TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மண் குதிரை – சோழ.கரிகாலன் – ஈழமுரசு

அண்மைக்காலமாக சிறீலங்கா அரசு தனது இராஜதந்திர வலையமைப்புக்கள் மூலம் தமிழர்களிடம் ஊடுருவி அவர்கள் வழிக்கிசைந்தவர்களுடன் இணைந்து விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயற்பாடுகளின் சர்வதேசக் கட்டமைப்பை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே.

இதற்கு அடித்தளமாக விடுதலைப் புலிகளின் சர்வதேசச் செயற்பாடுகளின் பொறுப்பாளரான கஸ்ரோ அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அதன்மூலம் சர்வதேசச் செயற்பாடுகளில் உள்ளவர்கள் மீது மக்களை வெறுப்படைய வைக்கும் நடவடிக்கை முடக்கிவிடப்பட்டுள்ளது. இதற்கான பங்களிப்பை சில புலம் பெயர் தமிழர்களும் அவர்கள் சார் ஊடகங்களும் தாராளமாக வழங்கி சர்வதேசச் செயற்பாட்டை முடக்க முயல்கின்றனர்.

இதற்கு ஓர் ஆயுதமாக கஸ்ரோ அவர்களின் நாட்குறிப்பும் கணினியும் கையகப்படுத்தி விட்டதாகவும் அதன் மூலமே அனைத்துச் சர்வதேசச் தொடர்புகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஒரு பூதத்தைக் கிளப்பியுள்ளனர். இந்தப் பூதம் இந்த அலாவுதீன்களிற்கு வரம் தர மறுத்துவிட்டது. ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப்போன இந்தப் பிரச்சார உத்தியை Daily mirror பத்திரிகை ஆதாரத்தோடு தோலுரித்துக் காட்டியுள்ளது.

இந்த ஆதாரங்கள் புலத்தில் கே.பிக்குச் சாமாரம் வீசி ஒத்தடமும் கொடுத்துக் கொண்டிருப்போர்க்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கி விட்டது. Daily mirror அறிக்கையில், அண்மையில் அமெரிக்கா சென்றிருக்கும் கோத்தபாய ஒரு பெரிய பட்டியலுடனே சென்றிருக்கின்றார். விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயற்பாட்டாளர்களை சர்வதேசக் காவல்துறை மூலம் (INTERPOL) கைது செய்யக்கோரும் விபரங்களுடனேயே சென்றிருக்கின்றார். புலம்பெயர்ச் செயற்பாட்டாளர்களின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக்கொள்வனவு விபரங்களைப் போரின் போது ‘கஸ்ரோ அவர்களின் கணினியிலிருந்த விபரங்கள் ஊடாகவே’ பெற்றதாகக் கூறியிருந்தனர்.

ஆனால் எமது தகவல் மூலங்களின் மூலம் அறியப்பட்ட வகையில் அனைத்து தகவல்களையும் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனே வழங்கியுள்ளார். இவரது காட்டிக் கொடுப்புக்களை வெளியுலகத்திற்கு மறைப்பதற்கே திரு. கஸ்ரோ அவர்களின் பெயரில் இந்தப் பழிகணைச் சுமத்தியுள்ளார்.விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளின் பொறுப்பை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்மநாதனிடம் இருந்து மீளப்பெற்று திரு.கஸ்ரோவிடம் ஒப்படைத்திருந்தார். திரு.கஸ்ரோ இந்த வலையமைப்பை மிகவும் நம்பிக்கையுள்ள கட்டமைப்பாக உருவாக்கியிருந்தார். கே.பியின் வலையமைப்பிலிருந்த கே.பியின் நண்பர்களை நீக்கிவிட்டு நம்பிக்கையான நபர்கள் மூலம் கட்டமைப்பை உருவாக்கினர்.

