29 ஜூலை 2010 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஸ் பிறேமச்சந்திரன், ஆ.யு.சுமந்திரன் மற்றும் சி. சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சியின் சாந்தபுரம் கிராமத்துக்கு சென்று அங்கு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் அந்தக் கிராமத்தின் மக்களை சந்தித்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினோம். அதேநாள் சுரேஸ் பிறேமச்சந்திரன், ஆ.யு.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் செட்டிக்குளம் நலன்புரி முகாமில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்துபுரம் மற்றும் திருமுறுகண்டி கிராமங்களின் மக்களையும் சந்தித்து பேசினோம்.
2010 மே மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டதன் தொடர்ச்சியாக எங்களது மேற்கண்ட சந்திப்புகள் நடைபெற்றன. அப்போதைய எமது வன்னி விஜயம் தொடர்பாக மிக விரிவான அறிக்கை ஒன்றை 7 ஆம் திகதி ஜூன் மாதம் ஜனாதிபதி அவர்களுக்கு கையளித்ததுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களினால் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டது. நாம் ஜனாதிபதிக்கு சமர்பித்த முன்னைய அறிக்கையிலிருந்து கீழ்வருவனவற்றை மேற்கோள் காட்ட விரும்புகின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்துக்கு மீள்குடியேற வந்த மக்கள் தொடர்பாக
“கிளிநொச்சி மாவட்டம் சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 288 குடும்பங்கள் தமது கிராமத்துக்கு போக முடியாமல் கிளிநொச்சி மத்திய கல்லூரியின் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தின் 8 கிராமங்களைச் சேர்ந்த 400 குடும்பங்கள் தமது கிராமங்களுக்கு போக முடியாமல் இருக்கின்றனர். இது தொடர்பான மேலதிகமான விபரங்கள் எமது அறிக்கையில் தரப்பட்டிருக்கின்றது. இந்த குடும்பத்தினர் அனைவரும் தமது சொந்தக் கிராமங்களுக்கு செல்வதற்கான ஏதுநிலை உருவாக்கப்பட வேண்டும்.”
அடுத்து,
ஏ-9 பாதையின் 232 வது கிலோமீற்றருக்கும் 247 வது கிலோமீற்றருக்கும் இடைப்பட்ட திருமுறுகண்டி கிராமத்தின் மீள்குடியேற்றம் தொடர்பாக,
“நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக ஏ-9 நெடுஞ்சாலைக்கு கிழக்கு பகுதியிலுள்ள திருமுறுகண்டியை சேர்ந்த 1000 குடும்பங்கள் தமது முழுச் சொததுக்களையும் இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் செட்டிக்குளத்தில் அமைந்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இதில் பல குடும்பங்கள் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் திருமுறுகண்டியில் வாழ்ந்து வருகின்றனர்.
ஏனையோர் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்து முன்னர் ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்து இக்கிராமத்தில் குடியேறினார்கள். வன்செயல்களின் பொழுது தமது உடைமைகளை இழந்து எதுவும் இல்லாமல் கிளிநொச்சி வந்து மிகக் கடினமாக போராடி அக்காட்டுப் பிரதேசத்தை திருத்தி துப்பரவு செய்து திருமுறுகண்டி என்ற இடத்தில் குடியேறியவர்கள்தான் இவர்கள்.
அந்த மண்ணை அபிவிருத்தி செய்து தமது குடிமனைகளை அங்கே அமைத்துக் கொண்டார்கள். கடந்த 25-30 வருடங்களுக்கு மேலாக அந்த மண்ணில் இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதுதான் அவர்களது நிரந்தர புகலிடமாகவும் இருந்து வருகின்றது. இவர்களது மீள்குடியேற்றம் தற்காலிகமாக பின் தள்ளிப் போவதாக நாங்கள் அறிகின்றோம். இந்த மக்கள் ஏனையவர்களைப் போல் மீளக்குடியேறி தமது வாழ்க்கையை ஆரம்பிக்க ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். ஏனையோருக்கு கொடுக்கப்பட்ட அதே உதவிகள் இவர்களுக்கும் கொடுக்கப்பட்டு இவர்கள் எந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து சென்றார்களோ அந்த மண்ணில் குடியேற அனைத்து வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.”
