TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்”

தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக்கதவை தட்டியது-அனலை நிதிஸ் ச. குமாரன்.

கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்” என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம். இந்த மனமாற்றம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நேஷனல் போஸ்ட் பத்திரிகை கடந்த பல வருடங்களாக ஈழத்தமிழருக்கு எதிரான கட்டுரைகளையே எழுதி வந்துள்ளது. குறிப்பாக, ஈழத்தமிழர் என்றால் அவர்கள் அனைவருமே புலிகள் என்றும் அவர்களில் பலர் புலிகளிடம் ஆயுதப்பயிற்சி பெற்று கனடாவிற்குள் உட்புகுந்தார்கள் என்றும் பொய்யான கருத்துக்களை கனேடிய மக்கள் முன் வைத்து பிரச்சாரம் செய்து கொண்டுவந்தார்கள். ஸ்டீவர்ட் பெல் என்ற கட்டுரையாளர் ஈழத்தமிழருக்கு எதிரான தரக்குறைவான கட்டுரைகளையே எழுதிவந்துள்ளார். ஆனால், ஈழத்தமிழ் ஏதிலிகளின் மடல்களை இவரின் பந்தியூடாக கனடிய மக்கள்முன் வைக்கப்பட்டுள்ளமையானது வாய்மை எப்பொழுதும் வெல்லும் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.

ஆகஸ்ட் 12 (வியாழக்கிழமை) பிற்பகல் நான்கு மணிக்கு பின்னர் கனேடிய அதிகாரிகள் எம்.வி-சன்-சீ என்ற கப்பலை நெருங்கி, 59 மீற்றர் நீளமுள்ள அந்தக் கப்பலை விக்ரோறியாவிற்கு அருகேயுள்ள எஸ்குமல்ட் துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை காலை கொண்டுவந்தனர். பல மணிநேரங்களாக அந்த கப்பலை பரிசோதனை செய்த பின்னர், கப்பலில் வந்த 492 தமிழீழ ஏதிலிகளை இறக்கி தமது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் தங்குமிடங்களில் வைத்து சட்டப்படி செய்யவேண்டிய பணிகளை கனடிய அதிகாரிகள் செய்துகொண்டார்கள். குறிப்பாக, இந்த கப்பலில் வந்தவர்களில் 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்குகின்றார்கள். ஒரு குடும்பஸ்தர் (37 வயதானவர்) ஜூலை 28-ஆம் திகதி கப்பளுக்குள்ளேயே நோய் காரணமாக இறந்துவிட்டார். இவரின் உடலை கடலுக்குள்ளேயே வீசிவிட்டு பயணித்தார்கள் கனடாவின் கரையை தொட்ட இந்த ஏதிலிகள். இறந்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஈழத்தில் வசிப்பதாக கனடிய அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். மேலும், கப்பலை ஓட்டி வந்த ஓட்டுனரை யாருமே காட்டிக்கொடுக்க முன்வரவில்லை என்று கனடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே, கப்பல் பசிபிக் சமுத்திரத்தில் பயணிக்கும்போதும் மற்றும் கனடிய எல்லையை தொட்ட பின்னரும் கனடிய ஊடகங்கள் இந்த ஏதிலிகளுக்கு எதிராக முழக்கமிட்டார்கள். இந்த கப்பலை திருப்பி அனுப்பிவிடவேண்டும் என்று பகிரங்கமாகவே கனேடிய அரசை நிர்ப்பந்தித்தார்கள். ஆனால், கனேடிய அரசோ இவர்களின் கூக்குரலை செவிமடுக்காமல், கனடிய சட்ட திட்டங்களுக்கு அமைய தமது கடமையை செய்து தமிழீழ ஏதிலிகளை கனடிய நாட்டுக்குள் அனுமதித்து அவர்களின் புகலிட கோரிக்கையின் விண்ணபங்களை குடிவரவு நீதிபதி முன் சமர்ப்பித்து அவரின் தீர்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். இதனிடையே, கனடிய ஊடகங்களில் குறிப்பாக நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம் மூலம் நிச்சயம் இந்த ஈழ ஏதிலிகளின் மனுவை கேட்டறியும் நீதிபதி சாதகமான தீர்ப்பையே வழங்க வழிகோணும் என்பதே சட்டவல்லுனர்களின் கருத்து.

