TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தீவிரமடையும் போர்க் குற்ற விசாரணைகள் தமிழர்களுக்கு

தீவிரமடையும் போர்க் குற்ற விசாரணைகள் தமிழர்களுக்கு விடுதலைப் பாதையைத் திறந்து விடுமா? – இதயச் சந்திரன்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழுத்தமாகக் கூறி வந்தாலும் அபிவிருத்தி பற்றியே சிங்களம் அதிகம் பேசுகிறது.ஆனாலும் அபிவிருத்தியை முன்மொழியும் அரசு, வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முனைப்பிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்கிறது.அதாவது அதிகாரமற்ற மாகாண சபையூடாக அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்பதே சிங்களம் முன்வைக்கும் மஹிந்த சிந்தனையாக அமைகிறது.

டக்ளஸின் “தமிழ்க் கட்சிகளின் அரங்கம்’, வட மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான கூட்டணி என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம். எத்தகைய அரங்கங்களையும் சபைகளையும் இவர்கள் உருவாக்கினாலும் இறுதியில் அதனை இயக்கும் அதிகார மையம் கொழும்பின் வசம் இருப்பதை மறுக்க முடியாது.மக்களின் உடனடிப் பிரச்சினை குறித்துப் பேசாத, பிராந்திய அரசியல் பற்றி அதிகம் பேசப்படுவது, நகைப்பிற்கிடமானது என்கிற வகையில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. தமிழ் மக்களின் அரசியல், குடாநாட்டிற்குள் இருப்பது போலுள்ளது இத்தகைய பார்வை.

சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் இனப்பிரச்சினையை வெறுமனே மீள் குடியேற்றம் என்கிற குறுகிய வட்டத்துக்குள் அட க்கி விட முடியாது.இயல்பு வாழ்வின் மீட்சி குறித்து அக்கறை கொள்ளாமல், அபிவிருத்தி பற்றி இடைவிடாது பேசும் அரசிடம் எதை எதிர்பார்க்க முடியும்? சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றப் பணிகளில் நேரடியாகவே தம்மை இணைத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்.ஒரு பிரதேசத்தில் அபிவிருத்தி மேற்கொள் ளப்பட வேண்டுமாயின் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்வு முதலில் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

யுத்தத்தில் சிக்குண்ட மக்களில் பலர் இன்னமும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பு முகாம்களிலும் அடைபட்டுக் கிடக்கின்றனர்.கடந்த 17 வருட காலமாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல அரசியல் கைதிகள், அவசரகாலச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வன்னி பெரு நிலப் பரப்பின் பூர்வீக நிலங்களில் இராணுவ முகாம்களும் படைத்தளங்களும் நிறுவப்படுகின்றன.

இவை தவிர நிலக் கண்ணி வெடியகற்ற, சீனத்துச் சிப்பாய்களும் இலங்கைக்கு வருகை தர விருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இன்று தமிழர் தாயகம், விதவைகளின் தேசமாகிவிட்டதெனக் கூறப்படுகிறது. கோயில் திருவிழாக்கள், மூலம் இயல்பு வாழ்வை மீட்டு விட்டதாக தவறான கற்பிதமும் சிலரால் உருவாக்கப்படுகிறது. பறிபோகும் நிலங்களில் பன்னாட்டுக் கம்பனிகள் முதலீடு செய்ய முன்வருவதை அபிவிருத்தி என்று அரசு கூறலாம். ஆனால் இந்தியா, மியன்மார், சீனா போன்று பாரிய சந்தை வாய்ப்புக்கள் இல்லாத இலங் கையில் முதலீடு செய்ய இந்த வல்லரசாளர்கள் ஏன் முன்வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தரிப்பிடமே இதற்கான அடிப்படைக் காரணியாக இருப்பதை காணலாம்.

வட கொரியா தென் கொரியா முறுகல் நிலை ஊடாக விரிவடையும் பதற்றம், இந்திய சமுத்திர பிராந்தியத்தை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது என்ற எச்சரிக்கையை பாஸ்கர் ரோய் போன்ற இந்திய ஆய்வாளர்கள் வெளியிட ஆரம்பித்துள்ளனர். முள்ளிவாய்க்காலோடு தமிழ்த் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றிருக்கலாம் அல்லது கே.பி. என்றழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் கூறியவாறு மௌனிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் போரில் சிங்கள இறைமைக்கு ஆதரவளித்த வல்லரசாளர்கள் இன்று தமக்குள் மோதிக் கொள்ள ஆரம்பித்திருப்பதை மறுக்க முடியாது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியா, தனது நாட்டுடன் 1640 கி. மீற்றர் நீள எல்லையைக் கொண்ட மியன்மாருடன் (பர்மா) உறவுகளைப் புதுப்பிக்க ஆரம்பித்த விடயம்.

