TamilSpy

பொழுது போக்கு இணையம்…

‘விடுதலைப் புலிகள்’ இல்லாத வன்னியில்….

‘விடுதலைப் புலிகள்’ இல்லாத வன்னியில் ஏராளம் மாற்றங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இரண்டரைத் தசாப்தங்களுக்கும் மேலாக வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. புலிகளின் ஆட்சி நிலவிய அந்தக் காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் நிறைந்த சமூகம் அங்கிருந்ததை அனைவரும் அறிவர்.

ஊழல், களவு, சமூகச்சீர்கேடு என்பன அறவே இல்லை என்னும் அளவிற்குத்தான் அங்கு நிலைமை இருந்தது. புலிகளமைப்பின் பல்வேறுபட்ட மக்களாட்சிக் கட்டமைப்புக்கள் அனைத்தும் வினைத்திறன் கொண்டதாகவும் யாரும் குறைகாண முடியாத தனித்துவத்தினைக் கொண்டதாகவுமே விளங்கின.

நீதித்துறையாக இருக்கலாம், காவல்துறையாக இருக்கலாம், நிருவாகத்துறையாக இருக்கலாம் அனைத்துமே மக்களுக்கு அதியுச்ச சேவையினை வழங்கியதை உலகறியும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் ‘புலிகள்’ தண்டிப்பார்கள் என்ற அச்சமே குற்றச்செயல்கள் மிகவும் குறைவாக இருந்தமைக்குப் பிரதான காரணம்.

சிறு குற்றத்திற்கும் ‘புலிகள்’ பெரும் தண்டனை கொடுக்கும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் சிறு குற்றம் புரிந்தாலும் கடும் தண்டனை விதித்ததாலே அக்குற்றம் மீண்டும் இடம்பெறாது என்ற எண்ணத்தின் காரணமாகவே புலிகளமைப்பு அவ்வாறு நடந்துகொண்டார்கள்.

சுவீடனில் வசிக்கும் எனது நண்பர் ஒருவரின் அனுபவம் நினைவுக்கு வருகிறது. அந்த நாட்டின் தலைநகருக்கு அண்மையில் பாரஊர்திகளுக்கு என ஒதுக்கப்பட்ட வீதியின் ஓடுதளத்தில் வெறும் 200 மீற்றர் தூரம் வரை இவர் காரினைச் செலுத்தியமைக்காக 18,000 குரோண் பணத்தினை எனது நண்பர் குற்றப்பணமாகக் கட்டியிருந்தார்.

குறித்த நபர் அதே குற்றத்தினை மீண்டும் புரியாமல் இருக்கவே சுவீடன் காவல்துறையினர் பெருந்தொகைப் பணத்தினைக் குற்றப் பணமாக வசூலித்திருந்தார்கள். இதே உபாயத்தினையே கைக்கொண்ட புலிகள் சிறு குற்றத்திற்கும் பெரும் தண்டனை வழங்கினர்.

இதன் விளைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் கோதுமை மா அளக்கும் விற்பனையாளர்(சேல்ஸ்மன்) தொடக்கம் உயர் பதவியில் இருக்கும் அரசாங்க அதிகாரி வரை எவருமே ஊழலில் ஈடுபடுவதற்குத் துணிவதில்லை. எடுத்துக்காட்டாக, கல்வித்துறையினை எடுத்துக்கொண்டால் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் திருகோணமலையின் வரோதயநகரில் இருக்கிவரும் வட மாகாணக் கல்வித்திணைக்களத்தினது அதிகாரிகள் கூட தவறிழைப்பதற்குத் துணிவதில்லை. கிளிநொச்சியிலுள்ள புலிகளின் கல்விக்கழகத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என்ற அச்சமே இதற்குக் காரணம்.

