TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உயிர்த் தியாகத்தின் பிரசவம் எல்லாளன்!

தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் திரைப்படம் இன்று அனைவராலும் பேசப்படுகின்றது. இது திரைப்படம் என்பதைவிட உயிர்த்தியாகத்தின் பிரசவம் என்றே கூறலாம். எவ்வளவோ தடைகள் இழப்புக்கள் மத்தியில் இத்திரைப்படம் மக்களின் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் கற்பனையின்றி உயிரோட்டம் மிக்கதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லாளன் திரைப்படம் தொடர்பாக அதன் ஒளிப்பதிவு இயக்குநர் சந்தோஷ் தெரிவிக்கையில், உரிமைகளையும் உடைமைகளையும் உறவுகளையும் இழந்து உலகமெங்கும் சிதறிக்கிடக்கும் எம் ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம். 27.10.2007 அன்று அனுராதபுரம் வான்படைத் தளம் மீதான தாக்குதல் நடவடிக்கையின் பதிவுதான் இந்த எல்லாளன் திரைப்படம். 2008 ஜனவரி மாதம் எல்லாளன் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று முடிவுசெய்து என்னைத் தெரிவுசெய்தனர்.

நாங்கள் இத்திரைப்படத்தை ஆரம்பித்தபோது நாம் முடிவுசெய்த ஒரு விடயம் இப்படத்தில் நடிக்கக்கூடிய வேலைசெய்யக்கூடிய பணியாற்றக்கூடிய அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களும் தமிழீழ மக்களாகவும் காட்சி முழுக்கவே தமிழீழ மண்ணில் எடுக்கப்படவேண்டும் எனவும் முடிவுசெய்யப்பட்டதுஅப்படி முடிவுசெய்து அதன்படியே நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்து ஒரு கிழமைக்குள் நாங்கள் ஒரு பேரிழப்பைச் சந்தித்தோம். இப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரமான எல்லாளன் போர்நடவடிக்கையைத் தலைமையேற்று நடத்திய இளங்கோவின் பாத்திரத்தில் நடித்த புகழ்மாறன் மற்றும் லெப்ரினன்ட் கேணல் தவா, போருதவிப்படை வீரன் ரவி, போருதவிப் படைவீரன் அகிலன் ஆகிய நான்கு வீரர்கள் ஆனையிறவு பளைப் பகுதியில் படப்பிடிப்புத் தளத்திலேயே வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்.

இதனூடாகவே நீங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம், இப்படப்பிடிப்பு முழுக்க முழுக்க யுத்த சூழலில் பல உயிர் இழப்புக்களுக்கு மத்தியில் பல ரணங்களையும் பல வேதனைகளையும் தாண்டித்தான் எடுக்கப்பட்டு இப்படம் வெளிவந்துள்ளது என்பதை நீங்கள் உணரலாம். நான் இந்திய சினிமாவில் பணியாற்றிக்கொண்டிருப்பவன். நான் வன்னிக்குச் சென்று படப்பிடிப்பை ஆரம்பித்த போது சிலநாட்களிலேயே வெடிபொருட்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க நேரிட்டது. இதெல்லாமே எனக்கு புதுசு.

நான் அங்கு சென்று பார்த்த விசயங்களில வெடிபொருட்களிலை கவனம் கவனம் என்று கூறினர். நான் உடனே அவர்களிடம் கேட்டேன் ‘ஏன் நாங்கள் இவற்றுக்குப் பதிலாக போலியான வெடிபொருட்களைப் பாவிக்கலாம் தானே?’ அதற்கு அவர்கள் சொன்ன ஒருவார்த்தை ‘நாங்கள் சினிமாக்காரர்கள் அல்ல’ என்பதுதான். எனக்கு ஆரம்பத்தில் அது கொஞ்சம் துன்பமாகத்தான் இருந்தது. பின்னர் ஒருவாறு படிப்படியாக அந்த சூழலுக்குள்ளை என்னை நான் இணைத்துக்கொண்டேன். நான் ஆரம்பத்தில் மிகுந்த சிரமப்பட்டேன்.