2010 ஜூன் மாதம் 7 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்குறிப்பிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அதற்கு பின்பு ஊடகத்துறை அமைச்சர் கௌரவ கெஹெலிய ரம்புக்வெல அவர்கள் இம் மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் இந்த நிலங்கள் இராணுவ குடியிருப்புகளுக்கு தேவையாக இருக்கின்றதென அறிவித்ததைத் தொடர்ந்து 17 ஜூலை 2010 ஆம் திகதி அன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய இன்னுமொரு கடிதத்தில்; இருந்து கீழக்கண்டவற்றை மேற்கோள் காட்டுகின்றோம்.
“திருமுறுகண்டி, சாந்தபுரம், கேப்பாப்புலவு, சன்னார் ஆகிய கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்து மீளக்குடியேற முடியாமல் இருக்கக்கூடிய மக்கள் தொடர்பாக (நாங்கள் உங்களுக்கு கொடுத்த அறிக்கையில் 12 மற்றும் 13 ஆம் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளவாறு) கௌரவ அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் எங்களுக்கு கூறியவற்றை நீங்கள் மீள நினைவுபடுத்திக்கொள்வீர்கள் என நம்புகின்றோம்.
கூரைகளுக்கான தகரங்கள் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாமையே இம் மக்களின் மீள்குடியேற்றம் தாமதமாவதற்கான காரணமென கௌரவ அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் குறிப்பிட்டார். எவ்வளவு காலம் இந்த மக்கள் கூரைத்தகடுகளுக்காக காத்திருக்க வேண்டுமென நாங்கள் கேட்டதற்கு 2 மாதங்களுக்குள் கூரைத்தகடுகள் அடங்கிய கப்பல் வந்துவிடும் என்றும் அதன் பின்னர் அவர்கள் மீள குடியேற்றப்படுவார்கள் என்றும் எமக்கு கூறப்பட்டது.
அதிமேதகு ஜனதிபதி அவர்களே!
திருமுறுகண்டி மற்றும் இந்துபுரம் ஆகிய கிராமங்களைச் சார்ந்த 4811 ஏக்கர் நிலப்பரப்பபை இராணுவ தேவைகளுக்கு கையகப்படுத்த உள்ளனர் என நாங்கள் அறிந்த போதும் நீங்கள் கூறிய பதிலை நல்லெண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் ஏற்றுக் கொண்டு இரு தரப்பும் தொடர்ச்சியாக பேசுவதெனவும் ஏற்றுக் கொண்டோம். இந்தப் பின்னணியில் அமைச்சரவை கூட்டத்தின் பின்பாக ஊடக அமைச்சர் தெரிவித்த கருத்தானது எமக்கும் தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் மிகவும் அதிர்ச்சியளித்தது.
மீள்குடியேற்றம் தொடர்பாக இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருக்கக் கூடிய இந்நிலையில் அந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறுவது தொடர்பான எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் நிலைமையை அந்த மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது உங்களின் கடமையென நாம் கருதுகின்றோம்.
ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியே இருக்கும் இந்த மக்களினுடைய உணர்வுகளை நீங்கள் மதிப்பீர்கள் என நாங்கள் எதிர்ப்பார்க்கின்றோம். மேதகு ஜனாதிபதி அவர்களே! இந்த நாட்டில் இருக்கக்கூடிய தமிழ் மக்களுடன் நீங்கள் உருவாக்க விரும்பும் புரிந்துணர்வுக்கு இந்த நடவடிக்கையானது ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை.”
எப்படியிருந்த பொழுதும் மேற்கண்ட எமது கடிதத்திற்கு இன்றைய திகதி வரை அரசாங்கத்திடமிருந்து இது தொடர்பான எந்த விதமான பதிலோ அல்லது விளக்கமோ வரவி;ல்லை. பொசன் போயா தினத்தன்று கண்டி மகாநாயக்க தேரர்களை இராணுவத்தளபதி சந்தித்துப் பேசிய போது இராணுவ வீரர்களும் அவர்களது குடும்பங்களும் மேற்கண்ட இடங்களில் குடியேற்றப்படுவார்கள் என்றும் அவர்கள் விவசாயம் செய்வதற்கு விவசாய நிலங்கள் கொடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். இவற்றின் பின்னணியில் உள்ள உண்மைகளை கண்டறிவதன் நோக்கமாகவே பாராளுமன்ற உறுப்பினர்களுடைய 29 ஆம் திகதி வன்னி விஜயம் அமைந்திருந்தது.
