TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கேபி குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பு.த

கேபி குழுவினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் புலம்பெயர் தமிழர்கள்.

விடுதலைப் போர்க்களத்தில் சிங்களப்படைகளுடன் இணைந்து செயலாற்றிய ஒட்டுக் குழுக்களால் ஈழத் தமிழர்கள் அடைந்த இன்னல்களும், இழப்புக்களும் அளவிட முடியாதவை. ஒட்டுக் குழுக்களைக் கோடரிக் காம்புகளாகப் பயன்படுத்தியே சிங்கள தேசம் தமிழீழ விருட்சமாகப் படர்ந்திருந்த விடுதலைப் போர்க் களத்தைத் தறித்து வீழ்த்தியது.

இன்றும் அந்த ஒட்டுக் குழுக்கள் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட முடியாத விஷ விரூட்சமாக, ஈழத் தமிழர்களை அச்சுறுத்தி வருகின்றது. முள்ளிவாய்க்கால் போர்க் களம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் உருவான குழப்பகரமான சூழ்நிலையைப் பயன்படுத்தி, புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்துப் புதிய ஒட்டுக் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் பாதுகாப்புத் துறைச் செயலாளரான கோத்தபாயவின் வழிகாட்டலுடன், தற்போது அவரின் விருந்தாளியாக உள்ள கே.பி. மூலமாக உருவாக்கப்பட்ட இந்த ஒட்டுக் குழுவினால் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மாதத்தில், புலம்பெயர் நாடுகளிலுள்ள கே.பி.யின் ஆதரவாளர்கள் சிலர் கொழும்பிற்கு அழைக்கப்பட்டு, கோத்தபாய ராஜபக்ஷவினால் அமோக வரவேற்புக் கொடுக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆலோசனையின் பிரகாரம், புலம்பெயர் தமிழர்களின் எழுச்சியையும், ஒற்றுமையையும் சிதைத்து, தமிழீழ மக்கள் போல் அவர்களையும் அச்ச நிலைக்குள் வைத்திருக்கும் திட்டம் தீட்டப்பட்டது.

அதற்கான ஒரு குழுவும் கொழும்பில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. வடக்கு – கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்புக் கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்தக் குழு, வவுனியாவிலுள்ள ஒரு முகவரியுடன் தொண்டு நிறுவனமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம் பெயர் தமிழர்களிடம் நிதி திரட்டி, சிங்கள அரசிடம் கையளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தால் அழிக்கப்பட்டு, நொருக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குப் புனர்வாழ்வு கொடுப்பதற்கான அமைப்பாகப் புலம்பெயர் தேசங்களில் அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தப்படும் இந்த அமைப்பு உண்மையில், சிங்கள தேசத்தை சர்வதேச அழுத்தங்களிலிருந்தும், போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில், சிறிலங்காவிற்குப் பயணம் செய்து திரும்பிய சில புலம்பெயர் தமிழர்கள் கொழும்பு விமான நிலையத்தில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் இந்த அமைப்புடன் இணைந்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதிலும் பார்க்க அன்பாக அச்சுறுத்தப்பட்டனர் என்பதே சரியானதாக இருக்கும்.

தற்போது நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள இந்தக் குழுவினர் மூலம் புலம்பெயர் தமிழர்கள் புது விதமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பிற்கான இணையத் தளமும் இலங்கையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த இணையத் தளத்தில் ஏற்றப்படும் அத்தனை விபரங்களும் சிறிலங்காவின் புலனாய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த அமைப்பிற்காகப் பணம் வழங்கியவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் அல்லலுறும் தமது உறவுகளுக்காக நேரடியான அல்லது வேறு அமைப்புக்களினாடாகப் பங்களிப்புக்களை வழங்கியிருந்தாலும், அவர்கள் சிங்கள அரசுக்கு எதிரானவர்களாகக் கணிக்கப்படவும், அவர்கள் மீது சிங்கள அரசு அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் புதிய வழி ஒன்று உருவாகியுள்ளது.

தனி நபர்கள் மட்டுமல்ல, வர்த்தக நிறுவனங்கள் கூட இந்த இணையத் தளத்தில் விளம்பரங்களைப் பிரசுரிக்கத் தவறினால், அவர்களை விடுதலைப்புலி ஆதரவாளர்களாகக் கருதவும், அவர்களது வர்த்தக முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கவும் முடியும். மிகவும் நெருக்கடியான யுத்த காலத்திலும், மனிதப் பேரவல காலத்திலும் விடுதலைப்புலிகளின் வேண்டுகோள்களை செவிமடுக்க மறுத்தவர்கள் கூட, இந்த சிங்கள தேசத்தின் இந்தப் புதிய வரி அறவிடுதலுக்கு உட்பட மறுக்கும் பட்சத்தில், அவர்களது எதிர்கால சிறிலங்கா பயணங்களும், அவர்களது தாயக பூமியிலுள்ள சொத்துக்களும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் அபாயநிலை இன்று உருவாகி வருகின்றது.

சிங்கள தேசம் கே.பி. குழுவினர் ஊடாக புலம்பெயர் தமிழ் மக்கள் மீது ஒரு வடிகட்டல் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகின்றது. இதனை, ஒட்டு மொத்த புலம்பெயர் தமிழர்களும் இணைந்து முறியடிப்பதன் மூலமாகவே காட்டிக் கொடுத்தல்களிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

புலம்பெயர் தேசத்தின் புதிய ஒட்டுக் குழுக்களால் உருவாகியுள்ள இந்தப் புதிய சவால்களை முறியடிக்க நாம் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். தமிழீழ மண் பறிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ மக்கள் அவலத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். ஒட்டு மொத்த தமிழினமும் அவமானப்படுத்தப்படுகின்றது.

கைதுகளும், படுகொலைகளும் தொடர் கதையாக உள்ளது. அத்தனை அவலங்களுக்கும் எதிராகக் குரல் கொடுக்கும் நிலையிலுள்ள புலம்பெயர் தமிழர்களும் புதிய ஒட்டுக் குழு மூலம் முடக்கப்படும் அபாயத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்.

அவலப்படும் எம் உறவுகளுக்கு நேரடியாக உதவும் வகைகள் தமிழ்த் தேசிய உணர்வாளாகளால் நாடுகள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதில் இணைந்து, அவர்களை மீட்டெடுக்கும் பணியினைப் புலம்பெயர் தமிழர்கள் வேகமாகச் செய்ய முற்பட வேண்டும்.

அகத்தியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*