ஆனால் இன்று அனைத்துமே தலைகீழாகிவிட்டன. அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினைக் கூற விரும்புகிறேன். வன்னியில் மீள்குடியேற்றப்பட்டிருக்கும் மக்கள் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டைகளை வைத்திருக்கவேண்டியது அவசியம். இல்லையேல் அடையாள அட்டை இல்லாதமைக்கான காரணத்தினைக் கேட்டு ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் படையினர் துழைத்தெடுத்துவிடுவார்கள்.

ஆனால் பெரும்பாலான மக்கள் இதுபோன்ற தங்களது ஆவணங்கள் அனைத்தையும் இடப்பெயர்வின் போது தொலைத்துவிட்டார்கள். அடையாள அட்டை தொலைத்தவர்கள் மணிக்கணக்கான சிறிலங்கா காவல்நிலையத்தில் காத்திருந்து பொலிஸ் றிப்போட் எடுக்கவேண்டும். அதனைப் பின்னர் கிராம சேவகரிடம் கொடுத்து அடையாள அட்டையினை மீளவும் பெறுவதற்காக விண்ணப்பிக்கவேண்டும்.

இவ்வாறு தனது அடையாள அட்டையைத் தொலைத்த எனது உறவினர் ஒருவர் அண்மையில் முள்ளியவளைப் பகுதியிலுள்ள தனது கிராம சேவையாளரிடம் சென்றிருக்கிறார். நீண்ட நாட்கள் அலைக்களித்த பின்னர் அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்த குறிப்பிட்ட கிராம அதிகாரி அடிக்கட்டைத் துண்டை எனது உறவினரிடம் வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.

காரணம் தெரியுமா? ஒரு ‘போத்தல்’ வாங்கித் தந்தால் மாத்திரமே அடிக்கட்டையைத் தருவேன் என்றிருக்கிறார். இங்கு போத்தல் என அந்தக் கிராம அதிகாரி குறிப்பிட்டது வேறு எதுவுமல்ல, சாராயப் போத்தலைத்தான். அடையாள அட்டைக்கு மாற்றீடாக அந்த அடிக்கட்டைத் துண்டை மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு புதிய வீட்டுத் திட்டங்களுக்கான நிதியினை சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பன வழங்கி வருகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் குடும்பம் ஒன்றுக்கு வீடமைப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாய்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

இந்தத் திட்டத்திற்காக பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு குறிப்பிட்ட கிராமத்தின் கிராம அலுவலருடையதே. இங்கும் இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றது. வன்னியிலுள்ள அனைத்து கிராம சேவகர்களும் இவ்வாறு குற்றமிழைக்கிறார்கள் என நான் கூற விரவில்லை. மக்களுக்குத் தகுந்த சேவையினை வழங்கவேண்டும் என அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பொறுப்புடனும் செயற்படும் கிராம அலுவலர்கள் பலர் உளர்.

அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமமொன்றிலுள்ள கிராம அலுவலர் ஒருவர் உண்மையில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுக்கவில்லை. இவர்களுக்கான வீட்டுத்திட்டத்தினைப் பெற்றுக்கொடுப்பதை அந்தக் கிராம அலுவலர் வேண்டுமென்றே இழுத்தடிக்க, இவருக்கு அலுவலக உதவியாளராக இருக்கும் பெண்மணி ‘ ‘ஐயாக்கு’ கையில் ஏதும் பார்த்து வைத்தால்தானே ஐயாவும் மனம் திறப்பார்’ எனக் கூறியிருக்கிறார்.

தம்மிடமிருந்த நகைகளை அடைவு வைத்து 10,000 ரூயாவினை அந்தக் கிராம அலுவலருக்குக் இலஞ்சமாகக் கொடுத்த பின்னரே ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கூடிய 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டத்தினை இந்த வறிய குடும்பத்திற்குக் கிராம அலுவலர் பெற்றுக் கொடுத்திருக்கிறார். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோலுள்ளது வன்னியில் பலரது வாழ்க்கை.

மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் ‘காசுக்கு வேலை’ என்ற திட்டம் தொண்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவரவர் கிராமங்களில் வீதியினை அகலமாக்கி வாய்க்கால்களை வெட்டுதல், பாடசாலைகள் கோவில்களை துப்பரவு செய்தல் போன்ற பணிகளில் கிராமத்தவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். நாளொன்றுக்கு ஒருவருக்கு 500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட கிராம அலுவலர் பிரிவில் இந்தத் திட்டத்தின் கீழ் வீதியினை அகலாமாக்கியபோது தறித்து விழுத்தப்பட்ட 25 வரையிலான பாலை மரக்குற்றிகளை அதே கிராம அலுவலர் சட்ட விரோதமாக அறுத்துத் தீராந்திகளாக்கி விற்றிருக்கிறார். இதன் பெறுமதி சுமார் 450,000 ரூபாய்களாகும்.

இதுபோல வன்னியின் பல பாகங்களிலுமுள்ள வர்த்தகர்கள் மற்றும் பணக்காரர்கள் தேக்கு, முதிரை, பாலை, வேம்பு உள்ளிட்ட மரங்களைச் சட்டவிரோதமாக அறுத்துத் தள்ளுகிறார்கள். முள்ளியவளைப் பகுதியில் வசித்துவரும் ஒரு பணக்காரரின் வீட்டுக்கு இரவில் இரண்டு அல்லது மூன்று ரைக்ரர் லோட் முதிரை மரங்கள் தினமும் வந்திறங்குகிறது. இவர்கள் சிங்களக் காவல்துறையினருக்கும் படையினருக்கும் பணத்தினை இலஞ்சமாகக் கொடுத்துவிட்டே மரக்கடத்தலில் ஈடுபடுகிறார்கள்.

ஆனால் சாதாரணமாக தமது வீடுகளுக்கான கதவு, யன்னல் தேவைகளுக்காக தமது நிலங்களில் நிற்கும் மரங்களைத் தறிக்கும் மக்களை காவல்துறையினர் பலவகைப்பட்ட ஆவணங்களையும் அத்தாட்சிகளையும் கோரி படாதபாடு படுத்துகிறார்கள்.

வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப்பகுதியில் வனவளப் பாதுகாப்புப் பிரிவு ஏற்கனவேயுள்ள வனங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முனைப்புக்களையும் மேற்கொண்ட அதேநேரம் மீள் வனமாக்கல் திட்டங்கள் பலவற்றையும் முன்னெடுத்திருந்தது. மக்களின் மரத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில், குறித்த மரத்தின் பரம்பல் மற்றும் மூப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே மரங்கள் தறிக்கப்பட்டன.

சட்டவிரோதமாக யார் மரம் வெட்டினாலும் வன வளப்பாதுகாப்புப் பிரிவினர் கடுமையான நடவடிக்கையினை எடுத்தார்கள். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அது போராளியாக இருந்தாலும் கூட கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் சட்டவிரோதமாக மரத்தினை வெட்டினால் மூன்று மாதங்கள் ஊதியம் எதுவுமின்றி மீள் வனமாக்கால் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதுதான் வழமையாக இருந்தது. வன்னியின் சொத்தாகக் கருதப்படும் காடுகளைப் பாதுகாப்பதற்கு வனக்காவல் படையையே வனவளப் பிரிவு கொண்டிருந்தது.

வன்னியில் பரவலாக இடம்பெறும் இன்னொரு பிரச்சினையினை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். களவு – இது இப்போது மலிந்து கிடக்கிறது. வன்னியில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மக்கள் தங்களது சொந்துக்கள் அனைத்தையுமே அங்கு விட்டுவிட்டே வந்தார்கள். இந்தச் சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாட்டில் படையினர் ஒருபுறமும் மக்கள் ஒருபுறமுமாகவும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

25,000 ரூபா பெறுமதியான நீர்ப்பம்பிகள் 6,000 ரூபாய்க்கும், 40,000 பெறுமதியான முதிரம் கதவுகள் சோடி 12,000 ஆயிரத்திற்கும் விற்பனையாகின்றன. விசுவமடுப் பகுதியிலுள்ள கறுப்புச் சந்தையில் இதுபோன்ற பொருட்களைத் தேவையான அளவு கொள்வனவு செய்யலாம். மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத பகுதிகளுக்கு கள்ளத்தனமாகச் செல்லும் இவர்கள் இந்தப் பொருட்களை அங்கிருந்து கொண்டுவருகிறார்கள்.

வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் ஆரம்பத்தில் மக்கள் தங்களது சொத்துக்களுடன் இடம்பெயர்ந்திருந்த போதும் மோதல்கள் தீவிரம் பெற, தங்களது சொத்துக்களை அந்தத்த இடத்திலேயே போட்டுவிட்டு வெறும் உடுப்புக்களுடன் மாத்திரம் இடம்பெயர்ந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகள் இல்லாத வன்னியில் இள வயதினர் மத்தியில் குடிப்பழக்கமும் புகைப்பழக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. சமூகச் சீர்கேடுகள்பற்றிச் சொல்லவே தேவையில்லை. அண்மையில் கிளிநொச்சிப் பகுதியிலுள்ள தேநீர்சாலை ஒன்றில் தேநீர் அருந்துவதற்காகச் சென்றிருந்தேன். 15 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகரெட் பக்கெற்றை வாங்கி கடையருகில் நின்றவாறே புகைப்பிடிக்கிறான்.

வன்னி இடப்பெயர்வின் பின்னர் தனது கல்வியினை இடைநிறுத்திய இந்தச் சிறுவன் தற்போது கூலி வேலை செய்கிறானாம். இந்த உணவகத்தில் ’21 வயதிற்கும் குறைந்தவருக்கு சிகரெட் விற்காதே’ என்ற அரசாங்க அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்ததையும் நான் கண்டேன். எங்களது இளம் சந்ததியினர் பயணிக்கும் திசையினை எண்ணும்போது என்மனம் அழுகிறது.

ஏனையவர்களின் சொத்துக்களை மக்கள் அபகரிப்பதும் அதிகம் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி நகரத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் இதுபோன்ற அபகரிப்புச் சம்பவங்களை நான் கூறத்தான் வேண்டும்.

வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த காலப்பகுதியில் அவர்களது செயற்பாடுகள் அனைத்தும் கிளிநொச்சியை மையப்படுத்தியதாகவே இருந்தன. இந்தக் காலப்பகுதியில் திருமணம் செய்த போராளிகள் பலரும் கிளிநொச்சி நகரினை அண்டிய பகுதிகளில் காணிகளை வாங்கி வீடுகளைக் கட்டியிருந்தார்கள். வெளிநாடுகளிலுள்ள தங்களது உறவினர்களின் உதவியுடனும் பெற்றோர்களது உதவிகளுடனும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே சிறு துண்டு நிலத்தினை வாங்கி இவர்கள் வீடுகளைக் கட்டியிருந்தார்கள்.

இப்போது இந்தப் போராளிகள் ஒன்றில் இறுதிப்போரின் போது வித்தாகிவிட்டார்கள் அல்லது சிறிலங்கா இராணுவத்தினரின் தடுப்பு முகாம்களில் வாடுகிறார்கள். கணவன் தடுப்பில் இருக்கும் நிலையில் குடும்பத்தினைக் கொண்டு நடத்துவதற்கே தினமும் போராடும் இவர்களது மனைவிமார் தங்களது வீடுகளையும் காணிகளையும் பார்த்து வருவதற்குக் கிளிநொச்சி சென்றபோது பெரும்பாலும் ஏமாற்றமே காத்திருந்தது.

காரணம் தெரியுமா? போர் உக்கிரமடைந்திருந்த வேளையில் இதுபோன்ற சொத்துக்களின் ஆவணங்கள் அனைத்தையும் இவர்கள் இழந்துவிட்டார்கள். உயிருடன் மிஞ்சுவோமா எனத் தெரியாத நிலையில் இந்த ஆவணங்கள் முக்கியமானவையாக அப்போது இவர்களுக்குத் தெரியவில்லை.