இது கே.பிக்கு கஸ்ரோ மீது கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதுவும் இந்த வலையமைப்பகை கே.பி உடைத்தெறிய முயல்வதற்கு ஒரு காரணமாகும். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் வந்திருந்தனர். ஆனால் கஸ்ரோ வலையமைப்பினர் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர். இந்த வலையமைப்பே சிறீலங்கா அரசின் போலித் திட்டங்களுக்கு இன்று பெரும் நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் கூறியபடி கஸ்ரோ அவர்களின் கணினி கையகப்படுத்தப் பட்டிருந்தாலும் அதிலிருந்து ஒரு வருடத்திற்கு மோலாகியும் எந்தவிதமான பிரயோசனமான தகவல்களையும் பெற முடியவில்லை. அவற்றின் சந்தேகக் குறியீடுகள் அவிழ்க்கப்படவில்லை. இதன் போதே கே.பி தனது சுதந்திரத்திற்கும் நலன்களிற்கும் பேரம்பேசி வெளிநாட்டில் இயங்கும் வலையமைப்பை உடைத்தெறியும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். முதலாவதாக வெளிநாட்டில் இருக்கும் வலையமைப்பை சிறீலங்கா அரசின் பக்கம் இணைக்க முயற்கிகளை மேற்கொண்டார். அந்த முயற்சியில் இணைந்து கொள்ளச் ஒப்புக்கொண்டோருக்கு சலுகைளும் சர்வதேசக் காவல்துறையின் பதிவிலிருந்து விடுதலையும் பெற்றுக் கொடுத்தார். ஒத்துப்போகாதோர் விபரங்கள் சிறீலங்கா அரசிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு சர்வதேசக் காவல்துறையிடமும் ஒப்படைக்கப்படுகின்றனர்.

இதே போன்றே சர்வதேசக் காவல்துறையின் வழக்குகளை மீளப்பெற்றதன் மூலமும் பலவிதமான சலுகைகள் வழங்கியதன் மூலமும் கே.பியை உள்வாங்கிய சிறீலங்கா அரசு இவர் மூலம் சர்வதேச வலையமைப்பைக் குறிவைத்துள்ளது. கருணா மூலம் விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை உடைக்க முயற்சித்தது போல் கே.பி மூலம் சர்வதேச பலத்தை உடைக்க முயல்கின்றது. கருணாவை சிறீலங்கா அரசு உள்வாங்கி அவரை தனது இராஜதந்திரச் செயற்பாடுகளிற்குப் பயன்படுத்தியதோடு அவரை பிரித்தானியாவிற்கும் அனுப்பிவைத்தது. பதவியின் சுகங்கள் கொடுக்கப்பட்டு ராஜமரியாதை செய்தனர். போர் முடிவடைந்த பின்னர் அரசுக்குக் கருணாவின் தேவை தேவையற்றதாகிவிட்டது. அவரை மீண்டும் தேர்தல் களமிறக்கித் தோல்வியடைய வைத்துப் பல்லைப் பிடுங்கி வெறும் துணையமைச்சராக்கி இன்று செல்லாக்காசாக்கி விட்டனர். சிறீலங்கா அரசின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய கருணா, கிழக்கு மாகாண முதலமைச்சரைக்கூடத் தெரிவு செய்யும் சக்தியளிக்கப்பட்டிருந்த கருணா, இன்று எதுவுமற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

இதே நிலைமைதான் கே.பிக்கும் வருங்காலத்தில் அமையும். இன்று இவரை நம்பிக்கை நட்சத்திரமாக்கியுள்ள அரசு செல்லாக்காசாக்கவும் தயங்காது.கே.பியும் தேர்தல் களமிறக்கப்பட்டு அவர் செல்வாக்கில் ஒருவர் முதலமைச்சராக்கப்பட்டால், அரசாங்கத்தின் கனவின் படி சர்வதேசச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டால் கருணா போல் கே.பியும் பல்பிடுங்கப்பட்டு வீசியெறியப்படுவார்.இன்று சிறீலங்காவோடு இணைந்து தமிர்களின் எஞ்சியுள்ள பலத்தையும் அழிக்க முனைந்து நிற்கும் கே.பியோடு தோள்கொடுக்கும் அடிவருடிகள் தெளிவடையவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னமும் கே.பிக்கு வக்காளத்து வாங்கும் குழுக்களும் மீண்டும் தம் அறிவைச் சுயமதிப்பீடு செய்யவேண்டிய தேவையுள்ளது. இதன் பின்னரும் அவரோடு இணைந்தும் அவருக்காகச் செயற்படுவோரும் தமிழர்களால் என்றுமே மன்னிக்கப்படும் தகுதியை இழப்பார்கள். சுயலாபத்திற்காகத் தம்மின அழிவிற்குத் துணைபோவது நிறுத்தப்படவேண்டும். கே.பி என்னும் மண்குதிரையை நம்பி முதுகிலேறும் அடிவருடிகளை இந்த மண்குதிரையே குப்புறத்தள்ளிக் குழியும் பறித்துவிடும்.

சோழ.கரிகாலன்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*