TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கா உதவுமா?

இது காலம் கடந்த கேள்வியாக இருப்பினும் நம்பி ஏமாறுவதை எதிர் வரும் காலத்தில் தவிர்ப்பதற்காக விடை காணும் தேவை எழுந்துள்ளது அமெரிக்காவின் பார்வையில் ஈழத்தமிழர்கள் விவகாரம் ஒரு பெரிய விடையம் அல்ல என்றாலும் அதை அமெரிக்காவால் முற்றாகப் புறந்தள்ள முடியாது.

அமெரிக்காவின் 44ம் சனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நடந்த செனற் தேர்தலில் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற தன்னார்வக் குழு தனது முழு ஆதரவை ஜனநாயகக் கட்சிக்கு வழங்கியது இந்தக் கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிட்டார்.

தமிழ் ஈழத்தமிழர்கள், தமிழ் நாட்டுத் தமிழர்கள் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர்கள் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் அனைவரும் அமெரிக்க குடி மக்களாவர்.

இன்னும் இரண்டு முக்கிய தமிழர் அமைப்புக்கள் அமெரிக்காவில் இருக்கின்றன ஒன்று இனப் படுகொலைக்கு எதிரான அமைப்பு அடுத்தது சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு இவை இரண்டும் விதம் விதமான எதிர்பார்ப்புக்களுடன் ஒபாமாவுக்கு ஆதரவு வழங்கின.

தேர்தல் மேடை தோறும் ஒபாமா அமெரிக்க அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாகக் குரல் கொடுத்தார் மாற்றத்தின் தன்மையை அவர் பட்டியல் இடவில்லை பதவிக்கு வந்த பின் அவருடைய அரசியல் கொள்கை வழமையான அமெரிக்கக் கொள்கையின் நீட்சியாக இருந்தது, தொடர்ந்து இருக்கிறது.

“மாற்றம்” என்றவர் ஏமாற்றி விட்டார் என்பதை அமெரிக்கா வாழ் தமிழர்கள் உணர்ந்தனர் ஏமாறச் சொன்னது நானா என்று ஒபாமா கேட்கலாம் இது அவருடைய உரிமை ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடிய போரை ஒபாமா முன்னின்று நிறுத்துவார் என்பது தமிழர் எதிர்பார்ப்பு.

அந்த எதிர்பார்ப்பு பொய்த்து விட்டதை அண்மைக்கால வரலாறு எடுத்துச் சொல்லும் தமது இடர் துடைக்க அமெரிக்கன் வருவான் என்று முள்ளிவாய்க்காலில் செத்துக் கொண்டிருந்தவர்கள் எதிர் பார்த்தனர் உயிர் பிரியும் வரை காத்திருக்கும் பிணம் தின்னிக் கழுகுபோல் அமெரிக்கா விலகி நின்றதை ஈழத்தமிழர்கள் அறிவார்கள்.

தனி மனிதராக ஒபாமாவால் ஒன்றுமே செய்ய முடியாது அவர் அமெரிக்கத் தேசிய நலனுக்கு அடிமை விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஆட்சி செய்த காலத்தில் அமெரிக்க வெளி விவகாரத் திணைக்களம் தயாரித்த இரகசியத் திட்ட வரைவு வெளியுலகிற்கு கசிய விடப்பட்டது.

இலங்கைத் தீவில் இரு அதிகார மையங்கள் இருக்க அனுமதிக்கக் கூடாது ஒன்றை இல்லா தொழிக்க வேண்டும். அந்த வேலையை அமெரிக்க நேரடியாகச் செய்யக் கூடாது. நட்பு நாடுகளை ஏவி அவர்கள் மூலம் கிளிநொச்சி அரசை அழிக்க வேண்டும்

அமெரிக்க நலனுக்குத் திருகோணமலைத் துறைமுகம் அத்தியாவசியம் அதை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு விடுதலைப் புலிகள் முட்டுக் கடடையாக இருக்கிறார்கள். அவர்களை அகற்ற வேண்டும்.

போர் நிறுத்தம் பேச்சு வார்த்தை நாலாம் ஈழப் போர் என்பன அமெரிக்காவின் வழிகாட்டலில் நடைபெற்றன பங்காளி இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து இன அழிப்புப் போரை ஈழத்தமிழர்களுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கின்றன.