தமிழருக்கு எதிரான கொடுமை சிறிலங்காவில் நின்றபாடில்லை

தமிழருக்கு எதிரான கொடுமைகள் சிறிலங்காவில் நின்றபாடில்லை என்று சாட்சியமாக கூறியுள்ளார்கள் தமது மடல்கள் மூலமாக நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு. ஏதோ கடந்த வருடத்துடன் போர் நின்றுவிட்டதாகவும், புலிகள் தான் பயங்கரவாதத்தை சிறிலங்காவில் நடாத்தி மக்களை கொடுமைப்படுத்தியதாக கருதி செய்திகளையும் கட்டுரைகளையும் வரையும் கனேடிய செய்தித்தாபனங்களுக்கு உண்மையின் நிதர்சனம் என்ன என்பதை தெரியப்படுத்தியுள்ளார்கள் கனடாவை வந்தடைந்து இருக்கும் ஈழ ஏதிலிகள்.

உள்ளூர் மற்றும் உலக ஊடகங்களை அனுமதிக்காமலும் பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாகவும் நான்காம் ஈழப் போர் கடந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், உலக ஊடகங்களோ உண்மையறியாது சிறிலங்கா அரசு கொடுக்கும் செய்திகளுக்கு முன்னுரிமை தந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை தந்தது. சில மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளின் பின்னர் சில உலக ஊடகங்கள் உண்மையான தகவல்களை தந்தது. ஆனால் பெரும்பான்மையான உலக ஊடக அமைப்புக்கள் ஏதோ கடந்த வருடத்துடன் தமிழரின் பிரச்சனை ஏதோ தீர்ந்துவிட்டதென்ற மாயையில்தான் இன்றுவரை இருந்து வந்துள்ளனர். ஆனால், கனடாவை வந்தடைந்திருக்கும் ஈழ ஏதிலிகள் தான் சாட்சிகளாக இருக்கின்றார்கள்.

சிறிலங்காவில் நடக்கும் படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் போன்றவற்றில் இருந்து தப்புவதற்காகவே தாம் கனடா வந்தார்கள் என்று சொல்லும் இந்த ஈழ ஏதிலிகள் தமது மடல்கள் வாயிலாக தமது நன்றிகளை கனடாவுக்கு தெரிவித்துள்ளதுடன் தங்களைப் பற்றிய பொய்யான பரப்புரையை சிறிலங்கா அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம்” என நேஷனல் போஸ்ட் பத்திரிகைக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில் அந்த ஏதிலிகள் குறிப்பிட்டுள்ளார்கள்.

வன்கூவரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழீழ ஏதிலிகளில் குறிப்பிட்ட சிலர் கையொப்பமிட்ட மடல் ஒன்றில் தெரிவிக்கப்படிருப்பதாவது: “முதலில் கனடிய அரசுக்கும் கனடிய மக்களையும் நாம் இருகரம் கூப்பி வணங்கி நன்றி கூறுகின்றோம். ஆதாவது பசுபிக் சமுத்திரத்தில் நாம் நின்று கொண்டு ‘நாம் இலங்கை அகதிகள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்றதும் உடனடியாக விரைந்து வந்து எங்களைக் காப்பாற்றி உணவு, தண்ணீர், பழங்கள், இனிப்புகள், பிஸ்கற் அளித்து மீட்டுள்ளது…உயிருக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளது…இலங்கை அரசு இலங்கையில் இனப்பிரச்சனை தீர்ந்து விட்டது என்கிறது. ஆனால் அங்கு அவசரகாலச் சட்டங்களோ, பயங்கரவாதச் சட்டங்களோ அகற்றப்படவில்லை. தடுப்புக் காவலில் உள்ள அப்பாவி அரசியல் கைதிகள் விடுபடவில்லை. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீளக் குடியமர்த்தப் படவில்லை. இதற்கு மாறாக, ஆட்கடத்தல்களும், படுகொலைகளும் தொலைபேசி மிரட்டல்களும் நடைபெறுகிறது. மேலும், இலங்கை அரசு தனது தனிப்பட்ட நலனுக்காக உலக ரீதியில் பொய்பிரச்சாரம் செய்கிறது…நாங்கள் ஓர் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் என்பதை கனடிய அரசும் அதன் மக்களும் நம்பும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் கனடிய சட்டத்துக்கு அமைய கீழ்ப்படிவாக வாழ்வோம் என்பதையும் கூறுகின்றோம். நாங்கள் தீவிரவாதிகள் அல்ல என கூறுகிறோம்.”

