TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புதிய விகாரைகள் அமைத்து தமிழ் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்

பறிபோகும் தாய்நிலம் – , புதிய விகாரைகள் அமைத்து தமிழ் கிராமங்களுக்கு சிங்களப் பெயர்.

மன்னார் – மடுக்கரைப் பிரதேசத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு கடந்த 24ம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் – பறயனாலங்குளம் வீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த ஆலயத்துக்கு சிறி போதிராஜ விகாரை என்று பெயரிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் 61வது டிவிசன் தளபதி பிரிகேடியர் காரியவன்சவின் மேற்பார்வையின் கீழ் 61-1வது பிரிகேட் படையினர் இந்த விகாரையை அமைத்துள்ளனர்.

வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண இந்த விகாரையையும், அங்கு புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலையையும் திறந்து வைத்தார்.

மடுக்கரைப் பிரதேசத்தில் தற்போது சுமார் 500 வரையான சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.

ஏற்கனவே இவர்கள் இந்தப் பகுதியில் வசித்ததாகவும், 1985ம் ஆண்டு புலிகளால் அங்கிருந்து விரட்டப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

சிங்களவர்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து கைவிடப்பட்ட பௌத்த விகாரையையே தாம் புனரமைத்துள்ளதாக சிறிலங்கா இராணுவத் தரப்பு கூறியுள்ளது.

கத்தோலிக்க மக்களின் புனிதப் பிரதேசமான மடுப்பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படுவதும், புதிதாக பௌத்த வழிபாட்டுச் சின்னங்களை அமைப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

அதேவேளை, புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறி போதிராஜ விகாரைக்கு அண்மையில் உள்ள பறயனாலங்குளம் சந்திக்கு, 1997ம் ஆண்டில் சப்புமல்புர என்று சிறிலங்கா அரசாங்கம் பெயரிட்டிருந்தது.

சிறிலங்காவின் அப்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையே இந்தப் பெயர் பலகையைத் திறந்து வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க

கிழக்கின் உதயம் என்பது பெளத்த உதயம் ஆகிறதா?!”

திட்டமிட்டு வட, கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் சைவ ஆலயங்களும் புராதன வரலாற்று இடங்களும் இருந்த சுவடின்றி அழிக்கப்படுவதன் மூலம் எல்லாச் சமயங்களுக்கும் சம அந்தஸ்து என்ற அரசாங்கத்தின் கோட்பாடு வலுவிழந்துவிட்டது. இதனால் நடைமுறையில் கிழக்கின் உதயம் என்பது பௌத்த உதயம் என்றே அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது.

இவ்வாறு மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு இந்து பேரவைத் தலைவருமான சி.யோகேஸ்வரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கதிரவெளி,வெருகம்பல் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அம்மன் சிலையை அப்பகுதி மக்கள் அவ்விடத்தில் வைத்து வழிபட விரும்பியும் அவ்விடத்திலிருந்து சிலை அகற்றப்பட்டது மிகவும் கவலைக்குரியதாகும்.

எமது சமய விதிகளின்படி தெய்வ விக்கிரகங்களை நினைத்தபடி வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. ஆகம முறைப்படி சில அனுமானங்களைச் செய்த பின்னரே ஒரு இடத்திலிருந்து கொண்டு செல்ல முடியும்.

காட்சி தந்த அம்மனை கைதியைப் போன்று பொலிஸார் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி எடுத்துச் சென்றது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவார குஞ்சிதபாத மலையில் இருந்த பாலமுருகன் ஆலயம் அகற்றப்பட்டு பௌத்த விகாரை கட்டப்படுகிறது.

அவ்விடத்திலிருந்து 2 கிலோமீற்றருக்கப்பால் வெருகல் முகத்துவாரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள கல்லடி நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு விகாரை அமைக்கப்படுகின்றதுஅத்துடன், அவ்விடத்தில் நீண்ட நாட்களாக பௌத்த விகாரை இருந்ததாகக் காட்ட பெரிய பாறைகள் கொண்டுவரப்பட்டு விகாரை அமைக்கும் பணி அசுர வேகத்தில் நடைபெறுகிறது.

மேலும்,மூதூர் அகத்தியர் ஸ்தாபனத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன் அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்ட சிவலிங்கம் உடைத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கன்னியாவில் உள்ள சிவன், விநாயகர் ஆலயம் உடைக்கப்பட்டு இன்றுவரை புதிய ஆலயம் அமைக்க முடியாத நிலை காணப்படுகிறது.

இப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர். எந்தவொரு பௌத்த மத ஸ்தலங்களோ, குடியிருப்புகளோ இருக்கவில்லை.

இவற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ்பூத்த முருக வழிபாட்டுத் தலமான தாந்தாமலை முருகன் ஆலயம் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் சுதந்திரமாக வழிபட முடியாத நிலையிலுள்ளது.

கிரான் பகுதியிலுள்ள குடும்பிமலையின் உச்சி பாதுகாப்புப் படையினரால் மின்பிறப்பாக்கி பாவிக்கும் இடமாக மாறியுள்ளதுடன், அங்குள்ள பாலமுருகன் ஆலயத்தில் வழிபட முடியாத நிலை காணப்படுகிறது. இம்மலை தற்போது தொப்பிகல என அழைக்கப்படுவதுடன், விகாரையொன்றை அமைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்று வரை எமது சமூகமும் சமயமும் பல்வேறு அழித்தொழிப்புகளையே எதிர்நோக்குகின்றன. யுத்தம் முடிவடைந்துவிட்டதாகக் கூறும் அரசு அதன் பின்னர் பௌத்தத் துறவிகளின் ஆலோசனையின்படி தொல்பொருள் ஆராய்ச்சி எனக் கூறிக்கொண்டு விகாரைகளை அமைக்கத் திட்டமிட்டுச் செயற்படுகிறது.

மகிந்த சிந்தனை என்பதில் சைவ மதத்தை அழிக்கும் இத்தகைய சிந்தனைகளும் அடங்கியுள்ளதா என்றே எண்ணத் தோன்றுகிறது.

இவ்வாறான சைவ மதத்துக்கு எதிரான அநியாயங்கள் நடந்து வரும் நிலையில் இவ் அரசாங்கத்தை அலங்கரிக்கும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முதலமைச்சர், மாகாணசபை உறுப்பினர்கள் இவ்விடயங்களை கண்டும் காணாதது போல் இருக்காமல் கட்சி பேதங்களை மறந்து இவற்றைத் தடுத்து நிறுத்த அரசுக்கு அழுத்தம் கொடுப்பது இன்றைய நிலையில் அத்தியாவசியமானதாகும்.

இந்நிலை நீடித்தால் இவற்றைத் தடுப்பதற்கு எம் சமூகம் மதச்சார்புடைய கிளர்ச்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை இனி வரும் காலங்களில் ஏற்படலாம். வடகிழக்கில் இந்நிலை ஏற்படாது முற்றுப்புள்ளி வைப்பது அரசின் பிரதான கடமை. இவ்வாறான நிலையை அரசு தடுத்து நிறுத்தி எம் மக்கள் நிம்மதியாக வாழும் காலம் வரும் வரைக்கும் எமது குரல் ஓயப்போவதில்லை. என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • seran says:

    do you know guys, that the villages, Manipay, Kopay and some others are singhelese names.

    August 3, 2010 at 01:23

Your email address will not be published. Required fields are marked *

*