அமெரிக்க வெளிவிவகாரக் கொள்கையில் இரு முக்கிய வளர்ச்சி போக்குகளை விமர்சகர்கள் அடையாளம் கண்டுள்ளனர் அமெரிக்க இராணுவத்தை ஈடுபடுத்தும் சந்தர்ப்பங்களை இயன்ற மட்டும் குறைத்துக் கொள்ளுதல் பிற நாட்டு இராணுவங்களுக்குப் பயிற்சி ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி அமெரிக்க நலனை முன்னெடுத்தல்.

இரண்டாவதாக ஐரோப்பாவை மையமாகக் கொண்டிருந்த கொள்கையை ஆசியா, ஆபிரிக்கா உள்ளடங்களான மூன்றாம் உலகின் பக்கம் தீவிரமாகத் திருப்ப வேண்டும் இந்து மாகடலைத் தனது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் நாடுதான் உலக வல்லரசாகத் திகழப் போகிறது.

ஈழத்தமிழ்ப் பொது மக்களுக்குப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆழ ஊடுருவித் தாக்குதல் நடத்தும் பயிற்சியையும் செய்முறைகளையும் சிறிலங்கா இராணுவத்திற்கு வழங்கியது அமெரிக்கா தான் கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகி செத்து மடிந்த பொது மக்கள் பள்ளிச் சிறுவர்கள் நோயாளர்கள் பற்றி அமெரிக்கா கவலைப்பட்டதாக தெரியவில்லை.

தனது கொள்கை முன்னெடுப்பிற்கு மிகவும் உகந்தவரான றொபேட் ஓ பிளேக் என்பவரைத் தனது இராஜதந்திரத் தூதுவராக சிறிலங்காவிற்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது சிறப்பாக செயற்பட்டதற்காக அவர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

றொபேட் ஓ பிளேக் ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போருக்கு அவர் பயங்கரவாத முத்திரை குத்தினார். அமெரிக்கத் தூதுவராகப் பதவி வகித்த காலத்தில் 2008 மார்ச் 18ம் நாள் றொபேட் ஓ பிளேக் பயங்கரவாதத்திற்கு எதிரான உபகரணங்களை அமெரிக்கா சார்பில் சிறிலங்கா இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் வழங்கினார் பயிற்சி வழங்கல் பற்றியும் அவர் பேச்சுக்கள் நடத்தினார்.

அண்மையில் தனது புதிய பதவியுடன் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வந்த போது சம்பந்தன் தலைமையிலான கூட்டணியினர் அவரைச் சந்தித்தனர் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வின் தேவையை அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்குப் பதிலலித்த றொபேட் ஓ பிளேக் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் நிலைபாட்டை வழி மொழிந்தார் அரசியல் தீர்வுக்கு இப்போது என்ன அவசரம் முதலில் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்போமே என்றார் அவர்.

போர் முடிந்த 2009ம் ஆண்டின் செப்ரெம்பர் 07ம் நாள் அமெரிக்க செனேற் சபையின் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ஜோன் கெரி சிறிலங்கா தொடர்பான நீண்ட அறிக்கையை வெளியிட்டார் போருக்குப் பின்னர் சிறிலங்கா தொடர்பான அமெரிக்கக் கொள்கையை மறுசீரமைத்தல் என்பது அறிக்கைத் தலைப்பு.

மறுசீரமைப்பு என்ற பதம் தேவையற்றது ஏற்கனவே நடை முறையில் உள்ள கொள்கையைத் தான் அமெரிக்கா இயன்ற வரை முன்னெடுக்கின்றது அதில் ஈழத்தமிழரைத் தோல்வியுறச் செய்வது முதலிடம் வகிக்கிறது

அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருக்கும் தம்பி போல் இனி தங்கு தடையின்றி நுளைய வேண்டியது தான் பாக்கி இது அமெரிக்க நிலைப்பாடு. டியோ கார்சியா தீவில் வாழ்ந்த பூர்வ குடிகள் அனைவரையும் பிரிட்டிஷ் அரசின் உதவியோடு நிரந்தரமாக வெளியேற்றி விட்டு இராணுவ தளம் அமைத்த அமெரிக்காவுக்கு ஈழத்தமிழர்களின் துயரம் பற்றிய கரிசனை ஏன் வரப் போகிறது.

சிறிலங்காவை இழக்க அமெரிக்காவுக்குக் கட்டுபடியாகாது என்ற செய்தி கெரி அறிக்கையில் வலியுறுத்தப்படுகிறது உறவை பலப்படுத்துவதோடு பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் இராஐதந்திர அனுசரனை வழங்குவது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.