ஜூலை மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் சாந்தபுரம் வித்தியாலத்தை நாம் அண்மித்த பொழுது பல பொது மக்கள் தமது அரைகுறை உடைமைகளுடன் பாடசாலை நோக்கி கூட்டாக இடம்பெயர்ந்ததைக் கண்டோம். இதனைப் பற்றி நாங்கள் விசாரித்த போது இவர்கள் பத்தாவது வீதிக்கு அப்பால் இருப்பவர்கள் என்றும் 3 நாட்களுக்கு முன்பதாக மாங்குளம் பிரிகேடியர் அவர்களை சொந்த இடங்களில் சென்று குடியேறும் படி கூறியதாகவும் எமக்கு கூறப்பட்டது.
அவர்கள் அங்கு சென்று தமது தற்காலிக கூடாரங்களை அமைத்தப்பின் 29 ஆம் திகதி காலை இராணுவத்தினர் அங்கு சென்று “இங்கு நீங்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படவில்லை” என்று கூறி அவர்களை விரட்டியடித்தனர். தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்ட்டு மீண்டும் பாடசாலைக்கு விரட்டியமை இது மூன்றாவது முறை என அந்த மக்கள் எமக்கு தெரிவித்தனர். மக்கள் மிகவும் துன்பப்பட்ட சூழ்நிலையில் நிலத்தில் உருண்டு பிரண்டு கதறியழுததை எம்மால் பார்க்க முடிந்தது.
இராணுவத்தினர் பலாத்காரமாக அந்த மக்களின் உடைமைகளை இராணுவ வண்டிகளில் ஏற்றி பாடசாலைக்கு கொண்டு செல்வதை நாம் கண்டோம். நாங்கள் அங்கு சென்றதை அவதானித்த இராணுவத்தினர் அவர்களது உடைமைகள் அடங்கிய உழவு இயந்திரத்தை புதர்களுக்கு இடையில் மறைத்து வைத்ததையும் நாங்கள் அவாதானித்தோம். இருந்த பொழுதும் கூட நாங்கள் வருவதற்கு முன்பாக நாங்கள் அதைப்புகைப்படமாக எடுத்துக் கொண்டோம்.
சாந்தபுரம் பாடசாலையில் 281 குடும்பங்களைச் சார்ந்த 980 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் நலன்புரி நிலையங்கள் என்று கூறப்படும் செட்டிக்குளம் முகாமில் இருந்து 2010 மே 7 ஆம் திகதியன்று கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டு கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தனர்.
2010 ஜூலை முதலாம் திகதி அவர்கள் இன்று இருக்கக்கூடிய தமது சொந்தக் கிராமத்தில் இருக்கும் சாந்தபுரம் வித்தியாலயம் என்ற முகாமுக்கு கொண்டு வரப்பட்டனா. அங்கு ‘தரப்பால்’ கூடாரங்களுக்குள்ளே அவர்கள் வசித்து வருகின்றார்கள். 2010 ஜூலை 12 ஆம் திகதியும், இன்னும் ஒருமுறையும் இவர்கள் தமது சொந்த நிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டு மீண்டும் துரத்தப்பட்டனர்.
இதனால் தமது சொந்த நிலங்களுக்கு போக அனுமதிக்கப்பட மாட்டார்களோ என்ற பயத்தின் மத்தியில் இவர்கள் உள்ளனர். இந்த மாதம் மழை வருமாயிருந்தால் அவர்கள் இருக்கும் இடம் வெள்ளக்காடாக மாறிவிடும். இந்த முகாமில் இருக்கக்கூடிய சில பொதுமக்கள் கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற்றப் போது மிகவும் பிரயத்தனப்பட்டு ஜனாதிபதி அவர்களை சந்தித்து தாங்கள் மீள்குடியேற வேண்டிய கோரிக்கை மனு ஒன்றை கையளித்தனர். ஜனாதிபதி அவர்களும் மிக விரைவில் அவர்களது சொந்த இடங்களில் அவர்கள் மீள் குடியேற அனுமதியளிக்கப்படுவார்கள் என உறுதிமொழி கொத்தார்கள்.
