TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிங்கள ரவுடியிஸம்… அதிர்ந்த ஐ.நா. சபை!

ஐ.நா. சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர். ஈழப் போர் உக்கிரமான சூழலிலும் இலங்கை அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதவர் அவர். இதற்கெல்லாம் பரிசாக, சிங்கள மந்திரி ஒருத்தர் ஐ.நா. செயலருக்குக் கொடுத்திருக்கும் பட்டம் – ‘பிம்ப்’! கொச்சையாகச் சொல்வதானால் ‘கூட்டிக் கொடுக்கும் புரோக்கர்’! பான் கீ மூனின் உருவ பொம்மையைச் செருப்பால் அடித்து, அதைத் தீயிட்டுக் கொளுத்தி… தங்கள் சுயரூபத்தைக் காட்டி இருக்கிறார்கள் இலங்கையை ஆள்வோர்.

இத்தனையும் எதற்கு? சமீபத்தில் பான் கீ மூன் இலங்கையின் போர்க்குற்றங்களைப் புலப்படுத்துவதில் காட்டும் தீவிரத்துக்கு எதிர்ப்பாகத்தான்!

இலங்கைக்கு எதிராக சர்வதேச அளவில் ஐ.நா. தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இந்தியாவின் ஆதிக்கம் அதிகம் உள்ள அணி சேரா நாடுகள் குழு ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக நிற்கும் விநோத நிலைமை இப்போது!

சுமார் 120 நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்ட ‘நான் – அலைன்டு மூவ்மென்ட்’ (NAM) எனும் அணி சேரா நாடுகள், ‘இலங்கை அரசு மீது விசாரணை கமிஷன் அமைக்கக்கூடாது’ என்று போர்க்கொடி பிடிக்கின்றன. நியூயார்க்கில் சில நாட்களுக்கு முன்பு கூடிய இந்த நாடுகளின் தூதர்கள் கூட்டத்தில், ‘ஐ.நா. பொதுச் செயலாளரின் இந்த தன்னிச்சையான முடிவு ஐ.நா. பாதுகாப்பு சபை, ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் மற்றும் ஐ.நா. பொதுச்சபைகளின் ஒப்புதல் பெறாமல் எடுக்கப்பட்டது’ என்று குற்றச்சாட்டு சொல்லப் பட்டது.

கடந்த ஆண்டே, ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்கள், ஐ.நா. சபையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ‘ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ போன்ற பல்வேறு சர்வதேச அமைப்புகள் ஆதாரங்களைக் கொடுத்தும் ஐ.நா. சபை மௌனம் காத்தது. ‘இது உள்நாட்டுப் போர்; தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம்’ என்று கட்டியம் சொன்னது.

இதற்கு அமெரிக்காவின் மறைமுக ஆதரவும் இருந்தது. இலங்கைக்குச் சென்ற ஐ.நா. சபை துணைச் செயலர் இந்தியாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் அங்கு அவமதிக்கப்பட்டும்கூட பான் கீ மூன் மௌனம் சாதித்தார். ஐ.நா-வின் இந்த அக்கறையற்ற போக்கைப் பயன்படுத்திக்கொண்டு போரில் முன்னிலும் வேகமாக வெறியாட்டம் போட்டது இலங்கை.

இப்போது அமெரிக்காவின் நிலைப்பாடு மாறிவிட்டது. அதனால்தான், இலங்கையை ஒருகை பார்த்துவிட ஐ.நா-வும் தீவிரமானது. அவசர வேகத்தில் ராஜபக்ஷேவுக்கு எதிரான குற்றச் சாட்டுகளைக் கையில் எடுத்தது. ஐ.நா. சபையின் மனித உரிமைகள் மீறல் கமிஷன் தலைவராக இருக்கும் தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியான நவநீதம் பிள்ளை இதுநாள்வரை இலங்கைக்கு எதிராகக் கூறிவந்த குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாத பான் கீ மூன், தற்போது அவற்றை அலசி ஆராயத் தொடங்கியுள்ளார்.

பின்னணியில் இயக்குவது அமெரிக்காதான் என்பதைத் தாமதமாகப் புரிந்துகொண்ட இலங்கை அரசாங்கம், தனக்கு நெருக்கமான சீனாவை உசுப்பேற்றியது.

முன்பு ஒன்றுபட்ட ரஷ்யா இருந்தபோது அமெரிக் காவுக்கு எதிராகத் துவக்கப்பட்ட அணி சேரா நாடுகள் அமைப்பு, இப்போது சீனாவின் கைப்பொம்மை! 1960-களில் எகிப்து அதிபர் நாசர், செக்கோஸ்லோவாக்கிய அதிபர் மார்ஷல் டிட்டோ போன்ற கம்யூனிஸ சித்தாந்தம் கொண்ட தலைவர்களோடு, இந்தியாவின் ஜவஹர்லால் நேருவும் சேர்ந்து இந்த அமைப்பு உருவானது.

