TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள்

ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள், படுகொலைகளின் வாரம் என்று கூட அதனைக் குறிப்பிடமுடியும்.

1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரையான ஐந்து நாட்களில், ஸ்ரீலங்காப் படையினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், மட்டக்களப்பு மண்ணில் ஆடியிருந்த கோரதாண்டவத்தை மட்டக்களப்பு பிரதேசவாழ் மக்களால் என்றுமே மறந்துவிட முடியாது.

தமிழின உயிர்கொலை நாள் என்று மட்டக்களப்பு வாழ் மக்களால் வேதனையுடனும், அச்சத்துடனும் நீண்டகாலம் நினைவுகூறப்பட்ட இந்த வாரத்தில் மட்டும் சுமார் 700இற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பெண்கள், சிறுவர்கள், குடும்பஸ்தர்கள் என்ற பேதம் எதுவும் இல்லாமல் ஸ்ரீலங்கா இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் படுகொலை செய்யப்பட்ட இந்தத் தமிழ் உறவுகள் பற்றிய நினைவுகள், ஒவ்வொரு செம்டெம்பர் 5ம் திகதியும் வடக்கு கிழக்கு முழுவதும் தமிழ் மக்களால் நினைவு கூறப்பட்டு வந்தது.

1990ம் ஆண்டு ஈழப்போர் உக்கிரம் அடைந்ததைத் தொடர்ந்து, மட்டக்களப்புத் தமிழ் மக்கள் மீது அழித்தொழிப்பு யுத்தம் ஒன்றை ஸ்ரீலங்காப் படையினர் கட்டவிழ்த்துவிட்டிருந்தார்கள்.
அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடிக்கி ஒடுக்குவதற்கு, படுகொலைகளை ஒரு போரியல் யுத்தியாகவே ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்டு வந்தது.
கைகளில் கிடைத்தவர்களையெல்லாம் கொலை செய்து டயர்களில் போட்டு எரித்தார்கள். இளைஞன், வயது முதிந்தவர்கள், சிறுவர்கள் என்று எந்தவொரு விந்தியாசமும் சிங்களப் படைகளின் கண்களுக்குத் தெரியவில்லை. தமிழன் என்ற ஒரே அடையாளம்தான் ஒவ்வாரு சிங்களச் சிப்பாயின் கண்களுக்கும் தெரிந்தது. எந்த ஒரு ஜீவனையும் கொலைசெய்வதற்கு அந்த ஒரு காரணம் அவர்களுக்குப் போதுமானதாகவும் இருந்தது. வீதிகளிலெல்லாம் பிணவாடை. தமிழன் வாழ்ந்த ஒவ்வொரு வீட்டினது சுவர்களின் மறைவுகளிலும் வெளியே சொல்லமுடியாத எத்தனையோ அவலங்கள்.

கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு, கைது, வெள்ளைவான் கடத்தல்கள் என்று தொடர்ந்த சிங்கள இராணுவத்தினுடைய அடாவடித்தனங்களுக்குப் பயந்து பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது வீடுகளைவிட்டு வெளியேறி காடுகளுக்குள்ளும், கோயில்களிலும், பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தார்கள்.

வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் சுமார் 50000 தமிழ் மக்கள் தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்துடன் தஞ்சமடைந்திருந்தார்கள். ஆனாலும், மரணம் என்ற அரக்கன் ஸ்ரீலங்காப் படையினரின் சீருடை தரித்து வந்து அவர்களை பல்கலைக்கழகத்திலும் துரத்த ஆரம்பித்திருந்தான்.

அன்று வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பஸ்தர்களுள் சடாச்சரம் என்ற இளைப்பாறிய ஆசிரியரும் ஒருவர். அன்றைய நாளில் அங்கு நடைபெற்ற கொடூரத்தை அவர் இவ்வாறு பகிர்ந்துகொண்டார். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி அதிகாலை கிழக்குப் பல்கலைக்கழகம் அல்லோல்ல கல்லோல்லப்பட்டது. அதிகாலை முதல் கேட்க ஆரம்பித்திருந்த ஸ்ரீலங்கா இராணுவ வாகனங்களின் இரைச்சல் அங்கிருந்த மக்களுக்கு எச்சரிக்கை ஒலியாகவே தென்பட்டது. ஏதோ நடக்கப்போகின்றது என்று அங்கிருந்த ஒவ்வொருவரது உள்முனமும் எச்சரித்துக்கொண்டே இருந்தது. அங்கு தங்கியிருந்த ஒரு சில துணிச்சலான இளைஞர்கள் மதிலால் குதித்து எங்கோ சென்று மறைந்துகொண்டார்கள். என்னுடன் தங்கியிருந்த எனது நண்பன் சதாசிவம் தனது மகனைப் பார்த்து நீ எங்கும் போகவேண்டாம். என்ன நடந்தாலும் எம் அனைவருக்கும் ஒன்றாகவே நடக்கட்டும். இங்கேயே, எனது அருகிலேயே இருந்துவிடு என்று கூறி, தனது இளவயது மகனை தன் அருகில் அணைத்துக் கொண்டார். படையினரின் பார்வைக்கு டீசன்ட் ஆகத் தெரியவேண்டும் என்று கூறி, அந்த இளைஞனுக்கு மெல்லிய நிறத்திலான ஆடையை அணிவித்து, முகத்திற்கு பவுடர் பூசி, அந்த தனது ஒரே சொத்தாக தனது புத்திரனை பாதுகாக்கும் அனைத்து எத்தனங்களையும் மேற்கொண்டார். அன்று அங்கு வந்த இராணுவத்தின் கோரப் பசிக்கு தானும் இரையாகவேண்டி இருக்கும் என்பதை உணந்திராத அந்த இளைஞனும் தனது பெற்றோரின் இழப்புகள் அனைத்திற்கும் உட்பட்டு அவர்களின் சேட்டைகளுக்குள் அடைக்கலமாகி நின்றான்.