காரணம் தொடர்ச்சியான உயிர் இழப்பு எங்களுடன் பணியாற்றியவங்களை தொடர்ச்சியாக இழந்தது. அடுத்த படியாக கிபிர் மற்றும் ஆட்லறிப் பீரங்கிகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள். நாங்கள் சென்ற இடமெல்லாம் இவ்வாறான தாக்குதல்களைச் சந்திக்க நேர்ந்தது.

என்னால் இந்த சம்பவங்களில் இருந்து மீளமுடியாமல் இருந்தது. நான் ஒரு தொழில்நுட்பக் கலைஞனாகப் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது எனக்கு மிக கிலேயே கிபிர் தாக்குதல்கள் இடம்பெற்றன. அந்த சம்பவத்தில் இருந்து உடனே என்னால் மீண்டு வரமுடியாமல் இருந்தது. ஆனால் என்னுடன் பணியாற்றுபவர்கள் எல்லாவற்றையும் உடனடியாக சரிப்படுத்திவிட்டு சரி படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று. ஆனால் என்னைத் தயார்ப்படுத்த நீண்டகாலம் எடுத்தது. அவர்கள் 25 – 30 வருட காலமாக போராட்டத்துடன் இணைந்திருந்தவர்கள்.

அவர்களுக்கு பழகிப்போன விடயம். ஆனால் எனக்கு அது புதுமையாகவும் அதிர்ச்சி தரக்கூடியதாகவும் வேதனை தரக்கூடியதாகவும் இருந்தது. இப்படி எல்லாத் துன்பங்களையும் படிப்படியாகத் தாண்டி இப்படப்பிடிப்பைப் பூர்த்திசெய்து ஜனவரி மாதம் 2009 இல் இப்படம் திரையிடத் தயாராக இருந்த நிலையில் கிளிநொச்சி நகர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.

இந்தப்படம் வெளிவரக்கூடிய சூழ்நிலை இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இத்திரைப்படம் முக்கியமான ஒரு திரைப்படம் இதைத் திரைப்படமாகப் பார்க்கமுடியாது. எந்த ஒரு அத்தியாவசியப் பொருட்களும் அற்ற நிலையிலேயே இத்திரைப்படம் படமாக்கப்பட்டது.

நாங்கள் படப்பிடிப்பை ஆரம்பித்த காலப்பகுதி முதல் இறுதிவரை அதாவது 2007, 2008 காலப்பகுதியில் கடும் யுத்தம் இடம்பெற்றது.

நான் உலகச் சினிமாக்களை ஆழமாகப் பார்த்திருக்கிறன், நேசித்திருக்கிறன். இந்த உலக சினிமாக்களுக்கே இல்லாத பெருமை இந்த எல்லாளன் திரைப்படத்துக்கு உள்ளது. எந்த ஒரு திரைப்படமும் யுத்த களத்திலே, போராட்டம் நடந்துகொண்டிருக்கும் சூழலில் படமாக்கப்படுவது கிடையாது. அந்தப் பெருமை எல்லாளன் திரைப்படத்துக்கு உள்ளது. எல்லாவற்றையும் தாண்டி எத்தனையோ உயிரிழப்புக்கள் ரணங்கள் வேதனைகள் என குருதிதோய்ந்த படமாக தயாரிக்கப்பட்டது இப்படம். உலக மக்களாகிய நீங்கள் இப்படத்தை பார்ப்பதன் மூலமாகவும் ஒவ்வொரு தமிழ் மக்களையும் சென்றடைவதன் மூலமாகவும் இதற்காகப் பணியாற்றிய இம்மண்ணுக்காக உயிர்நீத்த போராளிகள் பொதுமக்கள் மற்றும் படத்துக்காகப் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு செய்யும் ஒரு மிகப்பெரிய வரலாற்றுக் கடமையாகும். அதை நீங்கள் செய்வீர்கள் என நான் நம்புகின்றேன்.

இத்திரைப்படம் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்கவேண்டிய வரலாற்று ஆவணமாகும். நன்றி வணக்கம்!” என்றார் சந்தோஷ். பிரான்ஸில் இன்று 2ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 12ம் திகதி வரை இத்திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளது. எல்லாளன் திரைப்படத்தை பார்ப்பது நம் ஒவ்வொருவரின் வரலாற்றுக்கடமை என்பது திண்ணம்.

கந்தரதன்

நன்றி்:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*