TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கிளி அமைச்சரவைக் கூட்டம்: இன நல்லிணக்கத்தை கொண்டுவருமா

கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டம்: இன நல்லிணக்கத்தைக் கொண்டுவருமா?.

கடந்த புதன்கிழமை, வவுனியா தொடக்கம் பரந்தன் வரையான அனைத்து நகரங்களிலும் சிங்களப் படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு அதிரடிப் படையினர், காவல்துறையினர், இராணுவக் கொமாண்டோக்கள் மற்றும் அதிபர் ராஜபக்சவினது பாதுகாப்புப் பிரிவினர் என ஆயிரக்கணக்கான சிங்களச் சிப்பாய்கள் கண்ணுக்குள் எண்ணெய் விட்டவாறு ஏ9 வீதியோரங்களில் கடமையில் இருந்தார்கள்.

அதிகாலை முதல், சிறிலங்காவினது அமைச்சர்களது வாகனங்களும் அவர்களது பாதுகாப்புக்குப் பொறுப்பான வாகனங்களும் முகப்பு வெளிச்சத்தினைப் பாய்ச்சியவாறு ஏ9 வீதி வழியாக கிளிநொச்சி நகரத்தினை நோக்கிப் பறந்துகொண்டிருந்தன. யூலை 14ஆம் நாளன்று காலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற அதிபர் ராஜபக்சவின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கெடுக்கவே அமைச்சர்கள் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

இதன் விளைவாக வவுனியா தொடக்கம் பரந்தன் வரையிலான அனைத்து நகரங்களினதும் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வீதியோரத்தில் கூடிய மக்களைச் சிங்களச் சிப்பாய்கள் கடும்சொற்களால் திட்டித் துரத்தினர். கிளிநொச்சியின் நகர வீதியின் ஓரத்தில், ஒரு மூலையில் நின்றவாறு இந்த நிகழ்வினை அவதானித்தபோது வயிறு பற்றி எரிந்தது எனக்கு. அமைதிக் காலத்தின் பசுமையான நினைவுகள் என் மனதில் இழையோடின.

அது அமைதிக்காலம். வாரத்திற்கு ஒரு இராசதந்திரி என்ற ரீதியில் மேற்கு நாடுகளின் இராசதந்திரிகள் கிளிநொச்சிக்கும் படையெடுத்த நாட்கள் அவை. தமிழீழக் காவல்துறையின் வெள்ளை வர்ணம் பூசப்பட்ட உந்துருளிகள் முன்னால் செல்ல, அதனைத் தொடர்ந்து சைறன் ஒலித்த தமிழீழக் காவல்துறையின் பிக்கப் ரக வாகனங்கள் தொடர்ந்து செல்ல, புலிகளின் அரசியல் துறையினரின் வாகனம் அழைத்துச் செல்ல இராசதந்திரிகள் அமைதிக்காலத்தில் புத்துயிரும் புதுப்பொலிவும் பெற்றிருந்த கிளிநொச்சி நகர வீதிகளில் ஊலாச் சென்றார்கள்.

இந்த வீதியுலாவினைப் பார்ப்பதற்கு நகர வீதியின் இருமருங்கிலும் மக்கள் கூடியிருப்பர். புலிகளின் அரசியல் தலைமையகம் அமைந்திருந்த கிளிநொச்சியின் பரவிப்பாஞ்சான் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திலும், கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்திலும் இராசதந்திரிகளை ஏற்றிய சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகள் அடிக்கடி இறங்கிச்செல்லும்.

புலிகளின் அரசியல் தலைமையினைச் சந்திப்பது இராசதந்திர ரீதியில் முக்கியமானதொரு விடயமாகவே அப்போது மேற்கினது இராசதந்திரிகள் கருதினர். தமிழர் தரப்பினது பிரதிநிதிகளைச் சந்திப்பதில் இவர்கள் அவ்வளவு ஆர்வமாக இருந்தார்கள். ‘பலம்’, உலகிலுள்ள விடுதலை அமைப்புக்களில் முன்னுதாரணமாகப் புலிகளமைப்புத் திகழ்ந்தமை, இவைதான் தமிழர்களது பிரதிநிதிகளாகப் புலிகளை முன்னுயர்த்தியது. வடக்குக் கிழக்கினது மொத்த நிலப்பரப்பில் அண்ணளவாக மூன்றில் இரண்டு பகுதியினை விடுதலைப் புலிகள் அப்போது தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள்.

நிலைமை தலைகீழாக மாறியதும், ஈழத் தமிழரின் இயங்கு சக்தியாகச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது தனிநாடு நோக்கிய ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் இடைநின்று போனதும் வேறுகதை.