அந்த அமைப்பைத்தான் இப்போது சீனா ஆட்டிப் படைக்கிறது. ”பான் கீ மூன், இலங்கையின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கிறார். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து தீவிரவாதிகளை ஆதரிக்கிறார்!” என்று இந்த நாடுகள் சீறுவதன் பின்னணியில், இலங்கை மண்ணில் காலூன்றி வரும் சீனாவின் பங்கு கட்டாயம் இருக்கிறது. ‘இலங்கை அரசே இதற்கான விசாரணை கமிஷனை அமைக்கும்போது, ஐ.நா-வின் விசாரணை தேவையா’ என்கிற ‘அதிபுத்திசாலி’த்தனமான கேள்வியையும் இதில் சில நாடுகள் எழுப்பின.

இந்திய அரசோ தன் பங்குக்கு இலங்கையைக் காப்பாற்ற ஐ.நா. சபையில் மற்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கேட்டு வருகிறது என்பது ஜீரணிக்க முடியாத வேதனை. ஐ.நா-வுக்கான இலங்கை தூதர் பலிதா ககோனா, அணி சேரா நாடுகளின் தூதர்களுக்கு உற்சாக பார்ட்டி ஒன்று வைத்து ஆதரவு கேட்டதாகவும் தகவல் உண்டு.

இந்த சூழ்நிலையில்தான், ஐ.நா. சபையின் முடிவை எதிர்த்து இலங்கையில், அமைச்சர் விமல் வீரவன்ஸா தலைமையில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது. அப்போது, ஐ.நா-வின் இலங்கை அலுவலக ஊழியர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். பான் கீ மூன் படம் போட்டு, தரக்குறைவான வார்த்தைகளை எழுதிய பதாகைகளைப் பிடித்தபடி முன்னேறியது கூட்டம்.

அவருடைய உருவ பொம்மைகளைக் கொளுத்தியும், ஐ.நா-வின் இலங்கை அலுவலகத்தினுள் புகுந்து துவம்சம் செய்தும் ரவுடியிஸம் காட்டினர். தலையிட வந்த போலீஸை கோத்தபய ராஜபக்ஷேயின் பெயரைச் சொல்லியே, அமைச்சர் விமல் அடக்கி ஓரமாக நிறுத்திவிட்டார். கிட்டத்தட்ட ஒரு தாதா போலவே அடியாட்கள் சகிதம் அமைச்சர் நடத்தும் ஆர்ப்பாட்ட அராஜகங்களைக் கண்டு ஐ.நா. ஊழியர்கள் விக்கித்துப் போய் நிற்க… நிலைமை மோசமாவதை அறிந்த இலங்கை வெளியுறவு செயலர் ரமேஷ் ஜெயசிங்கே அங்கே ஓடோடிச் சென்றார்.

‘இச்செயல் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்’ என்று கெஞ்சினார். ஆனாலும், அமைச்சர் விமல், ‘ஐ.நா. சபை அலுவலகத்தை அடித்து நொறுக்குங்கள்’ என்று சிங்களவர்களுக்குத் தொடர்ந்து கட்டளையிட்டுக் கொண்டே இருந்தார்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்த கதையாக, கடைசியில் இலங்கையின் கண்மூடித்தனமான வன்முறை வெறி, தங்களையே தாக்கியது பற்றிய ரிப்போர்ட்டை முழுமையாக வாங்கி ஸ்டடி செய்தபோது கலங்கியே போனாராம் பான் கீ மூன்!

இதோடு, ஐ.நா. சபை கமிஷன் அமைப்பதை கைவிடக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் விமல் அறிவித்திருப்பதை, நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இருந்து கூர்ந்து கவனித்தார் பான் கீ மூன். ”யார் தடுத்தாலும் இனப் படுகொலைக்குக் காரணமானவர்களை சர்வதேச கோர்ட் முன்பு நிறுத்துவேன். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன்…” என்று அறிவித்தார்.

இலங்கையில் உள்ள ஐ.நா. சபை அலுவலகத்துக்கு விடுமுறை அளித்த பான் கீ மூன், தேவைப்பட்டால் அந்த அலுவலகத்தையே பாதுகாப்பு கருதி இழுத்து மூடவும் தயாராகிவிட்டாராம்.

