TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிங்களக்குடியேற்றங்களால் பாதிக்கப்படும் இன ஒற்றுமை

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கம் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் தமிழ் மக்களை சந்தேகம் கொள்ள வைக்கின்றன. இனங்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்து அதிகமாகப் பேசப்படும் இந்த வேளையில், வடக்கில் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கடந்தவாரம் மங்கள சமரவீர எம்.பி குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும “கிழக்கில் மீளக்குடியமர்வு முடிவடைந்துள்ள நிலையில் அங்கு ஏற்கனவே குடியிருக்காத ஒரு சிங்களக் குடும்பம் கூட குடியமர்த்தப்படவில்லை என்றும் அதேபோன்று வடக்கிலும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்படாது’ என்றும் கூறியிருந்தார். இது எந்தளவுக்கு உண்மையானதென்ற சந்தேகம் தமிழ்மக்களுக்கு ஏற்கனவே ஏற்பட்டு விட்டது.

கிழக்கில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழ் மக்களின் பெரும்பான்மை பலம் சிதைக்கப்பட்டு விட்டது என்பது வரலாற்று தியான உண்மை. இப்போதும் கூட தமிழ்மக்களின் பெரும்பான்மை பலத்தைச் சிதைப்பதற்கான முயற்சிகள் அரசு சார்ந்த ரீதியிலும், அரசு சாராத வகையிலும் இடம்பெறுவதை எவராலும் மறுக்க முடியாது. அம்பாறை மாவட்டத்துக்குட்பட்ட சில சிங்களக் கிராமங்களை மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்க அரசு மேற்கொண்டிருக்கும் முயற்சி இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

சிங்கள மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்குச் செல்வதில் சிரமம் இருப்பதாகக் கூறி, 18 வருடங்களுக்கு முன்னர் அம்பாறை நிர்வாக அலகுக்குள் கொண்டு செல்லப்பட்ட சில கிராமங்கள் மீளவும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. செங்கலடி பதுளை வீதியிலுள்ள சிங்களக் கிராமங்களான கெனுபுர, மங்களகம என்பன ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசபையுட னும், கெவுளியாமடு, புளுகுணாவ போன்ற கிராமங்கள் பட்டிப்பளை பிரதேச சபையுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்கள் தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, அனைத்து அரசாங்க திணைக்களங்களுக்கும் அறிவித்துள்ளார். இதன் மூலம் திருகோணமலை, வவுனியா, அம்பாறை போன்று மட்டக்களப்பிலும் சிங்கள மக்களின் விகிதாசாரத்தை மெல்ல மெல்ல அதிரிகக்க முடியுமென அரசு நம்புவதாகத் தெரிகின்றது. திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ்மக்களின் பாரம்பரிய நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதன் காரணமாக, தமிழ்மக்களின பிரதிநிதித்துவம் முற்றாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது.

மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் இது சாத்தியமானதாக இருக்கவில்லை. இந்த நிலையில் போர் முடிவுக்கு வந்து விட்டதைச் சாட்டாக வைத்துக் கொண்டு சிங்களக் கிராமங்களை மட்டக்களப்புடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அரசாங்கம். ஒரு இனத்தின் பாரம்பய தாயகக் கோட்பாட்டைச் சிதைக்க பெரிதும் துணையாக இருப்பது குடியேற்றங்கள் தான்.

இனத்துவப் பரம்பலைச் சிதைக்கும் வகையில் நிர்வாக அலகுகளை மாற்றியமைப்பது இதன் இன்னொரு உத்தி. இவை டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் காலங்காலமாக மேற்கொள்ளபட்டு வருகின்ற நடவடிக்கைகளே. தமிழ் மக்களின் பாரம்பய தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து சிங்களவர்களின் பரம்பலை அதிகப்பதே இதன் இலக்கு. மட்டக்களப்பு மட்டுமன்றி எந்தவொரு இடத்திலும் இத்தகைய குடியேற்றங்கள் அல்லது கிராமங்ளை மாற்றி இணைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது காலப் போக்கில் தமிழ்மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும்.

திருகோணமலையிலும், அம்பாறையிலும், வவுனியாவிலும் நடந்தது இதுதான். 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தமிழ்க் கிராமங்களான செம்மலை, கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், தென்னமரவாடி உள்ளிட்ட 42 கிராமங்கள் அநுராதபுரம் மாவட்டத்தின் நிர்வாக ஒழுங்குறையில் இணைக்கப்பட்டன. இதன்மூலம் இந்த 42 கிராமங்களையும் சேர்ந்த 13,228 தமிழ்க் குடும்பங்கள் தமது பாரம்பரிய நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டன. இதன் முக்கிய நோக்கம், தமிழர் தாயகத்தின் தொடர்நிலப்பரப்பான வடக்கையும், கிழக்கையும் துண்டாடுவதே.