தென்னாசியாவில் அணி மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதை கவனிக்க வேண்டும். photo_1278586969546-5-1இலங்கையைப் போன்று மியன்மாரும் சீன இந்திய முரண்பாடுகளை தனது நலனிற்குச் சாதகமாக பயன்படுத்த முயல்வதைக் காணலாம்.மியன்மாரின் இராணுவ ஆட்சி, ஆங்சாங் சூகியின் விடுதலை போன்ற விவகாரங்களைத் தூக்கிப் பிடித்ததால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தான் தனிமைப்படும் ஆபத்து ஏற்படுமென்று ஜனநாயக இந்தியா அச்சமடைகிறது.

ஐந்து நாள் பயணம் மேற்கொண்டு கடந்த 25 ஆம் திகதி இந்தியாவிற்குச் சென்ற பர்மிய இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் தான் சுவே, ஆத்மீக பயணமென்று அதனை கூறியிருந்தார். ஆனாலும் சர்வதேச அரங்கில் மனித உரிமை மீறல்களுக்காக ஓரங்கட்டப்படும் மியன்மாரின் அதிபர், ஜனநாயக இந்தியாவிற்கு மேற்கொள்ளும் பயணத்தால் சீற்றமடைந்த 164 அமைப்புக்களை கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் சம்மேளனம் காட்டமான கடிதமொன்றினை இந்தியப் பிரதமருக்கு அனுப்பியது.

மனித உரிமை பற்றி அதிகம் அலட்டிக் கொண்டால் பிராந்திய நலனைப் பாதுகாக்க முடியாமல் போய் விடுமோவென்கிற அச்சம், மியன்மார் போன்று இலங்கை விவாகரத்திலும் இருப்பதை இந்திய நகர்வுகள் உணர்த்துகின்றன. 1999 இல் நோபல் பரிசு பெற்ற, 65 வயதான, ஜனநாயகத்திற்கான தேசிய முன்னணியின் தலைவி ஆங் சாங் சூகியின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்த இந்தியா, 1993 இல் தனது நிலைப்பாட்டினை மாற்றியமைக்க ஆரம்பித்தது.மியன்மாரின் “அரகன்’ மாநிலத்தில் பெருமளவாகக் காணப்படும், எரிவாயு மற்றும் எண்ணெய்வளம் குறித்த சர்வதேசத்தின் பார்வை, அங்கு குவிக்கப்பட்ட நிலையில், அந்தமான் நிக்கோபார் தீவுகள், வங்காள விரிகுடாவின் பாதுகாப்பு, அத்தோடு நீண்ட எல்லையினூடாக அதிகரிக்கும் தீவிரவாதக் குழுக்களின் ஊடுருவல் என்பவற்றைக் கருத்திற் கொண்டு, இப்புதிய உறவினைப் பலப்படுத்த இந்தியா முயல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அதாவது சீனாவின் பொருண்மிய, இராணுவ ஆதிக்க விரிவாக்கத்தோடு, மியன்மாரிலும் இந்தியா போட்டியிட முன்வருகிறது.பாதுகாப்பினை உறுதி செய்யும், மூலோபாய அமைவிடங்களான எல்லையோர நாடுகளை, சீனாவின் பிடிக்குள் செல்ல அனுமதிப்பது, எதிர்காலத்தில் பெரும் ஆபத்தினை விளைவிக்குமென்று கருதும் இந்தியாவின் நகர்வுகளை, இலங்கையிலும் காணலாம்.இவை தவிர திறந்து விடப்பட்டுள்ள ஆசிய சந்தைக் களத்தில் போட்டியிட பிரித்தானியாவும் முன் வந்திருப்பதை இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்ற, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் அவர்களோடு இணைந்து பயணித்த பார்க்லேஸ் வங்கி மற்றும் வொடாபோன் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் உணர்த்துகின்றனர்.