இரணைமடுக் குளத்தினை அண்டியதாகவுள்ள கிளிநொச்சி மாவட்டப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலேயே கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களுக்கு வெளியே முதன்முதல் நடாத்தப்பட்ட இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றிருக்கிறது. சிறிலங்காவின் அமைச்சர்கள் பலரும் கிளிநொச்சி நகரத்திற்கு விஜயம் செய்வது இதுதான் முதல் முறையாம்.

ஒரு காலத்தில் கிளிநொச்சி என்றாலே அலறித் துடிக்கும் சிங்களத் தலைவர்கள் இப்போது அந்த மண்ணை மிதிக்கவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்கள். தமிழர்களைத் தாம் வென்றுவிட்டோம் அன்ற அகங்காரத்துடன் இருக்கும் சிங்களத் தலைமைகள் தமிழர்களது நிலங்களில் உலாவரத் துடிக்கிறார்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டை நோக்கிச் தென்பகுதிச் சிங்களவர்கள் ஓய்வின்றிப் படையெடுப்பதன் காரணமும் இதுதான்.

2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கடல் விமானம் வழியாக இரணைமடுக்குளத்தில் வந்திறங்கிய போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் நின்று வரவேற்ற, குளத்தினை அண்டியதாக இருக்கும் நீர்ப்பாசன விடுதியிலேயே தற்போது கிளிநொச்சி மாவட்டப் படைத் தலைமையகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு அமைக்கப்பட்டிருக்கும் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு மண்டபத்திலேயே அமைச்சரவைக் கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திர ராஜகுரு இதற்கான அனைத்து ஒழுங்குகளையும் செய்திருந்தார்.

காலை 10 மணிக்கு ஆரம்பமான அமைச்சரவைக் கூட்டம் நிறைவுக்குவர, வட பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஒன்றும் அதிபர் ராஜபக்சவின் தலைமையில் இடம்பெற்றிருந்தது. தொடர்புடைய அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் மாவட்டப் படைத்தளபதிகள் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்கள்.

‘நீண்ட பல காலமாக விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் இருந்து செயற்பட்டவர்கள் நீங்கள். அந்த அமைப்பு இப்போது முற்றாக அழிக்கப்பட்டு விட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் பணியாளர்களான நீங்கள் அந்த அரசுக்கு நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் செயற்படவேண்டும்’ என அதிபர் ராஜபக்ச அதிகாரத் தோரணையில் அரச அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாலை இரண்டு மணியளவில் அதிபர் ராஜபக்ச கிளிநொச்சி மத்திய விளையாட்டு மைதானத்திற்கு வந்திருந்தார். மீள்குடியேறிய மக்களிடத்திலிருந்து பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரு சக்கர உழவு இயந்திரங்கள் (லாண்ட் மாஸ்ரர்), நீர்ப் பம்பிகள், தையல் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கரவண்டிகள் என்பனவும் அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட இந்தப் பொருட்களின் பெறுமதியில் 50 வீதமான பணம் பயனாளிகளிடதிருந்தே அறவிடப்பட்டு மானிய அடிப்படையில் இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதிபர் ராஜபக்சவின் இந்தக் கூட்டத்திற்கு மக்களைக் கவர்ந்திழுக்கும் வகையிலேயே, மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கென பல்வேறு தொண்டு நிறுவனங்களும் அன்பளிப்பாக வழங்கிய இந்த உபகரணங்கள் இந்த நிகழ்வில் வைத்து மக்களிடம் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வில் பங்கெடுப்பதற்காக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் யாழ்;ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பயனாளிகள் பேருந்துகளில் ஏற்றி வரப்பட்டிருந்தார்கள்.

முன்னர் சந்திரன் பூங்கா அமைந்திருந்த இடத்தில் தற்போது அமைக்கப்பட்டிருக்கும் படையினருக்கான நினைவுத் தூபிக்கும் அதிபர் ராஜபக்ச சென்றிருக்கிறார்.

அதிபர் ராஜபக்சவின் முன்னைய கிளிநொச்சி விஜயம் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. கடந்த ஆண்டு போர் உக்கிரமடைந்திருந்த காலமது. கடந்த ஆண்டு ஏப்பிரல் 27 ஆம் நாளன்று அதிபர் ராஜபக்ச கிளிநொச்சிக்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அப்போது கிளிநொச்சி மாவட்டப் படைத் தலைமையகம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்திலேயே செயற்பட்டு வந்தது.

ராஜபக்சவின் இந்த முதலாவது கிளிநொச்சி விஜயத்திற்காக மருத்துவமனை வளாகத்திற்கு எதிர்ப்புறம் அவசர அவசரமாக உலங்குவானூர்த்தி இறங்குதளம் ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக மருத்துவமனைக்கு எதிரே இருந்த ஐந்து நிரந்தர வீடுகள் மற்றும் நான்கு வியாபார நிலையக் கட்டடங்கள் என்பன முற்றாக உடைக்கப்பட்டு அந்த இடத்தில் நிலம் மட்டப்படுத்தப்பட்டு உலங்குவானூர்தி இறங்குதளம் அமைக்கப்பட்டிருந்தது.