1984 ஆம் ஆண்டு தொடக்கம் உருவாக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களை ஊடக் குவிக்கும் வகையில் மகாவலி “எல்’ வலய மாகப் பிரகடனம் செய்யப்பட்டு இதுவரையில் 5,925 சிங்களக் குடும்பங்கள் இராணுவத்தினன் மேற்பார்வையில் குடியேற்றப்பட்டுள்ளன. தற்போது கம்பிலிவௌ, கோன்வௌ, வெஹெரவௌ, கஜபாபுர, நிக்கவௌ தெற்கு, நிக்கவௌ வடக்கு, எத்தாவெட்டுனுவௌ, எதுகஸ்வௌ, கிஇப்பன்வௌ தெற்கு, கி இப்பன்வௌ வடக்கு, ஹெலம்பவௌ, கல்யாணபுர, பராக்கிரமபுர, சிங்கபுர, ஜனகபுர, போன்ற சிங்களப் பெயர்களுடன் இருக்கின்ற கிராமங்கள் அனைத்துமே தமிழ்மக்களின் பாரம்பய நிலங்களில் ஏற்படுத்தப்பட்டவை தான்.

தென்னமரவாடி, அமவயல், பதவியா போன்ற திருகோணமலையின் தமிழ்க் கிராமங்களும் முல்லைத்தீவு தெற்கு, வவுனியா வடக்கு பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களும் தான் இன்று வெலிஓயாவாக நிமிர்ந்து நிற்கிறது. இந்தப் பிரதேசத்தை 1988இல் நிர்வாக நடவடிக்கைகளுக்காக மட்டும் அரசாங்கம் அனுராதபுரவுடன் இணைத்தது. ஆனால் வன்னித் தேர்தல் தொகுதியில் சிங்களப் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்பதற்காக இந்தக் கிராமங்கள் இன்னம் அதே தேர்தல் முறைக்குள் தான் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

சிங்களக் குடியேற்றங்களின் மூலம் பிரதி நிதித்துவங்களை அதிகப்படுத்தல் அல்லது உருவாக்குதல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் இப்போது மட்டக்களப்புடன் சிங்களக் கிராமங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அம்பாறையுடன் இணைக்கப்பட்ட சிங்களக் கிராமங்களை மட்டக்களப்புடன் இணைத்துள்ளது போன்று, அனுராதபுரவுடன் இணைக்கப்பட்ட தமிழ்க் கிராமங்களை திருகோண மலையுடன் அல்லது முல்லைத்தீவுடன் இணைக்க அரசாங்கம் ஒருபோதும் தயாராக இல்லை.

காரணம், சிங்கள குடியேற்றவாசிகளின் நலன்களைப் பாதுகாக்க அனுராதபுரவுடன் இணைந்திருப்பதே வசதியானது. இதற்கிடையே வெலிஓயாவில் மகாவலி “எல்’ திட்டத்தின் கீழ் நெடுங்கேணிப் பகுதியில் 2500 குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளதாக மகாவலி அதிகாரசபைத் தலைவர் தர்மசிறி டி அல்விஸ் அரச சார்பு சிங்களப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். இங்கு குடியேற்றப்படும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஏக்கர் வயல் காணி, அரை ஏக்கர் தெங்கு பயிரிடக் கூடிய காணி, ஒரு ஏக்கர் வீட்டுத் தோட்டக்காணி என்பன வழங்கப்படவுள்ளன.

இங்கு குடியமர்த்தப்படவுள்ளது சிங்கவர்களா அல்லது தமிழர்களா என்பது பற்றி அவர் ஏதும் தெவிக்கவில்லை. சிங்களக் குடியேற்றத்தை அரசாங்கம் உருவாக்கினால் அது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேவேளை, இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்கள் குடியமர்த்தப்படுவதற்கு அரசாங்கம் காணிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஏனென்றால் அது அவர்களின் பூர்வீகச் சொத்து. பலாத்காரத்தின் பேரில்தான் அவை அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டவை.

முன்னர் இந்தப் பகுதியில் குடியமர்த் தப்பட்ட சிங்களர்களுக்கு 5ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் இப்போது அது இரண்டரை ஏக்கராகக் குறைக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. அண்மையில் “ரைம்’ சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “எந்தவொரு இனத்துக்கும் என தனியான பிரதேசம் வழங்கப்பட மாட்டாது’ என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். அதாவது வடக்கோ கிழக்கோ தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பதை அங்கீகக்க அவரோ அவரது அரசாங்கமோ தயாராக இல்லை என்பதே இதன் உட்பொருள்.

இதைச் செய்வதற்கு சிங்களக் குடியேற்றங்களும், கிராமங்களின் இணைப்புகளும் அவசியப்படுகின்றன. மாகாண எல்லைகளை மீள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விமல் வீர வன்சவின் அழைப்பும் இதன் அடிப்படையிலானதுதான். இவையெல்லாம் தமிழ்மக்களை மென் மேலும் சந்தேகத்துடன் பார்க்க வைக்கின்றன. புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை பற்றிப் பேசப்படுகிறது. பிரிவினைக்கே இடமில்லை என்று உபதேசங்கள் வருகின்றன. ஆனால் இவையெல்லாம் சாத்தியமாக வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

அவர்களின் உரிமைகள் நசுக்கப்படவில்லை என்பதை அவர்கள் உணரும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் கைகளில் தான் இருக்கிறது. ஆனால் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகையில் அரசாங்கம் நடந்து கொள்வதாகத் தெரியவில்லை.

– நகுலன்

நன்றி்: வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*