இதன் பின்னர் சொந்த இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்கப்படாத திருமுறுகண்டி மற்றும் இந்துபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை சுரேஸ் பிறேமச்சந்திரன், ஆ.யு.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் வவுனியாவில் சந்தித்து கலந்துரையாடியோம். மீள்குடியேறுவதற்கு தயாராகும்படி பலமுறை அதிகாரிகள் அவர்களுக்கு கூறியும் கூட இதுவரையும் அது நடைமுறைக்கு வரவில்லை என இவர்கள் கூறினார்கள்.
இவர்களது மீள்குடியேற்றம் தொடர்பாக மாவட்டச் செயலாளரையும், சிவில் நிர்வாக உத்தியோகத்தர்களையும் கேட்கும்படி இராணுவத்தினர் இவர்களிடம் கூறியுள்ளார்கள். ஆனால் இராணுவத்தினர் தான் இவர்களை மீள் குடியேற அனுமதி கொடுக்கவில்லையென அந்த நிர்வாக உத்தியோகத்தர்கள் கூறுகின்றார்கள். இந்த மக்கள் 2 ஏக்கர் நிலத்துக்கான அரசாங்கம் கொடுத்த காணிப்பத்திரத்தை (டுயனெ Pநசஅவை) வைத்திருக்கின்றார்கள். இவர்கள் எல்லோரும் அரச காணிகளுக்கான உறுதிப்பத்திரம் (னுநநன) பெற்றுக்கொள்ள தகுதியுடைவர்களாகவும் இருக்கின்றார்கள்.
கடந்த 30 – 40 வருடங்களுக்கு மேலாக இவர்கள் இந்த மண்ணில் வாழ்த்து வருவதுடன் அந்த மண்ணில் பலன் தரும் பல வகையான மரங்களையும் நாட்டியுள்ளார்கள். தென்னை, பலா, மா போன்ற பயன்தரும் மரங்களும் நெல் விதைத்தலும் இவர்களின் வாழ்வாhரத்துக்கான விவசாய நடவடிக்கையாக உள்ளன. தென்னை, மா, பலா போன்றவற்றினால் ஓரிரு தசாப்தங்களின் பின்பே மக்களுக்கு அதன் பலாபலன்கள் கிட்டுகின்றது என்பது கவனிக்கத்ததக்கது. ஆகவே அவர்கள் நாட்டிய மரங்கள் பயன் கொடுக்கும் நிலையில், அதையே நம்பி இருக்கும் அம் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வேறு எந்த இடத்திற்கும் போக முடியாதுள்ளது.
முறுகண்டி ஆலயத்தை சுற்ற வர இருக்கக் கூடிய நீண்ட காலமாக வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள் தமது வியாபாரத்தை மீள ஆரம்பிக்கவோ தமது கடைகளை மீள கட்டுவதற்கோ இன்னும் அனுமதிக்கப்படவி;ல்லை. ஆனால் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த வெளி மாவட்டத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு அங்கு வியாபாரம் செய்ய அனுமதியளிக்கப்பட்டிருகின்றது. இரு மாடிகளைக் கொண்ட ஒரு புதிய ஹோட்டல் அந்த கோவிலுக்கு சொந்தமான காணியில் எந்தவிதமான அனுமதியும் இன்றி கட்டப்பட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இது கோவிலின் புனிதத்தை கெடுக்கக் கூடிய செயலாகவும் உருவாகும் என மக்கள் அஞ்சுகின்றார்கள்.
திருமுறுகண்டியைச் சேர்ந்த மக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் பல கடிதங்களை ஜனாதிபதிக்கும், புனர்நிர்மாண அமைச்சருக்கும் அனுப்பியும் கூட எதற்கும் இதுவரை பதில் வரவி;ல்லை. ஏனைய பிரஜைகள் போல் தாமும் தமது சொந்த நிலத்தில் வாழ வேண்டும் என்பதே இவர்களது கோரி;க்கையாகும். சாந்தபுரம், இந்துபுரம். திருமுறுகண்டியைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டின் சகல மக்களுக்கும் விடும் கோரிக்கையானது ஒன்றே ஒன்றுதான் எமக்காக பேசுங்கள். எமது நிலத்துக்கு நிரந்தரமாக சென்று குடியேறும் வகையில் எமக்கு தீர்வை பெற்றுத் தாருங்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 02.08.2010
சுரேஸ்பிறேமச்சந்திரன்
ஆ.யு.சுமந்திரன்