அதிபர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்வதற்காக அப்பாவிக் குடிமக்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. இதனை இன நல்லிணக்கத்தினை நோக்கிய நகர்வு என நாம் கூறலாமா?

தென்பகுதிச் சிங்கள மக்களை ஏமாற்றும் வகையில் மகிந்த அரங்கேற்றும் ஓர் அரசியல் நாடகமே கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தனா இந்த நிகழ்வினை விபரித்திருந்தார்.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் குந்தியிருக்க ஒரு வீடற்ற நிலையில், தரப்பாள் கொட்டில்களிலும் மரங்களின் கீழும் காலத்தினைக் கடத்துகிறார்கள். இவர்களது வாழ்வாதாரங்கள் அனைத்துமே சிதைக்கப்பட்டிருக்கிறது. மீள்குடியேற்றத்துக்காகச் சென்றபோது இவர்கள் தங்களின் ஊர்களில் வெறும் சூனியத்தையே கண்டார்கள். மீண்டும் எழுவதற்குத் துடிக்கும் இந்த மக்களுக்கு கைகொடுப்பதற்கு எவருமே முன்வரவில்லை. போதிய வேலை வாய்ப்புக்களே வசதிகளோ அங்கில்லை.

இன நல்லிணக்கத்தினை நோக்கிய பாதையில் சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகிறதாம். நீண்ட பல தசாப்தங்களாகத் தொடர்ந்த போரினால் தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் காயங்களைப் போக்குவதற்கு இதுபோன்ற முனைப்புக்கள் துணை நிற்குமாம் எனக் கூறிக்கொண்டு கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தினைக் கூட்டுகிறார்கள் இவர்கள்.

ஆனால், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த போரில், தங்களது சொத்துக்களையும் சொந்தங்களையும் இழந்து அன்புக்குரியவர்களைப் பறிகொடுத்துப் பரிதவித்து நிற்கும் இந்த மக்களின், கவனிப்பார் யாருமற்றுக் கைவிடப்பட்டிருக்கும் இந்த மாந்தரின் மனங்களில் மாறாத வடுவாக மாறிவட்ட காயங்களை ஆற்றவேண்டியது காலத்தின் கட்டாயம்.

உண்மையில் வன்னி மக்களின் பிரச்சினை என்ன என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதை விடுத்து, கிளிநொச்சில் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுவதும், வங்கிகளைத் திறப்பதும், உல்லாச விடுதிகளை அமைப்பதும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இன நல்லிணக்கத்திற்கான சூழலையோ, அவர்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் ஆறாத வடுக்கள் நீங்குவதற்கோ வாய்ப்புக்களை ஏற்படுத்திவிடாது.

உண்மையான இன நல்லிணக்கம் ஏற்படவேண்டுமெனில், முதலில் போர் முடிவடைந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் நலன்புரி நிலையங்களிலும் மீள்குடியேற்றப்பட்ட நிலையில் தமது ஊர்களிலும் போதிய வசதிகளின்றி வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கு வழியேற்படுத்தப்பட்டு அவர்களின் வாழ்வில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

அடுத்து, இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை முளைவிட்டமைக்கான அடிப்படைக் காரணம் எதுவோ அவற்றைக் கண்டறிந்து தீர்க்கும் வகையிலான இதயசுத்தியுடன் கூடிய முனைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். நாங்களும் இந்த நாட்டின் மக்களே என்ற எண்ணம் தமிழர்களது மனங்களில் ஏற்படும் வகையிலான நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வு யோசனைகள் முன்வைக்கப்படவேண்டும்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழர்களை ஏமாற்றிப் பிழைத்த சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து நாம் இதுபோன்ற தீர்வினை எதிர்பார்ப்போமானால் அதனைவிட முட்டாள்தனமான செயல் வேறெதுவும் இருக்காது.

சிறிலங்கா அரசாங்கம் இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளால் தென்னிலங்கை மக்களையும் சர்வதேச சமூகத்தையும் வேண்டுமானால்; ஏமாற்றலாம். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் ஏமாற்றத்திற்கும் விசனத்திற்குமே உள்ளாக்கும்.

யாழினி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • naan says:

    சிறிலங்கா அரசாங்கம் இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகளால் தென்னிலங்கை மக்களையும் சர்வதேச சமூகத்தையும் வேண்டுமானால்; ஏமாற்றலாம். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களை மேலும் மேலும் ஏமாற்றத்திற்கும் விசனத்திற்குமே உள்ளாக்கும். (அதுதான் ஒவ்வொரு தமிழன் மனதிலும் அடக்கப்பட்டிருக்கும் ஆதங்கம்,)

    July 22, 2010 at 12:31

Your email address will not be published. Required fields are marked *

*