கடந்த காலத்தில் கவனிப்பாரற்றுக் கிடந்த இரு நாட்டு உறவுகளைப் புதுப்பிக்க வந்ததாக கமரூன் தெரிவித்திருந்தாலும் இந்தியச் சந்தையில் உள் நுழைவதற்காக மேற்கொண்ட பயணமாகவே இதனை நோக்கலாம்.ரில்லியன் டொலர்களைத் தாண்டி நிற்கும் தேசிய öமாத்த உற்பத்தி கொண்ட இவ்விரு நாடுகளும் வெறும் ஒரு பில்லியன் டொலர்களுக்கே வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள விவகாரம் கவனிக்கப்பட வேண்டியது.

டாட்டாவும், மிட்டாலும் பிரித்தானியாவில் பாரிய முதலீடுகளைக் குவித்து தொழில் செய்வது போன்று பிரித்தானிய கம்பனிகளையும் உள் நுழைய அனுமதிக்க வேண்டுமென்பதே கமரூனின் ஆதங்கமாக இருக்கிறது.through Assamஆகவே மியன்மார் இராணுவ ஆட்சியாளரின் ஆத்மீகப் பயணமும் பிரித்தானியாவின் வர்த்தக உறவுப் பயணமும் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் சீனாவோடு பொருண்மிய ரீதியில் போட்டியிடக் கூடிய அமெரிக்கா, ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளோடு வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவே இந்தியா விரும்புமென்பதைப் பிரித்தானியப் பிரதமரின் விஜயத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ வேண்டும். அதேவேளை ஆசியாவின் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்த வேண்டுமென்கிற இருவகை நலன்களை உறுதிப்படுத்தவே இந்தியாவை நோக்கி சீனாவிற்கெதிரான வல்லரசாளர்கள் படையெடுக்கிறார்கள்.இதில் ஜேர்மனிய அதிபரின் அண்மைய சீன விஜயம் சற்று வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது.சீனாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பிலுள்ள 20 சதவீதமான யூரோ நாணயத்தை குறி வைத்து இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஆகவே இலங்கை விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியாவோடு இணைந்து செயற்படும் நிர்ப்பந்தத்தில் மேற்குலகம் இருப்பதை இனிவரும் நாட்களில் அதிகமாக உணரலாம்.ஜீ.எல். பீரிஸின் ஜப்பானிய பயணம், “சீபா’ உடன்படிக்கை நிராகரிப்பு, கண்ணிவெடியகற்ற வரும் சீனா போன்றவற்றால் சீற்றமடைந்துள்ள இந்திய தேசம், இலங்கை அரசின் மீதான தனது எதிர்ப்புணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறது.

ஏற்கனவே இந்திய இலங்கை உறவில் விழுந்துள்ள விரிசல் பெரும் பிளவாக மாற்றமடையும் சாத்தியப்பாடுகளையும் நிராகரிக்க முடியாது. ஆகவே வெளியகச் சக்திகளின் அழுத்தம் இல்லாமல், நில அபகரிப்புகளை தடுத்து நிறுத்த முடியாது என்பதோடு, பழைய வாழ்விடங்களில் மீள் குடியேற்றம் என்பது சாத்தியமில்லை என்பதனைத் தமிழ் மக்கள் உணர்வார்கள். அரசியல் தீர்வு, அபிவிருத்தி என்பவை சாத்தியப்பட வேண்டுமாயின் அரசின் மீதான அனைத்துலகின் அழுத்தம் அதிகரிக்கப்பட வேண்டும்.

எல்லாமே சுமூகமாக நடைபெறுவதாக சில ஊடகங்கள் பூசி மெழுகலாம்.தற்போது பரமேஸ்வரனின் உண்ணா நிலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பிரித்தானியாவின் பிரதான நாளிதழ்களின் ஊடக அபத்தம், தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. நியாயத்திற்கான இவ் வெற்றி, நீதிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகின்றன என்கிற உண்மையை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்துகிறது.தீவிரமடையும் போர்க் குற்ற விசாரணைகள், தமிழ் மக்களுக்கான விடுதலைப் பாதையைத் திறந்து விடுமாவென்பதை உலக நாடுகள் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை, பொறுமை காக்கும் நேரமல்ல இது.

நன்றி: வீரகேசரி.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*