கனேடிய அரசாங்கம், மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சன் சீ கப்பலில் வந்து ஏதிலிகளாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் மக்களாகிய நாம் கேட்டுக் கொள்வது மற்றும் தெரிவித்துக் கொள்வது என்று கையொப்பமிட்டு வரைந்த இரண்டாவது மடலில் கூறியிருப்பதாவது: “மிக மிக அவலப்பட்டு, உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, படுக்கை போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் ஏதுமற்றவர்களாக மொத்த நிலையில் நான்கு மாதங்களை அண்மித்த கடுமையான, கொடுமையான துன்ப நிலையில் பயணித்து வந்துள்ளோம். ஏனெனில் நாம் பிறந்த மண்ணில் இதுவரை நடந்து கொண்டிருக்கும் கொலை, ஆட்கடத்தல், வன்முறைப் பிரயோகம் போன்ற கொடுமைகளிலிருந்து எம்மைப் பாதுகாத்து எமது மற்றும் எம்மைச் சார்ந்தோரின் உயிரை உத்தரவாதப் படுத்துவதற்காகவே இந்த உன்னத நாடாகிய கனடா வந்துள்ளோம்…குடியேறியவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை அரவணைத்துக் கொண்ட தாங்கள் இந்த ஏதிலிகளையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் இந்த நாட்டுக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் சட்டம், ஒழுங்கு விதிகளின்படி நடந்து கொள்வோம் என உறுதியளிக்கிறோம்“.

ஏதிலிகளா பயங்கரவாதிகள்?

ஏதிலிகளை பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் என்பதை விடுத்து அவர்களின் நியாயபூர்வமான கோரிக்கையை கனடிய சட்டயாப்பில் ஏதிலிகளை எப்படி கையாளவேண்டும் என்ற ரீதியில் கனேடிய அரசாங்கமும் மற்றும் ஏதிலிகள் சம்மந்தமாக செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதும் நபர்கள் தெரிந்துகொள்வது மனிதநேய பண்புக்கு நல்லதாக அமையும். அதைவிடுத்து ஒரு சமுகத்தின்மீதே சேறுவாரி பூசும் அளவுக்கு ஊதி பெரிதுபடுத்தாமல் ஏதிலிகள் ஒன்றும் நாட்டுக்கு கேடானவர்கள் அல்ல என்பதை உணர்ந்து செயல்படுவதே பொறுப்பான காரியமாக இருக்க முடியும்.

சிறிலங்காவில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களை சாட்சிகளாக வைத்து அவர்களின் தார்மீக கோரிக்கை என்னவென்பதை அறிந்து பிரச்சனையை தீர்ப்பதுவே புத்திசாலித்தனமானது. குறிப்பாக, இந்த கப்பலில் வந்திருக்கும் ஈழ ஏதிலிகளின் கூற்றின்;படி தாம் ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேறி இருக்கமாட்டோம் ஈழத்தில் சுமூகமான இயல்புநிலை தோன்றி தமிழர்கள் நிம்மதியாக தமது குடிமனைகளில் தங்க அனுமதித்தால். இன்றுவரை பல லட்சம் தமிழர்கள் தமது சொந்த நிலங்கள் மற்றும் குடிமனைகளை விட்டு புலம்பெயர்ந்து ஏதிலிகளாக நாட்டுக்குள்ளேயே சொல்லெணாத் துயரை அனுபவிக்கின்றார்கள்.

வன்னியை புலிகளிடம் இருந்து மீட்டது மக்களை மீளக்குடியமர்த்திவிட்டதாக தம்பட்டம் அடிக்கும் சிறிலங்கா அரசின் முகத்திரையை கிழிப்பாற்போல் உள்ளது வன்னியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழரின் நிலை. தமிழரை நிர்க்கதியாக்கிவிட்டு சிங்களவரை தமிழரின் பகுதிகளில் வேகமாக குடியேற்றிவருகின்றது சிங்கள அரசு. இதனை இன்றுவரை எந்தவொரு உலக ஊடகமோ பகிரங்கப்படுத்தவில்லை என்பது தான் பரிதாபமான நிலை. இது இப்படியிருக்க தமிழரின் மறுவாழ்வுக்கு என்று உலக நாடுகள் மற்றும் உலக வங்கிகளிடம் இருந்து பெறப்படும் உதவித்தொகைகளோ அல்லது பிற சலுகைகளோ இன்று வரை துன்பப்படும் தமிழரை போய்ச்சேரவில்லை. மாறாக இந்த பணங்கள் அம்பாந்தோட்டையில் நிறுவப்படும் துறைமுகத்துக்கும் மற்றும் சிங்கள மக்களை தமிழரின் பிரதேசங்களில் குடியமர்த்தவே செலவிடப்படுகின்றன. இதனை இன்றுவரை உலக நாடுகளோ அல்லது உலக பத்திரிகைகளோ வெளிக்கொண்டுவராமல் இருட்டடிப்பு செய்கின்றன.