இது வரை இரகசியமாக நடத்தப்பட்டதை இனி பகிரங்கமாக நடத்தலாம் என்ற நிலைக்கு அமெரிக்க அரசு வந்துள்ளது ராக் என்ற சுருக்கு பெயரால் அறியப்படும் தமிழர்களின் சித்திரவதைகளுக்கு எதிரான அமைப்பு மிகவும் கசப்பான பாடத்தை அண்மையில் கற்றுள்ளது அமெரிக்கா, சிறிலங்கா ஆகியவற்றின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாதுகாப்புச் செயலர் கொத்தபாயா ராஜபக்ச சென்ற மாதம் அமெரிக்கா வந்தார்.

இன அழிப்புக் குற்றங்களுக்காக அவரைக் கைது செய்யும் படி ராக் அமைப்பு கேட்டதை அமெரிக்க அரசு அலட்சியம் செய்தது கொத்தபாயா அரச விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டார் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க நிதி உதவி வழங்கிய அமெரிக்கத் தமிழர்களின் பெயர்ப் பட்டியல் அடங்கிய கோப்பை அமெரிக்க அரசிடம் கொத்தபாயா வழங்கினார் ராஜபக்ச குடும்பத்தில் ஒருவராகி விட்ட குமரன் பத்மநாதன் என்ற கே.பி இந்தப் பட்டியலைத் தயாரித்திருந்தார்.

ஏப்.பி.ஜ, சி.ஐ.ஏ போன்ற அமெரிக்க உளவுத்துறையினர் ஈழத்தமிழர்களுக்கு எதிரான வேட்டையைத் தொடங்குவதற்கு இந்தக் கோப்பு ஆதரமாக விளங்குகிறது. செயலாளர் நாயகம் பான் கீ.மூன் சிறிலங்கா புரிந்த போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார் ஆனால் இந்தக் குழு தனது பணிகளைத் தொடங்கவே இல்லை.

சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் சிறிலங்கா சார்பாக நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன அமெரிக்காவும் இவர்களோடு இணைந்து செயற்படும் சாத்தியம் தென்படுகிறது பான் கீ மூனின் செயற்பாடுகள் மந்த கதியில் செல்வதற்கு அவருடைய இயலாமை காரணமாகியுள்ளது அவருடைய முடிவுகள் அரசியல் முடிவுகளாக இருக்கின்றன போர் குற்றங்கள் தொடர்பான சிறிலங்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கிடப்பில் போடும் நோக்குடன் அமெரிக்கா செயற்படுகிறது

பான் கீ மூனின் விசாரணைக் குழு ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்டது விசாரணைக் குழுவின் ஆரம்பமும் முடிவும் அக்கம் பக்கமாக இருக்கின்றன. எரியிற வீட்டில் பிடுங்கினது ஆதாயம் என்பார்கள் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பனிப்போர் அல்லது சுடு போர் தொடங்கினால் ஏதேனும் இலாபம் கிடைக்குமா என்று சிலர் கணக்கிடுகின்றனர்.

தனது பொருளாதார மேம்பாட்டிற்காக அமெரிக்கா விற்பனை செய்யும் திறைசேரி கடன் பத்திரங்களைச் சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கொள்வனவு செய்துள்ளன. மிகக் கூடுதலாக பத்திரங்களைச் சீனா கொள்வனவு செய்துள்ளது அமெரிக்கா சீனாவின் கடனாளி நாடு சீனாவைப் பகைத்துக் கொள்ள அமெரிக்காவுக்கு இயலாது சீனாவும் பாக்கிஸ்தானும் கூட்டாகத் தன் மீது தாக்குதல் நடத்தனால் அமெரிக்கா உதவிக்கு வரும் என்று இந்தியக் கொள்ளை வகுப்பாளர்கள் நம்புகின்றனர் இது சாத்தியப்படுவது மிகக் கடினம்.

புதிய வியூகங்கள் வகுக்கப்படுகின்றன ஈழத்தமிழர் நிலை திருப்தியாகத் தற்சமயத்தில் இல்லாவிட்டாலும் சோர்வின்றிச் செயற்படுவது எம்மவர் கடனாகும். நெருக்கடி நேரத்தில் குழம்பிப் போய்நிற்கக் கூடாது ஐனநாயகவழியில் தொடர்ந்து விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

ஏதிலிகள் ஊடக இணையம்.
[email protected]

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*