இராணுவ வாகனங்களில் வந்து, பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிவழைத்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்கள். பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் அனைவரையும் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்தார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல் அனைவரையும் பல மணி நேரம் மைதானத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்தார்கள். அதன் பின்னர் அந்த மைதானத்தில் குழுமியிருந்தவர்கள் மத்தியில் இருந்து படித்த, வாட்டசாட்டமான தோற்றத்தைக் கொண்ட 158 தமிழ் இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் தெரிவுசெய்யப்பட்டு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.ச. பேரூந்துகளில் ஏற்றப்பட்டார்கள். இராணுவத்தினருடன் அங்கு வந்திருந்த ஏழு முஸ்லிம் ஊர்காவல் படையினரும், கறுப்பு முகமூடி அணிந்து இராணுவச் சீருடையில் வந்திருந்த மற்றும் ஐந்து பேருமே கிழக்குப் பல்கலைக் கழகத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் இருந்து தமிழ் இளைஞர்களை தெரிவு செய்தார்கள். இராணுவத்தினர் திரும்பிச் செல்லும் போது, கைதுசெய்திருந்த இளைஞர்களையும் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். பல்கலைக்கழகமே அல்லோல்லகல்லோல்லப்பட்டது. எங்கும் ஒப்பாரி ஒலிகளும், ஆறுதல் வார்த்தைகளும், பிராத்தனைகளுமாக கேட்டபடி இருந்தது.

இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் மறுநாளும் திரும்பிவராததைத் தொடர்ந்து, எமக்கிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் சிதறிவிட்டது. நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில்தான், நாவலடிச் சந்தியில் சிலரது உடல்களை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் போட்டு எரித்ததாக வந்திகள் வந்தன. இதேபோன்று 23.09.1990 இல் கிழக்குப் பல்கலைக்கழகம் மறுபடியும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுற்றிவழைக்கப்பட்டு அங்கு தங்கியிருந்த மேலும் 16 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களும் பின்னர் கொலை செய்யப்பட்டதாகவே கூறப்படுகின்றது. அன்றைய அந்தச் சம்பவத்தை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் மேல் சிலிர்க்கின்றது. அன்றும் எனது மேல் இப்படித்தான் சிலிர்த்தது. ஆனால் ஒரு வித்தியாசம் அன்று எனது உடல் சிலிர்த்தது பயத்தினால்” ஆனால் இன்று எனது உடல் சிலிர்ப்பது கோபத்தினால். எமது குழந்தைகளின் உயிர்களை எமது கண்முன்னாலேயே பறித்தச் சென்ற அந்த வல்லூறுகளை ஒரு கை பார்த்துவிடுவதற்காக தெம்பு தற்பொழுது எனக்கில்லையே என்கின்ற கோபம்தான் இதற்குக் காரணம். இவ்வாறு அந்த இளைப்பாறிய ஆசிரியர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.

கிழக்குப் பல்கலைக்கழக சம்பவம் நடைபெற்று நான்கு நாட்கள் கடந்த நிலையில், மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சத்துருக்கொண்டான் ~போய்ஸ் டவுன் (Boy’s Town) என்றும் இடத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் இடம்பெற்றது. 09.09.1990 அன்று மாலை சத்துருக்கொண்டான் Boy’s Town படை முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர், சத்துருக்கொண்டான் கிராமத்தையும், அருகிலுள்ள பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் பொன்ற கிராமங்களையும், சுற்றிவழைத்து அங்கிருந்து 184 தமிழ் பொதுமக்களை விசாரணைக்கென்று அழைத்துச் சென்றனர். (இதில் 84 பெண்கள், 50 குழந்தைகள், இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நான்கு மாதக் குழந்தை ஒன்றும், சில முதியவர்களும் அடங்கியிருந்தனர்) இவர்கள் அனைவருமே Boy’s Town இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது உடல்கள் பின்னர் எரியூட்டப்பட்டன.

இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார். இந்தக் கொலைகள் பற்றி விசாரிக்கவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழவிற்கு முன் அந்த நபர் சாட்சியம் அளிக்கையில், முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்களின் கண்கள் மூடிக் கட்டப்பட்டன. அனைவரினதும் கைகளும் பின்புறமாகக் கட்டப்பட்டன. என்னை முந்திரிகை மரமொன்றின் கீழே படுக்குமாறு கூறி, கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கினார்கள். நான் நினைவிழந்து விட்டேன் என்று தெரிவித்திருந்தார். இந்த முகாமிற்கு அருகில் வசித்தவர்கள் தெரிவித்த தகவல்களின்படி பொதுமக்கள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அழுகுரல்களும், கதறல்களும் கேட்டன. பின்னர் புகை மண்டலம் தெரிந்ததுடன், பிணவாடையும் வீசியது. இவ்வாறு ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்படாத, தமது வீடுகளில் மறைந்திருந்து தப்பிய கிராமவாசிகள் தெரிவித்தார்கள்.

இந்தச் சம்பவத்திலும், முஸ்லிம் ஊர்காவல் படையினர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று அப்பிரதேச வாழ் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதுபோன்று 90களில் மட்டக்களப்பில் இடம்பெற்ற பல படுகொலைச் சம்பவங்களின் நினைவாக, செப்டெம்பர் 5ம் திகதியை 2003ம் ஆண்டு தமிழின உயிர்கொலை நாளாகப் பிரகடனப்படுத்தியிருந்த மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்றம், அன்றைய தினத்தை ஒரு தேசிய துக்க தினமாகவும் பிரகடனப்படுத்தியிருந்தது. சமாதான காலத்தில் இந்த தமிழின உயிர் கொலை தினம் கிரமமாக நினைவுகூறப்பட்டு வந்தது. யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து கிழக்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், தமிழீழ உயிர்கொலை நாளை மறக்கடிக்கச் செய்துவிட்டுள்ளது.

தமிழ் மண்ணில் இடம்பெற்ற பல படுகொலைச் சம்பவங்கள் வரலாற்றில் இருந்து மட்டுமல்லாது, மக்களது மனங்களில் இருந்தும் மறைந்துவிடாமல் இருப்பதுதான் காலத்தின் மிகப் பெரிய தேவையாக இன்று இருக்கின்றது. தமிழின உயிர்கொலை நாளை நினைவு கூர்ந்த சமாதான காலத்தில் (2003)மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்ற முக்கியஸ்தர் ஒருவர் கூறிய கருத்தை இந்த இடத்தில் மீட்டுப்பாரப்பது அவசியம் என்று நினைக்கின்றேன். தொலைக்காட்சி நாடகங்களுக்குள்ளும், கிறிக்கெட் போட்டிகளுக்குள்ளும், தமிழ் மக்கள் தம்மை மறந்து உள்வாங்கப்பட்டுவிடும் அபாயம் உள்ள இந்த நேரத்தில் அவர்கள் முன்னைய காலத்தில் எதிர்கொண்ட இன்னல்கiளுயும் மீட்டுப் பார்ப்பது அவசியம். இதுபோன்ற துன்பச் சம்பவங்களை மீட்டுப் பார்ப்பதானது எமது பழிவாங்கும் உணர்சிகளை அதிகரிப்பதை நோக்காகக்கொண்டு அல்ல. எதிர்காலத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ளும் உணர்வுகளை எமக்கு நாமே உருவாக்கிக்கொள்வதற்காகவே எமக்கேற்பட்ட துன்பங்களை நாம் நினைத்துப் பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் இந்த தமிழன உயிர்கொலை நாளை ஈழ தேசம் முழுவதும் மட்டுமல்ல, ஈழத்தமிழர் வாழும் அனைத்து தேசங்களும் நினைவுகூறும் என்பது நிச்சயம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்த நபர் இப்பொழுது இலங்கைத் தீவில் தீவிர அரசியல் செய்துகொண்டு இருக்கின்றார். ஆனால் அவர் இந்த தமிழின உயிர்கொலை நாளை முற்றாகவே மறந்துவிட்டது போன்றே தோன்றுகின்றது. எமது நாடு இன்று இருக்கின்ற நெருக்கடியில் அங்குள்ள மக்களால் இந்த நாளை எந்த அளவுக்கு நினைவுகூற முடியும் என்று தெரியவில்லை. புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற நாமாவது இந்த தினத்தை மறந்துவிடாமல் இருப்பது அவசியம். புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற ஈழத் தமிழ் அமைப்புக்களில் சிலவாவது இந்த தமிழின உயிர்க்கொலை நாளை நினைவுகூறுவது வரவேற்கத்தக்கது.

நிராஜ் டேவிட்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles, Featured

Your email address will not be published. Required fields are marked *

*