வந்தடைந்து இருக்கும் ஈழ எதிலிகளிடமாவது இருந்து, அனைத்துலக ஊடகங்கள் சிறிலங்காவில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிந்தாவது சிறிலங்காவின் பொய்ப்பரப்புரையையும் மற்றும் சிறிலங்கா அரசின் இனத்துவேச செயல்களை அம்பலப்படுத்தலாம். அதைவிடுத்து, ஏதிலிகளாக புகலிடம் தேடி வந்தவர்களை குறிப்பாக வந்தவர்களில் சிலருக்கு போர்க் காயங்கள் ஏற்பட்டுள்ளன மேலும் இருவர் கற்பிணித் தாய்மார்களாக உள்ளனர். அதுமட்டுமில்லாமல், 70 வயதுகளைத் தாண்டிய ஒரு இணையரும் இரண்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஐந்து வயது குழந்தைகூட ஈவு இரக்கமின்றி பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் என்கின்ற சொற்பதங்களை பாவிப்பதன் மூலமாக ஏற்கனவே வெந்துபோய் வந்திருக்கும் ஏதிலிகளை மென்மேலும் மனரீதியான தாக்கத்தை உண்டுபண்ண வழிகோணும் என்பதை மறந்தோ என்னவோ பல கனேடிய ஊடகங்கள் இவர்களுக்கு எதிரான பரப்புரைகளை செய்கின்றார்கள்.

குடிவரவு நீதிபதியின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஈழ ஏதிலிகள் மீது கருணை காட்டி அவர்களின் மூன்று மாதங்களுக்கு மேலான கடற்பயணத்திற்கு ஓர் ஓய்வுகொடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அகதி அந்தஸ்தை வழங்கி அமைதியான வாழ்க்கையை கனேடிய மண்ணில் ஆரம்பிக்க உதவுவதே கனேடிய அரசிற்கும், ஊடகங்களுக்கும் மற்றும் மக்களுக்கும் உள்ள தார்மீக பொறுப்பே ஒழியஇ அவர்களை வசைபாடி ஏதோ பொருளாதார முன்னேற்றத்துக்காக கப்பலேறிய குடியேறிகள் என்ற பார்வையை விடுத்து மனிதநேய பண்புடன் அனைவரும் செயலாற்றுவார்கள் என்று நம்புவோமாக. இதன் முதற்படியாக வந்த நல்ல செய்திதான் வலதுசார் மற்றும் ஈழத்தமிழருக்கு எதிரான கொள்கையுடைய நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் கொள்கை மாற்றம். ஈழத்தமிழ் ஏதிலிகளின் கண்ணீர் மடல்களினால் வரையப்பட்ட கூற்றுக்களை உள்வாங்கி நியாயம் பக்கம் எப்பொழுதும் இருக்குமா அல்லது பத்திரிகை விற்றால் போதும் என்ற ரீதியில் நியாயமான கொள்கை மாற்றத்தை மறந்து மீண்டும் தமிழருக்கு எதிராக செயல்படுமா நேஷனல் போஸ்ட் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நேஷனல் போஸ்ட் பத்திரிகை தமிழருக்கு எதிரான மாற்றத்தை செய்தால் நிச்சயம் பல முக்கிய கனேடிய ஊடகங்களும் அவர்களின் வழியே செல்லும் என்பது மட்டும் உண்மை.

குறிப்பு: http://www.nationalpost.com/FLEEING+HELL+LANKA+MIGRANTS/3406773/story.html என்ற பத்திரிகையில் கட்டுரை வெளிவந்துள்ளது.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: [email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*