இன்று இந்தக் காணிகளை இவர்களுக்கு விற்றவர்களே – போராளிகள் கஸ்ரப்பட்டுக் கட்டிய வீடுகளில் குந்தியிருந்துகொண்டு – எழும்ப மறுக்கிறார்கள், இராணுவத்திடம் போய் முறையிட்டுவிடுவோம் என அச்சுறுத்துகிறார்கள். எங்கள் காணிகளை அடாத்தாகத்தானே பறித்தீர்கள் என வீண் வம்பு பேசுகிறார்கள்.

கிளிநொச்சியின் செல்வாநகர் பகுதியில், ஒரு போராளி நானறிய நாலரை இலட்சம் பணம்கொடுத்து காணியொன்றை வாங்கி, 13 இலட்சம் பெறுமதியில் வீடு ஒன்றைக் கட்டியிருந்தார். லண்டனிலுள்ள தனது சகோதரன் அனுப்பிய பணத்திலேயே அவர் அந்தக் காணியை வாங்கியிருந்தது எனக்குத் தெரியும். இறுதிப்போரின் போது அந்தப் போராளி இறந்துவிட, இரண்டு பிள்ளைகளுடன் உறவினரின் தயவுடன் வாழும் இந்த யுத்த விதவை அண்மையில் தனது காணிக்குச் சென்றபோது அங்கு காணியை இந்தப் போராளிக்கு விற்றவர்கள் குடியிருப்பதைக் கண்டாள்.

‘காணியைத் தராவிட்டால் பிள்ளையைப் பிடிப்பேன் என நீங்கள் அச்சுறுத்தியதனாலேயே காணியைத் தந்தோம்’ எனப் படுபொய் கூறியிருக்கிறார்கள். இனியும் இங்கு வந்தால் உன்னையும் இராணுவத்திடம் பிடித்துக்கொடுத்துவிடுவோம் என எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட மோசமானது யாதெனில், உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் போராளிக் குடும்பங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கு இப்போது வன்னியில் எவருமில்லை. இதே வன்னி மக்களுக்காக தங்களது உயிரையே விலையாகக் கொடுத்துப் போராடியவர்களுக்கு மக்கள் கொடுக்கும் சன்மானம் இதுதான்.

புலிகள் இல்லாத வன்னியின் நிலை இதுதான். நாம் இன்னொரு உண்மையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். வன்னி மக்கள் அனைவரும் இவ்வாறு மோசமான நடந்துகொள்கிறார்கள் என நான் கூற வரவில்லை.

என்ன நடக்கிறதோ அதனை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எவராலும் எதுவும் செய்துவிட முடியாத நிலையில், பலர் இவற்றைப் பார்த்துப் பெருமூச்செறிந்து கொண்டிருக்கின்றனர். இதுபோன்றதொரு சமூகம் வன்னியில் உருவாகுவதற்குப் படையினர்தான் தூபமிடுகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மீள்குடியேற்றப்பட்ட வன்னியில் தோன்றும் பிரச்சினைகள் இவை.

வன்னி தனது தனித்துவத்தினை இழக்காத வகையில் எவ்வாறுதான் மீளப்போகிறதோ என்ற அச்சம்தான் அனைவரது மனங்களிலும் தங்போது குடிகொண்டிருக்கிறது.

யாழினி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • Bharathier says:

    Mary Robinson, former Irish President and former UN High Commissioner for Human Rights said:

    “The EU’s suspension of Sri Lanka’s GSP Plus scheme is the right approach, but it’s not enough. Sustained pressure is necessary, not only to protect human rights in Sri Lanka, but to protect the rights of people everywhere. It is not just governments who can help improve the situation – anyone doing business in Sri Lanka or going there on holiday should also try to make choices that will help all its citizens to a more equitable and prosperous future.”

    August 3, 2010 at 23:11

Your email address will not be published. Required fields are marked *

*