இலங்கையில் உள்ள ஐ.நா. தலைமை அதிகாரி நீல் பூஹ்னே, சிங்கள அரசு ஏவிவிடும் வெறியர்களால் எந்த நேரமும் கொலை செய்யப்படலாம் என்கிற தகவலும் பான் கீ மூனை எட்டி உள்ளது. இந்தத் தாண்டவத்தை உலக நாடுகள் பலவும் கண்டித்திருக்கும் நிலையில், பெயரளவில்கூட இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை!

அதுசரி… ஐ.நா-வின் சொரணையில் பாதியாவது இங்கே இருந்துவிட்டால் அப்புறம்தான் பிரச்னையே கிடையாதே!

கே.பி. – வரதராஜப் பெருமாள் டக்ளஸ் கூட்டணி!

இந்திய அமைதிப் படை இலங்கையைவிட்டு வெளியேறிய பிறகு, உயிருக்குப் பயந்து இந்தியாவுக்கு ஓடி வந்தவர் வரதராஜ பெருமாள். பிரபாகரனின் எதிரியான இவரை இந்திய அரசும், ‘ரா’ அமைப்பும் மிக ரகசியமாக இங்கே தங்க வைத்து பலத்த பாதுகாப்பும் அளித்தன. தற்போது, கருணாவின் வேண்டுகோளை ஏற்று இலங்கை திரும்பியுள்ள வரதராஜ பெருமாள், டக்ளஸ் தேவானந்தாவுடன் கூட்டணி அமைத்து புதிய தமிழ் அமைப்பை உருவாக்கியுள்ளார். இன்னும் சிலரையும் இதில் சேர்த்துக்கொண்டு, ‘தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பாக’ ராஜபக்ஷேவின் ஆசியுடன் இதைத் தொடங்கி உள்ளார்.

இதில் சேர மறுத்துவிட்ட ‘தமிழ் தேசிய அலையன்ஸ்’ தலைவர் மாலை சேனாதி ராஜா, ”இது தமிழர்களைக் காப்பாற்றும் அமைப்பு அல்ல; ராஜபக்ஷேவை காப்பாற்றும் அமைப்பு!” என்று கூறி இருக்கிறார். ஷேரின் சேவியர் எனும் பெண்மணி, ‘இலங்கை மனித உரிமைக் கழகம்’ என்ற லெட்டர் பேட் அமைப்பை தொடங்கி, இவர்களை இணைக்க பணத்தை வாரி இறைத்து வருகிறாராம்.

”சிங்கள அரசின் கஸ்டடியில் இருக்கும் கே.பி., ராஜபக்ஷேவுக்கு முழு விசுவாசியாக மாறிவிட்டார். உயிருக்குப் பயந்து பல்வேறு ரகசியங்களைக் கூறியிருக்கும் அவர், விரைவில் வெளியுலகுக்கு வந்து ராஜபக்ஷேவைப் புகழ்ந்தும் பிரபாகரனை மட்டம் தட்டியும் பேசுகிற காட்சியும் அரங்கேறும்!” என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள்.

கைகோக்கும் பான் கீ மூன் – ஸ்டீபன்!

அமெரிக்க அரசின் போர்க்குற்றவாளிகளின் கமிஷன் தலைவர் ஸ்டீபன் ராப்பை, அமெரிக்காவில் வாழும் ஈழத்தமிழர் தலைவர்கள் சந்தித்து, ‘ராஜபக்ஷேவின் மனித உரிமை மீறல்களைத் தண்டிக்கவேண்டும்’ என உதவி கேட்டார்கள். அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரியான இந்த அரசியல் நிபுணர், ராஜபக்ஷே அரசின் கொடுமைகளை அமெரிக்க அரசிடம் தக்க முறையில் ஆதாரத்துடன் கூறி வருகிறார். ஐ.நா. சபையின் மனமாற்றத்துக்கு இவரும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்டீபன், முன்பு ஐ.நா. சபையின் போர்க்குற்றப் பிரிவின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றி, ஆப்பிரிக்காவின் குவாண்டா, சியாரா லியோன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தினார். லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்லஸ் டைலர் மீதும் ஹேய்க் நாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக் கொடுத்தவர். பிறகு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, காங்கோ நாடுகளில் அரங்கேறிய இனப் படுகொலைக்குக் காரணமான அரசியல்வாதிகளுக்கும் தண்டனை பெற்றுத் தந்தார்.

இப்போது இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துள்ள ஸ்டீபன், விரைவில் ராஜபக்ஷே சகோதரர்களைக் கூண்டில் ஏற்ற முடிவு செய்துள்ளார். ஸ்டீபனும், பான் கீ மூனும் இணைந்து இருப்பது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய நெருக் கடியைக் கொடுக்கக்கூடும். அதை இந்தியா மனது வைத்தாலும் தடுக்க முடியாது!

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*