொலீஸ் வேலை” பார்த்தாலும் ஆகப் போவது எதுவும் இல்லை என்பது தெரிந்ததே. சிவசங்கர் மேனனும்,பிரணாப் முகர்ஜியும், கலைஞரின் “சிறப்பு” உண்ணா நோன்பும் சாதிக்காத வித்தையையா “பொலீஸ்காரன் வேலை” நிகழ்த்திவிடும் ?

இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடக்கவிருக்கும் மாநிலப் பொதுத் தேர்தல்; மீண்டும் உங்கள் அரசையும், மத்திய அரசையும் ஈழத் தமிழர்களுக்காகக் “கண்ணீர் உகுக்கும்” நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை “தமிழக அரசியல்” பற்றிய ஆரம்ப அறிவு படைத்தவர்கள் புரிந்துகொள்ளாமல் இல்லை!

என்றாலும், நீங்கள் பேசுவதும்,செய்வதும் உங்களுக்கே “நியாயமாக”ப் படுகிறதா ?

அண்டை மாநிலம் ஒன்றில், அதுவும் ஒரே இனத்தினராய் வாழும் உங்களுக்கே, உங்கள் சகோதரர்களது உணர்வினையும், அவர்கள் படும் துயரினையும் புரிந்து கொள்ள இயலாமல் அவர்கள் அடையும் அத்தனை அவமானங்களுக்கும், உயிர்-உடமை இழப்புகளுக்கும் சாட்சிகள் தேவை என்று சொல்வீர்களேயானால் உங்களிடம்போய் தமிழினத்தின் அவல நிலையைக் கூறுவதே அவமானம் அல்லவா?

“தானாடா விட்டாலும் தன் சதை ஆடும்” என்பதெல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தானா? பதவிகளில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பொருந்தாதா ?

இதோ உங்களது பேட்டி வெளியான அதே “வீர கேசரி”யின் 29 ஆம் பக்கத்தில், சரணடைந்த தமிழ்ப் பெண்களுக்கு நேரும் அவலம் பற்றிய செய்திக் கட்டுரை ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

சென்றவாரம் வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் அரசின் பொலீசாரும்,சிறை அதிகாரிகளும் அங்கிருந்த தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொண்ட சோதனை மிலேச்சத்தனமாக இருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஆண்கள் சுற்றியிருக்க பெண்களின் உள்ளாடைகளைத் தளர்த்திவிட்டுப் போதைப் பொருள், “சிம் கார்ட்” இவைகளைத் தேடும் போர்வையில் அவ்வதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள். தமது இன உறுப்புகளின் மீது நடத்தப்பட்ட இவ் வக்கிரத்தைப் பொறுக்க முடியாமல், அப் பெண்களில் சிலர்,” நாம் திருமணம் ஆகாதவர்கள். இப்படியான மோசமான பரிசோதனைகளை எமக்குச் செய்யாதீர்கள்” எனக் கூறிய போது, ஓர் தமிழ் பேசும் அரச அதிகாரி …”நான் இன்று எதுவும் செய்யக்கூடாது சமய ரீதியான முக்கிய நாள் இது” என்று “நக்கலாக”ப் பதில் உரைத்திருக்கிறார்.

கலைஞரின் சீடருக்கு, இவை போன்ற சம்பவங்களுக்கும் சாட்சியங்கள் தேவைப்பட்டால் நாம் என்ன செயவது?

ஓர் அரசியல் வாதியாக, ஆளும் கட்சி ஒன்றின் முதிர்ந்த தலைவராக இருக்கும் ரி.ஆர். பாலு அவர்களே, நீங்கள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு விசுவாசமாக இருங்கள்.அதுதான உங்களுக்கும் பாதுகாப்பு. ஆனால், அதற்காக ஈழத்தில் வாடும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்க்கை உங்கள் அரசியல் சதுரங்கத்தின் துருப்புச் சீட்டு என எண்ணிச் செயல்படுவது “மானிட விழுமியங்களுக்கு” எதிரானதாகும் என்பதை உணருங்கள். ஈழத்தின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் “கலைஞ”ரிடம் எடுத்துச் சொன்னவற்றை விடவும் உங்களுக்கு, பசில் ராஜ பக்சே கூறியது வேதவாக்காக இருக்கலாம். ஆனால் ஈழத்தில் கடந்த அறுபது வருடங்களாக அரசியல் முகவரியைச் சிறிது சிறிதாகச் சிங்களப் பெரும்பான்மையிடம் பறிகொடுத்து, இன்று மானத்தையும் இழந்து நிற்கும் உங்கள் சகோதரர்களுக்கு நீங்கள் கூறுவன யாவும் ஓர் “மூன்றாந்தர அரசியல் வாதியின் தந்திரப் பேச்சாகவே” தோன்றும்.

ஈழத்தமிழனின் அரசியல் வரலாறு, உங்கள் தலைவர் “கலைஞ”ருக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும், அவர் ஆரம்பகாலத்தில் எழுதிய வீர வசனங்களையே மறந்துவிட்டு “எட்டிய மட்டும்கூடப் பாயத்துணியாத” வர்களாய் இருப்பது தமிழினத்தின் சாபக் கேடே!

சர்வசித்தன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*